Published:Updated:

மகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி!

மகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி!
பிரீமியம் ஸ்டோரி
மகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி!

முதல் பெண்கள்ஸ்ரீலோபாமுத்ரா

மகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி!

முதல் பெண்கள்ஸ்ரீலோபாமுத்ரா

Published:Updated:
மகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி!
பிரீமியம் ஸ்டோரி
மகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி!

கிராமப்புறப் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவே தன்னை அர்ப்பணித்து, இந்தியாவின் முதல் மகளிர் கூட்டுறவு வங்கியைத் தொடங்கியவர் சேத்னா விஜய் சின்ஹா. தன்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் மேம்பாட்டுத் திட்டங் களை விளம்பர வெளிச்சமின்றி செய்து வரும் இந்தச் சமூக சேவகியைச் சந்தித்தோம். அனுபவமும் தெளிவும் நிதானமும் அவர் வார்த்தைகளில் தெரிகின்றன.

மகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி!

‘`நான் மும்பைப் பெண். முதுகலைப் பட்டம் பெற்ற பின், ஜெயப்பிரகாஷ் நாராயணின் முற்போக்கு இயக்கத்தில் இணைந்து பணியாற்றினேன். அப்போது அறிமுகமான விவசாயி விஜய் சின்ஹாவைத் திருமணம் செய்துகொண்டேன். என் கணவர் மஹாராஷ்ட்ராவின் சதாரா மாவட்டத் தில் உள்ள மஸ்வாத் கிராமத்தைச் சேர்ந்தவர்.

திருமணத்துக்குப் பின் நகரத்தில் இருந்து கிராமத்துக்குக் குடியேறினேன். அங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதைக் கண்டேன். குறிப்பாக, பெண்களின் பிரச்னை களுக்குத் தீர்வு காண என்னால் இயன்ற பணிகளைச் செய்து வந்தேன்.

பஞ்சாயத்துத் தேர்தலில் மகளிருக்கு இட ஒதுக்கீடு செய்து சட்டம் நிறை வேறியதை நல்ல வாய்ப்பாகப் பயன் படுத்திக்கொண்டு, சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள பெண்களை ஊக்குவித்து, தேர்தலில் போட்டியிடச் செய்தேன். பலர் வெற்றியடைந்து தலைமைப் பொறுப்பை ஏற்றனர்’’ என்கிற சேத்னா, இது அந்தக் கிராமங் களில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது என்றும் கூறுகிறார். 

‘`அடுத்ததாக, மகளிர் சுயஉதவிக் குழுக் களுக்கு உதவி செய்வதற்காக ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்தினேன். விவசாயிகள், நெசவாளர்களின் தயாரிப்புகளை சந்தையில் நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்பதற்காக மும்பை போன்ற பெருநகரங்களில் கிடைக்கும் நவீன தொழில்நுட்பங்களை மகளிர் குழுவினருக்கு அறிமுகப்படுத்தி, பயிற்சி அளித்தேன். இதனால் பெண்கள் பொருளாதார தன்னிறைவைப் பெற்றனர்''  என்கிற சேத்னா,  வங்கிச் செயல்முறைகளையும் அந்த எளிய மக்களுக்குப் பழக்கப்படுத்தியிருக்கிறார். வங்கி ஊழியர்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே அனுப்பி பணம் வசூலித்து பாஸ்புக்கில் வரவு வைக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். வங்கிச்சேவை குறித்த தகவல்கள் பாமர மக்களையும் சென்றடைய வேண்டி ‘பிசினஸ் ஸ்கூல் ஆன் வீல்ஸ்’ என்கிற நடமாடும் பள்ளியை இயக்கியிருக்கிறார். இந்தியாவிலேயே முதன் முதலில் மகளிருக்கென `சேம்பர் ஆஃப் காமர்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி வணிக நலன்களுக்கு உறுதுணை புரிந்ததும் இவரே.

‘`கிராம மக்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி விவசாய நிலங்களை இழந்து அவதிப்படுவதைத் தடுக்க ‘மாந்தேஷி மகளிர் கூட்டுறவு வங்கி’யைத் தொடங்கினேன். தொழில் தொடங்க கடன், பள்ளி செல்லும் பெண்கள் சைக்கிள் வாங்க வட்டியில்லாக் கடன், செல்போன் வாங்கக் கடன் என திட்டங்களை வகுத்தேன். செல்போனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதற்கென ஆடியோ - வீடியோ நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்தேன்'' என்கிற சேத்னா எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் மைல்கல்தான். யேல் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் இவர் அறிமுகப்படுத்திய கிராமப்புற முன்னேற்ற உத்திகள் குறித்து ஆராய்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று ஆண்குழந்தைகளுக்குத் தாயான சேத்னா, சமூகப் பணிக்களத்துக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. யேல் பல்கலைக்கழக விருது, ராணி லஷ்மிபாய் புரஸ் கார் விருது, அசோகா விருது என்பனபோன்ற பல அங்கீகாரங்கள் இவரது கூட்டுறவு வங்கிக்கும் தொண்டு நிறுவனத்துக்கும் கிடைத்துள்ளன.

``பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து, காலத்துக்கேற்ற தொழில்நுட்பங்களைக் கற்கவைப்பதே எங்கள் கூட்டு முயற்சியின் வெற்றிக்குக் காரணம்’’ என்கிற சேத்னா விஜய் சின்ஹாவின் அடுத்த இலக்கு என்ன?

``மற்ற மாநிலங்களிலும் வங்கிக் கிளைகள் தொடங்கி, 2020-ம் ஆண்டுக்குள் பத்து லட்சத்துக்கும் அதிகமான மகளிருக்கு சேவை அளிக்க வேண்டும். இதை நோக்கியே எங்கள் பயணம் தொடர்கிறது'' என்கிறார் சேத்னா.

வாழ்த்துகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism