Published:Updated:

ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு சம்பளம்; பெண்ணுக்கு ஒரு சம்பளமா?

ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு சம்பளம்; பெண்ணுக்கு ஒரு சம்பளமா?
பிரீமியம் ஸ்டோரி
ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு சம்பளம்; பெண்ணுக்கு ஒரு சம்பளமா?

அதிர்ச்சி ஆய்வுவி.சரவணன் - டேட்டா: ரெ.சு.வெங்கடேஷ்

ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு சம்பளம்; பெண்ணுக்கு ஒரு சம்பளமா?

அதிர்ச்சி ஆய்வுவி.சரவணன் - டேட்டா: ரெ.சு.வெங்கடேஷ்

Published:Updated:
ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு சம்பளம்; பெண்ணுக்கு ஒரு சம்பளமா?
பிரீமியம் ஸ்டோரி
ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு சம்பளம்; பெண்ணுக்கு ஒரு சம்பளமா?

‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்பது ஒரு வழக்கு மொழி. இதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது? எந்தக் காலத்திலும் பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்ததில்லை. விவசாய வேலைகள் முதல் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் வரை ஆண்களுக்கு இணையாக மட்டுமல்ல... அவர் களைவிட அதிக அளவில் உழைப் பைச் செலுத்துகிறார்கள் பெண்கள்.

ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு சம்பளம்; பெண்ணுக்கு ஒரு சம்பளமா?

இப்படி பலதுறைகளிலும் தங்களை வளர்த்துக்கொண்டே சென்றாலும்கூட, பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மட்டும் பாரபட்சம் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது. வயலில் நாற்று பறிக்கும் ஆணுக்குக் கொடுக்கப்படும் சம்பளம், அந்த நாற்றுகளை நாள் முழுவதும் நடும் பெண்ணுக்குக் கொடுக்கப்படுவதில்லை. விவசாய வேலைகளில் இருக்கிற ஏற்றத்தாழ்வு, இன்று கார்ப்பரேட் நிறுவனங்களிலும் தொடர்கிறது. ஒரே வேலையில் ஆணோ, பெண்ணோ - அவர்களின் உழைப்பு சமமாக இருக்கும்போது, அவர்களின் சம்பளத்தில் மட்டும் ஏற்றத்தாழ்வு இருப்பது சரிதானா?

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation) அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் இன்னும் அதிர்ச்சி தருகின்றன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறு வனங்களில், ஆண் - பெண் ஊதியப் பாகுபாடு பற்றி அவர்கள் நடத்திய ஆய்வில், வளரும் பொருளாதார நாடுகளில் ஆண் - பெண் சம்பள வித்தியாசம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண் - பெண் இருவருக்குமான சம்பள வித்தியாசம் 33 சதவிகிதம் என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக உயர்கல்வி படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அதேபோல பட்டப்படிப்பு, செவிலியர், ஆசிரியர் படிப்பு எனப் படித்த பெண்களின் சதவிகிதம் ஆண்டுதோறும் அதிகரித்தவண்ணமே இருக்கிறது. ஆனாலும், உயர்பதவிகளிலும் பெண்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

பொதுவாக செவிலியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிகளில் அதிக பெண்கள் கவனம் குவிப்பது, சில துறைகளை ‘அது ஆண்களுக் கானது’ என அவர்கள் விலகிச்செல்வது உள்ளிட்ட காரணங்களையும் முன் வைக்கிறது இந்த ஆய்வு.

இந்த ஆய்வின் முடிவுகளைப் பற்றி, பெண்களுக்கான வேலை மற்றும் சுயமுன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ‘அவதார் குரூப்ஸ்’ நிறுவனர் டாக்டர் செளந்தர்யா ராஜேஷ் கூறுகையில், “பெண் கள் உடைத்து வரவேண்டிய மனத்தடைகள் இன்னும் இருக்கின்றன” என்கிறார். 

ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு சம்பளம்; பெண்ணுக்கு ஒரு சம்பளமா?

“பொதுவாக, வளரும் நாடு களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக இது அதிகரித்து வருகிறது. இருப்பினும் நமது நாட்டில் பெண்களுக்கென்றே சில சிக்கல்கள் இருப்பதை முதலில் கவனத்தில்கொள்ள வேண்டும்.

வேலைக்குச் செல்லும் ஒரு பெண் 30 வயதுக்குள் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது வேலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டி  இருக்கிறது. இதுபோன்ற சூழல், ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் அதிகம். இதற்கு முதன்மைக் காரணங்களாக, நான்கு விஷயங்களைச் சொல்லலாம். திருமணம், குழந்தைப் பிறப்பு, வீட்டில் உள்ள பெரியவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, வேலையிடத்துக்கும் வீட்டுக்கும் இடையே இருக்கும் அதிக தொலைவு.

இதே காரணங்கள் ஓர் ஆணுக்கு ஏற்பட்டால், அவர் எளிதாக விடுபட்டுவிட முடியும். பெண்ணுக்கோ இவை அவ்வளவு எளிதல்ல. இதனால் ஒரு வேலை யில் தொடர்ந்து இருக்க முடியாத நிலையில், பதவி உயர்வு, ஊதிய உயர்வு என அனைத்திலும் இழப்பு ஏற்படுகிறது. புதிதாகச் சேரும் வேலையில் மீண்டும் அவர் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.

பெண் என்பதாலேயே சம்பளத்தில் பாகுபாடு பார்க்கப்படுகிறது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. விதி விலக்குகள் இருக்கலாம். நாங்கள் பன்னாட்டு நிறுவனம் ஒன்றோடு இணைந்து, இந்தியாவின் புகழ்பெற்ற 300-க்கும் மேற்பட்ட நிறு வனங்களில் சர்வே எடுத்தோம். அதிலிருந்து நாங்கள் தெரிந்து கொண்டது, பெண் என்பதால் பயிற்சி, ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை குறைக்கப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. ஆனாலும், இந்த ஏற்றத்தாழ்வுக்குப் பிரதானமான காரணங்களாக, நான் பார்ப்பது இரண்டு விஷயங்கள்.

ஒன்று, இந்தியப் பெண்களுக்கு நோக்கத் தன்மை (intentionality) குறைவாக இருப்பது. அதாவது, தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையைச் செய்ய ஏற்படும் தடைகளைத் தகர்த்து, தொடர்ந்து வேலையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் தன்மை குறைவாக இருப்பது.

இரண்டாவது, சில குறிப்பிட்ட துறைகளைத் தேர்ந் தெடுப்பதில் இந்தியப் பெண்கள் தயக்கம் காட்டுவது. உதாரணமாக, விற்பனைப் பிரிவு. ‘கெலாக்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சங்கீதா பென்டுர்கர், சாதாரண நிலையிலிருந்து வந்த பெண். பெண்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டாத விற்பனைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து, அதில் சாதித்து, இன்று அதன் உச்சநிலையை அவர் அடைந்திருக்கிறார். அதுபோன்ற தன்மைகளைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் செளந்தர்யா ராஜேஷ்.

ஆண்-பெண் சம்பள ஏற்றத் தாழ்வுக்கான அடிப்படைச் சிக்கல்களை விளக்குகிறார், பெண்ணியச் செயல் பாட்டாளர் ஓவியா.

‘`இந்திய வளர்ச்சி என  அரசியல்வாதிகள் காட்டுவதற்கும் யதார்த்தத்துக்குமான வேறு பாட்டையே இந்த சர்வே காட்டு கிறது. வளர்ச்சி என்பது எல்லா மக்களுக்குமானதாக இருக்கிறதா என்பதைப் போலவே, அனைத்துப் பாலினங்களையும் உள்ளடக்கி இருக்கிறதா என்றும் ஆராய வேண்டும். 

எந்த நாடுகளில் தொழிலாளர் களின் பேரம் பேசும் திறன் அதிகம் இருக்கிறதோ, அங்கு ஆண் - பெண் சம்பள  வித்தியாச விகிதம் குறைவாக இருக்கிறது. அதாவது தொழிலாளிகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் பட்சத்தில், அவர்க ளுக்கான உரிமைகள் மற்றும் சம்பளம் உள்ளிட்டவற்றில் அதிகச் சிக்கல்கள் ஏற்படுவதில்லை.

ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு சம்பளம்; பெண்ணுக்கு ஒரு சம்பளமா?

இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மனநிலை கொண்ட மக்கள் வாழ்கிறார் கள். ஆனாலும், பெண்களை வேலைக்கு அனுப்ப சுணக்கம் காட்டுவதில் அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். பெண்களைக் குடும்ப வருமானத்துக்கு உதவுகிறவர்களாக மட்டுமே பார்க்கும் சூழல் இன்றும் உள்ளது. இந்த மனநிலை பெண்களிடமும் இருப்பதுதான் ஆச்சர்யமே. ஒரு குடும்பத்தில் கணவன் வீட்டில் இருக்க, மனைவி மட்டுமே வேலைக்குச் செல்கிறாள் என்றால், ‘கணவனுக்கு வேலை இருந்தால் நமக்கு இந்த நிலை இல்லையே’ என்றுதான் அந்தப் பெண் நினைக்கிறாள். இந்த மனநிலையைப் பெண்கள் விட்டொழித்தால்தான் தொழிலாளர் சக்தியாக உருமாற முடியும். அப்படி மாறினால் மட்டுமே, தங்கள் சம்பளத்துக்காகப் பேரம் பேசும் திறன் வளரும்.

ஒரே வேலை, ஒரே சம்பளம் என்னும் நிலையை வந்தடைய வேண்டுமெனில், முதலில் பாலின அடிப்படையில் வேலைக்குத் தேர்வு செய்வதில் மாற்றம் வர வேண்டும். இந்தச் சாதியினர் இந்தத் தொழில்தான் செய்ய வேண்டும் எனும் நிலை, பல போராட்டங்களுக்குப் பிறகுதான் மாற்றம் அடைந்துள்ளது. வொயிட் காலர் வேலைகளிலாவது பெண்களின் தலைமையில் ஆண்கள் பணிபுரியும் நிலை உள்ளது. அடிமட்ட வேலைகளில் அந்த மனநிலை இல்லவே இல்லை. சித்தாளாக வேலை செய்யும் பெண், ஒருநாளும் கொத்தனாராக மாற முடியாது. தொழிலாளர் சங்கங்களும், பெண் தொழிலாளர் பிரச்னைகளை அதிக அளவில் முன்னெடுப்பதில்லை என்ப தையும் கவனத்தில்கொள்ள வேண்டும்” என்கிறார் ஓவியா.

தேவை... தொழிற்சங்கங்களின் தீவிர செயல்பாடுகள்! 

ஆண் - பெண் ஊதியப் பாகுபாடு மட்டுமல்ல... அதிக சம்பளம் மற்றும் குறைந்த சம்பளம் பெறுவோர் இடையே உள்ள ஊதியப் பாகுபாட்டையும் குறைப்பதற்கான வழி...  தொழிற்சங்கங்களை உருவாக்குவதுதான். 15 ஆண்டுகளுக்கு முன் தீவிரமாக இருந்த தொழிற்சங்கங்கள் இப்போது சில அரசு மற்றும் தனியார்துறைகளில் மட்டுமே இயங்கி வருகின்றன. தொழிலாளர் உரிமையைக் கேட்டுப் பெறவும், சமமான ஊதியத்தைப் பெறவும், ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும் தொழிற்சங்கங்கள் மிக அதிகப் பங்கு வகிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

இந்தியாவிலோ ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படுவது இல்லை. அரசாங்கத் தரப்பில், அடிப்படை ஊதியத்தை நாடு முழுவதும் நிர்ணயிக்க வேண்டும். அதுவே ஓர் ஊழியருக்குச் சரியான, சமமான ஊதியம் சென்று சேர உதவும். அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.