Published:Updated:

“சீக்கிரமே கல்யாணம்!” - சந்தோஷத்துடன் வைக்கம் விஜயலட்சுமி

“சீக்கிரமே கல்யாணம்!”  -  சந்தோஷத்துடன் வைக்கம் விஜயலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
“சீக்கிரமே கல்யாணம்!” - சந்தோஷத்துடன் வைக்கம் விஜயலட்சுமி

மகிழ்ச்சி ஒளிபொன். விமலா

“சீக்கிரமே கல்யாணம்!”  -  சந்தோஷத்துடன் வைக்கம் விஜயலட்சுமி

காற்றே.. காற்றே நீ... மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன?’ (ஜெ.சி.டேனியல்)...

‘கோடையில மழை போல என்னுயிரே நீ இருக்க’ (குக்கூ)...

‘புதிய உலகை புதிய உலகை தேடிப் போகிறேன்... என்னை விடு’ (என்னமோ ஏதோ)

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்... பாலகுமாரி!’ (ரோமியோ ஜூலியட்)...

- இப்படி மனம் வசீகரிக்கும் பல பாடல் களுக்குச் சொந்தக்காரர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் பாடிய பாடல்கள் காலர் ட்யூனாக இசை பரப்புவது மட்டுமல்ல... அதையும் தாண்டி தன்னம்பிக்கை தரும்விதத்தில் மனதின் ரிங்டோனாகவும் ரீங்காரமிடும்!

வசீகரக் குரலால் அனைவரையும் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் வைக்கம் விஜயலட்சுமி, பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி, பக்தி, மராத்திய இசைப் பாடல்கள் என பல பாணிகளைப் பின்பற்றும் இவர், இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 30-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இளங்கலையில் வரலாறும், முதுகலையில் இசையும் பயின்றவர். சங்கீத கலாநிதி, சங்கீத வசந்தம், யுவகலா ரத்தினம், ரத்ன மாலிகா ஆகிய விருதுகளுடன் இன்னும் பல அங்கீகாரங் களைத் தொடர்ந்து குவித்துவருபவர்.

விஜயலட்சுமி பாடகி மட்டுமல்ல... இசைக் கலைஞரும்கூட. ஒற்றைக்கம்பி கொண்ட வீணையில் இசை மீட்டுவது இவருடைய பிரத்யேக அடையாளம். மிருதங்கம், தவில், கடம் என இவர் கையில் கிடைக்கும் கருவிகள் இன்னிசையை அள்ளித்தெளிக்கின்றன.

பார்வையில்லாத சூழல், ஒரு பாடகியாக தன்னை வெளிப்படுத்த அவருக்குத் தரும் சிரமங்களை எல்லாம் தன்னம்பிக்கையால் வெல்கிறார் இந்த வைராக்கியப் பெண். இசைக் குறிப்புகளையோ, வரிகளையோ படிக்க முடியாது என்பதால், இவர் பாடவேண்டிய பாடல்களை வேறொரு பாடகர் பாடி கேசட்டில் பதிவுசெய்து கொடுக்க, அதைச் செவிகளாலும் இதயத்தாலும் உள்வாங்கி, முழுவதுமாக மனனம் செய்து பாடுகிறார்.

இப்படி கடின உழைப்பால் இசை உலகின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்த விஜயலட்சுமி, இப்போது இரட்டைச் சந்தோஷத்தில் இருக்கிறார். ஒன்று, இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மற்றொன்று, இவருக்குக் குறைந்த அளவில் பார்வை கிடைத்துள்ளது. சந்தோஷுடன் சந்தோஷத்தில் திளைக்கிறவரிடம் பேசினோம்!

‘`வீட்ல மாப்பிள்ளை பார்க்கணும்னு ஆரம்பிச்சப்ப... அப்பா, அம்மாவைப்போல நமக்கும் புரிதலோட கூடிய ஒரு இணை கிடைக்குமான்னு எதிர்பார்த்தேன். மேட்ரிமோனியல் சைட் மூலமாதான் இவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார். திரிச்சூர் சொந்த ஊர். இவரின் சகோதரிதான் முதல்ல எங்க வீட்ல பேசினாங்க. எங்க எல்லாருக்கும் பிடிச்சுப்போச்சு. ரொம்ப நல்லவர். இப்ப நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கு. வர்ற மார்ச் இருபத்தொன்பதாம் தேதி எங்க கல்யாணம்’’ என்று பூரிப்புடன் பேசும் விஜயலட்சுமியிடம், பார்வை கிடைத்த மகிழ்வையும் பகிரச்சொல்லிக் கேட்டோம்.

‘`பார்வைத்திறனுக்காக ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கிட்டேன். இவ்வளவு நாளா கொஞ்சம்கூட பார்வை இல்லாமல் இருந்தது. இப்ப ஒளியை உணர்கிற அளவுக்கு பார்வை கிடைச்சிருக்கு. எந்த இடத்தில் வெளிச்சம் தெரியுதோ, அதை வைத்து அந்த இடத்துக் குப் போக முடியுது. வீட்டுக்குள்ளே சமாளிச் சுக்கலாம். வெளியிடங்களில் மட்டும் இன் னொருவர் உதவி தேவை. அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே மகள் என்பதால், என்னை பார்த்துக்கிறதையே தங்களின் வாழ்க்கையா வாழ்ந்துட்டு இருக்காங்க. அந்த அன்புதான் என் ஆசீர்வாதம்... அதிர்ஷ்டம்’’ என்று சொல்லும்போதே அவர் குரல் நனைகிறது.

‘`வெளியிடங்களுக்கு என்னை அழைச் சுட்டுப் போவதில் இருந்து, போனில் எனக்கு வரும் அழைப்புகளைப் பார்த்து உதவுறது, என் ஷெட்யூலை திட்டமிடுறதுன்னு எல்லாமே எங்கப்பாதான் பார்த்துக்கிறார். எனக்குக் கடவுள் கொடுத்த முதல் விருது, அவர்தான். அதேபோல அம்மாதான் என் பலம்... அம்மா தான்  என் தோழி. என் தேவைகளைப் பார்த்துப்பார்த்து செய்வாங்க. இப்ப ரெண்டு பேருமே கல்யாண வேலைகளில் பரபரப்பா இருக்காங்க.

எனக்கு ஓர் ஆசை. என் கல்யாணத்துக்கு எல்லாரும் வந்து வாழ்த்தணும். குறிப்பா, இசைத்துறையினர். இளையராஜா சாரோட ஆசீர்வாதம் கிடைச்சா ரொம்ப சந்தோஷப் படுவேன்” - கல்யாணப் பெண்ணின் குரலில் ஆனந்தத் தித்திப்பு.

புதிய உலகம் திறந்தே கிடக்கிறது!