Published:Updated:

பேசுங்கள்... பிரச்னைகள் தீரும்! - விவாகரத்தை வெல்லலாம்!

பேசுங்கள்... பிரச்னைகள் தீரும்! - விவாகரத்தை வெல்லலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பேசுங்கள்... பிரச்னைகள் தீரும்! - விவாகரத்தை வெல்லலாம்!

டாக்டர் சித்ரா அரவிந்த்

பேசுங்கள்... பிரச்னைகள் தீரும்! - விவாகரத்தை வெல்லலாம்!

டாக்டர் சித்ரா அரவிந்த்

Published:Updated:
பேசுங்கள்... பிரச்னைகள் தீரும்! - விவாகரத்தை வெல்லலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பேசுங்கள்... பிரச்னைகள் தீரும்! - விவாகரத்தை வெல்லலாம்!

திருமணம் எனும் அருமையான பந்தம் இன்றைய காலகட்டத்தில் கேள்விக்குறியாக மாறிவருகிறது என்பதை, அதிகரித்து வரும் விவாகரத்துகளே பறைசாற்றுகின்றன. ஆனால், ``அண்மைக்கால விவாகரத்துகளுக்குச் சொல்லப்படும் காரணங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன'' என்கிறார் மனநல ஆலோசகர் டாக்டர் சித்ரா அரவிந்த். இதுகுறித்த மனவியல் காரணங்களையும், சரிசெய்யும் வழிமுறைகளையும் முன்வைக்கிறார் அவர். 

பேசுங்கள்... பிரச்னைகள் தீரும்! - விவாகரத்தை வெல்லலாம்!

``முன்பெல்லாம் விவாகரத்துக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். கருத்து வேறு பாடு, ஒவ்வாமை, திருமணம் தாண்டிய உறவு, குடி - போதைப் பழக்கம், உடல்-மனம்-பாலியல் ரீதியான வன்கொடுமை, நம்பிக்கைத் துரோகம், பணம், தன் கடமையைப் புறக்கணிப்பது, மனநலக் கோளாறு… இப்படி! இப்போதோ, ‘எனக்கு முன்புபோல அவள்மீது காதல் இல்லை', ‘அவள் மிகவும் குண்டாகிவிட்டாள்’, ‘என்னை அவா் புரிந்துகொள்ளவே  இல்லை', ‘எனக்கு வேறு ஒருவரைப் பிடித்திருக்கிறது', ‘நான் சந்தோஷமாக இல்லை' எனக் காரணங்கள் புதுமையாக இருக்கின்றன. சிறிது சிறிதாக, திருமணம் எனும் உறவின் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே போவதைத்தான் இவை பிரதிபலிக்கின்றன.

முன்பெல்லாம், கூட்டுக்குடும்பம், அதன் மேலுள்ள மதிப்பு, அறநெறிகள், பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்துப் போவது போன்ற விஷயங்கள் திருமண பந்தத்தை ஒட்டவைத்துக்கொண்டிருந்தன. இப்போதைய உலகமயமாக்கல், நவீன மயமாக்கல் மாற்றங்கள் சுயநலத்தையும் கலாசாரச் சீா்கேடுகளையுமே அதிகம் கற்றுக்கொடுத்துள்ளன. மாறிவரும் அறநெறி முறைகள், தாமதமாகத் திருமணம் செய்து கொள்வது (அதிகரித்துக்கொண்டே செல்லும் திருமண வயது - முன்பெல்லாம் 18… 22… இப்போது 30-க்கு மேல்) போன்ற மாற்றங்கள் ஏற்படுத்தும் தடுமாற்றங்கள் திருமணம் குலைவதற்குக் காரணமாகி வருகின்றன.

இப்போது எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போவதால், திருமண வயதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆண்களைப் போலவே பெண்களும் வேலையில் நிலையானதற்குப் பின்னரே திருமணம் குறித்து யோசிக்கின்றனா். `ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? சோ்ந்து வாழ்ந்த பிறகு, திருமணம் பற்றி யோசிக்கலாமே' என மேல்நாட்டுக் கலாசாரங்களையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற ஆசைப்படுகின்றனர். அந்தந்த நாட்டின் சூழ்நிலைக்கேற்ப சில விஷயங்கள் சரிப்படும்; அவா்களின் குணநலங்களுக்கு சாத்தியப்படவும் கூடும். ஆனால், நமக்கு இது ஏற்றதுதானா, இதன் விளைவுகளைச் சந்திக்க முடியுமா என எதையுமே சிந்திக்காமல், இப்படிப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகின்றனா். அதில் பலர் மனநிம்மதி இழந்து, தோல்வி காண்பதே நிஜம்.

பல விவாகரத்துகளின் பின்னே, வெளியே தெரியாத சிறுசிறு மனநலப் பிரச்னைகள் இருக்கின்றன என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கலாம்.  உதாரணத்துக்கு... சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையால் அல்லது விரும்பத்தகாத பாலியல் அனுபவங்களால்... அல்லது பாலியல் பற்றி யோசிப்பதே குற்றம் என கெடுபிடியாக வளர்க்கப்பட்டிருந்தாலும்கூட ஒருவா் தாம்பத்யத்தை அடியோடு வெறுக்கலாம். அல்லது அருவருப்பாக நினைக்கலாம். கூடவே, தங்கள் துணை (கணவன்/மனைவி) மீதும் ஒருவித வெறுப்போடு இருக்கக்கூடும்.  இவா்கள், திருமண உறவில்,  இணையின் இயல்பான பாலியல் தேவைகளைப் புறக்கணித்து, அவரை யும் வெறுக்க நேரிடலாம். துணையை விட்டு விலகவும் நேரிடலாம்.
சிறுவயதிலிருந்தே, தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கணவன்-மனைவி தகராறைப் பார்த்து வளா்ந்த குழந்தைகள், திருமண உறவு மீது நம்பிக்கையில்லாமல் அதை அணுக நேரிடும். இதனாலும் பிரச்னைகள் அதிகமாகலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேசுங்கள்... பிரச்னைகள் தீரும்! - விவாகரத்தை வெல்லலாம்!

பொதுவாக சில பெண்கள், சிறுவயதிலிருந்தே ஒருவித மனநலப் பிரச்னையால், யார் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். தங்களை யாரேனும் ஏமாற்றிவிடுவார்கள் அல்லது தன்னந்தனியே விட்டுவிட்டுச் செல்வார்கள், எங்கும் பாதுகாப்பில்லை எனும் உணா்வுடனே வளா்ந்துவிடுவதுண்டு.  இப்படிப்பட்டவா்கள், பெரும்பாலும்,  தங்களின் எண்ணங்கள் போலவே, நல்லவர்களைக் காட்டிலும் தங்களைத் துன்புறுத்தும் அல்லது கைவிடும் நபா்களால் ஈர்க்கப்படுவார்கள். அவர்களையே காதலித்திருப்பார்கள். அவா்களும், அப்பெண் நினைத்ததுபோலவே கைவிட்டு விடுவதுண்டு. அப்படிப்பட்ட பெண்கள் திருமணத்துக்குப் பின்னா், கணவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். சந்தேகக் கண்ணுடனேயே பார்ப்பார்கள். முழுமனதுடன் கணவனை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். இவ்வித குணாதிசயங்கள், ஆண்களுக்கும் பொருந்தும்.

விவாகரத்து என்பது பெரியவா்கள் நிச்சயித்த திருமணம், காதல் திருமணம் என எவ்வித வித்தியாசமும் இல்லாமல், குடும்பத்தை அலைக்கழிக்கும் ஒரு நோயாகவே மாறிவருகிறது.

`சந்தோஷம் இல்லை... பிடிக்கவில்லை...சமுதாயத்துக்காக எங்கள் வாழ்வை ஏன் வீணடிக்க வேண்டும்? இன்றைய நொடி வாழ்வதற்கே' என இன்றைய பொழுதை மட்டுமே சிந்திக்கும் இளைய சமுதாயத்தினா் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.  யாரும் உங்களை சகித்துக் கொண்டோ/பொறுத்துக்கொண்டோ வாழச் சொல்லவில்லை; `திருமண உறவு' என்பது மகத்துவமான விஷயம் என்பதை உணா்ந்தாலே போதும்... வாழ்க்கையை உங்கள் துணையுடன் சந்தோஷமாக நகா்த்துவதற்குப் பல வழிகள் தாமாகவே பிறக்கும்;  இந்த உறவை எப்படி நிலைநிறுத்தலாம் என்னும் வழியைத் தேடும் உங்கள் மனம் அதற்கான விடையையும் கண்டுபிடித்துவிடும். அப்படி நினைப்பதை விட்டுவிட்டு, தப்பித்துச் செல்ல வழியைத் தேடினால், அதற்கு விவாகரத்தே ஒரே வழியாக அமையும். ஆனால், விவாகரத்துக்குப் பின் மறுபடியும் வாழ்வில் வசந்தம் வருமா என்பது மில்லியன் டாலா் கேள்வியே! நிலைகுலையும் திருமண வாழ்வை சரிசெய்து, ஒழுங்கான பாதையில் பயணிப்பது அவ்வளவு எளிதல்லதான்! அதை மறுக்கவில்லை. ஆனால், இது முடியாத ஒன்றல்ல.

திருமண உறவு அப்படி என்ன நன்மை தருகிறது? எதற்கு இவ்வளவு தியாகம் செய்ய வேண்டும்?  ஏன் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்? உண்மையில், அதன் நன்மைகள் எண்ணிலடங்கா! மனிதன் என்பவன் யாரையேனும் சார்ந்தே வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. தனித்து வாழ்வது, ஒருவித பாதுகாப்பற்ற உணா்வை ஏற்படுத்தி, விரைவில் மனநலத்தையும் பாதிக்கிறது. இது, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கும் ஆளாகச் செய்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனின் பல்வேறு அடிப்படை உளவியல் தேவைகளான அன்பு, உதவி, உறுதுணை, தன்னம்பிக்கை, நமக்காக ஒருவா் இருக்கிறார் எனும் ஆறுதல் மற்றும் பாலியல் தேவை போன்ற பல விஷயங்களை தாம்பத்யமே பூா்த்தி செய்கிறது.  எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைச் செல்வத்தை அளித்து, அதற்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய மகத்தான கடமையையும் நிறைவேற்ற நிலையான பந்தம் மிக மிக முக்கியம்.  ஏனெனில், முறிந்து போன திருமண உறவுகளில் பாதிக்கப்படும் முக்கியமான நபா் குழந்தை(கள்)தான். இச்சூழலில் சிக்கும் குழந்தைகள், பல்வேறு மனநலப் பிரச்னைகளுக்கு ஆளாவதாகவும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையின்றித் தோல்வியடைவதாகவும் பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

பேசுங்கள்... பிரச்னைகள் தீரும்! - விவாகரத்தை வெல்லலாம்!தோல்வியடையும் திருமணங்கள் சமூ கத்திலும் நிம்மதியற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன. திருமணத்தை வெறுக்கும் சமுதாயமாக மாற்றிவிடவும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான உறவான கணவன்-மனைவி உறவைப் பாதுகாப்பது எப்படி?

மனமிருந்தால் மார்க்கம் உண்டு. உறவைப் பலப்படுத்தத் தீர்க்கமான முடிவு எடுத்து விட்டால், தன்னை அதில் அர்ப்பணித்து, நிச்சயம் விவாகரத்தைக் குறைக்க முடியும். இதில் சந்தேகமே இல்லை.

ஒரு சிலா், தங்கள் திருமணத்தில் ‘பொருத்தம்‘ இல்லை என எண்ணுவதுண்டு. அப்படிச் சொல்பவர்கள் பொதுவாக வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்துகொண்டவர்களாக இருப்பார்கள். உண்மையில், பொருத்தம் என்பது 100% யாருக்கும் அமையாது. சந்தோஷமான தம்பதிகளைக் கேட்டுப் பார்த்தால்கூட, அவா்களின் விருப்பு வெறுப்புகள் 80 சதவிகிதத்துக்கும் மேலாகவே வித்தியாசப்படுவதுண்டு. மனப்பொருத்தம் இருந்தால், எந்தக் காதலும் விவாகரத்தில் முடியக் கூடாதல்லவா? அப்படியென்றால் எந்த விஷயம், இரு மனதையும் இணைக்கிறது?  காதல் என்பது ஒருவித உணா்ச்சி. அது மாறுவதற்குச் சாத்தியமுண்டு; ஆனால், செடியை வளா்த்து மரமாக்குவதுபோல, புதிதாக முளைத்துள்ள காதலை, வெற்றிகரமான திருமண வாழ்வாக மாற்றுவதற்கு, உறவின் மீது வைக்கப்படும் அசைக்க முடியாத ‘நம்பிக்கை', ‘அா்ப்பணிப்பு', ‘சகிப்புத்தன்மை', ‘விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை', ‘அறநெறி' (ethics) என்ற உரங்கள் அவசியம்.

கருத்து வேறுபாடு இல்லாத மனிதா்களே இல்லை. கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், அவற்றைத் தீா்த்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், மனதில் துணையைப் பற்றிய எதிர்மறை எண்ணத்தை வளா்த்துக் கொண்டே போவதுதான் மிகவும் தவறு! பேசித் தீா்க்கமுடியாத பிரச்னை என்பதே கிடையாது. ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றாலோ, கருத்து வேறுபாடு என்றாலோ, அதைச் சண்டை போட்டுத்தான் சரிசெய்ய வேண்டும் என்பதில்லை. கோபம் வரும்போது, பேசாமல் வாயை மூடிக்கொண்டு, பிறகு, நேரம் பார்த்து, தங்கள் கருத்தை, மனக்கசப்பை வெளிப்படுத்தலாம். அப்படிச் செய்வதால், பிரச்னை பெரிதாகாமல் முளையிலேயே கிள்ளிவிட முடியும். அதோடு, ஒருவித புரிதலும் இணக்கமும் தம்பதியிடையே ஏற்படும்.

யாரும் யாருடைய குணத்தையும் மாற்ற முடியாது என்பதே உண்மை. தன்னைத் தானே மாற்றிக்கொள்வதன் மூலம், மற்றவரின் குணத்தை நிச்சயம் மாற்றிவிட முடியும் என்பதில் ஐயமில்லை. உதாரணத்துக்கு, கணவன் நம்மைப் பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்கும் மனைவி, அது கிடைக்காவிட்டால், எரிந்து எரிந்து விழக் கூடும். அல்லது மனதில் வைத்துக்கொண்டு அமைதியாக சோகமாக இருக்கக்கூடும். அதுவே, நம் கணவா் நம்மை விரும்புகிறார் எனத் தீா்க்கமாக நம்பி, எதிர்பார்ப்பை நிறுத்திக்கொண்டால், தானாகவே கணவனின் கவனம், மனைவி மீது திரும்பும்.

ஆரோக்கியமான பாலியல் உறவு என்பது நிலையான திருமண உறவுக்கு ஆணிவோ். அதில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொண்டாலே, பாதி பிரச்னைகள் தீா்ந்து விடும். ஏனெனில், சண்டை போடும்போது, எப்படி சந்தோஷமாக உறவில் ஈடுபட முடியும்?  அன்றைய பிரச்னையை, படுப்பதற்கு முன்னா் பேசித் தீா்த்துவிட்டு, சந்தோஷமாக பேசிவிட்டுப் படுத்தாலே திருமண உறவு கெட்டியாகிவிடும்.

தினமும் ஒருவேளையாவது, ஒன்றாக உணவருந்த வேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தை (செடிகளுக்குத் தண்ணீா் ஊற்றுவது, சமைப்பது, விளையாடுவது) ஒன்றாகச் செய்து, அதைப் பழக்கப்படுத்திவிட வேண்டும்.

தம்பதிக்கிடையே எவ்வித ஈகோவும் இல்லாமல் பழக வேண்டும். யார் பெரியவர், யார் அதிகம் சம்பாதிப்பவர் போன்ற சண்டைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கணவன் - மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் தகுந்த மரியாதை அளிப்பது மிக மிக முக்கியம். பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியம். இருவரும் சரிசமம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி எண்ணும்போது, தம்பதிக்கு இடையே சண்டையோ, மனக்கசப்போ ஏற்படாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய முடிவுகளைச் சோ்ந்தே எடுப்பது மிகவும் அவசியம். அதுபோலவே, குழந்தை வளா்ப்பிலும், குழந்தையின் நலன் கருதி ஒரே மாதிரி முடிவுகளை எடுப்பது நல்லது. எக்காரணத்தைக்கொண்டும் அவா்களை யாருடனும் ஒப்பிடவே கூடாது. குறிப்பாக பெண்கள் தங்கள் கணவனைத் தன் பெற்றோர் வீட்டுச் சொந்தங்களுடன் ஒப்பிட்டு பேசவே கூடாது. அது நிம்மதியையும் உறவையும்தான் கெடுக்கும்.

திருமணத்துக்குப்பின் பிறருடன் ஈா்ப்பு ஏற்படுவது இயல்பே. ஆனால், அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லாமல், மனக்கட்டுப்பாடுடன், ஒருவருக் கொருவா் உண்மையாக நடந்து கொண்டால், வாழ்வு சிறக்கும். நண்பா்கள் வட்டாரம், அறநெறிக் கோட்பாடுகளை உடைக்கும் வண்ணம் அறிவுறுத்தினாலும், தனக்கு என்ன வேண்டுமென தெளிவாக ஒருவா் இருந்துவிட்டால் துன்பமே இல்லை. அதை விட்டுவிட்டு, சிறிதுநேர இன்பத்துக்காகத் தவறு செய்ய ஆரம்பித்தால், அது பொய், புரட்டு, என தொடர்ந்து, மனநலக் கோளாறு, விவாகரத்து, கொலை, தற்கொலை என மோசமான விளைவுகளுக்குள் தள்ளும்.

தம்பதிக்கிடையே பிரச்னை என்றால், அதைக் கூடியமட்டும், அவர்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துவிடுவது நல்லது. பெற்றோர் வரை எடுத்துச் சென்றால் அவர்களின் (அன்பெனும்) தலையீட்டினாலேயே, பிரச்னை பல மடங்கு பெரிதாக்கப்பட்டு, சரிசெய்ய முடியாத அளவுக்கு விரிசலாகி, மனக்கசப்பு அதிகமாகி, விவாகரத்தில் முடியக்கூடும். பிள்ளைகள் நலன் கருதும் பெற்றோராலேயே பல இடங்களில் அவர்களின் வாழ்வு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.

பெரும்பாலான விவாகரத்துகளுக்கு மனநலப் பிரச்னைகளும், பாலியல் விருப்ப வேறுபாடுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  இவ்விதப் பிரச்னைகள் இருந்தால், மனநிறைவான திருமண வாழ்வு அமைவது கடினம். இதற்கு, மனநல ஆலோசகரை அணுகுவது மிகவும் நல்லது.

தொலைநோக்குப் பார்வையுடன் வாழ்க்கை யைச் செலுத்தி இருமனம், என்றைக்கும் திருமணம் எனும் அருமையான பந்தத்தில் நிலைத்து வாழ, சில திறன்களை வளா்த்துக் கொள்வது அவசியம். பிரச்னையைச் சமாளிப் பது எப்படி?  சண்டை வராமல் பேசுவது எப்படி? உணா்ச்சிகளைச் சமாளிப்பது எப்படி? பிற பிரச்னைகள்,  மனஉளைச்சல்கள் (மாமியார் - மருமகள் உறவு, அலுவலகப் பிரச்னைகள், பணப் பிரச்னைகள்) திருமண உறவை பாதிக்காமல் சமாளிப்பது எப்படி?  நம்பிக்கையை ஏற்படுத்தி, வளா்ப்பது எப்படி? இவைபோன்ற திறன்களைக் கற்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே நன்மை பயக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism