Published:Updated:

தவிக்கும் தாய்க்குலம்... தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்!

தவிக்கும் தாய்க்குலம்... தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
தவிக்கும் தாய்க்குலம்... தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்!

கோடை நிலவரம் - துரை.நாகராஜன்

தவிக்கும் தாய்க்குலம்... தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்!

கோடை நிலவரம் - துரை.நாகராஜன்

Published:Updated:
தவிக்கும் தாய்க்குலம்... தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
தவிக்கும் தாய்க்குலம்... தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்!

கடந்த 2016-ம் ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை தமிழகத்துக்கு சரிவர கிடைக்கவில்லை. இதனால், தமிழ்நாடு முழுவதும் ஏரிகளில் நீரின் அளவானது குறைந்து தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுபற்றி புள்ளிவிவரங்களோடு விளக்குகிற திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைப் பொறியாளர் பிரிட்டோ ராஜ், தண்ணீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க 10 வழிகளும் சொல்கிறார்.

தவிக்கும் தாய்க்குலம்... தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்!

“கடந்த 2010 முதல் 2016-ம் வருடம் வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியை சந்தித்த நிலையிலேயே உள்ளன. 2015 தவிர, மற்ற ஐந்து ஆண்டுகளில் இரண்டு பருவக்காற்றுகளும் தந்த மழையளவு 50% முதல் 60% வரை மட்டுமே. 2016-ல் சென்னை, ஊட்டி, நாகர்கோவில் பகுதிகள் அதிக அளவு மழையும், பிற மாவட்டங்கள் குறைவான மழைப்பொழிவும் பெற்றுள்ளன. சராசரியாக 823 மி.மீ மழை என்றாலும், பெரும்பாலான மாவட்டங்கள் 600 மி.மீ-க்கும் குறைவாகவே பெற்றுள்ளன.
 
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் 8 முதல் 9 மழைநாட்கள் இருக்கும். வடகிழக்குப் பருவமழையின்போது 17 முதல் 22 நாட்கள் மழை பெய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த மழைநாட்களானது தென்மேற்குப் பருவ மழை காலத்தில் 5 முதல் 6 நாட்களாகவும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் 8 முதல் 10 நாட்களாகவும் இருந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டிலோ, தென்மேற்குப் பருவமழை 1 மழை நாளாகவும், வடகிழக்குப் பருவமழை 2 மழை நாட்களாகவும் மாறிவிட்டன.

தமிழகத்தில் அதிக மழையளவு கிடைக்கும் மாவட்டமாக கடலூர் திகழ்கிறது. வங்காளவிரிகுடாவிலிருந்து வரும் புயல்கள் மட்டும் ஏன் சென்னையைக் கடக்க வேண்டும்? மேற்கு வங்காளம் நீங்கலான கடற்கரை மாநிலங்களில் (ஒடிசா, ஆந்திரா, தமிழகம்) மிகவும் குறைந்த மழையைப் பெறுவது தமிழகமே. ஒவ்வொரு வடகிழக்குப் பருவமழையின்போதும் குறைந்தது 6 அல்லது 7 புயல்கள் தாக்கி வந்த நிலையில், 2015-ம் வருடம் முதல் புயல்களின் எண்ணிக்கையும் 1 மற்றும் 2 என்ற அளவில் குறைந்துள்ளன. இதற்கான காரணங்கள் என்ன? கனரக தொழிற்சாலைகள், சிமின்ட் தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள், உரத்தொழிற்சாலைகள் மற்றும் அணு உலைகள் அனைத்தும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலேயே அமைந்துள்ளன. 2015-ல் பெரும் வெள்ள சேதத்தை சந்தித்தபோது சென்னை, கடலூர் மற்றும் தூத்துக்குடியில் மட்டுமே நல்ல மழை கிடைத்தது. தமிழகத்தின் பெரும் பாலான பகுதிகளில் தரைப்பகுதிகளில் நிலவும் வெப்பமும், தொழிற்சாலைகள் காரணமாக வான்வெளியில் ஏற்பட்டுள்ள வெப்பமும் உருவாக்கியுள்ள வெப்ப மண்டலத்தின் காரணமாகவே எந்த ஒரு புயலும் நகர்ந்து வருவது குறைந்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் ஒரு ச.கி.மீ-ல் 83-85 மரங்கள் என்று இருந்த நிலை மாறி, 12 -13 மரங்களே இருக் கின்றன. மழைப்பொழிவு குறைவுக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். பட்டா நிலங்கள் மேம்பாட்டுக்காகவும், கட்டடங்களின் தேவைகளுக்காகவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பெரிய மரங்கள் ஏராளமாக வெட்டப்பட்டுவிட்டன. இதனால் அங்கு பெரிய வெற்றிடமே ஏற்பட்டு உள்ளது.  இதோடு, நகரமயமாக்கலும் ஒரு முக்கிய காரணம்.

தவிக்கும் தாய்க்குலம்... தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்!

பொதுவாகவே, தமிழ்நாட்டின் மேட்டுப் பகுதி மாவட்டங்களான கிருஷ்ணகிரி முதல் திருநெல்வேலி வரையிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்குக் கீழே சென்றுவிட்டது. கிணறுகளிலும் 70 அடிக்குக் கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டது. இதற்கு மேலும் ஆழப்படுத்தி போர் போடுவதையோ, கிணற்றை ஆழப்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.  அதிக ஆழத்தில் பிளவுபட்ட பாறைகள் இருப்பதால் தண்ணீர் அதிக அளவு கிடைக்காது. கடற்கரையோர மாவட்டங்களில் அதிக அளவு ஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது.

இந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதலே கோடை வறட்சி ஆரம்பித்துவிடும். அதிலிருந்து தென்மேற்குப் பருவமழை பெய்ய வேண்டிய மாதம் வரை வறட்சி தொட ரும். ஏப்ரல் மாதத்தில் குறைந்தபட்சம் 3 நாட்களும், மே மாதத்தில் 6 முதல் 7 நாட்களும் மழை கிடைத்த வரலாறு உண்டு. அந்த மழையை எதிர்பார்த்துதான் மூன்று மாதங்களையும் கடக்க வேண்டும்.

திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதி, சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி, நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களின் தெற்குப் பகுதிகள், திண்டுக்கல் மாவட்ட வடக்குப் பகுதி, தேனி மாவட்ட கிழக்குப் பகுதி, மதுரை மாவட்ட தெற்குப் பகுதி, விருது நகர் மாவட்டத்தின் தெற்குப் பகுதி ஆகிய வற்றில் வறட்சி அதிகமாகக் காணப்படும்.

தமிழக ஏரிகளில் 5% நீர் மட்டுமே (குடிநீர் தேவைக்காக) இருப்பு உள்ளது. அதுவும் பிப்ரவரி 15 வரை மட்டுமே கிடைக்கும். அதன் பிறகு குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும். மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுதான் ஒரே வழி” என்றார் பிரிட்டோ ராஜ்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பொறியாளர் வீரப்பன், “சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க தேவையான ஆயத்தப் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் எடுத்து வருகிறது. சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் போனால், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்வோம் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க  முடியும்” என்கிறார்.

காலி குடங்களோடு கால் கடுக்க அலையும் நிலை வந்து விடக் கூடாது. கோடை மழை எனும் அற்புதம் நிகழ்ந்து தாகம் தீரும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் நம் மக்கள்.

தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க 10 வழிகள்! 

தவிக்கும் தாய்க்குலம்... தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்!

*கூரை வீடுகள், ஓட்டுவீடுகள் மற்றும் மாடி வீடுகள் என எந்த வகை குடியிருப்பாக இருந்தாலும், மழை நீர் சேகரிப்பு வசதி செய்வது மிக அவசியம். இதற்கான விளக்க வரைபடங்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகங்களில் கிடைக்கும்.

*வீடுகளைக் கட்டும்போதே மொட்டைமாடியின் தளம் ஒருபக்கத்தில் சரிவாக இருக்கும்படி அமைக்க வேண்டும். அதிலிருந்து வழிந்தோடும் தண்ணீரை ஒரே குழாயில் செல்லுமாறு அமைத்து, வீட்டின் போர்வெல்லுக்கு பத்தடி தூரத்தில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்ய வேண்டும்.

 *வீட்டைச் சுற்றியுள்ள மண்தரைகள், சிமென்ட் தரைகள் ஆகியவற்றை மழைநீர் சேகரிப்புத் தொட்டியை நோக்கி குவிந்தவாறு அமைக்க வேண்டும்.

* மழைநீர் சேகரிப்புத் தொட்டியை 10x10x10 என்கிற அளவில் அமைக்கும்போது 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கனஅடி வரை மழைநீரைச் சேமிக்கலாம். அதை சுத்திகரித்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

 *குழந்தைகளை அரை வாளித் தண்ணீரில் குளிக்க பழக்கப்படுத்தலாம். ஷவரில் நீண்ட நேரம் குளிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தலாம். அவர்களுக்கு தண்ணீரின் அவசி யத்தை எடுத்துச்சொல்வது மிக முக்கியம். அப்போதுதான் நாம் வீட்டில் இல்லாதபோதும், குழந்தைகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவர். தண்ணீரின் அவசியத்தைப் பள்ளிகளிலேயே சொல்லிக்கொடுப்பது இன்னும் சிறப்பு.

  *தினசரி பயன்படுத்தும் நீரை குவளையில் பிடித்து பயன்படுத்தினால் தண்ணீர் வீணாவது குறையும். நேரடியாக குழாயிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்தினால் தண்ணீர் வீணாகும். மேல்நாட்டுபாணி கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்கும்போது லிவரை சிறிதாக திறந்துவிடலாம். ஒருமுறை முழுவதுமாக திறந்தாலே 6 - 8 லிட்டர் தண்ணீர் வீணாகும்.

* கிச்சனில் அன்றாடம் உபயோகித்த நீரை வீட்டின் ஓர் இடத்தில் தேக்கி வைத்து, இ-எம் கரைசலைப் பயன்படுத்தி நன்னீராக மாற்றி, தோட்டத்துக்குப் பயன் படுத்தலாம்.

  *மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளில் பெரிய கற்கள் விலகியோ, மண் கரைந்தோ இருக்கக்கூடும். இதனால் மழைத்தண்ணீர் நேரடியாக விழ வாய்ப்புண்டு. இதனால் அது சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக பூமிக்குள் செல்லும். இதைத் தவிர்ப்பதற்காகவே மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைக்கும்போது கற்களையும் மண்ணையும் பயன்படுத்துகிறோம். ஆண்டுக்கு இருமுறை மழைநீர் சேகரிப்பு தொட்டியைப் பராமரிப்பது அவசியம்.

 *வீட்டில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கும் பழைய குழாய்களில் உள்ள தேய்ந்த வாஷர்களை புதுப்பிக்கலாம். அல்லது புதியதாக குழாய்களை அமைக்கலாம். இதனால் ஒருநாளைக்கு 50 முதல் 80 லிட்டர் வரை தண்ணீர் வீணாவதைத் தடுக்க முடியும்.

* திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல் அவசியம். குறிப்பாக, திருமண மண்டபங்களில் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. அதை 1 லிட்டராக இல்லாமல் 150 மில்லி தண்ணீர் பாட்டிலாகக் கொடுக்கும்போது தண்ணீர் வீணாவது குறையும்.

சென்னையில் காலி குடங்கள்!

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால், சென்னையின் கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்கத் தேவையான தண்ணீர் கிடைத்தது. 2016-ம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவ மழையும் தமிழகத்தை ஏமாற்றிவிட்டதால், சென்னையின் குடிநீர் தேவைக்கு ஏற்ப ஏரிகளில் போதுமான அளவு நீர்மட்டம் இல்லை. இதனால் வரும் கோடையில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு சென்னை மக்கள் காலிகுடங்களுடன் அலையும் நிலை உருவாகி உள்ளது.

பொதுவாக சென்னைக்குத் தேவையான குடிநீரை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் வழங்குகின்றன. கடந்த ஆண்டில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியபோது, செம்பரம்பாக்கம் ஏரி 3,125 மில்லியன் கனஅடி நீர் கொண்டு கடல்போல காட்சியளித்தது. இப்போதோ 516 மில்லியன் கன அடி நீர் கொண்டு வறண்டு காட்சியளிக்கிறது. இப்போதைய குடிநீர் தேவைக்கும் மீதம் இருக்கும் இந்த நீரையே குடிநீர் வாரியம் எடுத்து வழங்குகிறது. இதே நிலைதான் மற்ற ஏரிகளிலும் காணப்படுகிறது. பூண்டி ஏரியில் சென்ற ஆண்டு 3,124 மில்லியன் கன அடி நீர் இருந்தது. இந்த ஆண்டு 605 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. சென்ற ஆண்டு இதே மாதத்தில் சோழவரம் ஏரியில் 707 மில்லியன் கன அடியும், ரெட்ஹில்ஸ் ஏரியில் 2,841 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு இருந்தது. இந்த ஆண்டு நிலவரப்படி, சோழவரம் ஏரியில் 82 மில்லியன் கனஅடியும், ரெட்ஹில்ஸ் ஏரியில் 423 மில்லியன் கன அடியும் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி, மழை பொய்த்ததால் கிருஷ்ணா நதி நீரை நம்பியே உள்ளது.