Published:Updated:

சொலவடை இல்லாத ஆச்சி - கவிதை

சொலவடை இல்லாத ஆச்சி - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
சொலவடை இல்லாத ஆச்சி - கவிதை

ஆண்டாள் பிரியதர்ஷினி - ஓவியம்: செந்தில்

சொலவடை இல்லாத ஆச்சி - கவிதை

சொலவடை தெரியாது எனக்கு
தக்கையானது என் வார்த்தை
ஆதி மொழியைவிட
அயல் மொழியே கைவசமுண்டு.
தாய்மொழியைவிட
தகப்பன் மொழியே வாய்வசமுண்டு
தாமரை இலைத்தண்ணீரே
என் வார்த்தை.

என் தண்டட்டி ஆச்சி
படிக்காதவள்
மூச்சுக்கு முந்நூறு
சொலவடை சொல்லுவாள்
பாம்படம் ஆட ஆடக்
கவிதை பேசுவாள்
தாய்க் கோழியாகக்
கதை கதைப்பாள்
இரவின் நிம்மதி ஆச்சி
திருநீறு வாசம்
நூல் புடவை வாசம்
சொலவடை வாசமுள்ள
குளிர்காலத் தணல் ஆச்சி
கதகதப்புக்காரி.
நானும் ஒரு நாள்
ஆச்சியாவேன்
சொலவடை வாசமில்லாமல்
என் ஜீன்ஸும்
வாசனைத் திரவியமும்
தக்கை வார்த்தையும்
ஆச்சிக்குப் பொருந்துமா?
கைவசம்
சொலவடை இல்லாத நான்
ஆச்சியாக முடியுமா?