Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: ஒரு காதல்... ஒரு பாலம்!

அவள் கிளாஸிக்ஸ்: ஒரு காதல்... ஒரு பாலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் கிளாஸிக்ஸ்: ஒரு காதல்... ஒரு பாலம்!

அவள் கிளாஸிக்ஸ்: ஒரு காதல்... ஒரு பாலம்!

அவள் கிளாஸிக்ஸ்: ஒரு காதல்... ஒரு பாலம்!

காதலுக்குப் பாலமாக சென்றவர்கள் உண்டு. காதலுக்கு நிஜ பாலமே கட்டியவரைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

தேனி மாவட்டத்தின் சின்னமனூர் அருகிலுள்ள மார்க்கையன்கோட்டைக்குப் போகும் வழி... பெருங்கூட்டமாக சூழ்ந்திருக்கும் தென்னை மரங்கள் நடனமாடி வரவேற்க, ஒரு பாலத்தின் மேல் பாய்கிறது நாம் பயணிக்கும் பேருந்து. கீழே முல்லைப் பெரியாற்றில் சலசலக்கும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பதற்காக நாம் எட்டிப் பார்க்க, ‘‘இது சாதாரண பாலம் இல்லேப்பா... தனியாளு ஒருத்தரு தன் பெஞ்சாதிக்காகக் கட்டின காதல் பாலம்!’’ என்றார் நம் அருகிலிருந்த ஒரு பெரியவர்.

காதல் பாலமா?!  ஆர்வமாகி விசாரித்தோம்.

அவள் கிளாஸிக்ஸ்: ஒரு காதல்... ஒரு பாலம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘பொண்டாட்டிக்காக ஒரு ராஜா கட்டுனது தான் தாஜ்மஹால்னு சொல்லுவாங்க. அதைவிட இதுதான் தம்பி பாராட்டப்பட வேண்டிய அதிசயம். சும்மா ஒரு கட்டடமா நின்னுட்டிருக்காம, ஊரு சனங்க வயித்துல பாலை வார்த்த விஷயமாச்சே! இந்தப் பாலத்தைக் கட்டின நல்ல மனுஷன் பேரு ராஜாராம்ராவ்’’ என்று அவர் விளக்க, சட்டென ‘ஸ்டாப்’ சொல்லி, பஸ்ஸைவிட்டு இறங்கிப் பார்த்தோம் உறுதியான அந்தப் பாலத்தை!

‘ராஜாராம்ராவ் பாலம், 1953-ல் சர்  பி.டி. ராஜன் அவர்களால் திறக்கப்பட்டது’ என்ற கல்வெட்டு இருக்கவும், ‘தமிழகத்து ஷாஜகான்’ ராஜாராம் குடும்பத்தின் வாரிசுகளைத் தேடி மார்க்கையன்கோட்டைக்குப் போனோம். அங்கே ஒரு பெரிய... ஆனால், சிதிலமடைந்த வீட்டில் இருக்கும் ராஜாராம்ராவின் அண்ணன் மகன் சேதுராவ், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

‘‘எங்க தாத்தா ராஜாராம்ராவ் இந்தப் பகுதிக்கு கிராமக் கர்ணமா (கணக்குப்பிள்ளை) இருந்தவர். அந்தக் காலத்துல இங்கே ரெண்டு, மூணு மாசத்துக்குத் தொடர்ச்சியா மழை பெய்ஞ்சுக்கிட்டே இருக்கும். முல்லை ஆத்துல ஆளுங்க கடக்க முடியாத அளவுக்குப் பெருவெள்ளம் போகும்.

அதுக்காகவே எங்க தாத்தா ஒரு தோணி வச்சிருந்தாரு. பத்து பயில்வான்களையும் வேலைக்கு வெச்சிருந்தாரு. ஊர்ல யாருக் காச்சும் உடம்புக்கு முடியலன்னா... ஆத்தைக் கடந்து சின்னமனூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும்னா, தோணியும் அந்த பயில்வான்களும்தான் துணை. வெள்ளம் குறைவா போச்சுன்னா, பயில்வான்கள் கையைக் கோத்துக்கிட்டு ஆளுங்களைக் கடத்தி விட்டுருவாங்க. ஜாஸ்தியா இருந்தா, ஆளுகளை தோணியில ஏத்திக்கிட்டு, பயில்வான்களும் உதவிக்கு வருவாங்க. ஆனாலும், ஊருக்குள்ள மழை, தண்ணியால கொள்ளை நோய் வர்றப்ப பெரிய பிரச்னை தான். பாதிக்கப்பட்டவங்களை உடனடியா, ஆத்தைக்கடந்து கொண்டுபோறதுங்கறது கஷ்டமான காரியமா இருந்துச்சு.

அவள் கிளாஸிக்ஸ்: ஒரு காதல்... ஒரு பாலம்!

இதுக்கு நடுவுல, ஒரு வெள்ளப்பெருக்கு நேரத்துல பாட்டி பத்மாவதி மனசுல ஒரு எண்ணம்.. திருச்சி ஸ்ரீரங்கப் பெருமாளைத் தரிசிக்கணும்னு! தாத்தாவும் சம்மதிச்சு, பாட்டியை அனுப்பி வெச்சிருக்கார். ஆத்தைக் கடந்து, திருச்சி போக ஏற்பாடு ஆனது.

பாதி தூரம் போய்க்கிட்டு இருக்கறப்ப, ஆத்துல வெள்ளம் அதிகமா வரவும், தோணியை ஓட்ட முடியல. தோணி, வெள்ளம் இழுத்த இழுப்புக்கெல்லாம் போக ஆரம்பிச்சது. பயில்வான்களாலயும் எதுவும் செய்ய முடியல. பரிசலை வெள்ளம் இழுத்திட்டுப் போயிருச்சு.

பாட்டி மட்டும் தோணியில வெள்ளத்தோட போற செய்தியைக் கேள்விப்பட்டு ஆத்தோரமா இருந்த அத்தனை ஊரும் கூடிருச்சு. பக்கத்துல இருக்குற உப்பார்பட்டி ஊர்க்காரங்கள்லாம் சேர்ந்து ஆத்தோரத்துல இருந்த பெரிய மரத்தை வெட்டி ஆத்துல சாய்ச்சுருக்காங்க. அந்த வழியா போன பரிசல், மரத்துல சிக்குனதுனால பாட்டி பிழைச்சிட்டாங்க. தப்பிப் பெழைச்ச எங்க பாட்டிதான், தாத்தாகிட்ட, ‘ஊருக்கு என்னென்னவோ செய்யறோம்... இந்த ஆத்துல பாலம் கட்டினா என்ன’ன்னு அழுதுக்கிட்டே கேட்டிருக்காங்க. தாத்தா எதுவுமே யோசிக்கல. சரசரன்னு பேப்பரை எடுத்தவர், ‘இந்த ஆற்றில் எனது சொந்தச் செலவில் பாலம் கட்டிட அனுமதி கொடுக்க வேண்டும்’னு, 1936-ல் சென்னை மாகாண முதல்வரா இருந்த பி.டி.ராஜனுக்குக் கடிதம் எழுதிட்டார்.

அவரும் இங்கன உத்தமபாளையத்துக் காரராச்சா... எங்கக் கஷ்டம் தெரிஞ்சவர். உடனடியா ‘அரசும் பண உதவி செய்யும். உடனே கட்டடப் பணியை தொடங்குங் கள்’னு அனுமதி தந்துட்டார். அப்ப பணத் துக்கு நாப்பதாயிரத்தை எங்க தாத்தாவும், இருபதாயிரத்தை அரசாங்கமும் போட்டு வேலையை ஆரம்பிச்சாங்க. பத்து வருஷத் துக்கு மேல வேலை நடந்தது. வேலை ஆட்கள் அவ்வளவு பேரும் வேலை நடந்த காலம் முழுக்க எங்க வீட்டுலதான் சாப்பிட்டாங்க.

பாலம் கட்டி முடிச்சதும், ஒரு சந் தோஷமான சண்டை... அதாவது, பாலம் கட்டணும்னு சொன்ன பாட்டி பெயரைத் தான் பாலத்துக்கு வைக்கணும்னு தாத்தா சொல்ல, ‘ம்ஹூம்’னு பிடிவாதமா இருந்து தாத்தா பெயரையே பாலத்துக்கு வெக்க வெச்சுட்டாங்க பாட்டி!

எங்களை மாதிரியே இந்த ஊர் மக்களை யும் அவங்க ரொம்ப நேசிச்சாங்க. நூறு வருஷத் துக்கு முன்னாடியே இந்த ஏரியாவுலயே முதன்முதலா எங்க ஊருக்கு பள்ளிக்கூடம் கொண்டு வந்தாங்க தாத்தா. இந்தப் பகுதி கிராமங்களுக்கு கரன்ட் கொண்டு வந்தவரும் அவர்தான்! ’’ என்று பூரிக்கிறார் சேதுராவ்.

வணக்கத்துக்குரிய காதல் பெரியோர்!

- இரா.முத்துநாகு

(பிப்ரவரி 16, 2007)