Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 6

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 6
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 6

குறும்புக்காரிஎஸ்.கிருபாகரன்

“இன்று இத்தனை பெரிய நடிகையாக வளர்ந்துவிட்டாலும், மனம் இன்னும் என் பள்ளி வாழ்க்கையையே விரும்புகிறது. விரும்பியபடி மாற கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நான் மீண்டும் பள்ளி மாணவியாக மாறவே விரும்புவேன்!''

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 6

- பிரபல நடிகையான பின், பத்திரிகைப் பேட்டி ஒன்றில் தன் பள்ளி வாழ்க்கையை இப்படி நினைவுகூர்ந்தார் ஜெயலலிதா. 

ஆம்... பள்ளி வாழ்க்கையைத்தான் அவர் மிகவும் விரும்பி வாழ்ந்திருக்கிறார். ஆறு வயதில் பெங்களூரு சென்ற ஜெயலலிதா, பத்து வயது வரை தாத்தா வீட்டில்தான் வளர்ந்தார். பாடங்களில் வரலாறும் ஆங்கிலமும் அவருக்கு அருமையாக அமைந்தன. இரண்டிலும் நூற்றுக்கு நூறு!

`இரும்புப் பெண்மணி' எனப் பெயரெடுத்த அவர்,  தன் பள்ளி நாள்களில் மகா குறும்புக்காரி என்றால் நம்புவதற்குச் சிரமமாகத்தான் இருக்கும். பிஷப் காட்டன்ஸ் பள்ளியில் படித்தபோது ஒருமுறை அவரது குறும்புத்தனம் எல்லைமீறிப் போனது. அதற்குத் தண்டனையும் கிடைத்தது.

தீபாவளிக்காக அம்முவின் பள்ளியில் ஒரே ஒருநாள்தான் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அருகிலிருந்த கார்ப்பரேஷன் பள்ளிக்கோ மூன்று நாள்கள் விடுமுறை. இது அம்முவுக்கும் மற்ற தோழிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. `இந்த வாத்தியாருங்களுக்கு நாம மகிழ்ச்சியா இருக்கிறதே பிடிக்காதோ? இதுக்கு ஒரு பாடம் புகட்டணும்' என அவர்கள் திட்டமிட்டனர். கறார் மனிதரான சம்ஸ்கிருத ஆசிரியரை அதற்குப் பலிகடா ஆக்கினர். அன்று தீபாவளிக்கு முதல் நாள். வகுப்பறையில் நாற்காலியில் உட்கார்ந்து லேசான தூக்கத்தில் இருந்த ஆசிரியருடைய காலில் சக்கரம் பொருத்தப்பட்ட காலணியை சாமர்த்தியமாகப் பொருத்திவிட்ட அம்மு தலைமையிலான தோழிகள், நாற்காலிக்கு அடியிலே இரண்டு சரம் பட்டாசையும் வைத்து, யாரும் பார்க்காத நேரத்தில் அதைக் கொளுத்திவிட்டு வெளியே ஓடிவந்தனர். பட்டாசு வெடிக்க ஆரம்பித்த அடுத்த நொடியே ஆசிரியர் அலறி அடித்தபடி  எழுந்து ஓட முயற்சித்தார். காலில் சக்கரம் பொருத்தப்பட்ட காலணியோ அவரை எங்கோ இழுத்துச்செல்ல, சார்லி சாப்ளின் காமெடிக் காட்சி ஒன்று நிஜமாகவே அரங்கேறிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே இதைப் பார்த்து, கறார் மனிதரை காமெடி பீஸாக்கிவிட்ட குஷியில் அம்முவும் தோழிகளும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தனர். விஷயம் பள்ளி நிர்வாகத்துக்குப் போனது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 6

மாணவிகளின் செய்கையால் அவமானமடைந்த ஆசிரியர், மற்ற மாணவிகளை விட்டுவிட்டு, ‘புரட்சி’த்தலைவியை மட்டுமே அடையாளம் காட்டினார். அப்புறமென்ன... ‘செய்த குறும்புக்கு சம்ஸ்கிருத ஆசிரியர் கையாலே ஆறு பிரம்படிகள் வாங்க வேண்டும்’ என தலைமை ஆசிரியர் தீர்ப்பு எழுதினார். அநேகமாக பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர் கையால் அம்மு அடிவாங்கியது அதுதான் முதலும் கடைசியுமான சம்பவம்.

பள்ளிக்காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம் அம்முவின் மனதில் பதிந்த ஒன்று.  `சிக்கலான மற்றும் நெருக்கடியான நேரங்களில் பயந்து தயங்கிக்கொண்டு நிற்கக்கூடாது. சமயோசிதமாக - அதே வேளையில் துணிந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். துணிச்சலான அந்த முடிவே நல்ல தீர்வாக அமையும்' என்கிற எண்ணம் இந்தச் சம்பவத்தின்மூலம் அவர் மனதில் அழுத்தமாக விழுந்தது.

பெங்களூரில் படித்துக்கொண்டிருந்த போது ஒருநாள்... பள்ளியின் பின்புறம் இருந்த திறந்தவெளியில் தோழி ஒருவருடன் நடந்து கொண்டிருந்தார். புல்வெளியில் அமர்ந்து படிக்கலாம் எனத் தோழி சொல்ல, இருவரும் அமர்ந்தனர்.

தோழி படிக்க ஆரம்பித்த நேரம்... அவளுக்குச் சிறிது தூரத்தில் ஏதோ ஒன்று பளபளவென நெளிவதைக் கண்டார் அம்மு. அடுத்த நிமிஷமே அலறினார். ஆம்... அது ஒரு பச்சைப் பாம்பு. தோழியும் அலறியபடி அதிர்ந்து நிற்க, எப்படித்தான் அப்படி ஒரு வேகம் வந்ததோ அம்முவுக்கு..! ஒரு கையால் தன் தோழியை மின்னல் வேகத்தில் பின்னுக்கு இழுத்துத் தள்ளி, மறு கையால் அந்தப் பாம்பின் வாலைப் பிடித்துத் தூர வீசி எறிந்தார். எல்லாமே ஒரு சில விநாடிகளுக்குள் நடந்து முடிந்துவிட்டன. தோழி காப்பாற்றப்பட்டுவிட்டார் என்பது தெரிந்தபின்தான் அவர் சகஜநிலைக்கு திரும்பினார். இதையெல்லாம் செய்தது தான்தானா என்கிற ஆச்சர்யம் மட்டும் அவரிடமிருந்து விலகவில்லை!

ஒருவேளை  அவர் மட்டுமே தனியே இருந்திருந்தால் பாம்பைக் கண்டதும் ஓடிப்போயிருப்பார். ஆனால், தன்னுடைய தோழி ஆபத்தில் சிக்கி இருக்கையில் அவளை தனியே விட்டுச்செல்வது முறையல்ல என்கிற எண்ணத்தில், ஆபத்துக்கு அஞ்சாமல் துணிந்து ஒரு முடிவெடுத்தார்; தோழியைக் காப்பாற்றினார். 

இப்படிப் பலப்பல அனுபவங்களுடன் பெங்களூரு வாழ்க்கை நகர்ந்தாலும், அம்மா வோடு இல்லாத சோகம் அவ்வப்போது  அவர் மனதில் எட்டிப்பார்க்கவே செய்யும். அந்த நாள்களில்அம்முவுக்குப் பெங்களூரு வாழ்க்கை பிடிக்கவில்லை என்றோ, பிடித்தது என்றோ உறுதியாகச் சொல்லிவிட முடியாது. தாயின் பிரிவைச் சகித்துக்கொள்ள ஒரு வழி இருந்தது அவருக்கு. ஆம்... சந்தியா திரைப்பட நட்சத்திரமாக இருந்ததால் கிடைத்த வழி!  அந்நாளில் திரைப்படங்களை அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கும் வழக்கம் இருந்தது. அதாவது ஒரே படப்பிடிப்பு அரங்கில் அந்தந்த மொழிக் கலைஞர்களைக்கொண்டு ஒரே நேரத்தில் தயாராகின. ஜெமினி, வாஹினி போன்ற பிரபல நிறுவனங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, பிரேம்நசீர், நாகேஸ்வரராவ் போன்ற நடிகர்களைக்கொண்டு இந்த முறையில் படங்களைத் தயாரித்தன. அம்முவின் வருத்தத்தைப் போக்கிய மருந்து இந்தப் படங்கள்தான்!

சந்தியாவுக்குப்  பிள்ளைகளைக்  காணும்  ஆசை எழுந்தாலும், ஓய்வில்லாத படப்பிடிப்பினால் மாதம் ஒருமுறைதான் அது சாத்தியப்படும். ஆனால், அம்மு நினைத்தாலோ அது சாத்தியம். ஆம்... மேற்சொன்ன முறையில் படங்கள் தயாரிக்கப்பட்டதால் பெங்களூரில் ஏதேனும் ஒரு தியேட்டரில் சந்தியா நடித்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும். அம்முவுக்கும் ஜெயக்குமாருக்கும் தாயின் நினைவுவந்தால், அவர்களைச் சந்தியாவின் திரைப்படத்துக்கு அழைத்துச்செல்வார் சந்தியாவின் தந்தை ரங்கஸ்வாமி. மகள் சினிமாவில் நடிப்பது தனக்கு விருப்பமில்லையென்றாலும் பேரப்பிள்ளைகளுக்காகப் பலமுறை மகள் நடித்த திரைப்படங்களைக் காண உடன் சென்றிருக்கிறார் அவர். இதனால் பிள்ளைகளின் துயரம் சில நாள்களுக்கு தள்ளிப்போகும். இப்படித்தான் அம்மாவின் பிரிவை ஆற்றிக்கொண்டார் அம்மு. ஆனால், உலகில் எதுதான் நிரந்தரம்?! அதற்கும் ஒருநாள் முடிவு வந்தது.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 6

ஒருமுறை அப்படி அம்மாவைக் ‘காண’ ஒரு தியேட்டருக்கு பள்ளித்தோழிகளுடன் சென்றிருந்தார். `சம்பூர்ண ராமாயணம்' என்ற அந்தப் படத்தில் சந்தியா, ராவணன் மனைவி மண்டோதரியாக நடித்திருந்தார். படம் ஓடத் தொடங்கியது. போர்க்களத்தில் தோற்று, ராவணன் நிராயுதபாணியாக நிற்கும்போது, `இன்று போய் நாளை வா' என ராமன் சொல்லிவிட, சோர்ந்துபோய் அரண்மனை திரும்புகிறான் ராவணன். பெரும் வீரனாக படைபலத்துடன் தன் கணவனைப் பார்த்து பழகிய மண்டோதரி, ராவணனின் இந்த நிலை கண்டதும் பீறிட்டு அழுவார். சில நிமிடங்களுக்கு நீளும் இந்தக் காட்சியைக் கண்ட அம்மு, காட்சியை மறந்துவிட்டு சந்தியாவை நினைத்து வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டார். சினிமா என்றாலுமே, தன் தாய் கதறி அழுவதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அழுது தீர்த்துவிட்டார். தோழிகள் சமாதானம் கூறியும் அழுகையை அடக்க முடியவில்லை. வீட்டிலும் அழுகை தொடர்ந்தது. சந்தியாவுக்குத் தந்தி கொடுத்து வரவழைக்க வேண்டியதாயிற்று. பிரபலமான நடிகையின் மகளாக இருந்தும் சினிமா பற்றிய புரிதல் அவருக்கு அந்தளவுக்கே இருந்தது. அன்றுடன்  தியேட்டர் செல்வதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

அதன் பிறகு அம்மாவை நேரில் பார்க்கவே விரும்பினார் அம்மு. எத்தனை வேலைகள் இருந்தாலும், மாதம் ஒருமுறை பிள்ளைகளைப் பார்க்க பெங்களூரு வருவார் சந்தியா. அங்கிருந்து சந்தியா கிளம்பும் நாளில்தான் அந்த உருக்கமான நிகழ்வு அரங்கேறும். `எங்களையும் உன்னோடு அழைத்துச் செல்' என பிள்ளைகள் அழுது அடம்பிடிப்பார்கள். ஒவ்வொரு முறையும் இது பெரும் சங்கடம் சந்தியாவுக்கு. இதைச் சமாளிக்க சந்தியா ஓர் உபாயம் செய்தார். அடுத்த முறை பிள்ளைகள் அயர்ந்து தூங்கும் அதிகாலை நேரத்திலேயே சத்தமின்றி கிளம்பிவிட்டார். ஆனால், அம்முவிடம் அவரது திட்டம் பலிக்கவில்லை. மகளின் அறிவை அவர் தவறாகக் கணித்துவிட்டதை அடுத்த பயணத்தில் அறிந்துகொள்ள நேர்ந்தது. அந்த முறை கிளம்பும் நேரம் வந்தபோது, குழந்தைகள் நன்றாகத் தூங்குவதை உறுதி செய்துகொண்டு படுக்கையிலிருந்து எழுந்து சில அடி தூரம் நகர்ந்தார். அடுத்த நொடி யாரோ அவரை பின்பக்கத்திலிருந்து இழுப்பதுபோல இருந்தது. திரும்பிப்பார்த்தால், கண்ணீரை அடக்கிவைத்தபடி அம்மு நின்றிருந்தார். விஷயம் இதுதான்... ஒவ்வொரு முறையும் அம்மா தங்களை ஏமாற்றிவிட்டு கிளம்பிவிடுவதை அறிந்த அம்மு, அதற்கும் ஒரு திட்டம் போட்டிருந்தார். அதாவது சந்தியா உறங்கிய பிறகு, சத்தமின்றி அவரது புடவைத் தலைப்பை தனது ஃபிராக்கின் நுனியுடன் முடிச்சுப் போட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார். அதுதெரியாமல் எழுந்து மகளிடம் மாட்டிக்கொண்டார் சந்தியா. அந்த வயதில் மகளின் மதிநுட்பத்தைக்கண்டு நெகிழ்ந்தபடி  வாரி அணைத்துக்கொண்டார் தாய்.

ஆனாலும், மகளை சென்னைக்கு அழைத்துச் செல்லமுடியாத நிலைமை! பின்னாளில்,  மகள் போட்ட முடிச்சை நள்ளிரவில் எழுந்து அவிழ்த்து, அதை தங்கை பத்மாவின் சேலையோடு முடிச்சுப் போட்டுவிட்டு கிளம்பிவிடுவார் சந்தியா, கனத்த மனதுடன் பிள்ளைகளுக்குத் தொடர் விடுமுறை  கிடைத்தால் கார் அனுப்பி அவர்களைச் சென்னைக்கு அழைத்துக்கொள்வார் சந்தியா. அப்படி ஒரு விடுமுறையில்தான் ஜெயலலிதா வின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. அதுவும் நள்ளிரவில்!
 
(அம்மு கதை அறிவோம்!)