Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: "ஆண்மை... பெண்ணுக்கு அழகு!" - எனக்குள் நான் - ஸ்ரீப்ரியா

அவள் கிளாஸிக்ஸ்: "ஆண்மை... பெண்ணுக்கு அழகு!" - எனக்குள் நான் - ஸ்ரீப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் கிளாஸிக்ஸ்: "ஆண்மை... பெண்ணுக்கு அழகு!" - எனக்குள் நான் - ஸ்ரீப்ரியா

அவள் கிளாஸிக்ஸ்: "ஆண்மை... பெண்ணுக்கு அழகு!" - எனக்குள் நான் - ஸ்ரீப்ரியா

அவள் கிளாஸிக்ஸ்: "ஆண்மை... பெண்ணுக்கு அழகு!" - எனக்குள் நான் - ஸ்ரீப்ரியா

“மம்மீ..!’’

`‘என்னப்பா..?”
 
`‘நீயும் ரஜினி அங்கிளும் ரொம்ப ஃப்ரெண்ட்ஸா மம்மீ? டி.வி-யில் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய தரம் வர்றீங்களே..?”

- யு.கே.ஜி படிக்கும் என் பொண்ணு ஸ்நேகா, சோபாவில் உட்கார்ந்து, என் நெற்றியில் புரளும் முடிகளைக் கலைத்து விளையாடியபடியே கேட்கிறாள். எதிரே டி.வி-யில் நானும் ரஜினியும் நடித்த ‘மாங்குடி மைனர்' படம் ஓடிக்கொண்டிருந்தது.

நான்கு வயதுகூட இன்னும் முடியாத என் பொண்ணைப் பொறுத்தவரை, அவள் தன் அம்மாவை மம்மு ஊட்டும் போஸிலும், ஹோம்வொர்க் சொல்லிக் கொடுக்கும் போஸிலுமே பார்த்துப் பழகிவிட்டதால், இப்போது புதிதாக ரஜினி அங்கிள் என்று அவளுக்குத் தெரிந்த சூப்பர் ஸ்டாருடன் தன் மம்மி டான்ஸ் ஆடுவது ஆச்சர்யத்தைத் தந்திருக்க வேண்டும்!

குழந்தையின் வார்த்தைகள், ஃப்ளாஷ்பேக் பட்டனைத் தட்டிவிட, மனசு ஒரேயடியாக நான் குழந்தையாக இருந்த காலத்துக்குச் சென்று நின்றது.

என் மகள் இப்போது படிக்கும் அதே `சர்ச் பார்க்’கில்தான் நானும் படித்தேன். அங்கே நான், என் அக்கா போல ஒரு சிலரைத் தவிர எல்லோருமே பெரிய பெரிய வீட்டுப் பிள்ளைகள்தான். பள்ளிக்குக் கட்டடம் கட்டுவது போன்ற விஷயங்களுக்கு நிதி வசூலித்தால், வீட்டிலிருந்து கைநிறைய பணம் வாங்கி வந்து தருவார்கள். `நம்மால் அவ்வளவு பணம் தர முடியவில்லையே' என்று ஏக்கமாகவும் கோபமாகவும் இருக்கும்!

அவள் கிளாஸிக்ஸ்: "ஆண்மை... பெண்ணுக்கு அழகு!" - எனக்குள் நான் - ஸ்ரீப்ரியா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்னொரு கோபம், அலமேலு என்கிற என் பெயர் மீது! இப்படி  ஒரு பாட்டித்தனமான பெயரை நமக்கு வைத்துவிட்டார்களே என்று படுபயங்கரமாக ஃபீல் பண்ணுவேன். என் பெயரையே இன்னும் கொஞ்சம் சுருக்கி, ‘ஆலு' (ஹிந்தியில் உருளைக்கிழங்கு என்று அர்த்தம்) என்று என் குண்டான உருவத்தை வைத்து சில பெண்கள் கேலி செய்து இன்னும் கொஞ்சம் என்னை நோகடிப்பார்கள்.

அப்பா பக்கிரிசாமி பிள்ளை `ஆல் இந்தியா ரேடியோ'வில் வயலினிஸ்ட்டாக இருந்தார். அம்மா, அப்போதைய மற்ற எல்லா அம்மாக்களையும் போல ஹவுஸ் வொய்ஃப். அப்பாவும் அம்மாவும் பல நேர நல்ல சாப்பாட்டை தியாகம் செய்துவிட்டுதான் எங்களை ஒரு சிறந்த பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார்கள்.

அம்மா நல்ல கிளாஸிக்கல் டான்ஸர். ஆனால், அவங்களாலே கல்யாணத்துக்கு அப்புறம் ஆட முடியலே. அதனால, அக்கா மீனாட்சிக்கும் எனக்கும் ஆசை ஆசையாக டான்ஸ் கத்துக் கொடுத்தாங்க. அக்காவுக்கு டான்ஸ் கிளாஸ் அல்வா சாப்பிடற மாதிரி (டான்ஸுக்காகத்தான் வைஜெயந்திமாலாவை மனதில் வைத்து `வைஜெயந்தி’ என்று அவர் பெயரை மாற்றி வைத்தார்கள்). எனக்கு டான்ஸில் பெரிய ஆர்வமெல்லாம் இல்லே. ஆனா, டான்ஸ் கிஸாஸுக்குப் போனா தாத்தா, சோடாவும் பட்டர் பிஸ்கட்டும் வாங்கித் தருவார் என்பதால், கரெக்டாக போய் விடுவேன். இடையில் கொஞ்சநாள் அப்பா ஹைதராபாத்தில் வேலை பார்த்ததால், தாத்தா வீட்டிலிருந்து கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலிலும் படித்தேன்.

அப்போதைக்கு என் ஆசை முழுக்க கேம்ஸ் டீச்சர் ஆக வேண்டும் என்பதுதான். கையில் பிரம்பும் உதட்டில் விசிலுமாக நான் கேம்ஸ் டீச்சராக நிற்பதுபோல அடிக்கடி நினைத்துக்கொள்வேன். த்ரோபால், நெட்பால் மாதிரியான விளையாட்டுகளில் எப்போதும் நான் முன்னணியில் இருப்பேன் என்பதால், இந்தக் கனவு ஏற்பட்டிருக்கலாம்.

சர்ச் பார்க் பள்ளியின் கண்டிப்பு மற்றும் மாணவிகளின் ஆங்கிலப் புலமை மீது எனக்குத் தீராத காதலே உண்டு. அங்கே என் குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே பெண் குழந்தை வேண்டும் என்று விரும்பினேன் என்றால், நீங்கள் நம்ப மாட்டீர்கள்! ஆனால், உண்மை!

நான் ஒன்பதாவது படிக்கும்போது திடீரென்று ஒரு நாள் எங்கள் வீட்டுக் குள்ளே நாகராஜராவ்! எம்.ஜி.ஆர். உட்பட பலரை போட்டோ எடுத்த பெரிய போட்டோ கிராஃபர். அக்கா வைஜெயந்தியை போட்டோ எடுப்பதற் காக அம்மா அவரை வரவழைத்திருந்தார். பத்மினிக்கு மேக்கப் போடும் தனகோட்டி மேக்கப் போட, ஒரு முழு ரோலும் எடுத்து முடித்துவிட்டு என்னைப் பார்த்தார்.

‘ஒரேயொரு ஃபிலிம் இருக்கு. உன்னை எடுத்திடலாம் வா’ என்று சொல்ல, கிடுகிடுவென்று எனக்கும் மேக்கப் நடந்தது.
                                                                                                                                                     
அப்போதெல்லாம் மேக்கப் என்றாலே முன்நெற்றியில் வட்டமாகக் கொஞ்சம் முடியை வெட்டிவிட்டு, `விக்' வைத்துவிடுவார்கள். கருமேகம் போல அடர்ந்த கூந்தல் இருந்தாலும்கூட, விக் கட்டாயம் உண்டு. (மறுநாள் நான் பள்ளிக்கூடத்துக்கு போன போது முன்நெற்றியை ஒரு புத்தகம் வைத்து மறைத்துக்கொண்டே போனது இன்னும் ஞாபகத்தில் நிற்கிறது.)

அவள் கிளாஸிக்ஸ்: "ஆண்மை... பெண்ணுக்கு அழகு!" - எனக்குள் நான் - ஸ்ரீப்ரியா

நாகராஜராவ் எடுத்த அந்த போட்டோ தான் என்னை நடிகையாக்கியது! டான்ஸ் மாஸ்டர் சலீமிடம் அந்த போட்டோ சிக்க... அவர் டைரக்டர் மாதவனிடம் காட்ட... ‘மாணிக்கத் தொட்டில்’ படத்தில் ஜெமினியின் ஐந்து பெண்களில் ஒருத்தியாக நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. விஷயம் கேள்விப்பட்டு நான் ஸ்கூலிலிருந்து நேராக டைரக்டரிடமே போய் நின்றேன். ‘எனக்கு சான்ஸ் தர்றதா சொன்னீங்களாம். என்ன ரோல்?’ என்றேன் பட்டென்று! பெரிய பெரிய நடிகர்களே டைரக்டர்களிடம் பேச பயந்த நேரம் அது. `துக்குணுண்டு பள்ளி மாணவி வந்து என்ன தைரியமாக கேட்கிறது பார்’ என்று திகைப்பும் கோபமுமாகப் பார்த்தார் அவர். ‘எதுக்குக் கேட்கிறேன்னா. நான் நடிக்க வர்றதா இருந்தா, என் படிப்பையெல்லாம் விட்டுட்டு வரணும். அதனால பெரிய ரோலா இருந்தா தாங்க!’ என்றேன் நான் கலங்காமல்! `இந்த அதிகப்பிரசங்கியை யார் உள்ளே விட்டது?’ என்பதுபோல டைரக்டர் கோபமாகிக்கொண்டிருந்தார். வீட்டில் அம்மாவும்தான்!

என்னவோ தெரியவில்லை... மனதில் ஒன்று நினைத்தால் பட்டென்று அதைப் பேசியாக வேண்டும் எனக்கு! எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், என்னால் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. எனது இந்தக் குணமே எனக்கு சில விரோதிகளைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்றாலும், பல ப்ளஸ் பாயின்ட்களையும் தந்திருக்கிறது. உதாரணமாக, அடுத்த படத்துக்கே டைரக்டர் மாதவனிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ‘நீ என்கிட்டே தைரியமா பேசின விதம் எனக்குப் பிடிச்சிருந்தது. இது நீ கேட்ட மாதிரி ரோல்தான்’ என்றார். ‘முருகன் காட்டிய வழி' என்கிற படம் அது. அம்மா, ராகங்களின் புத்தகத்தைப் புரட்டி, `ஸ்ரீப்ரியா' ராகத்தை எனக்குப் பெயராக செலக்ட் செய்து தந்தார்.

ஸ்ரீகாந்த்தான் ஹீரோ என்றார்கள். நான் படித்த அதே ஸ்கூலில்தான் ஸ்ரீகாந்தின் பெண்ணும் படித்துக்கொண்டிருந்தாள். அவளை ஸ்கூலில் விடுவதற்கு ஸ்ரீகாந்த் வரும்போதெல்லாம் ‘ஏய்... ஸ்ரீகாந்த்டீ” என்று தோழிகளோடு நான் சத்தம் போட்டு கேலி செய்துகொண்டிருப்பேன். இப்போது அவரைக் கட்டிப்பிடித்து நான் நடிக்க வேண்டுமா? `ஐயோ... தோழிங்க எல்லாம் படத்தைப் பார்த்துவிட்டு கிண்டலடிப் பார்களே!’ என்ற நினைப்பிலேயே எனக்கு ரொம்பவே தர்மசங்கடமாகிவிட்டது. டைரக்டர் கட்டிப்பிடிக்கச் சொல்லும் ஸீன்களில் எல்லாம் வெட்கப்பட்டுக்கொண்டு அரையும் குறையுமாகச் செய்வேன். விளைவு... பத்து டேக் வாங்கியது. ஒழுங்காக டைரக்டர் சொல்படி கட்டிப்பிடித்தால் ஒரே டேக்கில் `ஓகே’ ஆகிவிடும். இல்லையெனில், நிறைய முறை கட்டிப்பிடிக்க வேண்டியிருக்கும் என்று அப்புறம்தான் தெரிந்துகொண்டேன்.

பெரியப்பா தண்டாயுதபாணிபிள்ளை சினிமாவின் பெரும் நட்சத்திரங்களான வைஜெயந்தி மாலா, பத்மினி போன்றோருக்கு நடன குரு என்பதால், `மாஸ்டர் பொண்ணு’ என்று எனக்கு ஃபீல்டில் ஒரு தனி மரியாதை! இரண்டாவது படத்திலேயே நான் சிவாஜிக்கு ஜோடி! ‘பாட்டும் பரதமும்' படத்தில் இரண்டு சிவாஜிகளில் ஒருவருக்கு நானும், இன்னொரு சிவாஜிக்கு ஜெயலலிதாவும் ஜோடி! நாங்கள் இருவரும் ஒரு படத்தில் நடித்தோமே தவிர, ஒரே நாளில் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதில்லை. ஸ்கூலின் முன்னாள் மாணவி என்ற முறையில் எனக்கு ஜெயலலிதாவை ரொம்பப் பிடிக்கும்.

அதற்குள் `அவள் ஒரு தொடர் கதை’ படம் வர... கிடுகிடுவென்று என் படங்கள் வரிசையாக வர ஆரம்பித்தன. நானும் கமலும் கிடார் வைத்துப் பாடும் படங்களே நிறைய வந்தன. ஒரே வருஷத்தில் ஒன்பது படங்கள். அதுவரைக்கும் பிடிக்காமலே சிடுசிடுவென்று நடித்து வந்த நான், கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு அப்புறம்தான் நடிப்பின் மேல் ஓரளவு ஆர்வம் வந்து நடிக்கவே ஆரம்பித்தேன்.

இருநூற்றைம்பது படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன் என்று பெருமையாக இருந்தாலும், `அவன்-அவள்-அது’, `அவள் அப்படித்தான்’, ‘வசந்தத்தில் ஒரு நாள்’ என்பது போல சில படங்களைத் தவிர, நடிப்பில் நான் பிரமாதமாக எதையும் செய்துவிடவில்லை என்று ஒரு வருத்தமும் இருக்கிறது. காரணம் - எனக்குக் கிடைத்த ரோல்கள் அப்படி!

சிவாஜியுடன் இருபது படங்கள் நடித்திருக்கி றேன். நடிப்பில் இமயமாக இருந்த சிவாஜியின் மோசமான படங்களில் எல்லாம் நான்தான் ஹீரோயின். `லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’, `எமனுக்கு எமன்' போன்ற படங்களின் பேரேகூட உங்களுக்கெல்லாம் மறந்திருக்கும்.

அவள் கிளாஸிக்ஸ்: "ஆண்மை... பெண்ணுக்கு அழகு!" - எனக்குள் நான் - ஸ்ரீப்ரியா

அது தமிழ் சினிமாவில் ரீமேக் காலம். பழிக்குப் பழி வாங்கும் தெலுங்கு சினிமா படங்களை ‘ரீமேக்' செய்து கொண்டிருந்தார்கள். ரஜினி, கமல் கூட அதுபோன்ற படங்களில்தான் அதிகமாக நடித்தார்கள். நான், கமல், ரஜினி மூவருமே ஒரே நேரத்தில் ஃபீல்டில் நுழைந்து, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ரஜினியுடன் அதிகமாக நடித்த ஹீரோயின் நான் என்று கணக்குச் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் இணைந்து `அன்னை ஓர் ஆலயம்’ நடிக்கும்போது அவர் உடம்பும் மனசும் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்படி ஆகிவிட்டது. டைரக்டர் கே.பி. சொன்னால்தான் அவர் எதையுமே கேட்பார் என்பதால், நான் டைரக்டரிடம் ஓடினேன். `ரஜினிக்கு என்னவோ ஆகிவிட்டது. நீங்கள்தான் அவரைக் குணப்படுத்த முயற்சிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். உடன் வேலை செய்யும் ஒரு நண்பருக்காக நான் இப்படி உதவி கேட்டது டைரக்டரின் மனதைத் தொட்டுவிட்டது போலிருக்கிறது. அவர் அதை சில பேட்டிகளில்கூடக் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினி பேசும் தமிழ் படுஸ்பீடாக, கொஞ்சம் குதறுவதுபோல இருக்கிறது என்று ஆரம்ப காலத்தில் சில அசிஸ்டென்ட் டைரக்டர்கள் அவருக்கு உச்சரிப்பு சொல்லித்தர முயற்சிப் பார்கள். ‘என் ஸ்பீட் இதுதான்! ஜனங்க இதைப் பார்த்து ரசிச்சுதான் என்னை ஏத்துட்டு இருக்காங்க. மாத்திப் பேசினா டப்பிங் வாய்ஸ் தந்தது மாதிரி இருக்கும்’ என்று, தான் நினைத் ததையே செய்தார் ரஜினி. தான் விரும்பியது எதுவாக இருந்தாலும், அதைச் செய்ய ஒரு துணிச்சல் வேண்டும். அது ரஜினியிடம் இருந்ததால்தான், அவர் சக்சஸ் ஆனார்.

எப்போதுமே கமலின் மீது எனக்கு ஒரு பொறாமை உண்டு. படிப்பு,  நடிப்பு, எழுத்து என்று தன் எல்லைகளை விரித்துக்கொண்ட புத்திசாலி அவர். அவரைப் பார்க்கும் போதெல்லாம் `நாமும் ஏன் எழுதக்கூடாது?’ என்று எனக்குத் தோன்றிவிடும். ஷூட்டிங் இடைவெளியில் அவர் கவிதை எழுதினால், நானும் கவிதை எழுதுவேன். பொதுவாகவே எனக்கு இமிடேட் செய்யும் குணம் அதிகம் உண்டு. ஜானகியம்மாளைப் பார்த்தால், அவரை மாதிரியே பாட முயற்சி செய்வேன்!

ஒருவகையில் நான் இப்படி இமிடேட் செய்வதேகூட பல விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு நல்ல வாய்ப்பாகவே அமைந்தது. அந்தப் பழக்கம் நிறைய புத்தகங்கள் படிக்கும் தேவையை எனக்குத் தந்தது. மடமடவென்று சித்தர் புத்தகங்கள் எல்லாம்கூடப் படித்திருக் கிறேன். தமிழிலும் கன்னடத்திலும் நான் படங்களை டைரக்ட் செய்ததற்குக்கூட, இந்தக் குணம்தான் காரணம்.

சினிமா ஒரு புதைகுழி மாதிரி. அதற்குள் நுழையும் வரை பயமுறுத்தும். நுழைந்தபின், வேறு எந்த இடத்துக்கும் போகவிடாமல் அவர்களை அப்படியே இழுத்துக்கொள்ளும். என்னையும் அப்படித்தான் இழுத்துக்கொண்டுவிட்டது.

இப்போது விஜய் ஆடும் டான்ஸும் அர்விந்த்சுவாமியின் கேஷுவலான நடிப்பும் திரையைவிட்டு கண் எடுக்க முடியாத லெவலில் அசத்தலாக இருக்கின்றன. நடிகைகளில் ரம்பாவையும் ரோஜாவையும் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. இருவருக்குமே நல்ல டிரெஸ்ஸிங் சென்ஸ்!

அறுபது படங்கள் நடித்துவிட்டு சினிமா என்ற புதைகுழியிலிருந்து மீண்டு வந்த ஒருத்தரும்கூட இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல... என் கணவர் ராஜ்குமார் சேதுபதிதான். நடிகை லதாவின் தம்பி. `காஷ்மீர் காதலி’ உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்த அவர், படங்களில் சம்பாதித்தப் பணத்தை வைத்துக்கொண்டு இன்று சக்சஸ்ஃபுல்லாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துகொண்டிருக்கிறார்.

தி.நகரில் என் அம்மா பியூட்டி பார்லர் வைத்திருந்தபோது ராஜ்குமார் அடிக்கடி எதிர்க்கடைக்கு வருவார். அவரைப் பார்த்தவுடனே, `ஐயோ இவரா? `மகாபலிபுரம் பக்கத்தில் ஃபிளாட் வாங்கறீங்களா.... கோடம்பாக்கம் பக்கத்தில் ஃப்ளாட் வாங்கறீங்களா'ன்னு அறுக்க ஆரம்பிச்சுடுவாரே!’ என்று பயந்து ஓடிக்கொண்டிருந்தேன். அவர் சக்ஸஸ் ஸ்டோரிதான் என் எண்ணத்தை மாற்றியது.

ஒரு நியூ இயர் பார்ட்டியில்தான் மனம் விட்டுப் பேசினோம். அவரவர் வீட்டில் சொன்னோம். சம்மதித்தார்கள். திருமணம் நடந்தது. முத்துகள் போல இரண்டு குழந்தைகள். நிஜமாகவே முத்துகள்தான். ஒவ்வொரு முத்தையும் மூழ்கியெடுக்க நான் ஆடாமல் அசையாமல் மாசக்கணக்கில் மருத்துவமனையில் படுத்திருந்து, `மொட்டை போடுகிறேன்' என்று திருப்பதிக்கு வேண்டிக்கொண்டபின் கண்டெடுத்த முத்துகள்.

என் கேரக்டரையும் பழைய பானுமதி யம்மா கேரக்டரையும் அடிக்கடி நான் ஒப்பிட்டு பார்ப்பதுண்டு. பழைய படங் களில் பானுமதியம்மா கேரக்டர் பார்த்து இம்ப்ரெஸ் ஆகியிருக்கிறேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி மாதிரி பெரிய பெரிய நடிகர் களையே எதிர்த்து, மனசில் பட்டதை பட்டென்று சொல்லும் தைரியசாலி பெண் கேரக்டர். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஆண்மை தெறிக்கும் ஒரு பெண் கேரக்டர். என்னைக் கேட்டால்... ஆண்மை பெண்களுக்கும் அவசியம். ஏன்... அது ஓர் அழகு என்றுகூட சொல்வேன். அதிர்ஷ்ட வசமாக எனக்கும்கூடப் பல படங்களில் அப்படிப்பட்ட கேரக்டர்களே கிடைத்தன. நிஜத்திலும்கூட நான் அப்படியொரு கேரக்டராகவே இருக்க விரும்புகிறேன். இருக்கவும் முயற்சி செய்கிறேன்.

சந்திப்பு: லோகநாயகி

படங்கள்: கே.ராஜசேகரன்


(அவள் விகடன் மார்ச் 5, 1999 இதழிலிருந்து...)