Published:Updated:

வேலைகளை ரெண்டு பேரும் பகிர்ந்துப்போம்!

வேலைகளை ரெண்டு பேரும் பகிர்ந்துப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேலைகளை ரெண்டு பேரும் பகிர்ந்துப்போம்!

நீ பாதி... நான் பாதி...ஆர்.வைதேகி

வேலைகளை ரெண்டு பேரும் பகிர்ந்துப்போம்!

காதலில் ஆரம்பித்து கல்யாணத்தில் இணைந்திருக்கிறார்கள் அமித் பார்கவும் ஸ்ரீரஞ்சனியும்!

இந்த ஜோடிக்கு இது சீஸன் 2. யெஸ்... இது ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீஸன்! கல்யாணத்துக்குப் பிறகான இவர்களது காதல் இன்னும் அழகாகியிருக்கிறது. பேச்சில், சிரிப்பில், அன்பைப் பகிர்தலில்... இன்னும் எல்லாவற்றிலும் ‘நீ பாதி... நான் பாதி...’ என உருகுகிறார்கள் இருவரும்.

‘`திருநெல்வேலியில பிறந்து சென்னையில வளர்ந்தவள் நான். பாட்டு, டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன். ஒரு தமிழ் சேனல்ல `வி.ஜே'வா இருந்தேன்.  அமித் பெங்களூருல பிறந்து வளர்ந்தவர். தமிழ் சினிமாவுல சாதிக்கணும்கிற ஆசையோட சென்னைக்கு வந்தவர். ஒரு டிராமா வொர்க் ஷாப்புலதான் அவரை மீட் பண்ணினேன். பார்த்த உடனேயே பிடிச்சது. நிறைய பேச ஆரம்பிச்சோம். ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். நான் ஒரு ஸ்கிரிப்ட் வெச்சிருந்தேன். அதைப் பத்திப் பேச கஃபேவுல மீட் பண்ணினோம்... பார்த்த முதல் நாளே... உன்னைப் பார்த்த முதல் நாளே...’' - காதல் மலர்ந்த தருணத்தை பாட்டாகவே பாடிக் காட்டுகிறார் ஸ்ரீரஞ்சனி!


‘`அன்னிக்கே நான் ஸ்ரீரஞ்சனிகிட்ட விழுந்துட்டேன்.  முதல் பத்து நிமிஷம்தான் அவளோட ஸ்கிரிப்டைப் பத்திப் பேசியிருப்போம். மீதி நாலரை மணி நேரம் பெர்சனலா நிறைய பேசினோம். கவுதம் மேனன் படத்துல வருமே... ‘பேசிப் பேசித் தீர்ந்த பின்னும் ஏதோ ஒண்ணு குறையுதே’ங்கிற மாதிரி... அங்கே பேசினது பத்தாம பெசன்ட் நகர் பீச்சுக்குப் போனோம். எனக்காக ‘சண்டைக்கோழி’ பாட்டுப் பாடினா. இன்னும் அதிகமா பிடிச்சது. ஆனாலும், அப்போ நான் எதையும் சொல்லலை. அவசரப்பட்டு எதையாவது சொல்லி அவளோட ஃப்ரெண்ட்ஷிப்பைக் கெடுத்துக்க விரும்பலை.

அப்போ நான் ‘2 ஸ்டேட்ஸ்’னு ஒரு படத்துல ஒரே ஒரு சீன்ல நடிச்சிருந் தேன். ‘என்னமோ ஏதோ’ படத்துல அமெரிக்க மாப்பிள்ளையா நடிச்சிருந்தேன். எனக்கே அது பெரிசா தெரியலை. `பத்து செகண்ட்
வரப்போற கேரக்டருக்காக படத்தைப் போய் பார்க் கணுமா'னு நினைச்சேன். ஸ்ரீக்கு அது தெரிஞ்சு படத்தைப் பார்த்தே ஆகணும்னு அடம் பிடிச்சா. ‘ஊருவிட்டு ஊரு வந்திருக்கே... இதுவே பெரிய விஷயம்
தான். படிப்படியா தான் முன்னேறணும். வா, போய் பார்க்கலாம்’னு கூட்டிட்டுப்போனா. நான் வந்த அந்த பத்து செகண்டுல எழுந்து நின்னு, விசிலடிச்சு, கைதட்டி ரகளையே பண்ணிட்டா. அதெல்லாம் அவ மேல எனக்கிருந்த அன்பை இன்னும் அதிகமாக்கியது.

லட்சியங்களும் கனவுகளும் நிறைஞ்சவள் ஸ்ரீரஞ்சனி. கனடாவுலயோ, புனேவுலயோ போய் ஃபிலிம் ஸ்டடிஸ் படிக்க ஆசைப்பட்டா. அவளுக்கு நான் முழுசா சப்போர்ட் பண்ண நினைச்சேன். அப்ப அவதான் பிஸியா இருந்தா. நான் வாய்ப்பு தேடிக்கிட்டிருந்ததால வீட்ல சும்மாதான் இருந்தேன். அவளோட அப்ளிகேஷனை எல்லாம் நான்தான் நிரப்பித் தருவேன். உண்மையான காதல்னா, தான் நேசிக்கிறவங்க தன்கூடவே இருக்கணும்னு நினைக்கிறதைவிடவும் அவங்க சந்தோஷமா இருக்கறதைத்தான் விரும்பும்...’’ - தன் காதல் உண்மையானது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் அமித்.

‘`நான் ஆசைப்பட்டது மாதிரியே எனக்கு புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சீட் கிடைச்சது. அதே டைம்ல துபாய்ல ஒரு ரேடியோ ஸ்டே ஷன்ல ஹெட் வேலையும் கிடைச்சது. அந்த டைம் நாங்க ரெண்டு பேருமே ஒரு மாதிரி எங்க மனசுல உள்ள காதலைப் பகிர்ந்துகிட்டோம். `ஐ லவ் யூ'வெல்லாம் சொல்லிக்கலை. ரெண்டு பேரும் அதை உணர்ந்தோம்னுதான் சொல் லணும்...’’ - அழகான தருணத்தின் அனுபவம் சொன்னபடியே கணவரின் கண் பார்க்கிறார்.

‘`பரஸ்பரம் நாங்க அந்தக் காதலை உணர்ந்ததும் எனக்கு என் வாழ்க்கையில ஒரு பெரிய பிரேக் வந்தது. ஸ்ரீரஞ்சனியை `என் வாழ்க்கையின் குட்லக்'னு உணர வெச்ச சம்பவம் அது. லோனாவாலாவுல உள்ள `பிக்பாஸ்' புராஜெக்ட்டுல எனக்கு நல்ல வேலை கிடைச்சது. ரெண்டு பேரும் பிரிஞ்சே ஆக வேண்டிய கட்டாயம்.

`இப்பதான் ரெண்டு பேரும் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கோம். நாங்க லவ் பண்ண ஆரம்பிச்சு ஒரு வருஷம்கூட முடியலை.  இப்ப எங்களுக்குள்ள இடைவெளி வந்தா என்னாகும்?'னு ஒரு பயத்துல அந்த வேலையை வேணாம்னுகூட முடிவு பண்ணிட்டேன். அப்பதான் எனக்கு ஒரு விஷயம் தோணினது. `நான் எதுக்காக வந்தேனோ அந்த லட்சியத்தையே விட்டுக் கொடுத்துட்டேன்னா, அவளுக்கு என்னைப் பத்தி என்ன அபிப்ராயம் இருக்கும்?'னு யோசிச்சேன். காதல் என்கிற விஷயம், சம்பந்தப்பட்ட ரெண்டு பேரையும் இன்னும் ஸ்ட்ராங் ஆக்கணும்; பலவீனப்படுத்தக்கூடாது. நம்ம மனசு பலவீனமா இருக்கிறதால இன்னொருத் தரோட வளர்ச்சியைத் தடுக்கிறது காதலே இல்லை. நாங்க ரெண்டு பேரும் ஒரு ஒப் பந்தத்துக்கு வந்தோம். ‘நான் வேலைக்குப் போறேன். நான் தள்ளி இருந்தாலும் உனக்கு விருப்பமிருந்தா என்கிட்ட பேசலாம். உன் வீட்ல மாப்பிள்ளை பார்த்து, அதில் உனக்கு விருப்பம்னாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. இந்த ரிலேஷன்ஷிப்பை எப்படிக் கொண்டு போகணும்கிறது உன்கிட்டதான் இருக்கு’னு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்’’ - சஸ்பென்ஸோடு அமித் நிறுத்த, தொடர்ந்த சுவாரஸ்யங்களைச் சொல்கிறார் ஸ்ரீ.

‘`அந்த நாலு மாசமும் நினைச்ச நேரத்துல பார்க்கவோ, பேசவோ முடியாது. ஆனாலும், அந்தப் பிரிவு எங்க நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கியது. அவர் சென்னை வந்த அடுத்த மாசமே நான் துபாய் கிளம்பிட்டேன்.ஒரு வருஷம் பிரிஞ்சிருந்தாலும், எங்களுக்குள்ள பாதுகாப்பில்லாத உணர்வே வரலை. நாம பக்கத்துல இல்லையே... `அவர் யாரோடயாவது பேசிட்டிருப்பாரோ'ன்னு நானோ, `அவ யாரோட பழகிட்டிருப்பாளோ'ன்னு அமித்தோ நினைச்சதே இல்லை...’’ - பிரிவுத்துயரத்தை வென்ற ஸ்ரீயின் முகத்தில் அத்தனை பூரிப்பு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வேலைகளை ரெண்டு பேரும் பகிர்ந்துப்போம்!

‘`என் கனவெல்லாம் நனவாக ஆரம்பிச்ச டைம் அது. விஜய் டி.வி-யில ‘கல்யாணம் முதல் காதல்வரை’ சீரியல் ஹிட்டான டைம். நிறைய ரசிகைகள்... சத்யம் தியேட்டர்ல ஒரு இடம் இருக்கு. அங்கதான் விஜய் டி.வி நிகழ்ச்சிகளோட ஹோர்டிங்ஸ் வைப்பாங்க. அந்த இடத்துல என்னோட முகமும் வரணும்கிற கனவு சென்னை வந்ததுலேருந்தே எனக்கு இருந்தது. நாலு வருஷக் கனவு பலிச்சபோது, நான் விரும்பற ஒருத்தி என் பக்கத்துல இல்லை. வெற்றியைக் கொண்டாடறதைவிடவும் அவ என் பக்கத்துல இல்லாத வலிதான் மனசுல நிறைஞ்சிருந்தது...’’- நாட்கள் கடந்தும் அமித்தின் வார்த்தைகளில் வலியின் மிச்சம் தெரிகிறது.

‘`அமித்தோட வாழ்க்கையில நடக்கிற முக்கியமான பல விஷயங்களை மிஸ் பண்ணி யிருக்கேன். அதுல எனக்கு ரொம்பவே வருத்தம். ஊர் முழுக்க போஸ்டர்ஸ்... சத்யம்ல ஹோர்டிங், விஜய் அவார்ட்ஸ்னு பல ஸ்பெஷலான தருணங்கள்ல நான் அவர் பக்கத்துல இல்லை. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இது மாதிரியான விஷயங்களை மிஸ் பண்றதுனு, நான் துபாய் வேலையை ரிசைன் பண்ணிட்டு இந்தியா வந்தேன். உடனே ரெண்டு பேர் வீட்லயும் பேசினோம். எங்க குடும்பத்துல முதல் லவ் மேரேஜ் எனக்குத்தான். அதனால பயம் இருந்தது. அமித்துக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அவரை எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்பினேன். அதே மாதிரி, ‘நாங்களே பார்த்திருந்தாகூட அமித் மாதிரி ஒரு பையன் கிடைச்சிருக்க மாட்டான்'னு அம்மா அப்பா சொன்னாங்க. என்னையும் அவங்க வீட்ல பார்த்ததுமே பிடிச்சிருச்சு. நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையில ஆறு மாசம். ‘ஐயோ ஆறு மாசமா’னு ஒரு பக்கம் கஷ்டமா இருந்தது. ஆனா, ‘இந்த டைமை நீங்க மிஸ் பண்ணிடாதீங்க. வாழ்க்கையில திரும்பக் கிடைக்காத பீரியட் இது’னு நிறைய பேர் அட்வைஸ் பண்ணினாங்க. வெளியில நிறைய சுத்தியிருக்கோம்... அந்த வகையில எங்க ரெண்டு பேர் அம்மா அப்பாவுக்கும் நன்றி சொல்லணும். ‘அமித் ஒரு செலிப்ரிட்டி. அவர்கூட வெளியில சுத்தினா நாலு பேர் நாலு விதமா பேசுவாங்களே’ன்னெல்லாம் கட்டுப்படுத்தலை. `கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் புரிஞ்சுக்க இது ஒரு வாய்ப்பா இருக்கட்டும்'னு சந்தோஷமா அனுமதிச்சாங்க.


இதுக்கிடையில மாமியாரோட பர்த்டேவுக்காக பெங்களூரு போனேன். அப்பவே மாமியார்கூட ரொம்ப க்ளோஸ் ஆயிட்டேன். வரப்போற மருமகள் நம்ம பையனை நம்ம கிட்டயிருந்து பிரிச்சிடுவாளோனு பயப்படற அம்மாக்களுக்கு மத்தியில என் மாமியார் அவ்வளவு ஸ்வீட்டா நடந்துகிட்டாங்க. அமித்துக்குப் பிடிச்சது, பிடிக்காததெல்லாம் சொன்னாங்க. எங்க ரெண்டு பேருக்கும் மனஸ்தாபமோ சண் டையோ வராம இருக்க என்ன செய்யணும்னெல்லாம் அட்வைஸ் பண்ணினாங்க...’’ - மாமியாரை மெச்சுகிறார் மருமகள்!

‘`ஒரு பக்கம் மனைவி... இன்னொரு பக்கம் அம்மா... யாருக்கா கவும் யாரையும் விட்டுக் கொடுத் துடக் கூடாது. அந்த விஷயத்துல ஸ்ரீயும் எங்கம்மாவும் எனக்கு பிரச்னையே கொடுக்காம நல்ல புரிதலோட பழகினாங்க. இப்பவும் அந்த அந்நியோன்யம் தொடருது...’’ - அமித்துக்கு அவ்வளவு சந்தோஷம்!

‘`சமையல் உன் வேலை... நீதான் செய்யணும்னு அமித் என்னிக்கும் என்னைக் கட்டாயப்படுத்தினதே இல்லை. வேலையெல்லாம் முடிச்சு டயர்டா வீட்டுக்கு வருவேன். அமித் எனக்காக தோசையோ, சாண்ட்விச்சோ செய்து கொடுப் பார். ட்ரெடிஷனல் சாப்பாடுன்னா நான் சமைப்பேன். வேலைகளை ரெண்டு பேரும் பகிர்ந்துப்போம். கல்யாணத்துக்கு முன்னாடி எங்க புரிதலைப் பார்த்த சிலர், ‘இப்ப அப்படித்தான் இருக்கும்... கல்யாணமானா எல்லாம் தலை கீழா மாறிடும்’னு கிண்டல் பண்ணியிருக்காங்க. ஆனா, எங்க விஷயத்துல கல்யாணத்துக்குப் பிறகு எங்களுக்குள்ள அன்பும் அந்நியோன்யமும் இன்னும் அதிகமாகியிருக்கிறதாகவே ஃபீல் பண்றோம். இது புது காதல் மாதிரி இருக்கு....’’ - கணவரின் கைகள் கோத்து மார்பில் சாய்கிறார் ஸ்ரீ.

அட... இதுவும்கூட இன்னொரு ‘கல்யாணம் முதல் காதல் வரை’தான்!