Published:Updated:

"போராடிப் பார்த்துடணும்!"

"போராடிப் பார்த்துடணும்!"
பிரீமியம் ஸ்டோரி
News
"போராடிப் பார்த்துடணும்!"

ரோல் மாடல்சாஹா

`லேக்மே ஃபேஷன் வீக்'கில் பங்கேற்பது என்பது பிரபல மாடல்களின் பிரதான இலக்காக இருக்கும். பெரிய பின்னணியும் நிறைய பயிற்சியும் உள்ள மாடல்களுக்கே அது பெருங்கனவு. இருப்பினும், அது அஞ்சலி லாமா என்கிற திருநங்கைக்கு நனவாகியிருக்கிறது!

"போராடிப் பார்த்துடணும்!"

நேபாளம், காத்மண்டுவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து விளம்பர வெளிச்சத்துக்கு வந்திருக்கிற அஞ்சலியின் வாழ்க்கை நெகிழ்ச்சியானது.

‘`அம்மா - அப்பாவுக்கு நான் அஞ்சாவதாகப் பிறந்தேன். எனக்கு முன்னாடி நாலு ஆம்பிளைப் பிள்ளைங்க. அஞ்சாவதாவது பெண்ணா இருக்கணும்னு அப்பா ஆசைப்பட்டார். ஆனா, நானும் பையனா பிறந்தேன்.

8 வயசுலயே எனக்குள்ள நடந்த மாற்றங்களை உணர முடிஞ்சது. அண்ணன்களைத் தவிர்த்து என் தங்கை பக்கத்துல இருக்கிறதையே அதிகம் விரும்புவேன். பெண்கள் உடைகளைப் போட்டுக்கிட்டு ரசிப்பேன். ‘நான் ஒரு பையன் தானே... அப்புறம் ஏன் இப்படியெல்லாம் தோணுது’னு மனசுக்குள்ள போராட்டமே நடக்கும். ‘கடவுளே, என்னைப் பெண்ணா படைச்சிருக்கக்கூடாதா’னு பல நாள்கள் மனசுக்குள்ள அழுதிருக்கேன்...’’ - ஆண்மை கலந்திருந்தாலும், பெண்மைக்குரிய மென்மை யுடன் பேசுகிறார் அஞ்சலி.

‘`என் உடம்புலயும் மனசுலயும் உருவான மாற்றம் என் படிப்புக்குப் பெரிய தடையா இருந்தது. எல்லா இடங்களிலும் என்னைக் கேலிப் பொருளா பார்த்தாங்க. காலேஜ்ல மூணாவது வருஷப் படிப்பை முடிக்க முடியலை. என்னோட 20-வது வயசுல முதன்முறையா ஒரு திருநங்கையைத் தெருவுல சந்திச்சேன். திருநங்கைகளின் பிரச்னைகளுக்காகப் போராடுகிற அமைப்புக்கு என்னைக் கூட்டிட்டுப் போய், இன்னொரு உலகத்தைக் காட்டினாங்க. என் மனசு விரும்பினபடி உடை அணியவும் வாழவும் ஆரம்பிச்சேன். என்னோட திருநங்கை தோழர்தான் எனக்கு அஞ்சலிங்கிற பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாங்க. `நபின் வய்பா லாமா' என்கிற நான், `அஞ்சலி லாமா'வா மாறினேன். ஒருநாள் என் அண்ணனுக்கு விஷயம் தெரிஞ்சு எனக்கு போன் பண்ணி, `உண்மையா?'னு கேட்டான். `ஆமாம்'னு சொன்னதும், போனை மட்டுமல்ல... என்  உறவையும் துண்டிச்சுக்கிட்டான்.  அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் தெரிஞ்சபோது, ‘உன் விருப்பம்போல வாழு... ஆனா, தவறான பாதைக்குப் போயிடாதே’னு சொன்னாங்க. அதுதான் அவங்க எனக்குக் கொடுத்த அதிகபட்ச அங்கீகாரம்...’’ - உறவுகளின் அங்கீகாரத்துக்கு ஏங்குகிற சராசரி திருநங்கை மனநிலையைப் பிரதிபலிக்கிறார் அஞ்சலி.

‘`காலேஜ் படிக்கிறபோது நான் பொண்ணுங்க மாதிரி டிரெஸ் பண்ணிக்கறதைப் பார்த்த சிலர், ‘நீ மாடலிங் பண்ணலாமே’னு கிண்டலா சொல்வாங்க. ஆபரேஷன் பண்ணிக்கிட்டு நான் முழுமையான பெண்ணா மாறினதும், என்னோட உயரத்தையும், ஸ்லிம்மான உடல் வாகையும் பார்த்தபோது அவங்க சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது. வாய்ப்பு கேட்டு மாடலிங் ஏஜென்சிகளை அணுகியபோது, என்னைப் பார்த்து சிரிச்சவங்களும், என்னை விரட்டினவங்களும்தான் அதிகம். நல்ல உள்ளம் படைச்ச சிலர், எனக்கு ஆதரவாகவும் பேசினாங்க. ஆரம்ப காலத்துல ஃபேஷன் ஷோக்களிலும், போட்டோ ஷூட்டுலயும் பணம் எதுவும் எதிர்பார்க்காம கலந்துகிட்டேன். அப்படியும் எனக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலை. இருந்தாலும், நம்பிக்கையை இழக்காமல், என்  திறமையை நம்பினேன். விடாமல் முயற்சி செய்ததுல சில வருஷங்கள் கழிச்சு எனக்கான கதவுகள் திறந்தன. திருநங்கையா மட்டுமே பார்த்து என் திறமையை அலட்சியம் செய்தவங்க, ஒரு கட்டத்துல என் திறமையைக் கவனிக்க ஆரம்பிச்சாங்க.

2010-ல் ‘தி மான்சூன் ஃபேஷன் ஷோ’வுல ராம்ப் வாக் பண்ணினேன். அந்த ஷோ பரவலான கவனத்தை ஈர்த்தது. ‘வாய்ஸ் ஆஃப் விமன்’ நேபாள பத்திரிகை அட்டையில என் போட்டோ வந்தது. ஆனாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் அத்தனை சுலபத்துல கிடைக்கலை.

லேக்மே ஃபேஷன் வீக்ல கலந்துக்கிறதுதான் என்னோட லட்சியமா இருந்தது. இரண்டு முறை நிராகரிக்கப்பட்டேன். மூணாவது முறை தான் வாய்ப்பு கிடைச்சது. ஒரு காலத்துல `பணமே வேண்டாம்... வாய்ப்பு கிடைச்சா போதும்'னு நினைச்சவ நான். இன்னிக்கு நான் கேட்கற பணத்தைக் கொடுத்து,  ஃபேஷன் ஷோவுல கலந்துக்கச் சொல்றாங்க. பேரும் புகழும் ஒருத்தரைப் பத்தின பார்வையைத் தலைகீழா மாத்திடும்னு புரிஞ்சுக்கிட்டேன்...’’   - அஞ்சலியின் வார்த்தைகளில் வெற்றிக் களிப்பு!

‘`நேபாளத்துலேருந்து ஒரு பெண்ணா வாய்ப்பு தேடி வந்திருந்தாகூட நான் ஜெயிச்சிருப்பேனாங்கிறது தெரியலை. திருநங்கையா இருக்கிறதாலதான் போராடிப் பார்த்துடணும்கிற வெறி எனக்கும் வந்தது. நேபாளத்துல என்னை மாதிரியே உடல், மனக் குழப்பங்களோடு நிறையபேர் இருக்காங்க. அவங்களை எல்லாம் வெளியில கொண்டு வரணும்.  ரெட்டை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியமில்லைன்னு புரியவைக்கணும். நான் ஒரு ரோல்மாடலா இருக்கணும். `உங்களை நம்புங்க... உங்க திறமை உங்களை உயரத்துக்குக் கொண்டுபோகும்'னு சொல்லணும்.

`மூன்றாம் பாலினம்'னு ஒண்ணு இருக்குங்கிற விழிப்பு உணர்வைப் பள்ளிக் குழந்தைங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும்னு கேட்டுக்கறேன். என்னை மாதிரி தன்னிலை புரியாத எத்தனையோ குழந்தைங்களுக்கு அது ஒரு புரிதலைத் தரும்...’’

- அக்கறையுடன் முடிக்கிறார் அஞ்சலி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz