Published:Updated:

இது பெரிய வரம்!

இது பெரிய வரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது பெரிய வரம்!

வித்தியாசம்வெ.நீலகண்டன், படம்: ஸ்ரீநிவாசன்

“ஒரு திருநங்கையோட வாழ்நாள் கனவு, தழையத்தழைய தாலி கட்டிக்கிட்டு, ஓர் ஆணோட அன்புல கரைஞ்சு வாழுறதுதான். எனக்கு அப்படியொரு கொடுப்பினையைக் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்.

குடும்பத்தால புறக்கணிக்கப்பட்டு அடுத்து என்னன்னு தெரியாம நின்ன என்னை அரவணைச்சு, ‘நான் இருக்கேன் உனக்கு'ன்னு சொன்னதும் நின்னதும் இவர்தான். எனக்குள்ள இருந்த திறமைகளை அடையாளம்கண்டு என்னை ஒரு முன்மாதிரி மனுஷியா கொண்டு வந்ததும் பிரகாஷ்தான்...”

பிரகாஷின் கரம் பற்றியபடியே கண்கள் அரும்பப் பேசுகிறார் பத்மினி. இவர் மடியில் அமர்ந்தபடி ரைம்ஸ் படித்துக் கொண்டிருக்கிறான் ஐந்து வயது ஜெயஸ்ரீதர்.

பத்மினி, பரதக் கலைஞர். உலகின் முதல் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் திருநங்கை என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. கோவை துடியலூரைச் சேர்ந்த பத்மினி, லோட்டஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிகிறார். அதோடு, தன்னம்பிக்கை பயிற்சியாளர், திருநங்கைகள் பற்றிய சமூக விழிப்பு உணர்வுப் பேச்சாளர் என பல முகங்கள் உண்டு பத்மினிக்கு.

“ஆறாம் வகுப்புல இருந்து நானும் பிரகாஷும் ஒண்ணாப் படிச்சோம். எல்லாப் பசங்களும் நம்பரைக் குறிப்பிட்டு கேலி செய்யும்போது பிரகாஷ் மட்டும் ரொம்பவே ஆதரவா இருப்பார். கிண்டல் செய்ற பசங்களை அடிச்சுத் துரத்துவார். சின்ன வயசிலேயே எனக்கு நடனம் மேல அவ்வளவு ஈர்ப்பு.

`நிச்சயம் நீ பெரிய டான்சரா வருவே... மனம் தளராதே.. கேலி கிண்டலுக்கெல்லாம் உடைஞ்சு போகாதே'ன்னு அப்பவே அவ்வளவு தெளிவாவும் தீர்க்கமாவும் பேசுவார். ஒரு வகையில் அவர் எங்களுக்கு உறவுக்காரர்.

இது பெரிய வரம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நான் பாலினச் சிக்கலோட இருக்கேன்கிறதை முழுசா உணர்ந்த பிறகு, வீட்டுல என்னை அணுகுற விதமே மாறிடுச்சு. இனிமே இங்கே இருக்க முடியாதுன்னு புரிஞ்சிடுச்சு. எங்க வீட்டு வளாகத்திலேயே என்னை மாதிரியே ஒரு தோழி இருந்தா. பேரு ஐஸ்வர்யா. என்னைப்போல திருநங்கை. எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான் அவளுக்கும்.

`வா... நமக்கான உலகத்துக்குப் போயிடுவோம்'னு கூப்பிட்டா. யாருக்கிட்டயும் சொல்லாம ஒருநாள் மும்பைக்குக் கிளம்பிப் போயிட்டோம். பிரகாஷுக்கும் தெரியாது. அப்போ எனக்கு 17 வயது. மும்பையில மிகப்பெரும் சமூகமா திருநங்கைகள் வாழ்றாங்க. அது மனசுக்கு ரொம்பவே ஆறுதலா இருந்துச்சு. இருந்தாலும், அங்கேயும் பல திருநங்கைகள் மிக மோசமா நடத்தப்படறாங்க. இந்தச் சமூகம் திருநங்கைகள் உயிரோடு வாழ, இரண்டே இரண்டு வழிகளைத்தான் வச்சிருக்கு. கடை கடையா ஏறி கைதட்டி பிச்சை எடுக்கிறது, பாலியல் தொழில் - இந்த இரண்டையும் கடந்து திருநங்கைகளுக்கு வாழ்க்கையே இல்லையா..? அவங்க விரும்பின குடும்பம், திறமைக்குத் தகுந்த வேலை... இதெல்லாம் திருநங்கைகளுக்கு வாய்க்கவே வாய்க்காதா? நம்மை எந்த ஊர் ஓட ஓட துரத்துச்சோ, அதே ஊர்ல முன்மாதிரியா வாழ்ந்துக் காட்டணும்கிற உந்துதல்ல திரும்பவும் கோவைக்கே வந்தேன்... முழுமையான பெண்ணா வந்தேன்!

பிரகாஷ் நகை செய்யும் தொழிலாளி. பட்டறை வச்சிருந்தார். ஒருநாள் பட்டறை பக்கமா போனப்போ, என்னைக் கூப்பிட்டு விசாரிச்சார். எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை யும் ஆறுதலும் அந்தத் தருணத்தில உருவாச்சு. அதுக்கப்புறம், அடிக்கடி சந்திச்சுப் பேச ஆரம்பிச்சோம். `நடனத்தில நீ பெரிய ஆளா வருவே... முறையா கத்துக்கோ'ன்னு ஆலோசனை சொன்னதோடு, சிவாஞ்சலி நாட்டியப் பள்ளியில சேர்த்தும் விட்டார். நடனப்பயிற்சியும் வீணைப்பயிற்சியும் முடிச்சேன்.

ஒரு பள்ளிக்கூடத்தில நடன ஆசிரியையா சேர்ந்தேன். நல்ல நம்பிக்கை வந்துச்சு. ஆனாலும், பிரகாஷுக்கு நான் பார்த்த வேலையில சந்தோஷம் இல்லை. `நீ உன் சமூகத்துக்காக வேலை செய்யணும். அதுக்கான முயற்சிகள்ல இறங்கு'ன்னு சொன்னார்.

திருநங்கைகளுக்காக டாக்டர் லட்சுமி பாய், `தாய்' தொண்டு நிறுவனம் நடத்திக் கிட்டிருந்தாங்க. அந்த அமைப்புல சேர்ந்தேன். திருநங்கைகளுக்கான தன்னம்பிக்கைப் பயிற்சிகள், தொழிற்பயிற்சிகள்னு நிறைய பணிகளை தாய் அமைப்பு செஞ்சுச்சு. அதுல தீவிரமா இயங்க ஆரம்பிச்சேன்.

திருநங்கைகளை சமூகம் பார்க்கற அதே  கேவலப்பார்வையோடுதான் காவல்துறையும் எங்களை அணுகுது. அதை மாத்தணும். தாய் அமைப்பு, காவல்துறைக்கு திருநங்கைகளின் பிரச்னைகளைப் புரியவைக்கிற பயிற்சிகளை வழங்குவது வழக்கம். அதுக்கான பயிற்சியாளரா என்னை நியமிச்சாங்க. பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வுப் பிரசாரத்துக்கான பொறுப்பாளராகவும் இருந்தேன்.

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகள்ல மிஸ் தமிழ்நாடு, மிஸ் இந்தியா பட்டமெல்லாம் வாங்கினேன். பிரகாஷ் எல்லா தருணங்கள்லேயும் உடன் இருந்தார். தொடக்கத்துல நண்பர்களா தொடங்கின எங்க பயணம், நாளாக நாளாக ரொம்பவே உணர்வுபூர்வமா மாறுச்சு. ஒரு கட்டத்துல ஒருத்தர் இல்லாம ஒருத்தர் வாழவே முடியாதுன்னு உணர்ந்தோம்.

ஒருநாள், ரெண்டு பேரும் ரொம்ப உற்சாக மான மனநிலையில இருந்தோம். `நாம கல்யாணம் பண்ணிக்கலாமா பத்மினி'ன்னு கேட்டார். ஒரு திருநங்கைக்கு இதைவிட பெரிய வரம் எதுவுமில்லை. ஆனாலும், நான் அதை உடனே ஏத்துக்கலே.

பிரகாஷ் ரொம்ப நல்ல மனிதர். நமக்காக, அவர் கஷ்டங்களைச் சுமக்க வேண்டா மேன்னு நினைச்சேன். குடும்பத்தில பொறுப்பான பிள்ளையா இருக்கிற பிரகாஷை பிரிக்கிறதைவிட பெரிய பாவம் வேறெதுவும் இல்லை. அதனால, `இதெல்லாம் சரிப்படாதுப்பா'ன்னு சொன்னேன். ஆனாலும், பிரகாஷ் உறுதியா இருந்தார்.

`உன் திறமைக்கு நீ பெரிய இடத்துக்கு வருவே... நான் அதுக்கு துணை நிப்பேன். குடும்பத்தில எல்லோருக்கும் புரிய வைப் பேன்'னு சொன்னார். நண்பர்கள் உதவியோட திருமணம் செஞ்சுக்கிட்டோம்.

நிறைய நாட்டிய நிகழ்ச்சிகள் செஞ்சேன். ஒரு நிகழ்ச்சியில என் நடனத்தைப் பார்த்த குஷ்பு மேடம் `ருத்ரா’ சீரியல்ல நடிக்கிற வாய்ப்பு தந்தாங்க. அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. `மதுபானகடை’ படத்துல, திருநங்கைகளோட வலியைச் சொல்ற அசலான ஒரு பாத்திரம். இப்படி ஆக்க பூர்வமான வாய்ப்புகளை மட்டும் ஏத்துக்கிட்டு நடிச்சேன்.

இயல்பாவே எனக்கு தமிழ் உச்சரிப்பு தூய்மையா வரும். சாலமன் பாப்பையா சாரோட பட்டிமன்றங்களிலெல்லாம் பேசியிருக்கேன். தொலைக்காட்சியில செய்திகள் பார்க்கும்போது, `நீ பேசுற தமிழுக்கு, நல்லா செய்தி வாசிக்க முடியும்'னு பிரகாஷ் சொல்வார். மனசுக்குள்ள ஒரு கனவா அது விழுந்து முளைச்சுச்சு. லோட்டஸ் டி.வி-யில அந்த வாய்ப்பும் கிடைச்சது.

என்னை உலகத்திலேயே முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்ன்னு சொல்றாங்க. ஜெர்மன், ஆஸ்திரேலியான்னு பல நாடுகள்ல இருந்தெல்லாம் பெரிய பெரிய தொலைக் காட்சிகள்ல இருந்து வந்து பேட்டியெடுத்துட்டுப் போறாங்க.

குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட எனக்கு இன்னிக்கு ஒரு குடும்பம் இருக்கு. இந்தச் சமூகத்தால நிராகரிக்கப்பட்ட நான், இன்னிக்கு ஒரு குழந்தைக்குத் தாய். `அம்மா'ன்னு அந்தக் குழந்தை கூப்பிடும்போது இந்த வாழ்க்கையே முழுமை பெற்ற மாதிரி இருக்கு... இந்த வாழ்க்கை பிரகாஷுக்குத்தான் சமர்ப்பணம்...” - நெகிழ்ந்து பேசுகிறார் பத்மினி.

பிரகாஷ் இப்போது வீட்டி லிருந்தபடியே நகைத் தொழில் செய்கிறார்.

“பத்மினியோட பலமே அவங்க தன்னம்பிக்கைதான். அதை சின்ன வயசுல இருந்தே கவனிச் சிருக்கேன். எங்களுக் குள்ள நல்ல புரிதல் இருந்துச்சு. பக்கத்துல இருந்து அவங்க வளர்ச்சியைப் பாக்கணும்கிற ஆசை எனக்கு. மனசுதான் எல்லாத்துக்கும் அடிப்படை. மற்றதெல்லாம் இரண்டாம்பட்சமாகிடுச்சு. தொடக்கத்துல எங்க வீட்டுல எல்லாரும் வருத்தமா இருந்தாங்க. இப்போ நாங்க வாழுற வாழ்க்கை அவங்க மனதை மாத்திடுச்சு. எல்லோரும் வந்து போறாங்க. நல்லது, கெட்டதுகள்ல எல்லோர் கூடவும் நாங்களும் நிக்கறோம்.

பத்மினிக்குப் பெரிய மனக்குறை ஒண்ணு இருந்துச்சு. நமக்கு ஒரு குழந்தை இல்லையேன்னு அடிக்கடி சொல்லி வருந்துவா. அந்த மனக்குறையைப்போக்க, ஒரு குழந்தையைத் தத்தெடுத்தோம். இப்போ அவனுக்கு ஐந்து வயது.  வாழ்க்கை முழு நிறைவா இருக்கு...'' என்கிறார் பிரகாஷ்!