Published:Updated:

மகன்களையும் மகள்களையும் பெற்ற அம்மாக்களுக்கு...

மகன்களையும் மகள்களையும் பெற்ற அம்மாக்களுக்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
மகன்களையும் மகள்களையும் பெற்ற அம்மாக்களுக்கு...

பெண் பாதுகாப்புசாஹா

மகன்களையும் மகள்களையும் பெற்ற அம்மாக்களுக்கு...

ரபரப்பான பெங்களூரு சாலைகளாகட்டும்... எப்போதும் மக்கள் கூட்டம் நெரிக்கிற சென்னை, கோயம்பேடு பேருந்துநிலையம் ஆகட்டும்...  தனியே நடமாடும் பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பில்லை. இரவில் மட்டுமல்ல... பகலிலும்கூட பெண்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகியே இருக்கிறது.

பெண்களின் மேல் நிகழ்த்தப்படுகிற தொடர் வன்முறைகளைக் கண்டிக்கும் விதமாக தனது ‘பிளாங்க் நாய்ஸ்’ அமைப்பின் சார்பாக பெங்களூரில் மக்கள் கூட்டத்தைச் சேர்த்திருக்கிறார் ஜஸ்மீன் பதேஜா.
‘`வீட்டை விட்டு வெளியில போற போது உடம்பு முழுக்க மறைக்கிற மாதிரி டிரெஸ் பண்ணிக்கோ. உன்னைக் கடந்து போகிற ஆண் களுக்கு வழி விட்டு ஓரமா நடந்து போ... இல்லைனா அவங்க உன்மேல இடிச்சிட்டும் உரசிட்டும் போகலாம்.

ராத்திரி நேரத்துல தனியா ஆட்டோல வராதே... டிரெயின்ல கூட்டம் வழிஞ்சாலும் எப்போதும் லேடீஸ் கம்பார்ட்மென்ட்டுலயே ஏறு... ஜெனரல் கம்பார்ட்மென்ட் காலியா இருந்தாலும் வேண்டாம். ரோட்டுல போற வர்றவங்களைப் பார்த்து, கடைக்காரரைப் பார்த்து, பஸ் டிரைவரைப் பார்த்து சிரிக்காதே... ஜாக்கிரதையா இரு... பத்திரமா இரு....’’ இப்படிச் சொல்லித்தான் நம்ம மகளை வளர்க்கறோம். ஒரு கட்டத்துல சிடுசிடு முகமும், விரோதப் பார்வையும் அவங்களோட நிரந்தர அடையாளங்கள் ஆயிடுது.

நாம வாழற சூழலைப் பாதுகாப்பா னதா மாத்தினாலே, தேவையில்லாத இந்த பயங்கள்லேருந்து  வெளியில வரலாம். எதிர்ல வர்ற ஒவ்வொரு ஆணும் பெண்ணைச் சகோதரியாகவோ,  அம்மாவாகவோ பார்க்கணும்னு எதிர் பார்க்க மாட்டோம். சகமனுஷியா நட மாடறதுக்கான சுதந்திரத்தை மட்டுமே எதிர்பார்ப்போம். அப்படி யொரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கிற முயற்சிதான் ‘பிளாங்க் நாய்ஸ்’’ - வார்த்தைகளில் சீற்றம் தெறிக்கப் பேசுகிறார் ஜஸ்மீன்.

‘`கொல்கத்தால பிறந்து வளர்ந்தேன். ஒரு ஸ்டூடன்ட்டா பெங்களூருல அடியெடுத்து வச்சேன். அந்த நகரமும் சூழலும் எனக்குப் புதுசு. வீட்டை விட்டு வெளியில தங்கறதும் அதுதான் முதல் முறை. அந்த ஊரைப் பத்தித் தெரிஞ்சுக்கிற ஆர்வத்துல கேமராவும் கையுமா நிறைய சுத்தி யிருக்கேன். ஆனா, எனக்கு வழி நெடுகிலும் நிறைய பிரச்னைகள்... வக்கிர எண்ணத்தோடவும், சந்தர்ப்பம் கிடைச்சா உரசிட்டுப் போற முயற்சியோடவும், தவறான எண்ணத்தோடவும் பின் தொடர்ந்த ஆண்களை அதிகமா சந்திச்சேன். பள்ளிக் கூட யூனிஃபார்ம்ல போகிற பெண்குழந்தைகளும் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டதைப் பார்த்தேன். எனக்குள்ளே பயமும் பதற்றமும் அதிர்ச்சியும் அதிகமாயின. அந்த அவஸ்தை களையும் அனுபவங்களையும் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பகிர்ந்து கிட்டபோது எனக்குக் கிடைச்ச பதில்கள் இன்னும் அலட்சியமாக இருந்தன.

பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களும் வன்முறைகளும் எவ்வளவு பெரிய விஷயம்... ஆனா, அதோட தீவிரமே புரியாம இவ்வளவு அலட்சியமா எடுத்துக்கிறாங்களேன்ற கோபத்துலதான் ‘பிளாங்க் நாய்ஸ்’ உருவாக்கினேன்.

மகன்களையும் மகள்களையும் பெற்ற அம்மாக்களுக்கு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்னோட கலைப்படிப்போட மூன்றாவது வருஷ புராஜெக்டாக வும் பிளாங்க் நாய்ஸை உருவாக்கினேன். பெண்ணியம் சார்ந்த கலை, சமூக ஈடுபாடு பத்தின விஷயங்கள்ல எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். பொதுவெளிகள்ல பெண் களுக்கு எதிராக இழைக்கப்படற கொடுமைகளுக்கு குரல் கொடுக் கறதையும், அதிகம் கண்டு கொள்ளப்படாமலோ அல்லது அலட்சியப்படுத்தப்பட்டோ இருக்கிற ஈவ் டீஸிங் பிரச்னையை மக்கள் பிரச்னையா பார்க்கறதை யும் இந்த அமைப்போட முக்கிய நோக்கங்களா மாத்தினேன். பாலியல் வன்முறைகள் பத்தின அனுபவங்களையும், அவற்றுக்கான ஆறுதல்களையும் இங்கே பகிர்ந்துக்கலாம்...’’ - நீண்ட நெடும் அறிமுகம் தருகிற ஜஸ்மீன், ‘பிளாங்க் நாய்ஸ்’ அமைப்பின் செயல்திட்டங்களாக உருவாக்கியிருக்கிற விஷயங்களில் வித்தியாசம் காட்டுகிறார்.

‘`பிளாங்க் நாய்ஸ் அமைப்போட முக்கிய அடையாளம் ‘ஆக் ஷன் ஹீரோஸ்’. இது முழுக்க முழுக்க மக்களால் மக்களுக்காக இயங்கற ஒரு திட்டம். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்க்கிற, நிறுத்த நினைக்கிற யாரும் இதுல தன்னை இணைச்சுக்கலாம்.. பிளாங்க் நாய்ஸ் அமைப்புல தன்னார்வலரா இணையற ஒவ்வொருத்தருக்கும் `ஆக் ஷன் ஹீரோ' என்ற அடை யாளம் கிடைக்கும்.  பயத்தைப் புறந்தள்ளுவதும், பெண்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்த்துக் கேள்வி கேட்பதும்தான் அடிப்படைத் தகுதிகள். தனக்கெதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு தான் எந்த வகையிலயும் காரணமில்லைனு நம்பணும். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிற நபர்களை ஓரமா நின்னு வேடிக்கை பார்க்காம, களத்துல இறங்கி உதவத் தயாரா இருக்கணும்...’’ என்கிறவர், 16 நாடுகளில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோக்கள் தன் அமைப்பில் இணைந்திருப் பதைக் குறிப்பிடுகிறார்.

‘நான் ஒருபோதும் இதைக் கேட்கவில்லை’ என்கிற ஜஸ்மீனின் ‘ஐ நெவர் ஆஸ்க் ஃபார் இட்’ பிரசாரம் இந்தியாவில் மிகவும் பிரபலம்.

‘`பாலியல் வன்முறைகளுக்குப் பெண்கள் அணிகிற உடைகள்தான் காரணம்னு சொல்றாங்க. அதுக்கு எதிரான விழிப்பு உணர்வுப் பிரசாரமாதான் ‘ஐ நெவர் ஆஸ்க் ஃபார் இட்’ ஆரம்பிச்சோம். பாலியல் வன்கொடுமைகளைச் சந்திச்ச பெண்கள்கிட்ட சம்பவத்தன்னிக்கு அவங்க அணிஞ்சிட்டிருந்த உடை ஞாபகமிருக்கானு கேட்டோம். அநேகமா எல்லாருக்குமே அது நினைவில் இருந்தது. அவங்களோட அந்த உடைகளை அனுப்பி வைக்கச் சொன்னோம்.  அப்படிச் சேர்ந்த உடைகள்ல ஷார்ட்ஸும் இருந்தது. புர்காவும் இருந்ததுதான் ஆச்சர்யம்...’’ - அப்படிக் குவிந்த உடைகளை நமக்குக் காட்டியபடியே தொடர்கிறார்.

அடுத்தது ‘வாக் அலோன்’... இது பொதுவிடங்களில் பெண்களைத் தனியே, தைரியமாக நடக்க ஊக்கப்படுத்துகிற பிரசாரம். பெண்கள் அதுவரை பயணிக்காத இடங்களில் எந்த நேரத்திலும் தனியே உலா வரவும், விரும்பியபடி படங்கள் எடுத்துக் கொள்ளவும் தைரியம் அளிக்கிற பிரசாரம்.

‘`பயமில்லாத வாழ்க்கைங்கிறது நம் அடிப் படை உரிமை. தனியே நடந்து போகறதுக்கே பாதுகாப்பு இல்லைனா, அப்படி நடக்கிறதையே தவிர்க்கச் சொல்றது நியாயமாகுமா? அந்தச் சூழலை பாதுகாப்பானதா மாத்த வேண்டிய கடமை நமக்கில்லையா?

பெங்களூருல மார்க்கெட்டிங் வேலையில இருக்கிற இளம்பெண் மதிய உணவுக்காக வெளியில போயிருக்காங்க. வழியில ஒரு பூங்காவைப் பார்த்ததும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா என்னன்னு தோணியிருக்கு. அங்கேயே தன்னுடைய யோகா மேட்டை விரிச்சுப் படுத்து ஓய்வெடுத்திருக்காங்க. அப்படியொரு அனுபவத்துக்கு பிளாங்க் நாய்ஸோட ‘மீட் டு ஸ்லீப்’ ஐடியாதான் காரணம்னு சொல்லியிருக்காங்க. ‘மீட் டு ஸ்லீப்’ முயற்சியை வெறுமனே தூங்கி ஓய்வெடுக்கிறதுக்கான விஷயமா பார்க்க வேண்டாம். ஆண்களுக்குச் சாத்தியமாகிற அந்த விஷயம் பெண்களுக்கு மட்டும் ஏன் தடையா இருக்கணும்? பெண்கள் செய்யக்கூடாதுனு காலங்காலமா வளர்க்கப்பட்ட இந்த மாதிரியான பயங்களை விட்டு வெளியே வரச் செய்யற முயற்சி இது.

பொதுவா முன் அறிமுகம் இல்லாத யார்கூடவும் நாம பேசத் தயங்குவோம். பயப் படுவோம். அதைத் தகர்க்க ‘டாக் டு மீ’ திட்டத்தைத் தொடங்கினோம். சக மனிதர்கள் மேல மரியாதையை ஏற்படுத்தச் செய்யற இந்த முயற்சிக்கு இந்தியாவின் பல மாநிலங்கள்ல நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.
 
நிர்பயாவுக்கு நடந்த கொடுமைக்குப் பிறகு உருவான உறுதிமொழி ‘சேஃப் சிட்டி பிளெட்ஜ்’. பெண்கள் பாதுகாப்பா வாழறதுக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க யாரெல்லாம் என்ன வெல்லாம் உத்தரவாதங்கள் தர முடியும்னு பார்த்தோம். கிட்டத்தட்ட 200-க்கும் மேலான உறுதிமொழிகள் வந்தன. நல்ல ஸ்பரிசத்துக்கும் கெட்ட ஸ்பரிசத்துக்குமான வித்தியாசத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறதா ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கிட்டாங்க.

பெண்ணுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்த்தப்படறபோது உதவிக்கு வருவோம்னு ஆண்கள் உறுதிமொழி எடுத்துக்கிட்டாங்க. கடைசிப் பேருந்தையோ, டிரெயினையோ பிடிச்சு வீடு போய்ச் சேரத் தயக்கம் காட்ட மாட்டோம்னு மாணவர்களும், குடிகாரக் கணவனோட கொடுமை தாங்காம பாதி ராத்திரியில வீட்டை விட்டு வெளியேற்றப்படற பெண்ணுக்கு தம் வீட்டில் அடைக்கலம் கொடுக்கத் தயங்க மாட்டோம்னு பெண்களும் உறுதிமொழிகள் எடுத்துக்கிட்டாங்க.

எந்த ஒரு நல்ல முயற்சிக்கும் விமர்சனங்கள் சகஜம். நாங்களும் அவற்றைச் சந்திச்சிருக்கோம். இதைப் பெண்ணிய நடவடிக்கைகளாகவோ, பழிதீர்க்கிற விஷயங்களாகவோ பார்க்க வேண்டியதில்லை. எங்கேயும் எப்போதும் பெண்களோட பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை உறுதிப்படுத்தறதுக்கான கூட்டுமுயற்சிதான் இது..

பெண்கள் தாக்கப்படற ஒவ்வொரு முறையும் அவங்களையே குற்றவாளிகளா கூண்டுல நிறுத்தற அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். பெண்கள் மேல நிகழ்த்தப்படற  பாலியல் அத்துமீறல்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதை இந்த உலகத்துல உள்ள ஒவ்வொரு மனிதர்கிட்டயும் கொண்டு போய்ச் சேர்க்கிறதுதான் எங்களோட லட்சியம்!’’  - என்கிற ஜஸ்மீன், மகன்களையும் மகள்களையும் பெற்ற அம்மாக்களுக்கான மெசேஜுடன் முடிக்கிறார்.

‘`ஆண் குழந்தைகளை சில விஷயங்களைச் செய்ய விடாமலும், பெண் குழந்தைங்களை சில விஷயங்களைச் செய்தே ஆகணும்னும் சொல்லி வளர்க்கறோம். அங்கேதான் பிரச்னைகள் ஆரம்பமாகுது. ஆண் குழந்தை கள் அழுதாங்கன்னா, ‘பொண்ணு மாதிரி அழாதே’னு சொல்லித் தடுக்கறோம். உணர்வுகளை வெளிக்காட்டாம அந்தப் பசங்களும் கட்டுப்படுத்திக்கிறாங்க. தவிர, அழுகைங்கிறது பலவீனமான செயல்... அதைப் பெண்கள்தான் செய்வாங்க. அதனால பெண்கள் பலவீனமானவங்க’ன்ற கருத்தையும் ஆண் குழந்தைகள் மனசுல பதிக்கிறோம். அழுகை பலவீனத்தின் வெளிப்பாடும் இல்லை. பெண்கள் பலவீனமானவர்களும் இல்லை. இதை ஒவ்வொரு பெற்றோரும் உணரணும்!’’