Published:Updated:

அதிரசமும் முறுக்கும் அம்மாவுக்குப் பிடிக்கும்!

அதிரசமும் முறுக்கும் அம்மாவுக்குப் பிடிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
அதிரசமும் முறுக்கும் அம்மாவுக்குப் பிடிக்கும்!

மிஸஸ் & மிஸ்டர்ஆர்.வைதேகி - படங்கள்: பா.காளிமுத்து

அதிரசமும் முறுக்கும் அம்மாவுக்குப் பிடிக்கும்!

மிஸஸ் & மிஸ்டர்ஆர்.வைதேகி - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
அதிரசமும் முறுக்கும் அம்மாவுக்குப் பிடிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
அதிரசமும் முறுக்கும் அம்மாவுக்குப் பிடிக்கும்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா...  இவர்களுடன் போயஸ் தோட்டத்தில் இன்னொரு பிரபலமும் உள்ளார். அவர்தான் சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்!

மல்லிகாவுடனான ஒவ்வொரு சந்திப்பும் புதிதாகவே தோன்றும். இந்த முறையும் அப்படி நிறைய புதிய தகவல்கள்... நிறைய நிறைய சுவாரஸ்யங்கள்... போயஸ் கார்டன் நினைவுகளில் இருந்தே ஆரம்பமானது பேச்சு.

அதிரசமும் முறுக்கும் அம்மாவுக்குப் பிடிக்கும்!

‘` `போயஸ் கார்டன்ல இருக்கீங்க... அதுவும் அம்மா வீட்டுக்கு எதிர்ல இருக்கீங்க... அவங்கக்கூட பழகியிருக்கீங்களா, பேசியிருக்கீங்களா’ன்னு நிறைய பேர் கேட்பாங்க. எனக்குக் கல்யாணமான மூணாவது மாசம் எங்க பாட்டி தவறிட்டாங்க. அந்தத் தகவல் தெரிஞ்சு ஜெயலலிதா மேடம் எங்க வீட்டுக்கு வந்து துக்கம் விசாரிச்சிட்டுப் போனாங்க. அப்பதான் முதன்முறையா அவங்களை நான் அவ்வளவு பக்கத்துல பார்த்தேன். பக்கத்துல நின்னுப்பார்த்தாலே சிலிர்க்க வைக்கிற கம்பீர மனுஷி அவங்க.

அது அவங்க சினிமாவுல இல்லாத காலம். அரசியலுக்கும் போகலை. அப்பல்லாம் எங்க வீட்ல என்ன விசேஷம்னாலும் அவங்களுக்கு ஸ்வீட்டும் காரமும் கொடுத்தனுப்புவோம். அதுல அதிரசமும் முறுக்கும் எங்க வீட்டு ஆந்திரா ஸ்பெஷல். அதை சாப்பிட்டுப் பார்த்துட்டு, உடனே தேங்க்ஸ் லெட்டர் அனுப்புவாங்க. மறுநாள் அவங்களும் ஏதாவது செய்து எங்களுக்குக் கொடுத்தனுப்புவாங்க. ஹைதராபாத் தோட்டத்துத் திராட்சையும் அப்பப்போ கொடுத்தனுப்புவாங்க.

அவங்க வீட்டுல சமையல் வேலை பார்க்கிறவங்க என்னோட சமையல்கலை புத்தகங்களை வாங்கிட்டுப் போயிருக்காங்க.  உடனே மேடம், அந்தப் புத்தகங்களுக்கான பணத்தைக் கொடுத்தனுப்புவாங்க. வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க. எங்கக் கல்யாணத்துக்கு அவங்களால வரமுடியலைன்னு, அதுக்கும் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினாங்க. என் நாத்தனார் கல்யாணத்துக்கு நேர்ல வந்து வெள்ளி டம்ளர் அன்பளிப்பா கொடுத்துட்டுப் போனாங்க. அரசியல்ல பிசியானதும் அவங்களைத் தேவையில்லாம தொந்தரவு செய்யக்கூடாதுன்னு நாங்க ஒதுங்கியே இருந்துட்டோம். ஆனாலும், அவங்களுக்கு எல்லாம் தெரியும். என்னோட சமையல்கலை நிகழ்ச்சிகள்ல அவங்களுக்குப் பிடிச்ச எபிசோடை மட்டும் ரெக்கார்ட் பண்ணித் தரச்சொல்லி விரும்பிப் பார்த்ததா, சேனல்ல சொல்லியிருக்காங்க. அவங்க இந்தத் தெருவுல கார்ல போகிறபோது வெளியில நின்னு பார்ப்பேன். அவங்களும் என்னைப் பார்ப்பாங்க. அந்தப் பார்வையே ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். இதெல்லாம் காலத்துக்கும் நினைச்சு சந்தோஷப்படற விஷயங்கள்... நிஜமாகவே அவங்களை ரொம்ப மிஸ் பண்றோம்...’’ - சிலிர்க்கிறார் நளமகாராணி. ஆமாம்... அதுதான் அவரது அடையாளம்!

“சமையல்கலை என்பது ரத்தத்தில் ஊறிப் போயிருக்கவேண்டிய விஷயம் எல்லாம் இல்லை... கற்றுத்தேர்கிற கலை” என்கிறார் மல்லிகா.

‘`கூட்டுக்குடும்பத்துல வளர்ந்தாலும் எனக்குக் கல்யாணம் வரைக்கும் சமைக்கத் தெரியாது. கணவருக்குக் காபி ரொம்பப் பிடிக்கும். நான் காபியே குடிக்க மாட்டேன். கல்யாணத்துக்குப் பிறகு முதல்ல காபி போடத்தான் கத்துக்கிட்டேன். மாமனார், மாமியார் ஆந்திராவிலேருந்து வந்து சென்னையில செட்டிலானவங்க. அதனால வீட்ல ஆந்திரா சமையல். மாமியார் பண்ற எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரொம்பவே ஸ்பெஷல். கல்யாணமான புதுசு.... ஒருநாள் மாமனார், மாமியார் வீட்ல இல்லை. பாட்டி மட்டும் இருந்தாங்க. ‘கத்திரிக்காய் குழம்பு பண்ணிடறியா’ன்னு கேட்டாங்க. எவ்வளவு புளி போடணும், எவ்வளவு காரம் போடணும்னுகூடத் தெரியாது. எப்படியோ சமாளிச்சுச் சமைச்சிட்டேன். மாமியார் என்ன சொல்வாங்களோன்னு பயத்தோடவே அவங்க டேஸ்ட் பண்றவரைக்கும் படபடப்போட இருந்தேன்’’ என்கிற மருமகளைக் குறுக்கிடுகிறார் மாமியார்.

‘`எனக்கும் அது நல்லா ஞாபகமிருக்கு. நல்லா பண்ணியிருந்தாங்க. இப்போவரை என் மருமகளோட சமையல்ல என்னால எந்தக்குறையும் கண்டுபிடிக்க முடிஞ்சதில்லை. அந்த வகையில எனக்கும் பெருமைதான்...’’ என்கிறார் வாய்கொள்ளா சிரிப்புடன்.

அந்தப் பாராட்டும், விதம்விதமாகச் சமைத்துக்கொடுத்து அடுத்தவர் இதயங்களில் இடம்பிடிக்கிற ஆர்வமும்தான் தனது இன்றைய இடத்துக்கு அடிப்படை என்கிறார் மல்லிகா.

அதிரசமும் முறுக்கும் அம்மாவுக்குப் பிடிக்கும்!

‘`என் கணவர் நிறைய டிராவல் பண்ணுவார். சரியான சாப்பாடு கிடைச்சிருக்காதேன்னு அவர் வந்ததும் விதம்விதமா சமைச்சுக் கொடுக்க ஆசைப்படுவேன். அந்தக் காலத்துல சமையல் புத்தகங்கள் கிடையாது. நான் எழுதி வச்சுக்கிட்ட சமையல் குறிப்பு நோட்டுகள்தான் கைகொடுத்தது.  பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தின்னு எல்லாரோட குறிப்புகளையும் எழுதி வெச்சுப்பேன். ஃப்ரெண்ட்ஸ்கிட்டயும் கேட்டு எழுதுவேன்.

நான் பூஜ்ஜியம்னா என் கணவர் அதுக்கு முன்னாடி போடற ஒண்ணு மாதிரி. எனக்கு எல்லா விதங்கள்லயும் உறுதுணையா இருக்கிற வர். 1977-ல் கல்யாணமாச்சு. 88 வரைக்கும் குழந்தைங்க, வீடுன்னு பிசியா இருந்தேன். தனித்தனியா இருந்த சமையல் குறிப்புகளை எல்லாம் மொத்தமா தொகுத்து வைக்கலாம்னு எழுதிட்டிருந்தேன். அதைப்பார்த்த என் கணவர்தான் இதையே பிரின்ட் பண்ணி நாம ஏன் தெரிஞ்சவங்களுக்கெல்லாம் கொடுக்கக்கூடாதுன்னு கேட்டார். அப்படித் தான் புத்தகங்கள் எழுதறது ஆரம்பமானது. வருஷத்துக்கு ஒரு புத்தகம்தான் எழுதுவேன்.  100 குறிப்புகள் இருக்கும். அதுக்காக நான் 150 அயிட்டங்களை சமைச்சு என் கணவரை டேஸ்ட் பண்ணச் சொல்வேன். அதுல பெஸ்ட்தான் புத்தகத்துல வரும். திருமணத் துக்குச் சீர் தட்டுல என் புத்தகங்களை வெச்சுக் கொடுத்ததா பல அம்மாக்கள் சொல்லக் கேட்கிறபோது சந்தோஷமா இருக்கும். என்னோட புத்தகங்களைப் பார்த்துக் கத்துக்கிட்டு முறுக்கு பிசினஸ்லயும், ஊறுகாய், ஜூஸ் பிசினஸ்லயும் சம்பாதிக்கிறதா சொல்வாங்க. பல குடும்பங்கள் முன்னேற நானும் ஒரு காரணமா இருந்திருக்கேன்றதுல சின்னதா ஒரு சந்தோஷம். புத்தகங்களுக்குக் கிடைச்ச வரவேற்புதான் டி.வி பக்கம் என்னைக் கூட்டிட்டுப் போச்சு. முதல்ல சென்னைத் தொலைக்காட்சியில ‘மனைமாட்சி’ நிகழ்ச்சியில சமையல் நிகழ்ச்சி பண்ணினேன். முதல் ஷோ பண்ணின அன்னிக்கே  சென்னை முழுக்க பவர்கட். அந்த ஷோவே வரலை.  அன்னிக்குக் கொஞ்சம் வருத்தமா இருந்தாலும், அடுத்தடுத்து நான் சமையல் நிகழ்ச்சிகள் பண்ணாத சேனலே இல்லைங்கிற அளவுக்கு எல்லா சேனல்கள்லயும் வந்துட்டேன்... மாமனார், மாமியாரோட ஆசீர்வாதமும், கணவரோட ஒத்துழைப்பும்தான் எல்லாத்துக்கும் காரணம்...’’ கண்களில் பெருமை தேக்கிக் கணவரைப் பார்க்கிறார்.

அதிரசமும் முறுக்கும் அம்மாவுக்குப் பிடிக்கும்!

ல்லிகாவின் பெயரில் மட்டுமல்ல நிஜமா கவே அவரது வளர்ச்சியிலும் வெற்றியிலும்கூட பாதியைப் பகிர்ந்து கொள்கிற பத்ரிநாத் ஆடிட்டராக இருக்கிறார். ஈகோ பார்க்கிற கணவர்களுக்கு மத்தியில் வித்தியாசமானவர்.

‘`கணவர் பிரபலமா இருந்தா, மனைவி சந்தோஷப்படறதில்லையா? அந்த மாதிரிதான் என் மனைவி பிரபலமா இருக்கிறதுல எனக்கும் பெருமை. வெளியில எங்கேயாவது போகும்போது அவங்களுக்குத்தான் முக்கியத்துவம் அதிகமா இருக்கும். அதுக்கு அவங்க தகுதியானவங்கன்ற யதார்த்தம் எனக்குப் புரியும். சமையல் என்பது எல்லா வீடுகளுக்கும் அவசியமான விஷயம். நாலு பேர்  நல்லா சாப்பிடறதுக்கு என் மனைவி காரணமா இருக்காங்க. அவங்க சமையல் எனக்குப் பிடிச்சா நல்லாருக்குன்னு சொல்வேன். பிடிக்கலைன்னா நல்லா இல்லைன்னு சொல்லிடுவேன். அவங்க சமையலையே நல்லா இல்லைன்னு சொல்றீங்களே'னுகூட சிலர் கேட்டிருக்காங்க. அதுதான் இப்போ எங்க மசாலா பவுடர் பிசினஸுக்கும் உதவியா இருக்கு. மசாலா பவுடருக்கான செய்முறையை அவங்க சொல்வாங்க. அது சரியான முறையில தயாராகி வருதான்னு செக் பண்ணி, டேஸ்ட் பண்ணி, குறைகள் இருந்தா சுட்டிக்காட்டறது என் வேலை...’’ என்கிறார் பத்ரிநாத்.

மையல்கலை நிபுணர்களாக அவதாரம் எடுக்கும் இளம்பெண்களுக்கு அவசியமான அட்வைஸ் தருகிறார் மல்லிகா.

‘`சமீபகாலமா சமையல்கலை புத்தகங்களோட விற்பனை குறைஞ்சிட்டு வருது. யூடியூப் பார்க்கிறவங்க அதிகரிச்சிருக்காங்க. நிறைய பேர் குக்கரி பிளாக்ஸ் பண்ணிட்டிருக்காங்க. பாரம்பர்யச் சமையல் என்ற பெயர்ல அவங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் கொடுக்கறாங்க. இளம் தலைமுறைப் பெண்கள், புதுமை என்ற பெயர்ல எல்லாத்தையும் மாத்தி சமைக்கிறாங்க. ஃபியூஷன் குக்கிங் பண்றதுல தப்பில்லை. ஆனா, பாரம்பர்ய உணவுகளை அளவோ, செய்முறையோ மாறாமல் கொடுக்கணும். சமையல்கலை நிபுணர்னு பேர் வாங்கணும்னா பல விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சுக்கணும். அதுக்கு நிறைய படிக்கணும். சமையல்கலையில பல வருஷ அனுபவம் உள்ள நிபுணர்கள் இருக்காங்க. அவங்கக்கிட்ட கேட்டுக்கிறதும், அவங்கச் சொல்ற தகவல்களின்படி சமைக்கிறதும் சரியா இருக்கும்...’’ என்கிறவர் தன் சமையல் குறிப்புகளில் எப்போதும் வலியுறுத்துகிற விஷயம் ஆரோக்கியம். அது அவரது பேச்சிலும் அடிக்கடி வெளிப்படுகிறது.

‘`வீட்ல சமைக்கிறதே இல்லையோன்னு நினைக்கிற அளவுக்கு இன்னிக்கு எல்லா ஹோட்டல்லயும் கூட்டம்... வேலைக்குப் போறதால சமைக்க நேரமில்லாம வர்றவங்க ஒரு பக்கம்... `எதுக்கு சமைக்கிறதுல நேரத்தை வீணாக்கணும்... காலை உணவுலேருந்து ராத்திரி சாப்பாடு வரைக்கும் எது வேணும்னாலும் போன் பண்ணினா, வீட்டுக்கே வந்துடுதே’ன்னு நினைக்கிறவங்க இன்னொரு பக்கம்... மத்த நாடுகளோட உணவுகளை விரும்பி சாப்பிடறவங்களும் அதிகமாகிட்டதும்கூட ஒரு காரணம்தான். டயாபடீஸ், இதயப் பிரச்னைகள், புற்றுநோய்கள் எல்லாம் இப்போதே இந்தியாவுல அதிகமாகிட்டிருக்கு. அடுத்த தலைமுறை குழந்தைங்க ஹார்மோன் குறைபாடுகளோட பிறக்கற வாய்ப்புகளும் அதிகமா இருக்கு.  உணவு என்பது நம் உடலைப் பேணி வளர்ப்பது. எது ஆரோக்கியமான உணவுன்னு தேடிச் சாப்பிட்டா பரவாயில்லை. வெறும் ருசிக்காக மட்டும் வெளியில சாப்பிடறது கவலையைக் கொடுக்குது. குழந்தைங்களுக்கு ஆரோக்கியமான உணவு கொடுத்தா சாப்பிடறதில்லைன்னு அம்மாக்கள் புகார் பண்றாங்க. அது கொஞ்சம் சவாலான காரியம்தான். ஆனாலும், குழந்தைங்களுக்கு சாப்பாட்டுல ஆப்ஷன்ஸ் கொடுக்காம, இதைத்தான் சாப்பிட்டாகணும்னு கட்டாயப் படுத்தி நாலு நாள் கொடுத்தா குழந்தைங்க தாமாக மாறுவாங்க. ஒரு அம்மாவா மற்ற எல்லா அம்மாக்களுக்குமான என்னோட வேண்டுகோள் இது...’’ - அன்பும் அக்கறையுமான அறுசுவை வார்த்தைகள் அவை.