‘பழங்களை மட்டும் சாப்பிட்டு ஒருவர் உயிர்வாழ முடியுமா?’ என்று கேட்டால், `யெஸ் யெஸ்' என்கிறார்கள், ஃப்ரூட்டேரியன் டயட்காரர்கள். ஃப்ரூட்டேரியன் டயட் பல நூற்றாண்டுகள் பழைமையானது. டாவின்சி முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை எண்ணற்ற பிரபலங்கள் இதைப் பின்பற்றியிருக்கிறார்கள். காந்தியும் சில காலம் ஃப்ரூட்டேரியன் டயட்டைப் பின்பற்றியிருக்கிறார். ஃப்ரூட்டேரியன் டயட் என்றால் என்ன? அதை எப்படிப் பின்பற்றுவது? யாருக்கு இந்த டயட் ஏற்றது? விளக்குகிறார் டயட்டீஷியன் குந்தளா ரவி.

``இந்த டயட்டை `வீகன் டயட்'டின் ஓர் அங்கம் என்றும் சொல்வதுண்டு. 100 சதவிகிதம் பழங்கள் மட்டுமே சாப்பிடுபவர்கள், பழங்களுடன் காய்கறிகள் மட்டும் சேர்த்துக்கொள்பவர்கள், பருப்புவகைகள், நட்ஸையும் சேர்த்துக்கொள் பவர்கள், பழங்களையும் நட்ஸையும் மட்டுமே சாப்பிடுபவர்கள் என ஃப்ரூட்டேரியன் டயட் டைப் பின்பற்றுபவர்கள் பலவகையினராக உள்ளனர். பொதுவாக, அனைத்து வகையான பழங்கள், நட்ஸ் மட்டும் சாப்பிடுவது ஃப்ரூட் டேரியன் டயட் என்று சொல்லலாம். கார்போ ஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்தை நீக்க வேண்டும் என்பது ஃப்ரூட்டேரியன் டயட் டின் நோக்கம். எனவே, காய்கறிகள், அசைவம் போன்றவை தவிர்க்கப் படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படிச் சாப்பிடலாம்?
ஃப்ரூட்டேரியன் டயட்டில் ஒரு குறிப்பிட்ட வகை பழத்தை உண்டபின் 45 - 90 நிமிடங்களுக்கு வேறுவகை பழங்களைச் சாப்பிடக் கூடாது. பசி அடங்கவில்லை என்றால், பசி தீரும் வரை அதே வகை பழத்தையே சாப்பிட வேண்டும். தொடர்ந்து ஒரே வகை பழத்தைச் சாப்பிடும்போது சாப்பிடுவதற்கான ஆர்வம் குறையும் என்பதால், பசி தானாகவே மட்டுப்படும். இந்த டயட்டில் தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டிய தேவை இருக்காது. பழங்களுடன் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளும்போது போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
விளைவுகள்?
ஃப்ரூட்டேரியன் டயட் கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்து அற்றது என்பதால், எடை குறைப்பு நிகழும். சிலருக்கு ஊட்டச்சத்து போதாமையால், உடல் பலவீனம் அடையவும் கூடும். சோர்வு, மயக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
யார் தவிர்க்க வேண்டும்?
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், நீரிழிவாளர்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதீத ஃபுட் கிரேவிங் உள்ளவர்கள், அனீமியா பிரச்னை உள்ளவர்கள், வைட்டமின் பி 12, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.''
(உங்களால் முடியும்!)
ஃப்ரூட்டேரியன் டயட்டின் ஒரு நாள் மெனு
காலை 6:00 - 9:00
காலை எழுந்தவுடன் மூன்று முதல் ஐந்து எலுமிச்சைகள் சேர்த்த ஜூஸ், தர்பூசணி பழம் வயிறு நிரம்பும் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நட்ஸ்கள், விதைகள் எடுத்துக்கொண்டால் உடலுக்குத் தேவையான கொழுப்பு கிடைக்கும்.
மிட் மார்னிங் 11:00
வயிறு நிரம்பும் அளவு ஆப்பிள், அன்னாசி, அத்தி, திராட்சை, ப்ளம்ஸ், கிவி, வெள்ளரிக்காய் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மதியம் 1:00-2:00
ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, ஆப்ரிகாட், பப்பாளி ஆகியவற்றை வயிறு நிரம்பும் அளவு எடுத்துக்கொண்டு, நட்ஸ்கள், விதைகள் எடுத்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்து கிடைக்கும்.
பின் மதியம் 4:00-6:00
மாம்பழம், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ், மாதுளம்பழம், தர்பூசணி, வாழைப்பழம்.
இரவு 7:00-9:00
திராட்சை, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி, மாம்பழம், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளம்ஸ், தர்பூசணி, மாதுளம்பழம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் வாழைப்பழம், உலர் பழங்கள் சாப்பிட்டால், நார்ச்சத்து கிடைக்கும். செரிமானம் எளிதாகும்.
*இந்த உணவுத்திட்டம் ஒரு புரிதலுக் காகவே வழங்கப்பட்டுள்ளது. மருத்துவரை அணுகி உங்களின் உடல்நிலை, குறைக்க வேண்டிய எடையின் அளவு ஆகிய வற்றைக் கணக்கிட்டு அவர் சொல்லும் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.