Published:Updated:

தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க முடியும்!

தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க முடியும்!
பிரீமியம் ஸ்டோரி
News
தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க முடியும்!

விழிப்பு உணர்வுரா.வளன் - படம்: கிரன்குமார்

தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க முடியும்!

ற்கொலை.... தன்னைத் தானே வெறுத்து, உடனடியாகத் தன் உயிர் பிரிய செயற்கை முறையில் தேடிச் செல்லும் துணிகரமான ஓர் ஒற்றையடிப் பாதை! உணர்வுகள் மீது நிகழ்த்தப்படும் போரில்.. தோல்விக்கு அஞ்சி துவண்டுபோகும் தருணங்களில், பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வின் விளிம்புநிலையில் நிற்பதாக ஒரு பிம்பத்தைத் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இப்படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் சுமார் பத்து லட்சம் பேர்  தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். தன் மீது அன்பு காட்ட இவ்வுலகில் யாரும் இல்லை என்று குறுகிய நொடியில் எடுக்கப்படும் ஓர் அசாதாரண முடிவாக இருக்கிறது தற்கொலை. இப்படி இயற்கைக்கு மாறாக அன்றாடம் நடைபெறும் தற்கொலை உணர்வுகளின் தீவிரத்தை உணர்ந்த இளம் பெண் ஒருவர், தற்கொலைக்கு எதிராகப் போர் நடத்தி வருகிறார்.

சென்னை மணப்பாக்கம் பகுதியில் தன் அழகான குடும்பத்துடன் வாழ்கிறார் ரேகா.  சில மாதங்களுக்கு முன் சின்னத்திரை நடிகை சபர்ணா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, தனது முகநூல் பக்கத்தில் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் மிக நெகிழ்ச்சியாக நேரலையில் பேசியிருந்தார் ரேகா. அந்த வீடியோ, தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடும் தெளிவு கொடுக்கும் பதிவாக மட்டுமே அல்லாமல், வாழ்வைப் புதுக்கோணத்தில் அணுகும் வழியாகவும் பலருக்கும் தெரிந்தது. அந்த வீடியோ, மூன்று லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டதுடன், எட்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலருக்கும் பகிர்ந்திருந்தனர். முக்கியமாக, அதைப் பார்த்த 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், தங்களின் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டதாகத் தெரிவித்திருந்தது ஆச்சர்யம். அவர்களில் பெரும்பாலோனோர் 18 வயது முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள். இது எப்படிச் சாத்தியமானது? 

“நம் வாழ்க்கையில் கவலையையும் வெறுமை யையும் உணர்வதற்குக் காரணம், முன்பு நடந்த சம்பவங்களையே நினைத்துக் கொண்டு இருப்பதும், எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை அசை போட்டுக் கொண்டு இருப்பதுமே! வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எந்தக் கடுமையான சூழ்நிலையும், சில காலத்துக்குப் பின்பு தானாகவே தணிந்துவிடும். நாமோ மிகவும் அதிகமாக யோசித்து யோசித்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க முடியும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாம் ஒவ்வொருவரும் அன்பால் நிரப்பப்பட்டு இருக்கிறோம்.  உண்மையான அன்பைப் பெற அன்றாடம் அலைந்து திரிகிறோம். அன்பு நமக்குக் கிடைக்கும் வேகத்தில், அதை அனைத்திலும் வெளிப்படுத்திக் கொட்டித் தீர்த்து விடுகிறோம். உண்மையில், நம்மில் அன்பு காலியாக காலியாக, வெளியில் இருந்து நிரப்பப்பட்டு வருகிறது. சிலருக்கு உடனுக் குடனும், பலருக்குச் சிறிது காலம் பொறுத்தும் இந்த அன்பு நிரப்பப்படுகிறது.

எல்லா மனிதர்களும் எண்ணங்களின் வலிமையை உணர்ந்து, வாழ்வை அழகாகவும் அமைதியாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காக நானே ஒரு சூத்திரத்தை வடிவமைத்துள்ளேன்’’ என்ற  ரேகா, அதை விளக்கினார்.

‘‘'பிறப்பு இறப்பு கடக்கும் சூட்சுமம்’... முதலில் எண்ணங்களைக் கொண்டு அதற்கு ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் போக வேண்டும் (அமைதியான தனியறையில் கண்களை மூடிய நிலையில்). ‘இன்று இந்த நிலையில் இப்படி இருக்கும் நான், ஐந்து வருடங்களுக்கு முன் எப்படி இருந்தேன்?’ என மனத்திரையில் பத்து நிமிடங்கள் திரையிட்டுப் பாருங்கள். தொடர்ந்து, ‘பத்து வருடங்களுக்கு முன் எப்படி இருந்தேன்?’ என மேலும் பத்து நிமிடங்களுக்கு அப்படியே நிகழ்காலத்தில் நடப்பதுபோல திரையிட்டுப் பாருங்கள். சந்தோஷ தருணங்கள், சோகம், இழப்பு, வெற்றி, தோல்வி, மானம், அவமானம் என எதையும் விட்டு வைக்க வேண்டாம்.

அடுத்து 15 வருடம், அப்படியே பள்ளிப்பருவம் வரை பின்னோக்கித் திரையிட்டுப் பாருங்கள். அதற்கு முன் ஐந்து வயதுக் குழந்தையாக, இன்னும் பின்னோக்கி பிறப்பு வரை... இந்த குறிப்பிட்ட நிலைகளை 20 நிமிடம் நிதானமாகக் கண் மூடிய நிலையில் நாம் யோசித்துப் பார்த்தால், வாழ்நாளில் எந்த ஒரு மனிதனும், தற்கொலை என்ற எண்ணத்தை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டான். தன் தவற்றை உணர்ந்து, தன்னைத் திருத்திக்கொண்டு புது மனிதனாகப் பிறப்பதாக புத்துணர்வு அடைவான். இதுவே என் சூத்திரம்.

எண்ணற்ற அறிஞர்களின் வார்த்தைகள், புத்தகங்களில் நிறைந்து கிடக்கின்றன. அதைப் புரட்டி பார்க்க இங்கு பலருக்கும் நேரமில்லை. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் அனைவரும் சுழல்வதால், இந்தப் புதையலை அனைவருக்கும் பகிர்வதிலேயே என் மனம் நிறைவு கொள்கிறது, அவ்வளவுதான்!” என்று வாழ்க்கைக்கான சூத்திரத்தை மிக அழகாக அர்த்தப்படுத்திப் பேசுகிறார் ரேகா!