Published:Updated:

சிரிச்சுக்கிட்டே இருக்கிறதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது! - ப்ரியா பவானிஷங்கர்

சிரிச்சுக்கிட்டே இருக்கிறதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது! - ப்ரியா பவானிஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
சிரிச்சுக்கிட்டே இருக்கிறதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது! - ப்ரியா பவானிஷங்கர்

அவனும் நானும்ஆர்.வைதேகி

சிரிச்சுக்கிட்டே இருக்கிறதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது! - ப்ரியா பவானிஷங்கர்

ப்ரியாவுக்குக் கல்யாணம்...

காதலரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டாங்க...மீடியாவுக்கு நிரந்தர `குட்பை' சொல்லிட்டுப் போயிட்டாங்க....

- விஜய் டி.வியின் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ ஹீரோயின் ப்ரியா பவானிஷங்கரைச் சுற்றி இப்படி ஏகப்பட்ட ஹேஷ்யங்கள்!

சீரியலில் அவர் விலகியதில் இருந்து, சீரியலே முடிந்துவிட்ட நிலையிலும் ப்ரியாவைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் ரசிகர்கள்.

நாமும் தேடினோம். ஆஸ்திரேலியாவில் இருந்து `ஹாய்' சொல்லி இணைப்புக்கு வந்தார் ப்ரியா!

‘`சத்தியமா எனக்குக் கல்யாணம் எல்லாம் ஆகலீங்க. சீரியலைவிட்டு விலகறேன்னு சொன்னதுமே என் ஃபேஸ்புக்ல ‘கல்யாண மெல்லாம் இல்லை’னு கொட்டை எழுத்துல போட்டிருந்தேன். ஆனாலும், ஊர் பூரா எனக்குக் கல்யாணம்னு கிளப்பி விட்டுட்டாங்க. வெகேஷனுக்காக ஆஸ்திரேலியா வந்தேன். அப்படியே இங்கேயே ஒரு சின்ன கோர்ஸ் படிச்சுட்டிருக்கேன். நிறைய ட்ராவல் பண்ணிட்டிருக்கேன். இன்னும் பத்து நாட்கள்ல சென்னைக்கு வந்துடுவேன்...’’ - ஸ்வீட் சர்ப்ரைஸ் உடன் ஆரம்பிக்கிறார் பக்கா தமிழ்ப் பொண்ணு!

‘`தமிழ்நாடு முழுக்க பல இடங்கள்ல படிச்சிருக்கேன். ஆனாலும், சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒண்ணுமே பண்ணாம சென்னையில சும்மா இருக்கிற நாட்களே எனக்கு சந்தோஷமானவை...’’ - சென்னைக்கே ஐஸ் வைக்கிறவர், இன்ஜினீயரிங் முடித்த மீடியா பிரபலங்களில் ஒருவர்.

சிரிச்சுக்கிட்டே இருக்கிறதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது! - ப்ரியா பவானிஷங்கர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘`வேண்டி விரும்பி எல்லாம் இன்ஜினீயரிங் படிக்கலை. என் எண்ணமெல்லாம் `எவ்வளவு சீக்கிரம் இதைப் படிச்சு முடிக்கப்போறோம்'கிற தாகத்தான் இருந்தது. `இன்ஜினீயரிங் எனக்கு செட்டாகாது'னு தோணினபோதே, எனக்கு எது பிடிக்கும்கிற ஐடியாவும் கிடைச்சது. அப்படித்தான் மீடியாவுக்குள்ள வந்தேன். கிரியேட்டிவான ஃபீல்ட்... நான் பண்ற வேலைக்கு சீக்கிரமே அங்கீகாரம் கிடைக்கும்... இதெல்லாம்தான் மீடியா பக்கம் என்னை ஈர்த்த விஷயங்கள்...’’ என்பவர் அசத்தலான `ஆர்.ஜே' ஆகியிருக்க வேண்டியவர்... அழகான நடிகையாகிவிட்டார்!

‘`மீடியாவுக்கு வரணும்னு முடிவு பண்ணினதுமே, ரேடியோ மிர்ச்சியில சேரணும்னு ஆசைப்பட்டேன். விகடன்ல ரொம்ப வருஷம் முன்னாடி வந்த ‘ஆசை’ பகுதிக்கு ‘ஒரே ஒரு நாள் ரேடியோ மிர்ச்சியில வேலை பார்க்கணும்’னு என்னோட ஆசையை எழுதி அனுப்பியிருந்தேன். என் லெட்டர் உங்களுக்குக் கிடைக்கவே இல்லை போல... `மிர்ச்சி'யில முயற்சி பண்ணினபோது, ‘நீங்க இன்ஜினீயரிங் படிச்சிருக்கீங்க... நாங்க மீடியா ஸ்டூடன்ட்ஸுக்குத்தான் வாய்ப்பு கொடுப்போம்’னு சொல்லிட்டாங்க.

அப்ப நான் இன்ஜினீயரிங் ரெண்டாவது வருஷம் படிச்சிட்டிருந்தேன். `ஜீ தமிழ்' சேனல்ல நியூஸ் ஆங்க்கருக்கு வாய்ப்பு இருக்கிறது தெரிஞ்சு அப்ளை பண்ணினேன். என்கூட அப்ளை பண்ணியிருந்தவங்களைப் பார்த்து மிரண்டுட்டேன். ஒவ்வொருத்தருக்கும் அவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ்! என்னையெல்லாம் செலக்ட் பண்ணுவாங்களானு நினைச்சுட் டிருந்தபோது ஆடிஷன்கூட பண்ணாம, நேரடியா ஷோ கொடுத்துட்டாங்க...’’
- பிரமிப்பு விலகாத ப்ரியாவுக்கு முதல் நாள் கேமரா அனுபவம் மறக்க முடியாததாம்!

‘`முதல் நாள் ஷூட்... முதல் முதல்ல மேக்கப் மேன், மேக்கப் ரூம், ஹேர் ஸ்டைலிஸ்ட் எல்லாரையும் பார்க்கறேன். காலேஜ் போயிட்டிருந்த வரைக்கும் அதிகபட்ச மேக்கப்னா க்ரீம் போட்டு, பவுடர் போட்டு காஜல் போடறதுதான். புரொஃபஷனல் மேக்கப்பை அன்னிக்குத்தான் அனுபவிச்சேன். ஹெவி மேக்கப் போட்டுவிட்டு எனக்கே என்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாத்திட்டாங்க. அந்த போட்டோஸை இப்ப பார்த்தாலும், இவ்வளவு கொடூரமாவா இருந்திருக்கோம்!’னு தோணும்...’’ - ‘ப்ப்ப்பா... யாருடா இந்தப் பொண்ணு!’ டயலாக்கை நினைவுபடுத்துகிறது ப்ரியாவின் பேச்சு!

இன்ஜினீயரிங் படித்ததில் மட்டுமல்ல... நடிகையானதன் பின்னணியிலும் லட்சியம் ஏதுமில்லையாம் இவருக்கு.

சிரிச்சுக்கிட்டே இருக்கிறதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது! - ப்ரியா பவானிஷங்கர்

‘`நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடிப்பு. ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலுக்கு முன்னாடியே விஜய் டி.வி-யில ரெண்டு, மூணு சீரியல்கள்ல நடிக்கக் கேட்டாங்க. அப்ப நான் ‘புதிய தலைமுறை’ சேனல்ல வொர்க் பண்ணிட்டிருந்ததால நடிக்கிற ஐடியா இல்லை. ‘கல்யாணம் முதல் காதல் வரை’க்கு கேட்ட போது நான் புதிய தலைமுறையிலேருந்து வெளியில வர்ற ஐடியாவுல இருந்தேன். பத்து நாள் ஷூட்டிங் இருக்கும். மீதி இருபது நாள் எனக்கான டைம் இருக்கும்னு `ஓ.கே' சொன்னேன். அப்பவும் இதை ஒரு பார்ட்டைம் ஜாப்னு நினைச்சுதான் கமிட் பண்ணினேனே தவிர, இதுதான் என் கரியரா இருக்கப் போகுதுனு நினைக்கலை. இதுல காமெடி என்னன்னா... ஸ்கூல், காலேஜ்ல படிக்கிறபோது ஒரு டிராமாவுலகூட நடிச்சதில்லை. எந்த எமோஷனையும் காட்டத் தெரியாது. சிரிச்சுக் கிட்டே ஜாலியா இருக்கிறதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. இவ்வளவு நடிச்சுக் கொட்டுவேன்னுல்லாம் எதிர்பார்க்கலை. ஆரம்ப நாட்கள்ல ரொம்பக் கேவலமா நடிச்சிருப்பேன். கேவலமா நடிச்சதை சுட்டிக் காட்டினது போலவே, நான் நடிப்பைக் கத்துக்கிட்டு டெவலப் பண்ணினதையும் பாராட்டி என்கரேஜ் பண்ணினாங்க ரசிகர்கள். முதல் சீரியல்லயே இவ்வளவு பெரிய பேரும் புகழும்... சத்தியமா நான் எதிர்பார்க்கலை. ஒவ் வொருத்தருக்கும் தேங்க்ஸ்...’’ - மீண்டும் மீண்டும் நன்றி சொல்கிறவர், திடீரென அந்தப் புகழைத் துறந்ததும் திரையில் இருந்து விலகிய தும் ஏன்?

‘`இது திடீர்னு எடுத்த முடிவில்லை. இந்த சீரியலுக் காக என்கிட்ட முதல் முதல்ல கேட்டபோதே ‘என்னால

சிரிச்சுக்கிட்டே இருக்கிறதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது! - ப்ரியா பவானிஷங்கர்

ரெண்டு வருஷத்துக்கு மேல டைம் கொடுக்க முடியாது. மெகா சீரி யலுக்கு அது வொர்க் அவுட் ஆகாதே...’னு சொன்னேன். ஆனாலும், அவங்க `ஓ.கே' சொன்னாங்க. சீரியல் இவ்வளவு பெரிய ஹிட்டாகும்னு அவங்களே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.  ஆடியன்ஸுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. `பாதியிலயே விட்டுட்டுப் போயிட்டீங்களே'னு கேட்கற ஒவ்வொரு ரசிகருக்கும் `ஸாரி' சொல்லிக்கிறேன். ஆனா, அப்படியொரு முடிவை எடுக்க என் தரப்புல ஏராளமான, நியாயமான காரணங்கள் இருந்தது...’’ - மனதார மன்னிப்பு கேட்பவர், மீடியாவில் ரீ என்ட்ரிக்குத் தயாராகிவிட்டார்.

‘`சீரியல் பண்ணிட்டிருந்தபோது நிறைய படங்களுக்கும் கேட்டாங்க. `வேண்டாம்'னு சொல்லிட்டு, அப்புறம் `அடடா... மிஸ் பண்ணிட்டோமே'னு வருத்தப்பட வெச்ச வாய்ப்புகளும் உண்டு. இனிமே அப்படிக் கண்ணை மூடிட்டு `நோ' சொல்லாம, எனக்குப் பொருத்தமா இருக்கும்னு ஃபீல் பண்ண வைக்கிற கேரக்டர்ஸுக்கு `ஓ.கே' சொல்றதா இருக்கேன். அடுத்து நான் பண்றது இப்ப எனக்குக் கிடைச்சதைவிடவும் பெரிய வாய்ப்பா இருக்கணுமே... ஸோ, ஐயாம் வெயிட்டிங்... ஆனா, இனிமே நோ சீரியல்... ஒன்லி சினிமா!’’ - கண்டிஷனகளோடு காத்திருக்கிறார்.

சீரியலில் உருகி உருகிக் காதலிக்க வைத்த வருக்கு நிஜத்தில் அப்படி ஏதேனும் அனுபவம்? முதல் புரொபோசல்?

``ஒன்பதாங்கிளாஸ் படிச்சிட்டிருந்தபோது ஒரு பையன் ரொம்ப ஸ்வீட்டா, அப்பா வியா புரபோஸ் பண்ணினான். ஆனா, அது ரொம்ப மொக்கையா இருந்தது. ஸ்பாட்லயே நான் அவனுக்கு ‘நோ’ சொல்லிட்டேன். அந்தப் பையனும் அந்த முதல் புரொபோசலும் ரொம்பவே ஸ்பெஷல்...’’ - கடந்தகால காமெடி சொல்கிற ப்ரியாவின் ஃபேஸ்புக் பக்கம், ‘இன் எ ரிலேஷன்ஷிப் வித்.....’ எனக் காட்டுகிறது.

நிகழ்கால நிஜம் பற்றிக் கேட் டால் பேச மறுக்கிறார்.

‘`காதல், கல்யாணம் பத்தி எல்லாம் பேச இது சரியான நேரமில்லைனு நினைக்கிறேன். அதுக்கான டைம் வரும்போது சொல்றேன்....’’ - டிபிக்கல் ஹீரோயின் டயலாக் சொல்லி முடிக்கிறார் ப்ரியமானவர்!