Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: காதலுக்கு இதுவல்லவா மரியாதை!

அவள் கிளாஸிக்ஸ்: காதலுக்கு இதுவல்லவா மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் கிளாஸிக்ஸ்: காதலுக்கு இதுவல்லவா மரியாதை!

உருகவைக்கும் ஸ்பெஷல் ஸ்டோரி

அவள் கிளாஸிக்ஸ்: காதலுக்கு இதுவல்லவா மரியாதை!

ந்தக் கடிதமே பாதி விஷயத்தைச் சொல்லியிருக்கும். மீதியை அருகிலுள்ள புகைப்படம் உணர்த்தியிருக்கும். ஆம்... தீபாவை முழுமனதோடு ஏற்று மணம் புரிந்துகொண்டு, ‘காதலுக்கு இதுவல்லவா மரியாதை!’ என்று வியக்க வைத்திருக்கும் ஓர் அவதாரப் புருஷன் தான் சுந்தர்ராமன். அவர்களின் அந்த அற்புதக் காதல் கதையை அவரே விவரிக்கிறார்..

‘‘மதுரைக்குப் பக்கத்துல இருக்கிற நாகமலை புதுக்கோட்டை என்னோட சொந்த ஊர். சில வருஷம் முன்னாடி என் அண்ணன் கல்யாணம் நாகர்கோவில்ல நடந்தது. அதுக்குப் போயிருந்தப்போ தீபாவைப் பார்த்தேன்.

அவள் கிளாஸிக்ஸ்: காதலுக்கு இதுவல்லவா மரியாதை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

துறுதுறுனு ஓடித் திரியுற உற்சாகம், கலகலப்பான சுபாவம்னு முதல் பார்வை யிலயே எம் மனசுல ஜம்முனு சிம்மாசனம் போட்டு உட்காந்துட்டா தீபா. பார்வைப் பரிமாற்றங்கள் சின்னச் சின்ன பேச்சுகள்ல ஆரம்பமான எங்க காதல், அந்தக் கல்யாணம் முடிஞ்சு அவரவர் வீட்டுக்குப் போன பிறகும் கடிதம் மூலமா தொடர்ந்துச்சு.

அப்படி தீபா எழுதின கடிதம் ஒருநாள் எங்க அப்பா கையில கிடைக்க வீடே ரணகளமானது. இது தீபா வீட்டுக்கும் தெரிஞ்சு, அங்கேயும் பிரச்னை! நம்மளால எதுக்கு ரெண்டு குடும்பங்களுக்கும் மனக் கசப்புன்னு தீபாவுக்குக் கடிதம் எழுதுறதை நிறுத்திட்டேன்...’’ என்கிறவர், அந்த வருஷமே ஐ.டி.ஐ படிப்பை முடிக்க, மஸ்கட்டில் வேலை கிடைத்ததும் கிளம்பி விட்டாராம்.

‘‘நாடு விட்டு நாடு தாண்டிப் போய்ட் டாலும் தீபாவை... அந்தக் கண்களை...அவளது புன்னகையை... எதையுமே என்னால மறக்க முடியல. கண்ணை மூடினாலும் திறந்தாலும் தீபாதான் உள்ளுக் குள்ள வந்து நிப்பா...’’ என்கிறவர், ஒரு வருடம் கழித்து 30 நாள் விடுமுறையில் மதுரைக்கு வந்திருக்கிறார். வந்தவர், தன் அண்ணி யிடம் தீபாவைப் பற்றி (அண்ணிக்கு தீபா உறவாம்) விசாரித்தபோதுதான் தீபாவுக்கு கொச்சியில் அரசு வேலை கிடைத்து அங்கேயே போய்விட்டதும், அவருக்கு உடல் நலமில்லாமல் இருப்பதும், அவருடைய எதிர்கால வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக நிற்பதும் தெரிய வந்திருக்கிறது.

‘‘எனக்கு உடனடியா தீபாவைப் பார்க்கணும்போல இருந்தது. அவளோட முகவரியை வாங்கிக்கிட்டு, வீட்டுக்குத் தெரியாம தீபாவை சந்திக்கப் போனேன்.

அவள் கிளாஸிக்ஸ்: காதலுக்கு இதுவல்லவா மரியாதை!

சில வருஷங்கள் கழிச்சு நான் தீபாவை மறுபடியும் சந்திச்ச அந்த நாளை என்னால மறக்க முடியாது. அது ஒரு மழை நாள். என் தீபா ஊன்றுகோலைப் பிடிச்சிட்டு, மெள்ள நடந்து என் எதிர்ல வந்து நின்னா. அப்படியே ஆடிப் போய்ட்டேன். என்னால அவளை அந்த நிலையில தொடர்ந்து பார்க்கக்கூட முடியலை. அஞ்சே அஞ்சு நிமிஷம் அங்க இருந்திட்டு, கிளம்பி மதுரைக்கு வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்தா, கல்யாண வீட்டுல துள்ளித் துள்ளி ஓடின அந்தக் கால்களே என் கண்ணுக்குள்ள வந்து கஷ்டப்படுத் துச்சு. தீபாவை நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு எனக்கே புரிஞ்ச தருணம் அது. உடனடியா தீபா வீட்டுக்குப் போய், அவளை பொண்ணு கேட்டு, கல்யாணம் பண்ணி, கூடவே வெச்சு, ராஜாத்தி மாதிரி பார்த்துக்கணும்ன்னு தோணிச்சு.

ஆனா, அப்போ எனக்கு இருந்த ஒரே தயக்கம்... ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அப்புறமா என் தீபாவை கவனிக்க முடியாம போய்டுமோங்கறதுதான். இந்த யோசனையோடயே லீவு முடிஞ்சு மஸ்கட் போனேன். ஆனா, அங்க போய் என்னால நிம்மதியா இருக்கமுடியலை. ‘எப்போ தீபாவை கல்யாணம் செய்துக்கப் போற ராமா’னு எனக்குள்ள ஒரு கேள்வி எழும்பிக்கிட்டே இருந்தது. உடனே, ‘உன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமாக இருக்கிறேன். உனக்கும் உன் பெற்றோருக்கும் சம்மதமா?’ன்னு கேட்டு அவளுக்கு கடிதம் எழுதினேன். அதுக்கு வந்த பதில்தான் அந்தக் கடிதம்..’’ என்று சொல்லி, நீண்ட பெருமூச்சு விடுகிறார்.

நம்மோடு சேர்ந்து தங்கள் காதல் கதையைத் தானும் கேட்டுக்கொண்டிருந்த தீபா, அப்போதுதான் பேசத் தொடங்கினார்.

‘‘ஆச்சு... கல்யாணமாகி 8 வருஷம் ஓடிடுச்சு. கல்யாணமான அடுத்த வருஷமே அஞ்சனா பிறந்தா. குழந்தை எங்ககிட்ட இருந்தா சிரமம்ன்னு என் அம்மாகிட்ட விட்டுட்டேன். ஏன்னா, ஏற்கெனவே, காலையில நாலு மணிக்கு எழுந்து சமைக்கறார். அப்புறமா, எனக்கு உடற்பயிற்சி (பிசியோதெரபி) செஞ்சு விடுறார். என்னைக் கொண்டுபோய் ஆபீஸ்ல விட்டுட்டு, இவரோட ஆபீஸுக்கு ஓடுறார். நடுவுல லஞ்ச் முடிஞ்சதும் வேற எனக்கு உடற்பயிற்சி செஞ்சு விடுறதுக்காக என்னோட ஆபீஸுக்கு வந்துட்டுப் போறார். ரயில் நிலையங்கள், படிக்கட்டுகள்னு பல இடங்கள்லயும் என்னைத் தோள்ல தூக்கிச் சுமக்குறார்... நானே ஒரு குழந்தையாட்டம் இவர் தோள்ல ஏறிக்கிட்டு இருக்கறப்போ, எங்களால பச்சைக் குழந்தையை எப்படி பார்த்துக்க முடியும்?’’ என்றவர்,

‘‘இப்போ, அஞ்சனாவுக்கு ஏழு வயசாகிடுச்சு. அவ ஸ்கூல் போக ஆரம்பிச்ச பிறகு அவளை எங்ககூடவே அழைச்சிட்டு வந்துட்டோம். குழந்தையை ஸ்கூலுக்குக் கௌப்பி, சாப்பாடு ஊட்டினு இப்போ அந்த வேலையும் சேர்ந்துடுச்சு அவருக்கு. என்னோட சேர்த்து ராமனுக்கு ரெண்டு குழந்தைகள். ஆனா, எங்க அஞ்சனா நாங்க தூக்கி சுமக்காத குழந்தை...’’ என்று சொல்கையில் கண்களில் நீர் முட்டுகிறது இருவருக்கும். நாம் சரியாகப் புரியாமல் பார்க்க, உணர்ச்சிவசப்பட்டு அந்த சம்பவத்தைத் தொடங்கினார்  சுந்தர்ராமன்.

அவள் கிளாஸிக்ஸ்: காதலுக்கு இதுவல்லவா மரியாதை!

‘‘பொதுவா, நாங்க ரொம்ப அபூர்வமாகத் தான் வெளியில போவோம். அப்படி ஒருநாள் போனப்போ, ரயில் நிலையத்துல வெச்சு, படி ஏறுறதுக்காக நான் தீபாவைத் தூக்கிக் கிட்டேன். உடனே குழந்தை தன்னைத்தான் தூக்கணும்னு அழுதா. நான் மறுத்ததும் ‘அம்மா வேண்டாம்பா... நாம ரெண்டு பேர் மட்டும் தனியா போகலாம்பா’னு ரொம்பவே அடம் பிடிச்சா. என்ன செய்றதுன்னு தெரியாத ஒரு இயலாமையில ‘பளார்’னு குழந்தையை அறைஞ்சிட்டேன். அடி வாங்கிட்டு குழந்தை அழுறா. அதைப் பார்த்து தீபா அழுறா. ரெண்டு பேரையும் பார்த்து நானும் குமுறி குமுறி அழுதுட்டேன் (குரல் உடைந்து வார்த்தை கரகரக்கிறது). அன்னிக்குப் போக நினைச்ச இடத்துக்கு போகாமலே திரும்பி வந்துட்டோம். வீட்டுக்கு வந்த பிறகு தீபாவோட நோயையும், அவளோட தேவைகளையும் குழந்தைக்கு புரியவச்சேன். இப்போ நான் தீபாவை தூக்கிட்டுப் போனா, கீழே தொங்குற தீபாவோட புடவை நுனியை பிடிச்சுக்கிட்டு அஞ்சனா பின்னால நடந்து வர்றா’’ என்ற சுந்தர்ராமன், கண்களை துடைத்தபடி,

‘‘தீபாவோட இந்த நோய்க்கு மருந்தே கிடையாதுன்னு சொல்றாங்க. தொடர்ந்து உடற்பயிற்சி செஞ்சா, நோயோட தீவிரத்தைக் குறைக்கலாம்... அவ்வளவுதான். ஆனாலும், யாராவது ஏதாவது மருந்து கண்டுபிடிச்சு, என் தீபாவை எழுந்து நடக்க வெச்சிருவாங்கன்னு நம்புறேன்’’ என்கிறார் புன்னகையுடன்.

விடைபெறுகையில், ‘‘நான் ஏதோ பெரிய விஷயம் செஞ்சுட்டதா நினைக்காதீங்க. என் ஆபீஸ்லயும் தீபா ஆபீஸ்லயும் இருக்கற மனுஷங்க எங்களை புரிஞ்சுக்கிட்டு, எங்களுக்கு பல விதங்கள்லயும் உதவியா இருக்காங்க. கம்பெனி எம்.டி.யே என்னைக் கூப்பிட்டு, ‘உனக்கு எப்போ அலுவலகம் வரத் தோணுதோ வா. சிக்னல்லகூட நிக்க முடியாம படபடக்கிற மனுஷங்களுக்கு நடுவுல இவ்வளவு பொறுமையா, உன் மனைவியை பார்த்துக்கிறியே’ன்னு உற்சாகப்படுத்தினார். இப்படி சுத்தி இருக்கறவங்களோட ஆசீர்வாதங்களாலதான் நாங்க நல்லா இருக்கோம்’’ என்றபடி, சுந்தர்ராமன் தீபாவை தோளில் தூக்கிக்கொள்கிறார். தீபாவும் ஒரு குழந்தையைப்போல சுந்தரின் தோளில் ஒட்டிக்கொள்கிறார்.

காதல் அங்கே தன் உன்னதமான இன் னொரு பரிமாணத்தை காட்டி புன்னகைத்தது.

- டி.அருள்எழிலன்

(நவம்பர் 24, 2006)