Published:Updated:

ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!
பிரீமியம் ஸ்டோரி
ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

பயணங்களின் ரசிகைநிவேதிதா லூயிஸ்

ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

பயணங்களின் ரசிகைநிவேதிதா லூயிஸ்

Published:Updated:
ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!
பிரீமியம் ஸ்டோரி
ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

ரின் ஹார்ட்... இருபத்தைந்து வயதே ஆன இளம் பிரெஞ்சுப் பெண். சென்னை நகரையும், அதன் தொன்மையையும், நதிகளையும், கரையோரத்து மக்களையும் ரசித்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். விரல்நுனியில் சென்னை குறித்த வரலாற்றுக் குறிப்புகளையும், நதியோர மானுடவியல், சமூகவியல் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்களையும் வைத்திருக்கும் ஆச்சர்ய மனுஷி! 

ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

பிறந்தது, வளர்ந்தது, குடும்பம்?

``பிறந்தது பிரான்ஸின் நார்மண்டி கடற்கரையோரம் உள்ள மிகவும் அழகான கிராமம். அம்மா அப்பா இருவரும் கணினிப் பொறியாளர்கள். ஒரு தம்பி. பதினாறு வயது வரை கிராமத்திலேயே வளர்ந்தேன். என் அத்தை ஒருவர் சீனாவில் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து சொல்லும் கதைகள், தூர தேசங்கள் மீதான ஈர்ப்பை அதிகரித்தன. பதினாறு வயதுக்குப்பின் என்னை சொந்த ஊரில் இருந்து இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் இருந்த வேறொரு ஊரின் பள்ளி விடுதியில் சேர்த்தார்கள். அதன் பின்புதான் எனக்கான தேடல் தொடங்கியது!''

என்ன படித்தீர்கள்?


``உங்கள் ஊரைப் போலத்தான் எங்கள் ஊரிலும்! சமூகவியலும் மானுடவியலுமே என் மனதுக்குப் பிடித்தவை. ஆனால், பொறியியல் படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என்று தாயும் தந்தையும் வற்புறுத்தியதால், டூர்ஸ் நகரப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். முதலில் மனம் லயிக்கவில்லை. பிறகு,   நகர்ப்புறத்திட்டமிடல் மீது கொஞ்சம் ஆர்வம் வந்தது. அதனுடன் தொடர்புடைய சமூகவியல், மானுடவியல் குறித்தும் படிக்க ஆசைப்பட்டேன். மாணவர் பரிமாற்றத் திட்டம் மூலம், இரண்டாம் ஆண்டில்தான் இந்தியா வர வாய்ப்பு கிட்டியது. ஆர்கஸ் எனும் மாணவர் பரிமாற்றத் திட்டம் இந்தியா மற்றும் பிரெஞ்சு அரசுகளுக்கிடையே  உள்ளது. அதில் 50% உதவித்தொகை கிடைக்கும்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

சென்னையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? அடுத்து என்ன திட்டம்?

``அதிக தூரம் பயணிக்க வேண்டும், புதிய நாடுகளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம்தான் காரணம். அப்போது பிரெஞ்சு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த திரிபுரசுந்தரி  (மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி) அறிமுகமானார். அதோடு, நதிகள் மற்றும் மக்களுக்கிடையேயான உறவு குறித்து ஆராய அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்குவது தெரிந்ததும், சென்னை வந்தேன். இதற்குப் பிறகு, சென்னையின் நதிகளையும், வேறு நாட்டின் நதி ஒன்றையும், அவற்றின் கரையோர நாகரிக பரிணாம வளர்ச்சிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய ஆசை. படிப்பு முடிந்த பிறகு சைக்கிளில் உலகைச் சுற்றி வர ஆசைப்படுகிறேன். நான் நிறைய கனவுகள் காண்பவள்!''

சென்னை உங்களைக் கவர்ந்ததா?

``இந்தியா வருவதற்கு முன்னரே அது குறித்து நிறையப் படித்துவிட்டேன். யானைகளும் பாம்புகளும் பாம்பாட்டிகளும் நிறைந்த நாடு என கற்பனை செய்திருந்தேன் (சிரிப்பு). இந்தியா மிகவும் மாசு நிறைந்த, அழுக்கான நாடு என்றே படித்திருந்தேன். இங்கோ, எல்லாமே தலைகீழ்! சென்னையும் அதன் மக்களும் மனதுக்கு மிகவும் பிடித்துப்போனார்கள். அன்பும் கருணையும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். வலிய வந்து உதவுகிறார்கள். `சென்னையும் அதன் நதிகளும், அவை சார்ந்த நாகரிக வளர்ச்சியும்' என்ற தலைப்பையே ஆய்வு செய்யத் தேர்ந்தெடுத்தேன்...''

அடையாறு, கூவம் - இரண்டில் உங்களைக் கவர்ந்த நதி எது?

``அடையாறை மிகவும் பிடிக்கும். கூவத்தின் கரையில் அதிகம் கோயில்களே எனக்குக் காணக் கிடைத்தன. அடையாறு மாறுபட்ட பல கோணங்களை அளித்தது.''

சென்னை குறித்த ஆய்வில் உங்களை மிகவும் பாதித்த கதை ஏதேனும் உள்ளதா?


``ஆம்... சைதாப்பேட்டையின் தோபிகாட். அடையாற்றின் கரையில் அமைந்த சென்னையின் இரண்டாவது பெரிய துணி துவைக்கும் இடம் அது. நான் வந்த புதிதில் அங்கே நேரில் சென்று படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால், இன்று அது இல்லை. காற்றில் கரைந்தாற்போல ஆகிவிட்டது. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகு அங்கிருந்தவர்களை செம்மெஞ்சேரியில் குடியமர்த்தியது அரசு. அவர்களுக்குப் போதிய வாழ்வாதாரம் தரப்படவில்லை, பெண்கள், அருகே இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வேலை தேடிக்கொள்கிறார்கள். ஆண்கள் நிலை மிகவும் மோசம். கடன் வாங்கித் திருப்பித் தரமுடியாமல் காணாமல் போகிறார்கள். தவறான வழிகளில் செல்கிறார்கள். அவர்களைக் குறித்த அக்கறை யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கத்தான் இடம் கொடுத்தாயிற்றே என்று அரசு எண்ணுகிறது. ஆனால், வாழ வழி?''

ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

மொழி உங்களுக்குத் தடை போடுகிறதா?

``மாண்டரின், ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரெஞ்சு, ஆங்கிலம் வரிசையில் இப்போது தமிழும் கற்றுக்கொண்டேன். யாரிடம் என்று நினைக்கிறீர்கள்? ஆட்டோக்காரர்களிடம்! முதலில் கற்றது மூன்றே வாக்கியங்கள்... `லெஃப்ட்டுக்காப் போ, ரைட்டுக்காப் போ, ஸ்ட்ரைட்டாப் போ…' (சிரிக்கிறார்).  இப்போது தமிழ் போர்டுகளை என்னால் படிக்க முடியும்!''

ஒரு பெண் - அதிலும் வெளிநாட்டவர் என்பதால், ஏதேனும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா?

``சென்னைவாசிகள் அன்பானவர்களே. ஒரு சில கசப்பான அனுபவங்களும் உண்டு. நகரத்துப் பேருந்துகளில் பாலியல் தொல்லைகள் அதிகம். அதற்குப் பயந்தே ஸ்கூட்டி வாங்கி இருக்கிறேனாக்கும். காலில் மெட்டி வேறு போட்டுக்கொள்கிறேன்... `என் பாய் ஃப்ரெண்டு வீட்டில் இருக்கிறான்' என்று ஆட்டோக்காரர்களிடம் கதை சொல்லிக் கொள்கிறேன்!'' (சிரிக்கிறார்).

ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

தனிமைப் பயணங்கள் கடினம் தானே?

``பயணங்களை நான் மிகவும் விரும்பு கிறேன். இந்தியாவிலேயே இமயமலை, அந்தமான் தீவுகள், கேரளா, மும்பை, டெல்லி போன்ற இடங்களுக்கும், சீனா, மொரோக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், தாய்லாந்து முதலிய நாடுகளுக்கும் தனியாகப் பயணித்து இருக்கிறேன். வாழ்க்கையைப் புதிய பரிணாமத்தில் பார்க்க எனக்கு இந்தப் பயணங்கள் உதவு கின்றன. மனதைரியமும் துணிச்சலும் தேடலும் இது போன்ற பயணங்களால் ஏற்படுகின்றன.''

டீமானிட்டைசேஷன் காலத்தில் இன்னலுக்கு ஆளானீர்களா?

``நவம்பர் 8-க்குப் பின், மூன்று வாரங்கள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்காக பாண்டிச்சேரி செல்லவேண்டி இருந்தது. வங்கியில் பணம் எடுக்க முடியவில்லை, வெறும் 115 ரூபாயில் பயணம் கிளம்பியாயிற்று. பேருந்துக்கு நூறு ரூபாய் கொடுத்து நிமிர்ந்தால், கையில் இருந்த பதினைந்து ரூபாய்க்கு செல்ல வேண்டிய இடத்துக்கு ஒரு ஆட்டோகூட கிடைக்கவில்லை. ஏ.டி.எம் எதுவும் இயங்க இல்லை. கார்டைத் தேய்க்க முடிந்த கடைகளில் மட்டுமே சாப்பிட்டேன். பின்னர் நண்பர் ஒருவரின் உதவியுடன் கொஞ்சம் பணம் கையில் கிடைத்து சென்னை வந்து சேர்ந்தேன்! கொஞ்சம் பயங்கரமான அனுபவம்தான் அது!''

ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

சென்னையில் பாதுகாக்கப்படவேண்டிய புராதன சின்னம் எது என நினைக்கிறீர்கள்?

``ஒன்று அல்ல... பல! சென்னையின் நீர்நிலைகள். இங்கு பலருக்கு அடையாறு என்ற நதி இருப்பதே தெரியவில்லை. பக்கிங்ஹாம் கால்வாயைத் தெரியவில்லை. சென்னையில் எங்கு நீர் இருந்தாலும், அது `கூவம்' என்றே அழைக்கப்படுகிறது! சென்னை நகரத்து  மாஸ்டர் ப்ளானில் அடையாறு நதி `ரெக்ரியேஷன் ஏரியா' (பொழுதுபோக்கு இடம்) என்றே குறிப்பிடப்படுகிறது. அப்படியானால், அதன் முக்கியத்துவம் என்ன, அதன் நிலை என்ன என்பது உங்களுக்குப் புரிகிறது அல்லவா? நீர்நிலைகளைப் பாதுகாத்தல் மிகமிக அவசியம். நீர்நிலைகள் மாசுபடுவது பற்றியும், அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் என் ஆய்வுமுடிவுகள் வாயிலாக அரசுக்குத் தகவல்கள் பகிர்வேன்...''

ஆய்வு தவிர என்ன செய்கிறீர்கள்?


``இங்கு வந்த முதல் வருடம் முழுக்கச் சுற்றியாயிற்று. ஒரு இடம் மிச்சம் வைத்ததாக நினைவில்லை. இப்போது ஹெரிட்டேஜ் நடைகள், பயணங்கள் என சுவையான நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அவை புது விதமான அனுபவத்தைத் தருகின்றன…''

இந்தியப் பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?

``சுதந்திரமாக இருக்கப் பழகுங்கள். நிறைய பயணப்படுங்கள். வாழ்க்கை குறித்த தேடல் உங்களிடம் எப்போதும் இருக்கட்டும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism