Published:Updated:

கல்விச் சேவையில் காவல் துறை!

கல்விச் சேவையில் காவல் துறை!
பிரீமியம் ஸ்டோரி
News
கல்விச் சேவையில் காவல் துறை!

ஆச்சர்யம்பாலு சத்யா - படங்கள்: பா.காளிமுத்து

ட்யூஷன்... பள்ளிச் சேர்க்கைக்கு அடுத்தபடியாக, பிள்ளைகளுக்காகப் பெற்றோரைப் பெரிதும் கவலைப்படுத்துகிற உளவியல் பிரச்னை இதுதான். `சயின்ஸுக்கு எங்கே சேர்க்கலாம்?’, `யார் நல்லா மேத்ஸ் சொல்லிக் கொடுக்குறாங்க?’ என அலைகிறவர்களை மிரளச்செய்வது, அதற்கான கட்டணம்தான். `டென்த்துக்குத்தான் எடுப்போம். அதுலயும் மேத்ஸ் சப்ஜெக்ட் மட்டும்தான். டென் தௌசண்ட் பெர் இயர்...’ எனப் பேரம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். மாதம் ஒரு சப்ஜெக்ட்டுக்கு ஐந்நூறு தொடங்கி, ஆயிரம் ரூபாய் வரை வகுப்புக்கேற்ப வசூலிக்கிறவர்களும் உண்டு. இவர்களுக்கு மத்தியில், வித்தியாசமான ட்யூஷன் சென்டர்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படித்தான், சென்னையின் ஓர் இடத்தில் 6-ம் வகுப்பு தொடங்கி, ப்ளஸ் டூ வரை படிக்கும் மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்கிறார்கள்... அதுவும் இலவசமாக! முக்கியான ஒரு தகவல்... இதை நடத்துவது காவல் துறை!

கல்விச் சேவையில் காவல் துறை!

சென்னை அரும்பாக்கம் K-8 காவல் நிலையத்துக்கு எதிரிலேயே இருக்கிறது `காவல் சிறார் மற்றும் மகளிர் மன்றம்’. மாலை 6 மணிக்கு உள்ளே நுழைகிறார்கள் மாணவர்கள். 9, 10, 11, மற்றும் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்குத் தனித்தனி அறைகள். சுத்தமான மார்பிள் தரை, அமைதியான சூழல், கண்காணிக்கவும் கற்றுத்தரவும் ஆசிரியர்கள்... அத்தனை மாணவர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கிறார்கள் என்பதால் பாதுகாப்புக்கு உத்தரவாதம்.
 
``உமா, அங்கே என்ன பேச்சு... பாடத்தைப் படிக்காம?’’ - ஒரு தனி அறையில் மானிட்டரில் மாணவர்களைக் கண் காணித்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தி குரல் கொடுக்கிறார். அடுத்த நிமிடம் `கப்சிப்’.
 
``குற்றப்பின்னணி உள்ள பெற்றோரின் குழந்தைகளின் படிப்பு கெட்டுப் போயிடக் கூடாதுங்கற நல்ல நோக்கத்துல 15 வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிக்கப்பட்டது காவல் சிறார் மற்றும் மகளிர் மன்றம். ஆனா, அந்த மாதிரி இருக்குற மாணவர்கள் இங்கே 10 சதவிகிதம் தான் இருப்பாங்க. மத்தபடி 90 சதவிகிதம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்கள்தான். தனியார் பள்ளியில் படிக்கிற மாணவர்களும் உள்ளனர். சென்னையில் மொத்தம் 67 போலீஸ் ஸ்டேஷன்களில் இந்த மன்றம். ஆரம்பிக்கப்பட்டது. இப்போ சென்னையில் 115 இடங்கள்ல ட்யூஷன் நடக்குது...’’ - இப்படி கிருஷ்ணமூர்த்தி கூறினாலும், `சென்னையிலேயே மிகவும் ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோடும் தொடர்ந்து செயல்படுவது அரும்பாக்கத்தில் உள்ள காவல் சிறார் மற்றும் மகளிர் மன்றம்தான்’ என்று இப்பகுதி மக்கள் பாராட்டுகிறார்கள்!

6, 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் மட்டும்தான் ட்யூஷன். 10, ப்ளஸ் டூ என அரசு பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வார நாள்களில் காலை 6 முதல் 7 மணி வரை, மாலையில் 6 மணி முதல் 8.30 மணி வரை வகுப்புகள். ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் 6 மணி முதல் 7.30 மணி வரை; பிறகு 10 மணி முதல் ஒரு மணி வரை; மதியம் 3 மணி முதல் 5 மணி வரை.

``ஆரம்பத்துல  காலையில 7 மணிக்கு ஆரம்பிச்சு 7.30 வரை ட்யூஷன் நடந்துகிட்டு இருந்துச்சு. சிலருக்கு அதுக்கப்புறம் வீட்டுக்குப் போய், சரியான நேரத்துக்கு ஸ்கூலுக்குப் போக முடியலை. அதனாலதான் வார நாள்கள்ல 7 மணிக்குள்ள ட்யூஷனை முடிச்சுடு றோம். சில குழந்தைகளுக்கு வீட்ல படிக்கிற சூழ்நிலை இருக்காது. அப்படியே இருந்தாலும், படிக்க முடியாம கவனம் சிதறும். சொல்லிக் கொடுக்க ஆட்கள் இருக்க மாட்டாங்க. இது எல்லாத்துக்கும் மாற்றாக இந்த ட்யூஷன் இருக்கு’' என்கிறார் அரும்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கல்விச் சேவையில் காவல் துறை!

காவல் துறையின் சார்பாகவே இந்த மன்றம் நடத்தப்பட்டாலும், காவல் துறையின் நேரடி கண்காணிப்பில் இருந்தாலும், இதற்குப் பொறுப்பாளராக இருப்பவர் காவல் துறையைச் சேர்ந்தவர் அல்ல.  இந்த மன்றத்தின் பொறுப்பாளர், `சாரண ஆசிரியர்’ என அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி... இவர் அச்சகம் நடத்திவருகிறார். இவருக்கு அடுத்து ஓர் உதவி சாரண ஆசிரியர் இருக்கிறார். பிறகு, ஆசிரியர்கள்... இவர்கள் அனைவருமே தன்னார்வலர்கள். மாணவர்களுக்கு ட்யூஷன் எடுப்பவர்களில் இங்கிருந்து படித்துச் சென்ற மாணவர்களும் உண்டு. அறிவியல், கணக்குப் பாடங்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படும்போது, பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை அழைத்து வந்தும் பாடம் எடுக்கிறார்கள்.

``இங்கே படிச்சுட்டுப் போய் சாஃப்ட்வேர் நிறுவனங்கள்ல, அரசு நிறுவனங்கள்ல வேலை பார்க்கிறவங்க இருக்காங்க. அந்தப் பிள்ளைகள் எல்லாம் விருப்பப்பட்டு வந்து பாடம் எடுக்கறாங்க. எம்.பி.பி.எஸ் படிக்கிற பொண்ணு ஒருத்தங்க, தினம் இந்தப் பக்கம் நடந்து போவாங்க. எங்க ளோட ட்யூஷனைப் பார்த்துட்டு ஒருநாள் வந்தாங்க. `சார்... ரொம்ப நல்ல காரியம் பண்றீங்க. நான் வேணா, சொல்லித் தரவா’ன்னு கேட்டாங்க. இப்போ 10-வது, ப்ளஸ் டூ பிள்ளைங்களுக்கு சயின்ஸ் சொல்லித் தர்றாங்க. பாடம் மட்டும் இல்லை... இங்கே படிக்கிற மாணவர்களுக்கு விளையாட்டு, கலைன்னு எதுல ஆர்வம் இருக்கோ, அதுல ஈடுபடுத்து றோம். இங்கே படிச்ச ஒரு மாணவன் செஸ் புலி. கூடிய சீக்கிரமே `கிராண்ட் மாஸ்டர்' ஆகிடுவான்!

பிள்ளைகளுக்கு `குட் டச்... பேட் டச்’னு தொடுதலைப் பத்தி, வல்லுநர்களைக் கூட்டிட்டு வந்து வகுப்பெடுக்கிறோம்; வருஷத்துக்கு ஒருதடவை மெடிக்கல் கேம்ப் நடத்துறோம். ரத்த தானத்துக்குப் பிள்ளைகளை ஊக்கப்படுத்துறோம். எங்க டீம்ல எப்பவுமே 60 பேர் ரத்த தானம் கொடுக்கத் தயாரா இருப்பாங்க.

கல்விச் சேவையில் காவல் துறை!

நோட்டு, புத்தகம் வாங்க வசதி இல்லாத பிள்ளைகளுக்கு நாங்களே அதை வாங்கிக் கொடுக்கறோம். இங்கே வந்து ட்யூஷன் படிக்கிற பிள்ளைங்க, வீட்டுல போய் படிக்க வேண்டியதே இல்லை. ரிலாக்ஸ்டா அவங்க வேலையைச் செய்யலாம்’’ என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

சரி... இந்த மன்றம் இயங்குவதற்கான நிதி?

``நன்கொடைதான். ஹெச்.சி.எல் நிறுவனம் எங்களுக்கு உதவி செய்யுது. மாதா மாதம் பராமரிப்புக்கும் ட்யூஷனுக்கும்னு ஒரு தொகை கொடுக்குறாங்க. வேற சில நிறுவனங்களும் நன்கொடை கொடுக்குறாங்க. ஆனா, இங்கே இருக்கிற சாரண ஆசிரியர்ல இருந்து, மத்த ஆசிரியர்கள் வரைக்கும் யாரும் ஒரு பைசாகூட வாங்கறதில்லை.  ட்யூஷன் மட்டும் இல்லாம, வேற சில நல்ல வேலைகளையும் இந்த மன்றம் செய்யுது’’ என்கிற தீபா, ஓர் அறையில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர்களைக் காட்டுகிறார்.

``இந்தப் பகுதியில் உள்ள பெண்களுக்கு இலவசமா கம்ப்யூட்டர் கிளாஸ் நடத்துறோம். தினமும் காலையில 10 மணியில இருந்து 4 மணி வரைக்கும் பெண்களுக்கான கம்ப்யூட்டர் வகுப்பு. படிச்சு முடிச்சதும், அவங்களுக்குப் பொருத்தமான வேலை கிடைக்கவும் ஏற்பாடு செய்யறோம்’’ என்று வியக்கவைக்கிறார் தீபா. 

ட்யூஷனில் மட்டும் என்று இல்லாமல், இங்கு பயிலும் மாணவிகளின் மேல் எப்போதும் தன் கண்காணிப்பைத் தீவிரமாக்கி வைத்திருக்கிறது இந்த மன்றம். காரணம் இல்லாமல் ட்யூஷனுக்கு ஆப்சென்ட்டா... பெற்றோரை வரவழைத்து விசாரிக்கிறார்கள். இரவு 8:30 மணிக்கு மேல் சற்று தூரத்தில் இருந்து ட்யூஷனுக்கு வரும் மாணவிகளை, அவர்களுக்கே தெரியாமல் சில தன்னார்வலர்கள் பாதுகாப்புக்காக ஆங்காங்கே இருந்து கண்காணிக்கிறார்கள். இப்படி முழுப் பாதுகாப்போடு செயல்படுகிறது இந்த காவல் சிறார் மற்றும் மகளிர் மன்றம்.

கல்விச் சேவையில் காவல் துறை!

வருடத்துக்கு ஒருமுறை காவல் துறை உயர் அதிகாரிகளை வரவழைத்து விழா நடத்துகிறார்கள். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு களைகட்டும் விழாவில், சிறப்பாக பயின்ற, தன் ஆர்வத்தை வெவ்வேறு துறைகளில் வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்குகிறார்கள். 

மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறக்க, பள்ளிகள் மட்டுமே போதாது. நல்ல மனநிலையோடு படிக்க அமைதியான சூழலும், கற்றுக்கொடுக்கவும் உதவவும் ஆசிரியர்களும் தேவை. அதற்கு அருமையான உதாரணமாகத் திகழ்கிறது, அரும்பாக்கம் காவல் சிறார் மகளிர் மன்றம்!