Published:Updated:

வியப்புகள் விலகும்! - இயக்குநர் கிருத்திகா உதயநிதி

வியப்புகள் விலகும்! - இயக்குநர் கிருத்திகா உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
வியப்புகள் விலகும்! - இயக்குநர் கிருத்திகா உதயநிதி

வாழ்வை மாற்றிய புத்தகம்ஆர்.வைதேகி - படம்: ப.பிரியங்கா

வியப்புகள் விலகும்! - இயக்குநர் கிருத்திகா உதயநிதி

புத்தகங்கள் படிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு செயல். ஆனால், குழந்தைகள் பிறந்ததும், நேரமின்மை காரணமாக என்னால் நிறையப் புத்தகங்கள் படிக்க முடியவில்லை. ரொம்பவும் முக்கியமான புத்தகம் எனத் தெரிந்தால் மட்டுமே படிக்க முடிகிறது. அப்படித்தான் சமீபத்தில் என்னுடைய தோழி ‘Sapiens: A Brief History of Humankind’ என்ற புத்தகத்தைப் பற்றிச் சொன்னார். எனக்குப் பொதுவாக வரலாறு மற்றும் சுயசரிதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். அதனால் இந்தப் புத்தக மும் நிச்சயம் பிடிக்கும் என்று தோழி சொன்னதன் பேரில் படிக்கத் தொடங்கினேன்.

இந்தப் புத்தகம், மனிதகுல வரலாறு பற்றியது. வாழ்க்கையைப் பற்றிய என் எண்ணங்களையும் பார்வையையும் நிறையவே மாற்றியது. குரங்கு காலத்தில் இருந்து இன்று வரை மனித இனத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை விளக்கும் புத்தகம் இது. அரசியல், மதம், முதலாளித்துவம், விவசாயம் என எல்லாவற்றையும் பேசுகிறது. இந்த எல்லா விஷயங்களின் மீதுமான நமது நம்பிக்கைகள் எப்படித் தோன்றின, அவை எப்படி வளர்ந்திருக்கின்றன என்பதைப் பிராக்டிகலாக விளக்கியிருப்பார் புத்தக ஆசிரியர் யூவல் ஹராரி. மதமும், அரசியலும் ஏன் வந்தன என்பதை வேறொரு கோணத்தில் படிக்கும்போது காலங்காலமாக நமக்குள் பதிந்துபோன சிந்தனையே மாறுகிறது.

மனிதராகப் பிறக்கிறோம்... வளர்கிறோம்... நமக்கு யார் யாரோ என்னவெல்லாமோ சொல்லித் தருகிறார்கள். ‘அவைதான் உண்மை... அதுதான் வாழ்க்கை’ என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் புத்தகத்தைப் படிக்கிறபோது நமக்குப் போதிக்கப்பட்ட பல விஷயங்களின் பின்னணிகள் எங்கிருந்து ஆரம்பித்தன என்கிற தேடலுக்கு விடைகள் கிடைக்கின்றன.

வியப்புகள் விலகும்! - இயக்குநர் கிருத்திகா உதயநிதி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நம் யாருக்குமே வாழ்க்கைப் போதனைகள் பற்றிய கேள்விகள் இருந்திருக்காது. ‘அம்மா, அப்பா கற்றுக்கொடுத்தார்கள், ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்... அதனால் அப்படித் தான்’ என்று ஏற்றுக்கொண்டு வாழப் பழகியிருப்போம். நிறைய கேள்விகள் நமக்குள் இருந்தாலுமே கேட்கத் தோன்றியிருக்காது. ஆனால், இந்தப் புத்தகத்தைப் படித்ததும் கேட்க நினைத்து, கேட்காமல் தவிர்த்த பல கேள்விகளுக்கும் பதில்கள் கிடைத்தன.

ஆதிகாலத்தில் ஆண்களை வேட்டைக்குப் போகச்சொல்லிக் கட்டளையிட்டதே பெண்கள்தான். வீட்டைப் பார்த்துக்கொள்வது பெண் களின் வேலை என்றும் முடிவெடுத்ததே பெண்கள்தான். முடிவெடுக்கும் அதிகாரம் ஆதிகாலத்தில் பெண்களிடம் தான் இருந்திருக்கிறது. காலப்போக்கில் அது மாறி, பெண்கள் அடுக்களையைத் தாண்டக்கூடாது என்கிற நிலை வந்திருக்கிறது. இதுபோன்று பல கருத்துகள் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தன... காலப்போக்கில் எப்படி மாறிப்போயின என்பன போன்ற பல விஷயங்களை இந்தப் புத்தகம் தெளிவாக்குகிறது.

‘அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் திருப்தியானதாகவே இருக்கும். அதுவே அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கிறவர் களுக்கு என்னதான் வசதிகள் சூழ்ந்திருந்தாலும், அந்த வாழ்க்கை மோசமான சோதனையாகவே இருக்கும். வறுமை, நோய்கள், போர், பஞ்சம், முதுமை, மரணம் ஆகிய எல்லாம் மனித இனத்தின் தவிர்க்கமுடியாத விதிகள் அல்ல... நமது அறியாமையின் பலன்கள்’ என்கிறார் ஆசிரியர். மொத்தத்தில் இந்தப் புத்தகம், புரட்டப்புரட்ட ஆச்சர்யத் தகவல்களாலும் உள்ளுணர்வுகளாலும் ஈர்ப்பது மட்டுமின்றி, மனித மதிப்பீடுகளை ஆராயச் செய்கிற வழிகாட்டியாகவும் இருப்பதுதான் இன்னும் சுவாரஸ்யம். இதைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் மீதான பார்வை விசாலமாகும்; வியப்புகள் விலகும்!’’