Published:Updated:

வாழ்க்கையை வழிநடத்துதே காதல்!

வாழ்க்கையை வழிநடத்துதே காதல்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்க்கையை வழிநடத்துதே காதல்!

கணவன் அமைவதெல்லாம்...கு.ஆனந்தராஜ்

வாழ்க்கையை வழிநடத்துதே காதல்!

`சின்னச் சின்ன ஆசை...' பாடிய மின்மினியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏராளமான பாடல்களைப் பாடி 90-களில் புகழின் உச்சிக்குச் சென்றவர், திடீரென என்ன ஆனார் என்றே தெரியாத அளவுக்கு அமைதியானார். அந்த அமைதிக்குப் பின்னால் இருந்த குரல் வலியை, தன் காதல் கணவரால் வென்றிருக்கிறார்!

‘`இப்ப உங்க முன்னாடி சிரிச்சுப் பேசுறேனே... இதுக்குக் காரணமே என் கணவர் ஜாய் மேத்யூதான்'' என்கிற மின்மினி, ஃப்ளாஷ்பேக்கோடு தொடங்குகிறார்...

``கேரளாவுல ஆலுவா கிராமத்துல பிறந்தேன். சின்ன வயசுல பையன் மாதிரியே ஹேர்ஸ்டைல், ஆக்டிவிட்டீஸ்னு ஒரு குட்டி ரவுடியா திரிஞ்சுக்கிட்டு இருந்தேன். நாலு பொண்ணுங்கள்ல கடைசியா பிறந்ததால, எல்லாரும் செல்லமா கூப்பிடுற `மினி'ங்கிற பேர்தான் நிலைச்சது. வீட்டுல அம்மாவும், அக்காவும் நல்லாப் பாடுவாங்க. அவங்க பாடுறதைப் பார்த்து, நானும் பாடக் கத்துக்கிட்டேன். அஞ்சு வயசுல மேடைகள்ல பாட ஆரம்பிச்சு, அப்படியே ஆல்பங்களிலும் பாடினேன். 18 வயசுல ‘ஸ்வாதகம்’ - மலையாளப் படத்துல பாடியதிலிருந்து என் திரையிசை வாழ்க்கை தொடங்கியது.

1991-ல் சிங்கர் ஜெயச்சந்திரன் சார் மூலமா என்னைப் பத்தி கேள்விப்பட்ட ராஜா சார், ‘மீரா’ படத்தில பாடக் கூப்பிட்டார். சாம்பிள் பாடிக்காட்டினேன். `வாய்ஸ் நல்லா இருக்கு. நீங்க ஊருக்குப் போக வேண்டாம். நிறைய சாங்ஸ் பாட வேண்டி இருக்கும்'னு சொன்னார். நானும் சென்னையிலேயே செட்டில் ஆகிட்டேன். ராஜா சார்தான் இந்த மினியை `மின்மினி'யா மாத்தினாரு. தொடர்ந்து அதுக்குப்பிறகு தமிழ் பேசவும் எழுதவும் கத்துக்கிட்டேன். 1992-ல் ‘ரோஜா’ படத்துல `சின்னச் சின்ன ஆசை' பாடினேன். தெலுங்கு, இந்தியிலயும் அதே பாடலைப் பாடினேன். அந்தக் காலகட்டத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகள்ல, ஒரு நாளைக்கு 12 பாட்டுகள் வரைக்கும் பாடினேன். இதுதான் கொஞ்ச நாள் மட்டுமே பிரகாசிச்ச ஒரு சின்ன மின்மினியின் கதை’’ எனச் சிரிப்பவரின் கரங்களை பற்றியபடியே பேசத் தொடங்குகிறார் கணவர் ஜாய் மேத்யூ.

‘`எங்க ரெண்டு பேர் குடும்பமும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். சென்னையில மினி பிஸியா பாடிட்டு இருந்த நேரம், அவங்க அப்பாவுக்கு   ஹார்ட்   அட்டாக். தான் உயிரோட இருக்கறப்பவே மின்மினியை நல்ல மாப்பிள்ளை கையில ஒப்படைக்கணும்னு அவர் ஆசைப்பட்டாரு. அப்ப நான் துபாய்ல ரேடியோ ஸ்டேஷன்ல வேலை செய்துட்டு இருந்தேன். உடனே சென்னை வந்து, அவங்க அப்பா இருந்த ஆஸ்பத்திரியிலேயே சிம்பிளா நிச்சயதார்த்தம் முடிச்சோம். அப்புறம்தான் நாங்க காதலர் ஆனோம். நிச்சயதார்த்தம் சீக்கிரம் முடிஞ்சதே தவிர, கல்யாணம் ரெண்டு வருஷம் கழிச்சுதான் நடந்தது. அந்த இடைவெளியில எங்க காதல், வானம் அளவுக்கு பரவி சந்தோஷம் கொடுத்தது” என்கிற கணவரைக் காதலோடு பார்த்துப் பேசுகிறார் மின்மினி.

‘`அப்போ சினிமா ரெக்கார்டிங், கச்சேரிகள்னு ரொம்ப பிஸியா இருந்தேன். 1994-ல், லண்டன்ல ஒரு நிகழ்ச்சியில பாடிட்டு இருந்த எனக்கு, திடீர்னு என்ன ஆச்சுன்னே தெரியலை. தொண்டைக்கட்டின மாதிரி இருந்தது... பிறகு, வாய்ஸே வரலை. என்ன ஆச்சுன்னே புரியலை. நான் நிலைகுலைஞ்சுப் போயிட்டேன்.

உடனே இந்த விஷயம் காட்டுத்தீ மாதிரி பரவிடுச்சு. எந்த ஒரு சிங்கருக்கும் அவங்க வாய்ஸ்தானே அடையாளம்? அதுவே போச்சுன்னா? என்னோட குரலை மட்டுமே நம்பி, வளர்ந்து வர்ற நேரத்துல இப்படி ஆகிடுச்சேன்னு பயங்கர வருத்தம். இன்னிக்குச் சரியாகிடும், நாளைக்குச் சரியாகிடும்னு நினைச்சு நினைச்சு காலங்கள் போனது தான் மிச்சம். 

அதுவரை நண்பரா, காதலரா இருந்த மேத்யூ, அதுக்குப் பிறகு என்னைக் குழந்தை மாதிரியே பார்த்துக்க ஆரம்பிச்சார். கடவுள் மாதிரி மேத்யூவை நம்பி, என்னை முழுமையா அவர்கிட்ட ஒப்படைச்சேன். எனக்காக அவர்பட்ட கஷ்டங்களை இப்போ நினைச்சாக்கூட கண்ணீர் வந்துடும். அவர்  ஒருபோதும் மனம் தளராம, பல நாடுகள்ல இருக்கற ஹாஸ்பிட்டல்களுக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாரு. `வாய்ஸ் இல்லாத பொண்ணை கல்யாணம் பண்ணிக்காதே'ன்னு அவர்கிட்ட பல பேர் சொல்லியிருக்காங்க. ஆனா, எதையுமே பொருட்படுத்தாமல், என்னை உண்மையா நேசிச்சார். தொடர் முயற்சிகளுக்குப் பலன் கிடைச்சுது. ரெண்டு வருஷத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா எனக்கு வாய்ஸ் வர ஆரம்பிச்சது. அப்போதான் எங்களுக்குக் கல்யாணம் ஆச்சு. தொடர்ந்து கொஞ்சநாள் என்கூட சென்னையிலயும், மீதி நாள் துபாயில் வேலையிலயும் பரபரப்பா இயங்கிட்டு இருந்தார்.

வாழ்க்கையை வழிநடத்துதே காதல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர் மட்டும் என் பக்கத்துல இல்லைன்னா, நான் மீண்டு வந்திருக்கவே முடியாது. மனசாரச் சொல்றேன்... 25 வருஷத்துக்கு முன்னாடி, அவர் என் கைபிடிச்சக் காலத்துல இருந்து இப்போ வரை, என் பேரண்ட்ஸுக்கும் மேல அவர் என்மேல பாசம் வெச்சிருக்காரு...’’ என மின்மினி கண்கலங்கிச் சொல்ல, மேத்யூ இடைமறித்து, ‘இல்ல... இல்ல... அதுக்கும் மேல’ எனச் சிரிக்கவைக்கிறார்.

‘`எனக்கு மூணு குழந்தைங்க. மூத்த குழந்தைதான் மின்மினி. எங்களுக்கு நிச்சயம் ஆன டைம்ல இருந்தே அப்படித்தான் பார்க்கிறேன். இனியும் அப்படித்தான். மின்மினி எப்போதும் கலககலப்பா சிரிச்சுட்டே இருப்பாங்க. அவங்க வாய்ஸ் கடவுள் கொடுத்த கிஃப்ட். அவங்களுக்கு முதல் ரசிகன் நான்தான். அந்தத் தேன் குரலைத் தினமும் நேர்லயோ, போன்லயோ தவறாம கேட்பேன். அப்படிப்பட்ட வாய்ஸை கேட்கமுடியாம போனப்போ நான் ரொம்பவே தவிச்சுப் போயிட்டேன். ஃபுட் பாய்சன், வெதர் சேஞ்ச், ஓய்வில்லாம பாடிட்டே இருந்தது, பலவீனம்... இப்படி டாக்டர்ஸ் பல காரணங்களைச் சொன்னாங்க. இதுல எதை நம்புறதுன்னு எங்களுக்குப் புரியல. கொஞ்ச நாள் லண்டல்ல ட்ரீட்மென்ட் எடுத்துட்டு, அப்புறமா சென்னைக்கு வந்து ட்ரீட்மென்ட் எடுத்துட்டு  இருந்தோம். 

என்னைப் போலவே, மின்மினியோட ரசிகர்கள் பலரும், பிரார்த்தனை பண்ணினாங்க. மின்மினியும் எல்லா ட்ரீட்மென்டுகளுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்தாங்க. அவங்க வாய்ஸ் சரியாகி, எங்கிட்ட பேசினப்போ, என் ஆனந்தக்கண்ணீரை நிறுத்த ரொம்ப நேரம் ஆச்சு. தொடர்ந்து மின்மினியைப் பாடச் சொல்லிக் கேட்டுச் சந்தோஷப்பட்டேன்.

அந்த நேரத்துலதான் எங்க முதல் குழந்தை ஆலம் ஜாய் மேத்யூ பிறந்தான். அப்புறமா சில கச்சேரிகள்லயும், மலையாளப் படங்கள்லயும் பாடிட்டு இருந்தாங்க. இரண்டாவது குழந்தை கீர்த்தனா பிறந்த பிறகு, அவங்க பெற்றோரும் இறந்துபோக, மின்மினி தனியா குழந்தைங்களைப் பார்த்துட்டு சென்னையில  இருக்கிறது சிரமமா இருந்தது. அதனால துபாய் வேலையை விட்டுட்டு வந்தேன். குடும்பத்தோடு கொச்சின்ல செட்டில் ஆனோம்” என்று துபாய் - சென்னை - கொச்சின் எனத் தொடரும் வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்தார் மேத்யூ.

‘`இசைத்துறை சார்ந்த பிசினஸே செய்யலாம்னு முடிவு செஞ்சு, கொச்சின்ல ‘ஜாய்ஸ் அகாடமி ஆஃப் மியூசிக் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்’ என்கிற மியூசிக் ஸ்கூல் ஆரம்பிச்சோம். இப்போ 1500-க்கும் அதிகமான ஸ்டூடண்ட்ஸ் மியூசிக் கத்துக்குறாங்க. கணவர் கீபோர்டு, பியானோ, கிதார் சொல்லிக்கொடுக்கிறார். நானும் அப்பப்போ கிளாஸ் எடுப்பேன்.  இன்னும் நிறைய டீச்சர்ஸ் இருக்காங்க.

இது தவிர, நாங்க கச்சேரிகள் செய்துட்டும், ஆல்பம் செய்துட்டும் இருக்கிறோம். `வாய்ஸ் பிரச்னை வராம இருந்திருந்தா நிறைய பாடியிருக்கலாமே... நிறைய  பணமும் புகழும் சம்பாதிச்சு இருக்கலாமே'ன்னு நிறையப் பேரு சொன்னாங்க. ஆனா, அந்த சோகமான தருணத்துக்குப் பிறகுதான், எனக்கு இப்படி ஒரு நல்ல குடும்பம் கிடைச்சுது. பெரிய வலிக்குப் பிறகுதான் காதலர், கணவரானார். அன்பான கணவர் வீட்டு உறவுகள்,  குழந்தைகள்,  நண்பர்கள் எல்லாமே அருமையா அமைஞ்சாங்க. குறிப்பா சிங்கர் மனோ அண்ணா செய்த உதவிகளை மறக்க முடியாது.

என்னோட கணவர் யாரையும் புண் படுத்தாம, எப்போதும் எல்லோரையும் சந்தோஷமா வெச்சுக்கணும்னு நினைப்பாரு. அவர்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட நல்ல விஷயங்கள்ல இதுவும் ஒண்ணு. மறுபடியும் சொல்றேன்... அந்தச் சம்பவம் நடந்தது நல்லதுக்குத்தான். அதுக்காக கடவுளுக்கு நன்றி!'' என்று நெகிழ்ச்சியுடன் கணவரைப் பார்க் கிறார் மின்மினி.

``நிச்சயதார்த்ததுக் குப் பிறகு பலமுறை மின்மினிக்கிட்ட `ஐ லவ் யூ' சொல்ல ஆசைப் பட்டிருக்கேன். ஆனா, சந்தர்ப்பம் வாய்க்கலை. அதே போலத்தான் மின்மினிக்கும். கல்யாணத் துக்குப் பிறகு ஒருநாள் அவங்கதான் முதல்ல `ஐ லவ் யூ' சொன்னாங்க. உடனே ரெண்டு பேரும் கலகலன்னு சிரிச்சுட்டோம். இப்போ நினைக்கிறப்ப எல்லாம் `ஐ லவ் யூ' சொல்லிக்கிறோம்.  இந்த மந்திர வார்த்தைதான் எங்க வேலை டென்ஷனைக் குறைக்குது!

எங்களைப் பொறுத்தவரை பிப்ரவரி 14 மட்டுமல்ல... எல்லா நாளுமே காதலர் தினம்தான். தினமும் எனக்கே எனக்காக மின்மினி பாடுற பாடல்கள் எல்லாம் எங்க ரெண்டு பேர் வயசையும் குறைச்சு இளமை யாக்குது’’ என்று மின்மினியின் கைப்பற்றிச் சிரிக்கிறார் ஜாய் மேத்யூ. அவர்களின் சிரிப்பில் காதலும் இசைமழை ஆகிறது!