Published:Updated:

பணியிடத்திலும் பாதுகாப்பு இல்லையா? - ஐ.டி.கொலையும் அதிர்ச்சி உண்மைகளும்

பணியிடத்திலும் பாதுகாப்பு இல்லையா? - ஐ.டி.கொலையும் அதிர்ச்சி உண்மைகளும்
பிரீமியம் ஸ்டோரி
News
பணியிடத்திலும் பாதுகாப்பு இல்லையா? - ஐ.டி.கொலையும் அதிர்ச்சி உண்மைகளும்

என்ன செய்யப் போகிறோம்?நந்தினி சுப்பிரமணி

பணியிடத்திலும் பாதுகாப்பு இல்லையா? - ஐ.டி.கொலையும் அதிர்ச்சி உண்மைகளும்

ணுக்குப் பெண் சரிசமமாகவே வேலைக்குச் செல்கிறார்கள். இரவு நேரப் பணியில்கூட பெண்கள் தயக்கமின்றி, திறம்படச் செயல்படுகின்றனர். ஐ.டி என்கிற தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பெண்கள் ஆண்களைவிடவும் அதிகமாகச் சாதித்து வருகிறார்கள். இவை எல்லாம் பெருமிதம் அளித்தாலும், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கே இன்னமும் உத்தரவாதமில்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. இதையே, அண்மையில் புனேயில் ஓர் உயிர் பலியான சம்பவமும் உணர்த்துகிறது.

புனேயில் உள்ள ராஜீவ்காந்தி இன்ஃபோடெக் பார்க் வளாகத்தின் 9-வது மாடியில் இயங்குகிறது இன்ஃபோசிஸ் நிறுவனம். அங்கு, ஜனவரி 29 அன்று கேரளாவைச் சேர்ந்த ரசிலா ராஜு என்ற 25 வயது பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். ஞாயிற்றுக்கிழமை என்றாலும், பணி காரணமாக அவர் அலுவலகம் வந்துள்ளார். பெங்களூரில் இருந்த சில ஊழியர்களும் ஆன்லைன் மூலம் ரசிலாவோடு தொடர்பில் இருந்தனர். திடீரென அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வராததால், புனே அலுவலகத்தின் பாதுகாவலரை அழைத்து ரசிலாவைப் பற்றி விசாரித்துள்ளனர். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, ரசிலா இறந்து கிடந்தது தெரிய வந்தது. சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீஸார் பாதுகாவலரை விசாரித்ததுடன், சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளும் ஆராயப்பட்டன. அதே அலுவலகத்தில் முந்தைய ஷிஃப்ட்டில் பணியில் இருந்த காவலாளி, ரசிலாவைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் புனே ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ரசிலா இருந்த அறைக்குள் மின் அனுமதி அட்டை (ஆக்சஸ் கார்டு) இல்லாமல் செல்ல முடியாது. அப்படியானால், அந்த நபர் யாரோ ஒருவரின் உதவியோடுதான் உள்ளே சென்றுள்ளார். அங்கு ரசிலாவோடு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அருகில் இருந்த வயரை எடுத்து அவருடைய கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுச் சென்றுள்ளார். அடுத்த ஷிஃப்ட் பாதுகாவலர் வந்ததும், எப்போதும் போல பணிமுடித்துக் கிளம்பியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.  எதற்காக அந்தப் பெண்ணைக் கொலை செய்தார் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. விசாரணை தொடர்கிறது.

ஐ.டி-யில் பணியாற்றும் பெண்கள் படுகொலை செய்யப்படுவது புதிய விஷயமே அல்ல. 2014 பிப்ரவரியில் சென்னை சிறுசேரி சிப்காட் பகுதியில் இயங்கும் டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த உமா மகேஸ்வரியை, அதே பகுதியில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு வந்த 3 நபர்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிக் கொன்றனர். வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவரை பின்தொடர்ந்து சென்று, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6 மணி அளவில் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

உமா மகேஸ்வரி, சுவாதி - இருவரின் கொலையும் பணிபுரியும் நிறுவனத்துக்கு வெளியே நடந்தது. ஐ.டி பெண்களுக்கு வெளியில்தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த நமக்கு, நிறுவனத்துக்கு உள்ளேயும் பாதுகாப்பு இல்லாத நிலையையே ரசிலாவின் உயிரிழப்பு காட்டியுள்ளது. ஐ.டி பெண்களில் பலர் குடும்பத்தை எங்கோ விட்டுவிட்டு, தெரியாத ஊரில் புரியாத மொழிகளைச் சமாளித்து வேலையில் நீடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள், பெண்கள் வேலைக்குச் செல்ல பெற்றோர் தடை விதிக்கும் அபாயச் சூழலை ஏற்படுத்திவிடும்.

பெண்களுக்கு அதிக பட்ச பாதுகாப்பு அளிப்பதாகவே ஐ.டி நிறுவனங்கள் தரப்பில் சொல்லப் படுகிறது. ஆனால், அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் நடக்கும் பிரச்னைகளை நிறுவனங்கள் மூடி மறைக்கின்றன.
“ஐ.டி நிறுவனங்கள் வெளிநாடுகளின் தேவைக்கேற்ப செயல்படுவதால், அந்தந்த நாடுகளின் நேர அடிப்படையிலேயே, இங்கு ஷிஃப்ட்டுகள் உருவாக்கப்படுகின்றன. அதனால், பெண்களுக்கு ஷிஃப்ட் தரும்போது அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை அந்த நிறுவனம் முதலில் உறுதிபடுத்த வேண்டும். சில நிறுவனங்கள் வீடு திரும்ப கேப் வசதி கொடுப்பதில்லை. அப்படியே கேப் வசதி கொடுத்தாலும் , ஒட்டுநர்கள் அவர்களை வீடு வரையிலும் கொண்டு சென்று விடுவது கிடையாது. பயணத்திலோ, அலுவலகத்திலோ பாலியல் துன்புறுத்தல்கள் இருந்தால், அதை தெரியப்படுத்தும் வசதியும்  பெயரளவுக்கே  உள்ளது.

இனியேனும், ஐ.டி கம்பெனிகளில் பெண்கள் பாதுகாப்புக்கான அமைப்பு ஏற்படுத்தி, முறையாகச் செயல்படச் செய்ய வேண்டும். நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளனவா என்பதை மத்திய-மாநில அரசுகளும் உறுதிபடுத்த வேண்டும். பெண்களும் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில் தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்வதும் அவசியம்” என்கிறார் ‘நாலெட்ஜ் புரஃபஷனல் ஃபோரம்’ என்கிற பெண்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பரணிதரன்.

கைநிறைய சம்பளம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு என பல விஷயங்கள் இருந்தாலும், பல அலு வலகங்களில் அதிகாரி களின் தொல்லை தொடரவே செய்கிறது. சில நிறுவனங்களில் பதவி உயர்வு, அப்ரைசல் போன்ற காரணங் களைக் காட்டி, பெண்களுக்குத் தொல்லை கொடுப்பது, தவறாக நடக்க முயற்சி செய்வது போன்றவையும் நிகழ்கின்றன. சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துவிடுகின்றனர். சிலரோ வேறு வழியில்லாமல் தினம் தினம் அச்சத்துடன் வாழ்கிறார்கள். வேறு சிலரோ ரசிலாவைப் போல உயிரையே இழக்கிறார்கள். சில பெண்கள் தற்கொலை செய்துகொள்வதும் நடக்கிறது.

பெண்கள் சகல துறைகளிலும் சாதனைகள் படைத்து வரும் இந்தக் காலகட்டத்தில், அவர்களின் கனவுகளைக் கலைத்து, முன்னேற் றத்தைத் தடுத்து, அவர்களை மீண்டும் சமையலறைக்கு உள்ளேயே முடக்கிவிட வேண்டாம். சமூகப் பிரச்னைகளுக்காக  பெண்கள் வீதிக்கு வந்து குரல் கொடுக்கும்   இந்தத் தருணத்தில், வீட்டை விட்டே அவர்கள் வெளியே வர யோசிக்கும் சூழலை உருவாக்கி விடக் கூடாது!