Published:Updated:

வாழ்வை மாற்றிய புத்தகம் - உழைப்பே அழகு!

வாழ்வை மாற்றிய புத்தகம் - உழைப்பே அழகு!
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்வை மாற்றிய புத்தகம் - உழைப்பே அழகு!

ஓவியா, பெண்ணியச் சிந்தனையாளர்ஆர்.வைதேகி - படம்: ப.சரவணகுமார்

‘`என் வாழ்க்கையில் புத்தகங்களுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புத்தகத்தின் பங்கு இருந்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு புத்தகம் என்றால், அது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’. உலகப்புகழ் பெற்ற நூல். வரலாற்று ஆசிரியரான ராகுல் சாங்கிரித்யாயன் (ராகுல்ஜி) எழுதியது. சமுதாய வரலாறு பற்றி எனக்குச் சொல்லிக்கொடுத்த முதல் நூலாகவே இதைப் பார்க்கிறேன்.

வாழ்வை மாற்றிய புத்தகம் - உழைப்பே அழகு!

திராவிட இயக்கக் குடும்பத்தில் வந்தவள் என்பதால், எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. பெரியாரின் கருத்துகள் எனக்கு வாழ்க்கையாகவே உட்புகுந்தவை. 16 வயதில் இப்படியொரு நூலை மிகச்சரியாக புரிந்துகொள்வதற்கான களம் அமைத்துக்கொடுத்ததும் அந்த பெரியார் சிந்தனைதான்.

குடும்ப அமைப்பிலும் மத அமைப்பிலும்தான் குழந்தைகள் வளர்கிறார்கள். பள்ளிக்கூடம் உள்பட அப்படி ஓர் அமைப்புதான் குழந்தையின் சிந்தனையைச் செதுக்குகிறது. இப்படித்தான், நம்மை அறியாமலேயே சில விஷயங்களை உள்வாங்கிக்கொள்கிறோம். குடும்பத்தில் இருந்து தொடங்கியே சமுதாயத்தைப் பார்க்கிறோம். `என்  குடும்பம், என் ஊர்' என்றுதான் குழந்தையின் பார்வை கட்டமைக்கப்படுகிறது. இந்தப் புத்தகமோ, சமுதாயத்தில் இருந்து குடும்பம் எப்படி உருவானது என்பதை மிக எளிமையான நடையில் சிறுசிறு கதைகள் மூலம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் சொல்கிறது.

நூலின் தொடக்கத்தில், நமது சமூகம் தாய்வழி சமூகமாக இருந்து தந்தைவழி சமூகமாக எப்படி உருமாறியது என்கிற விஷயம் பல்வேறு கதைகள் மூலம் காட்சிகளாக விரிகின்றன. பின்னர், பெண்ணின் தலைமையில் இருந்த ஆதிமனித சமூகம் ஆணின் தலைமைக்கு மாறியிருக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் படித்த அதே வயதில்தான், ‘குடும்பம் தனிச்சொத்து அரசு’ என்கிற புத்தகத்தைப் படிக்க முயற்சி செய்து தோற்றுப் போயிருக் கிறேன். பத்து பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அவ்வளவு கடினமான மொழிநடை. அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட அதே விஷயங்களைத் தான், `வால்காவிலிருந்து கங்கை வரை’யில் கதைகளாக மாற்றிக்கொடுத்திருக்கிறார் ராகுல்ஜி.

இந்நூலைப் படித்த பிறகு சமூகம், குடும்பம், ஆண்/பெண், காதல், போர் பற்றிய பிம்பங்கள் எல்லாம் அழகான மாற்றங்களுக்கு உள்ளாயின. அதன்பிறகு சமுதாயத்தை நான் வேறொரு விதமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். `எதையும் மாற்ற முடியும்' என்கிற நம்பிக்கையை இந்த நூல் தருகிறது. `சமூகம் என்பது படைக்கப்பட்டது அல்ல... பரிணாமம் பெற்றது' என்பது புரிந்தது. வாழ்க்கையில் நான் நன்றிக்கடன் பட்ட விஷயங்கள் என்கிற பட்டியலில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகத்துக்கு முக்கிய இடம் உண்டு.

புத்தகத்தில் என்னை ஈர்த்த பகுதிகள் எனச் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதையின் தொடக்கம் பிரமாதமானதாக இருக்கும். கூட்டத் தின் தலைமையை ஏற்பது யார் என தாய்க்கும் மகளுக்கும் இடையே ஒரு போராட்டத்துடன்தான் கதையே தொடங்கும். அதில் தாயை, மகள் கொன்றுவிட்டுத் தலைமையைப் பிடிப்பாள். பெண்ணின் தலைமை என்கிறபோது அநியாயங்களே நடப்பதில்லை எனச் சொல்வதாகப் பலரும் புரிந்துகொள்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. எந்தப் பாலினத்தின் கையில் இருந்தாலும் ஆதிக்கம் என்பது தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்தப் புத்தகத்தில் என்னை பிரமிக்கவைத்த இன்னொரு இடமும் உண்டு. அழகை ஆராதிக்கிற மனநிலை மனிதர்களுக்கு அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதைச் சொல்வதாக ஒரு கதை வரும். அதில் பேரழகியான ஒரு பெண், தான் முதுமை அடைந்தால் தன் அழகு போய்விடுமோ என யோசிக்கிறாள். அதற்காகத் தற்கொலை செய்து கொள்கிறாள். `என் காதலனின் மனதில் நான் எப்போதும் இதே உருவத்துடன் இருப்பேன்' என்று சொல்லிவிட்டு சாகிறாள். இது ஏற்புடைய கருத்தில்லை என்றாலும் எனக்குப் பிரமிப்பைக் கொடுத்தது என்று சொல்வேன்.

பெண்ணின் அழகைப் பற்றிப் பேசும் பல இடங்கள் இந்தப் புத்தகத்தில்  உண்டு. அழகாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பில் உடல் உழைப்பில் இருந்து விலகி இருப்பார்கள். அதனால் அவர்களுடைய கைகள் மிருதுவாகிவிடும். ஒரு பெண் தன் காதலனிடம், ‘இந்தப் பெண்கள் கைகள் மிருதுவாக வேண்டும்  என்பதற்காக உழைப்பே இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களது கைகள் பலமே இன்றி அசிங்கமாகக் காணப்படுகின்றன’ என்று சொல்வாள். அதாவது ஒரு பிரிவினர் எதை அழகு என நினைத்தார்களோ, அதற்கு நேர் மாறான கருத்தை முன்வைப்பாள் அந்தப் பெண்.

நூலின் முடிவில் இப்போதைய அரசியலைப் பற்றிய பேச்சும் இருக்கும். காந்தியின் அஹிம்சைத் தத்துவம்  சரியானதா என்பது பற்றியும் இந்திய அரசியல் அமைப்பு பற்றிய திறனாய்வு பற்றியும் பேசப்பட்டிருக்கும்..

புதிதாக வாசிக்கத் தொடங்குகிற பிள்ளைகளுக்கு நான் பரிந்துரைக்கிற புத்தகங்களில் இந்தப் புத்தகம் முக்கியமானது. இதைப் படித்தால்தான் சமூகப் பரிணாமம் பற்றிய சிந்தனை கிடைக்கும் எனச் சொல்லிப் படிக்க அறிவுறுத்துகிறேன்...’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz