Published:Updated:

வாழ்க்கை என்பது சர்ப்ரைஸ்களின் தொகுப்பு!

வாழ்க்கை என்பது சர்ப்ரைஸ்களின் தொகுப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்க்கை என்பது சர்ப்ரைஸ்களின் தொகுப்பு!

நீதான் வேணும்!வெ.நீலகண்டன் - படம்: சொ.பாலசுப்ரமணியன்

வாழ்க்கை என்பது சர்ப்ரைஸ்களின் தொகுப்பு!

ஹேமாவும் ராகேஷும் இருக்குமிடத்தில் 5 நிமிடம் நின்றாலே போதும்... நமக்கும் உற்சாகச் சிறகுகள் முளைத்துவிடும். நமக்கான காதல்வெளியில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கிவிடுவோம். அந்த அளவுக்கு கேலியும் கிண்டலும் அன்பும் அந்நியோன்யமும் ததும்பி வழிகிறது இருவரிடத்திலும்!

“இவ்வளவு அழகான பொண்ணு என் உயிரா மாறுவாங்கன்னு உண்மையிலேயே நான் எதிர்பார்க்கலே சார். ஆரம்பத்துல ரொம்ப பிகு பண்ணினாங்க. ஒரு வருஷம் பேச்சுவார்த்தையே இல்லை. இப்போ என் வாழ்க்கையையே மொத்தமா மாத்திட்டாங்க...” - குறும்பு தொனிக்கச் சொல்லும் ராகேஷை செல்லமாக முறைக்கிறார் ஹேமா!

ஹேமா, தந்தி டி.வி-யின் சீனியர் நியூஸ் ஆங்கர். எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும், முன்மாதிரி மனிதர்களின் சாதனைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நம்பிக்கைக்குரிய ஊடகச் செய்தியாளர். ராகேஷ், ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறார். இருவரையும் வாழ்க்கையில் இணைத்தது விகடன்!

“2006-ல ரெண்டு பேரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர்களா தேர்வானோம். தி.நகர், மீனாட்சி கல்யாண மண்டபத்துல பயிற்சி முகாம். முதல் நாள் இயல்பாத்தான் போச்சு. ரெண்டாவது நாள், வெள்ளை டிரெஸ்ல தேவதை மாதிரி வந்தாங்க ஹேமா. அதுக்கு முன்னாடி எந்தப் பெண்ணுமே ஏற்படுத்தாத உணர்வு எனக்குள். அந்த நேரத்துல, ஊர்ல இருந்து பக்கத்து வீட்டுத் தங்கை போன் பண்ணியிருந்தாங்க. அவங்ககிட்ட, `நான் என்னோட தேவதையைப் பார்த்துட்டேன்'னு சொன்னேன். `கொடு, நான் பேசுறேன்'னு சொன்னாங்க. போனை ஹேமாகிட்ட கொடுத்தேன். ரெண்டு பேரும் அவ்வளவு இயல்பா போன்ல பேசிக்கிட்டாங்க. அதுக்கப்புறம் அந்தப் பயிற்சி முகாம் எப்படிப் போச்சுன்னு சொல்லணுமா என்ன..! இவங்க பேரை `ஏஞ்சல்'னு சேவ் பண்ணி வெச்சேன். இப்போ வரைக்கும் மாத்தவே இல்லை. அதுக்கப்புறம் அப்பப்போ தகவல் பரிமாற்றம் நடக்கும். நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு... திடீர்னு ஒருநாள், பெரிய பூகம்பம் வெடிச்சிடுச்சு...” - ஹேமாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி ராகேஷ் சொல்ல, ஹேமா வெட்கப்படுகிறார்.

“எங்க குடும்பத்துல யாருமே பெண்களை `வாடி போடி'ன்னு கூப்பிட மாட்டாங்க. அப்பா இப்பவும்கூட அம்மாவை, `வாம்மா போம்மா'ன்னுதான் சொல்லுவார். `வாடி போடின்னு கூப்பிடுறது, ஆதிக்கம் செய்ற மாதிரி'ன்னு அப்பா சொல்வார். இவர் முதல்ல `வாங்க போங்க'ன்னுதான் கூப்பிட்டுக் கிட்டிருந்தார். ஒருநாள், `என்னடி பண்றே?'ன்னு எஸ்.எம்.எஸ் அனுப்பினார்.  எனக்கு `இவர் யார், நம்மை வாடின்னு கூப்பிடறதுக்கு'ன்னு கோபம் வந்திடுச்சு. உடனே, `எந்த உரிமையில அப்படி எஸ்.எம்.எஸ் அனுப்பினீங்க... இனிமே என்கூடப் பேசாதீங்க'ன்னு பதில் அனுப்பினேன். அதோடு, சார்கிட்ட இருந்து எஸ்.எம்.எஸ் வர்றது நின்னுப்போச்சு'' - முகம் மூடிச் சிரிக்கிறார் ஹேமா!

ஹேமா - ராகேஷ் மட்டுமல்ல... ஹேமாவின் பெற்றோரும், ராகேஷின் பெற்றோரும்  கூட காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தாம். ஹேமாவுக்குச் சொந்த ஊர் கிருஷ்ணகிரி. அப்பா மனோகரன் திருமண மண்டபத்தில் மேலாளராக இருக்கிறார். அம்மா பிரேமா அரசுப்பள்ளி ஆசிரியை.

``அம்மா - அப்பா ரெண்டு பேரும் காலேஜ் மேட்ஸ். காதலுக்காக அவங்க கொடுத்த விலை ரொம்பவே அதிகம். உறவுகள் மொத்தமா புறக்கணிச்சுட்டாங்க. அப்பா பெரிய ஜமீன் குடும்பம். எல்லா சொத்துகளும் கைவிட்டுப் போயிடுச்சு. நமக்கு ஏற்பட்ட நிலை, நம் பிள்ளைகளுக்கு வரக்கூடாதுங்கிற நியாயமான எண்ணம் அவங்களுக்கு. அதைப் புரிஞ்சுக்கிட்டுத்தான் நானும் தம்பியும் வளர்ந்தோம். அப்பா கொஞ்சம் கண்டிப்பா இருப்பார். அம்மா தோழி மாதிரி. எதைப் பத்தியும் அவங்ககிட்ட பேசலாம்.

நான் ப்ளஸ் ஒன் படிச்சுக்கிட்டிருந்தேன். உள்ளூர் தொலைக்காட்சியில, `செய்தி வாசிக்கிற பெண் ஒரு வாரம் லீவ். அதுவரை நீங்க செய்தி வாசிக்க முடியுமா?'ன்னு கேட்டாங்க. அதுதான் என் கரியரின் தொடக்கம். அப்படியே பகுதிநேர செய்தி வாசிப்பாளர் ஆனேன்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம், பெண்களுக்கு ஒரு வரம். அது என் பார்வையை விசாலமாக்குச்சு. ஒரு பத்திரிகை யாளருக்கு இருக்க வேண்டிய தார்மிக அறத்தை அங்கேதான் கத்துக்கிட்டேன். மலைக்கிராமங்கள்ல பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், இருளர் சமூக மக்களோட பிரச்னைகள் பத்தியெல்லாம் எழுதினேன். அந்த செட்ல யார் என்ன கட்டுரை எழுதினீங்கன்னு விசாரிப்பேன். அப்படித்தான் ராகேஷ்கிட்டயும்! ராகேஷை நினைச்சாலே மனசுக்குள்ள உற்சாகம் பிறக்கும். ஆனா, அது இப்படி ஒரு பந்தமாக மாறும்னு நான் யோசிச்சதே இல்லை.

வாழ்க்கை என்பது சர்ப்ரைஸ்களின் தொகுப்பு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எங்களுக்குள்ள `என்னடி' சண்டை வந்தபிறகு, ஒரு வருஷம் பேசவே இல்லை. ஒருநாள், அவங்க பக்கத்து வீட்டுத் தங்கை...  அதாவது, விகடன் பயிற்சியப்போ என்கிட்ட போனைக் கொடுத்து பேசச் சொன்னாரே, அந்த தங்கை போன் பண்ணினாங்க. சாதாரணமா, நலம் விசாரிச்சுட்டு, `ஏம்மா ராகேஷ்கூட பேச மாட்டேங்குறே... ரொம்ப நல்ல பையன்மா... எப்போ பாத்தாலும் உன்னைப் பத்தியே பேசிக்கிட்டிருப்பான்'னு சொன்னாங்க. எனக்கு ரொம்பவே குற்ற உணர்வா இருந்துச்சு. உடனே போன் பண்ணிட்டேன். என் குரலை வெச்சே யார்னு தெரிஞ்சுக்கிட்டாலும், சார் அதை வெளிக்காட்டிக்கலே. `யார் நீங்க... என்ன வேணும்?'னு கேட்டார்... `நீதான் வேணும்'னு என்னை அறியாமலே சொல்லிட்டேன்! அதுக்குப் பிறகு, தெளிவா புரிஞ்சு போச்சு... `இது'  - `அது'தான்னு!'' -  சிரிக்கிறார் ஹேமா.

ராகேஷ் மதுரைக்காரர். அப்பா ஜெயபிரபாகர், இடதுசாரி சிந்தனையாளர். பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தியின் செயலாளராக இருந்தவர். காரல்மார்க்ஸ் நூலகத்தின் நிறுவனர். மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் `மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர். சிவப்பு சித்தாந்தக்காரர் என்பதால், மகனின் காதல் தெரிந்தவுடனே அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டார்.

“எனக்கு அப்பாதான் ரோல்மாடல். ஒரு தோழன் மாதிரி தோள்ல கை போட்டு நடப்பார். வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல் வாழ்ந்துகாட்டி நல்ல விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்கார். அம்மாவும் அப்பாவும் உறவுக்காரங்கதான். அதனால, அவங்க காதலுக்குப் பெரிசா எதிர்ப்பில்லை.

ஹேமா என்கிட்ட திரும்பவும் பேசின பிறகு, நாலஞ்சு மாதம் சாதாரணமா பேசிக்கிட்டிருந்தோம். ஏதாவது சொல்லப்போக, மேடம் திரும்ப கோபமாகிட்டாங்கன்னா சிரமமாயிடுமே..? அதனால அவங்க கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுவேன்.

ஒருமுறை, `அவள் விகடன்'ல `ஏரியா ஏஞ்சல்'னு போட்டோவோட அவங்களைப் பத்தி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதை எடுத்துக்கிட்டுப் போய் அப்பாகிட்ட காட்டி, `இந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேம்பா'ன்னு சொன்னேன். புத்தகத்தை வாங்கிப் பாத்துட்டு, சிரிச்சார். எந்த ஊர்னு விசாரிச்சார். அப்பவே கிருஷ்ணகிரியில இருக்கிற தோழர்களுக்கு போன் பண்ணி, விசாரிக்க ஆரம்பிச்சுட்டார்.

அப்பாக்கிட்ட சொன்ன பிறகுதான் ஹேமாகிட்ட, `உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்'னு சொன்னேன். அவங்க உடனே பதில் சொல்லலே. `நாம நினைச்சதை சொல்லிட்டோம். இனி அவங்க முடிவெடுக் கட்டும்'னு விட்டுட்டேன்.

மேடம் காதலைச் சொன்னதே ஒரு ஸ்வீட் எபிசோடுதான்! ஒருமுறை திருச்சியில அவங்களுக்கு செமினார். நானும் போய், ஊரை சுத்திக் காமிச்சேன். கிளம்புறதுக்கு முன்னாடி, பஸ்ஸ்டாண்ட்ல வெச்சு ஒரு கிரீட்டிங் கார்டு கொடுத்தாங்க. திறந்தா `ஐ லவ் யூ'ன்னு கத்துச்சு. இன்ப அதிர்ச்சில கண்ணெல்லாம் கலங்கிடுச்சு” என்கிறபோதே நினைவுகளில் திளைக்கிறார் ராகேஷ். 

“போட்டோகிராபர்ங்கிறதால இவர் நிறைய போட்டோ அனுப்புவார். அப்பல்லாம் ஒரு போட்டோ டவுன்லோடு ஆக அரை மணி நேரம் ஆகும். முதல்ல தலை, அப்புறம் நெற்றி, அப்புறம் முகம்னு மெள்ள மெள்ள வரும். அப்போ முகத்துல கொஞ்சம் மருவெல்லாம் இவருக்கு இருந்துச்சு. தலைமுடியும் குறைவா இருந்துச்சு. முகத்துக்கு கடலை மாவு, முடிக்கு ஹென்னா, சோப்புன்னு நிறைய வாங்கி அனுப்புவேன். பக்கம் பக்கமா லெட்டர் எழுதிக்குவோம். 6 வருஷத்துல இப்படி பல ஆயிரம் பக்கங்கள்... பலநூறு கிஃப்ட்ஸ்!” என்கிற ஹேமாவை இடைமறித்த ராகேஷ், “ஒரு சாக்லேட்ல பாதி சாப்பிட்டு பாதி அனுப்பினியே, அதையும் சொல்லு” என்று கிண்டல் செய்கிறார்.

“குலதெய்வம் கோயில் திருவிழாவுக்குப் போயிருந்தபோது, அப்பாகிட்ட  விஷயத்தைச் சொன்னேன். அமைதியா கேட்டுக்கிட்டார். வீட்டுக்கு வந்து அம்மாவைக் கூப்பிட்டார், `பையன் குடும்பத்தை வரச்சொல்லு'ன்னு சொன்னார். அந்த நொடிகளை வார்த்தைகளால விவரிக்க முடியாது. தந்தி டி.வி-யில வேலை கிடைச்ச பிறகு திருமண ஏற்பாடுகள் வேகமா நடந்துச்சு...” உற்சாகமாகிற ஹேமா, ராகேஷின் விரல் கோத்து முகம் பார்த்துத் தொடர்கிறார். 

“சென்னையிலதான் என் எதிர்காலம்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். அதுக்காக ராகேஷ் மட்டுமல்ல... என் மாமனார் மாமி யாரும் சென்னைக்கே வந்தாங்க. அவருக்கு மரைன் பயாலஜியில மிகுந்த ஈடுபாடு. அதைக்கேட்டு எங்க அம்மா ரொம்பவே பயந்தாங்க. உடனே, அவர் தன்னோட கனவுகளைத் தள்ளி வெச்சுட்டு எம்.பி.ஏ மார்க்கெட்டிங் படிச்சுட்டு வேற துறைக்கு மாறினார். இதெல்லாம் பார்த்துட்டு, `இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை எங்களாலகூட உனக்கு அமைச்சுத் தந்திருக்க முடியாது'ன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க...”- ஹேமாவின் கண்கள் நெகிழ்ச்சியில் கலங்குகின்றன.

“தங்களோட வாழ்க்கை மூலமா எங்க பேரண்ட்ஸ் எங்களுக்கு உதாரணமா இருக்கிற மாதிரி, நாளைக்கு எங்க பிள்ளைகளுக்கு நாங்க இருக்கணும். தினமும் வாழ்க்கையில ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதுதான் எங்க  காதலை குறையாம நகர்த்திக்கிட்டிருக்கு. சின்னச் சின்னதா ஒவ்வொரு செயல்லயும் காதலை வெளிப்படுத்தலாம். காலையில அவங் களுக்கு முன்னாடி எழுந்து காபி போட்டுக் கொடுக்கிறது, அவங்க வெளியூர் போகும்போது வழியனுப்புறது, அவங்க எதிர்பார்க்காத தருணத்துல அவங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் பண்றதுன்னு நிறைய இருக்கு. காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிறது பெரிசில்லை... கல்யாணத்துக்குப் பிறகும் காதலிக்கணும். இதுக்கும் எங்க பேரண்ட்ஸ்தான் எங்களுக்கு முன் மாதிரி!

ட்ராவல் பண்றதில் ரெண்டு பேருக்குமே ரொம்ப இஷ்டம். எனக்கு ஸ்கூபா டைவிங் பிடிக்கும். ஒரு நியூ இயர் அன்னிக்கு என்னை ஸ்கூபா டைவிங் கூட்டிட்டுப் போய் சர்ப்ரைஸ் கொடுத்தாங்க. நானும் அப்பப்போ ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுப்பேன்.

அம்மாவும் ஹேமாவும் தோழிகள் மாதிரி இருப்பாங்க. தினமும் ஆபீஸ் கிளம்பும்போது, `இன்னிக்கு லீவ் போட்டுட்டு கூடவே இருக் காலாமா'ன்னு ரெண்டு பேருக்குமே ஏக்கமா இருக்கும். இதைத் தவிர வேறென்ன சார் வேணும்?'' - ராகேஷ் உணர்வுபூர்வமாகப் பேசுகிறார்.

சில்லென்று படர்ந்து பரவி மேனி சிலிர்க்கச் செய்கிற காற்றில், சங்கீதமாகப் பரவுகிறது காதல்!