Published:Updated:

வண்டி ஓட்டிப் பாருங்க... வாழ்க்கையே மாறும்!

வண்டி ஓட்டிப் பாருங்க...  வாழ்க்கையே மாறும்!
பிரீமியம் ஸ்டோரி
News
வண்டி ஓட்டிப் பாருங்க... வாழ்க்கையே மாறும்!

வித்தியாசம்ஆர்.வைதேகி

வண்டி ஓட்டிப் பாருங்க...  வாழ்க்கையே மாறும்!

பெண்களால் விமானங்களையே இயக்கிவிட முடிகிறது. ஆனாலும், ஆண்களுக்கான வாகனங்களாக அறியப்பட்டவற்றை ஓட்டிச் செல்கிற பெண்களை இன்றும் ஆச்சர்யமாகப் பார்க்கிற மக்களும் இருக்கிறார்கள். அப்படி ஆயிரக்கணக்கானோரின் ஆச்சர்யப் பார்வை பதிகிறது சென்னையைச் சேர்ந்த வித்யா ஸ்ரீனிவாசனின் மேல். ஆண்களே அதிகம் ஓட்டிப் பார்த்திராத `ஹார்லி டேவிட்சன்' வண்டியை அநாயாசமாக இவர் இயக்குகிற அழகே அலாதியானது!

சமீபத்தில் கோவாவில் நடந்த ஹாக் ராலியில் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார் வித்யா. ஹார்லி டேவிட்சனிலேயே `சென்னை டு கோவா' ட்ரிப் அடித்துவிட்ட ஆனந்தம் அடங்காமல் பேசுகிறார்...

‘`எனக்கு 13 வயசிருக்கும்போது, அப்பா இண்ட் சுஸூகி பைக் ஓட்டக் கத்துக் கொடுத்தார். அப்போ அப்பாகிட்ட சொந்தமா பைக் இல்லை. ஃப்ரெண்டோட பைக்கை வாங்கி, வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் என்னை ஓட்டச் சொல்வார். எனக்கொரு தம்பி இருக்கான். அவனைவிட நான் தைரியசாலியா இருக்கணும்னு நினைப்பார் அப்பா. எனக்கும் எப்போதும் ஏதாவது வித்தியாசமா செய்யப் பிடிக்கும். அப்பதான் மத்தவங்க நம்மளைப் பார்ப்பாங்கன்னு நினைப்பேன்.

ஸ்கூல் படிப்பை முடிச்சதுமே,  குடும்பச் சூழ்நிலை காரணமா நான் உடனடியா வேலைக்குப் போயிட்டேன். வேலைக்குப் போய் வருவதற்காக, பொண்ணுங்க ஓட்டற வண்டியை வாங்கித் தராம, அப்பா எனக்கு எம்80 பைக்-தான் வாங்கித் தந்தார். 

எம்80 ஓட்டினபோது ஒருமுறை ஆக்ஸிடென்ட் ஆகி, வண்டியோட கிக்கர் உடைஞ்சு என் காலுக்குள்ள போயிடுச்சு. அதனால கைனடிக் ஹோண்டா ஓட்ட ஆரம்பிச்சேன். அடிபட்ட காலில் பொருத்திய பிளேட்டும் ஸ்க்ரூவும்தான் இப்பவும் இருக்கு... எலும்பு கிடையாது.

என் தம்பி ராஜ்தூத் வாங்கினான். அதை நான் ஓட்டும்போது மறுபடியும்  அடிபட்டது. கொஞ்சநாள் வண்டி ஓட்டாம இருந்தேன். தேவைப்பட்டா செல்ஃப் ஸ்டார்ட் இருக்கிற வண்டியை மட்டும் ஓட்டிக்கிட்டிருந்தேன்...’’ - விவரிக்கிற வித்யாவுக்கு, ஹார்லி டேவிட்சன், செல்லமான கதை சுவாரஸ்யமானது.

‘`ஐ.டி கம்பெனியில வேலை பார்த்துட்டிருந்தேன்.  வெள்ளிக்கிழமைகள்ல நைட் ஷிஃப்ட் இருக்கும். என் ஃப்ரெண்ட்ஸ் சிலர்கிட்ட பைக் இருக்கும். நைட் ஷிஃப்ட் முடிச்சுட்டு `இசிஆர்'ல லாங் ரைடு போவோம். அது ரொம்பப் பிடிச்சிருந்தது.

தனியா பைக் ஓட்டும்போது, ஒரு பொண்ணு பெரிய வண்டியை ஓட்டறதாவதுன்னு என்னை ஓவர்டேக் பண்றது, கட் கொடுக்கிறதுன்னு பசங்க நிறைய பண்ணியிருக்காங்க. இயல்பிலேயே நான் கொஞ்சம் குண்டு வேற. கிண்டல், கேலிகளுக்குப் பஞ்சமே இருக்காது. நான் அதுக்கெல்லாம் பயப்படவும் மாட்டேன்; கண்டுக்கவும் மாட்டேன். என் மனசெல்லாம் பைக்கை ரசிச்சு ஓட்டறதுலதான் இருக்கும்.

வண்டி ஓட்டிப் பாருங்க...  வாழ்க்கையே மாறும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு ஹார்லி டேவிட்சன் வண்டியைப் பத்தி தெரியவந்தது.  ஹார்லி டேவிட்சன், நம்ம மாருதி 800 காருக்கு இணையான சக்திகொண்டது. 750 சிசி. மிகச்சமீபத்துலதான் அந்த வண்டியை வாங்கணும்கிற ஆசை வந்தது. டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்த்ததும், ரொம்பப் பிடிச்சுப் போச்சு. வாங்கிட்டேன். வீட்ல எதிர்ப்பு இருந்தாலும், என் தைரியத்தை என்கரேஜ் பண்ணாங்க. ‘சரி ஓட்டு... ஆனா, சேஃபா இரு...’ன்னு சொன்னாங்க.  180 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டிருக்கேன். வண்டியோட வெயிட்டே 250 கிலோ இருக்கும். 0 - 100 கிலோமீட்டர் பவரை 3 - 4 செகண்ட்ஸ்ல அடைய முடியும். இந்த வண்டியை அவ்வளவு ஸ்பீடாதான் ஓட்டியாகணும். அதுக்கான ஹெல்மெட், ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கிட்டுப் பாதுகாப்பாதான் ஓட்டுவேன். மத்தவங்களுக்குத் தொந்தரவு இருக்கக்கூடாதுன்னு ஹைவேஸ்ல, அதிகாலை 4 மணிக்குத்தான் ஓட்டுவேன்...’' என்று வியக்க வைக்கிறார்.

‘`பைக் ஓட்டறபோது என் மனநிலை ரொம்ப வித்தியாசமா இருக்கும். என்னையே நான் நிறைய கேள்விகள் கேட்டுப்பேன். நிறைய நல்ல முடிவுகளை என்னால எடுக்க முடியும். அதிகாலையில கடற்கரை சாலையில இயற்கையை ரசிச்சபடி, பறவைகளோட சத்தத்தைக் கேட்டுக்கிட்டே வண்டி ஓட்டற அந்த அனுபவம் வார்த்தைகளால வர்ணிக்க முடியாதது.

பைக் ஓட்டும்போது நூற்றுக்கணக் கான பைக்கர்ஸை சந்திச்சிருக் கேன். என் ஆர்வத்தை எல்லாரும் என்கரேஜ் பண்ணுவாங்க. அப்பல்லாம் அவங்ககிட்ட ‘என்னைப் பாராட்டறீங்க சரி... நீங்க ஏன் உங்க மனைவிக்கோ, அக்கா, தங்கைக்கோ பைக் ஓட்டக் கத்துக் கொடுக்கக்கூடாது’ன்னு கேட்பேன். சிலர் ‘அவங்க பயப்படறாங்க’னு சொல்வாங்க. சிலர், ‘அட ஆமாம்ல... ட்ரை பண்றோம்’னு சொல்வாங்க.

‘சின்ன வயசுல என் அண்ணனோட பைக்கை ஓட்டியிருக்கேன். ரெண்டா வது கியர் வரைக்கும் போயிருக்கேன். அப்புறம் அப்படியே விட்டுட்டேன்’னு சொல்ற பெண்களை நிறைய பார்க்கிறேன். ‘வாங்க, நான் சொல்லித்தர்றேன். விமன் பைக்கர்ஸ் கிளப் ஆரம்பிக்கலாம்’னு கூப்பிட்டா யோசிக்கிறாங்க. `விழுந்துடுவோமோ... அடிபட்டுடுமோ... அதனால தழும்பாயிடுமோ... கல்யாண மாகிறதுல பிரச்னைகள் வருமோ'ன்னு எல்லாம் யோசிக்கிறாங்க. ஆர்வமிருந்தும் தயக்கம் காரணமா யோசிக்கிற யாரும், ஒருவாட்டி ஓட்டிப் பார்த்துட்டாங்கன்னா விடமாட்டாங்கன்னு நம்பறேன்...’’ - நம்பிக்கை அளிப்பவர், தனது பைக்குக்குச் செல்லப் பெயர் வைக்கிற அளவுக்கு சென்டிமென்டல்!

‘மார்லி அண்ட் மீ’னு  ஒரு ஆங்கிலப் படம் வந்தது. ஹீரோவுக்கும், அவனோட நாய்க்குமான அன்பைப் பத்தின படம். அந்த நாயால ஹீரோவுக்குக் கல்யாண வாழ்க்கையே முறிஞ்சுபோகிற அளவுக்குப் பிரச்னைகள் வரும். ஆனாலும், அவன் அந்த நாயை விட்டுக் கொடுக்க மாட்டான். என் வண்டியும் எனக்கு அப்படித்தான். யார் என்ன சொன்னாலும், என்ன பிரச்னை வந்தாலும் இந்த வண்டியை என்கூடவே வெச்சுக்கணும்னு நினைக்கிறேன். அந்தப் படத்தோட தாக்கத்துலதான் என் வண்டிக்கு `மார்லி'னு பேர் வெச்சிருக்கேன். கல்யாணம் பண்ணிக்கிட்டா என் சுதந்திரம் போயிடும்னு ஆரம்பத்துலேருந்தே அதுல எனக்கு விருப்பம் இருந்ததில்லை. இப்படியே வாழத்தான் ஆசை...’’ என்பவர்... கராஜ் வைப்பதையும், பைக்குகளை மாற்றி அமைத்துக் கொடுப்பதையும், பைக் ஓட்டுவதில் ஆர்வமுள்ள பெண்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கிற கவுன்சலிங் கொடுப்பதையும் எதிர்காலத் திட்டங்களாக வைத்திருக்கிறார்.

பயணங்கள் முடிவதில்லை!