Published:Updated:

கண்ணுக்குள் சற்று பயணித்து..!

கண்ணுக்குள் சற்று பயணித்து..!
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணுக்குள் சற்று பயணித்து..!

முகங்கள் ஆர்.வைதேகி - படங்கள்: ப.சரவணகுமார்

கண்ணுக்குள் சற்று பயணித்து..!

ட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தாலும், தடைகளை மீறி தன் விருப்பத்துக்கேற்ப உயர் கல்வியை முடித்தவர்... கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்த பெண்கள் வித்தியாசமாகப் பார்க்கப்பட்ட எழுபதுகளில் துணிந்து தனிமனுஷியாக நின்று சாதித்துக் காட்டியவர்... எந்தப் பிரகடனமும் இல்லாமல் உண்மையான பெண்ணியவாதியாக வாழ்ந்துவருபவர் என வத்ஸலா ஒரு வித்தியாசமான மனுஷி!

``தஞ்சாவூர் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவள். அந்தக் காலகட்டத்திலேயே ஓரளவு பெண்ணியவாதியாக இருந்தவர் என் அம்மா. நிறைய விஷயங்களைப் பற்றிக் கேள்வி கேட்பார். அதுதான் எனக்கான வித்தாகவும் இருந்திருக்கும். ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையின் தோள் மேல் ஏறித்தானே போகிறது?  என் அப்பா ரொம்பவும் நல்லவர். ஆனாலும், தோண்டித்துருவிப் பார்த்தால், அவரும் அந்தக் காலகட்டத்து சராசரி ஆணைப் போல ஆணாதிக்கம் உள்ளவராகவே இருந்தது பல வருடங்களுக்குப் பிறகுதான் புரிந்தது.

பெண்ணியச் சிந்தனைக்கான விதை என் அம்மாவிடமிருந்து எனக்குள் வந்திருந்தாலும், அவருக்கிருந்த தைரியமும் தன்னம்பிக்கையும், நான் வளர்ந்த விதம் காரணமாக எனக்கு இல்லை. திருமணமாகி, குழந்தை பெற்றுப் பல வருடங்களைக் கடந்தபோதும்கூட நான் என்னை மக்கு என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.

புத்திசாலிக்கு இங்கே சொல்லப்படுகிற விளக்கம் என்ன? சட்டென ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்; நிறைய ஞாபகசக்தி இருக்க வேண்டும்... இந்த இரண்டும்தான் புத்திசாலித்தனம் என உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. என் அம்மாவும் அப்படித்தான் நினைத்தார். இந்த இரண்டிலும் நான் தோற்றுவிடுவேன். எனக்கு எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள சற்று நேரம் ஆகும். என் உணர்வுகளைப் பாதிக்கிற விஷயங்கள், அது சந்தோஷமோ, துக்கமோ... அப்படியே ஞாபகம் இருக்கும். ஆனால், அறிவியலில் ஒரு ஃபார்முலாவை என்னால் படித்தவுடன் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், அதில் எந்த உணர்வும் இல்லை. உலகம் எதை புத்திசாலித்தனம் என நம்பியதோ, அதன்படியே இருந்தவன் என் அண்ணன். அந்த வகையில் எங்கள் வீட்டிலும் அண்ணன் என்னைவிட   ஸ்பெஷலாகவே நடத்தப்பட்டிருக்கிறான்.

மும்பையில் தமிழ்வழிப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு வரை படித்தேன். பிறகு, என் அப்பாவுக்கு குஜராத்துக்கு மாற்றலானது. அங்கே தமிழ்வழிப் பள்ளிக் கூடம் இல்லை. என் அண்ணாவைச் சென்னைக்கு அனுப்பி, பாட்டி வீட்டில் தங்கவைத்துப் படிக்க அனுமதித்தார். என்னைப் பக்கத்திலேயே உள்ள குஜராத்தி பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். ஐந்தாவது படிக்க வேண்டிய என்னை நான்காம் வகுப்பில்தான் சேர்த்துக்கொள்ள முடியும் என்றார்கள். ஹெச்.எம்-மிடம் போய் நானே பேசி, என்னை ஐந்தாவது வகுப்பில் சேர்த்துவிடச் சொன்னேன். எல்லாம் சரியானபோது  வீடு மாறினார்கள். பள்ளிக்கூடம், வீட்டிலிருந்து மிகவும் தொலைவில் இருந்தது. அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போனது. படிப்பில் இருந்து நிறுத்தினார்கள்.

அப்போதெல்லாம் குழந்தைகளின் படிப்பு முக்கியமான விஷயமாகவே பெற்றோருக்குத் தோன்றாது. அதிலும் பெண் குழந்தைகளின் படிப்பெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அடுத்த மூன்று வருடங்கள் பள்ளிக்கூடமே போகவில்லை. வீட்டில் தமிழ்ப் பத்திரிகைகள் நிறைய படிப்பேன். அப்படித்தான் தமிழறிவை வளர்த்துக்கொண்டேன். லட்சுமி, கல்கி, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் கதைகளை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலம் மட்டும் தனியே கற்றுக்கொடுத்தார்கள். கல்யாண மார்க்கெட்டில் மதிப்பு ஏறும் என்பது அதன் காரணமாக இருந்திருக்கலாம். `பொம்பளைப் புள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பாம வெச்சிருக்கிறது தப்பு' என அப்பாவின் நண்பர் ஒருவர் சொன்னதால், மூன்று வருட இடைவெளிக்குப் பின் மறுபடி என்னை குஜராத்திவழிப் பள்ளியில் சேர்த்தார்கள். மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன்.

ஸ்கூல் ஃபைனல் முடித்தேன். காலேஜ் படிக்க விரும்பியபோது ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் செய்தால் காலேஜ் போகலாம் என கண்டிஷன் போட்டார் அப்பா.

அது மாதிரியான கண்டிஷன் என் அண்ணனுக்குச் சொல்லப்பட வில்லை. போராட்டங்களுக்குப் பிறகு டபிள்யூ.சி.சி கல்லூரியில் சேர்ந்தேன். அந்தக் கல்லூரியில் எனக்குக் கிடைத்த சுதந்திரமும் நட்பும் கிறிஸ்தவ மதச் சூழலும் என்னை நிறைய சிந்திக்கவைத்தன. அந்த மதத்தின் நன்றி சொல்கிற தன்மையும் மன்னிக்கிற மனப் பான்மையும் எனக்குப் பிடித்தது. எங்கள் வீட்டில் பக்தி என்பது மிதமாகவே இருக்கும். தினசரி கோயிலுக்குப் போகும் பழக்கமெல்லாம் இருந்ததில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் தன் மதத்தின் மீது வைத்திருந்த பற்று, நான் என் மதத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும், எல்லா மதங்களும் அடிப்படையில் நல்ல விஷயங்களைத்தான் வலியுறுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவியது.

கல்லூரியில் பேச்சுப் போட்டி, நாடகம்,  விவாதம் எல்லாவற்றிலும் பங்கேற்பேன். எதையும் விட்டுவைக்கமாட்டேன். அந்த ஆர்வத்தில் படிப்பில் கோட்டைவிட்டு, இரண்டாம் வகுப்பில் தான் பாஸ் செய்ய முடிந்தது. குற்ற உணர்வு தாங்கமுடியவில்லை. அதை அவமானச் சின்னமாக உணர்ந்தேன். இதை  எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என எம்.எஸ்ஸி படித்தேன். `இதுவரை  படிக்கவைத்ததே பெரிது... அடுத்து கல்யாணம்தான்' எனத் தெரிந்ததால் மேலே படிக்கவோ, வேலைக்குப் போகவோ நான் ஆசைப்படவில்லை.

பிறகு திருமணம்... திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. நான் வேலைக்கும் போகக்கூடாது... அதேநேரம் குடும்பச் செலவுகளுக்குப் பணமும் தருவதில்லை. இத்தனைக்கும் நல்ல சம்பளம்தான். ஆனாலும், தட்டுப்பாடு. அந்தத் தட்டுப்பாடு வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது என்பது பிறகுதான் புரிந்தது.

என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பேன்...

`அவன் அடித்தானா,

குடித்தானா?

இன்னொன்று வைத்திருந்தானா..?

இப்படி எந்தக் காரணங்களும் இல்லை.

ஆனால்...'


என வேறு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பேன். இதைத் தவிர பல பிரச்னைகள். தன்மானத்துடன் வாழ முடியாத ஒரு நிலை. உண்மையான அன்பினால் எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்துவிடலாம் என எண்ணி மூன்று வருடங்கள் பொறுமையாக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டேன். அதற்குள் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. கணவனுடன் இருந்தால் என் குழந்தைக்குச் சரியான கல்வியைத் தர முடியாது என உணர்ந்தேன். வெளியே வந்தேன்.

கண்ணுக்குள் சற்று பயணித்து..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி சிங்கிள் உமனுக்கான சவால்களுடன் ஆரம்பித்தது. பெண்ணாக இருந்தது ஒரு சிக்கல் என்றால், விவாகரத்தானவள் என்பது இன்னொரு சவாலாக இருந்தது. கணவரை இழந்த பெண் மீது பரிதாபம் கிடைக்கும் (மரியாதை கிடைக்காது என்றாலும்). அதுவே விவாகரத்தானவள் என்றால் அந்தப் பார்வை மாறுகிறது. 

70-களில் இந்தியாவில் சாஃப்ட்வேர் துறை முதலடி பதித்த காலத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராக வேலைக்குச் சேர்ந்தேன். வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் பல முறை (இரவிலும்கூட) போக வேண்டி இருந்ததால் 30 வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன்; பிறகு ஸ்கூட்டர்.

அப்போது பெண்களுக்கு அதுபோன்ற வேலைகளுக்கு வரத் தகுதி கிடையாது என்கிற பொதுப் பார்வை இருந்தது. ஆகவே, மூளையை உபயோகித்துச் செய்கிற வேலைகளை என்னால் செய்ய முடியாது என்கிற முன்தீர்மானத்துடன் தொடக்கத்தில் எனக்கு அவற்றைக் கொடுக்க மறுத்தார்கள். ‘கீ பன்ச்’ செய்வது போன்ற ரொட்டீன் வேலைகளையே கொடுத்தார்கள்.  அதையெல்லாம் கடந்து முன்னேறினேன். பல தடைகளை மீறி, என்னுடைய 45-வது வயதில் கம்ப்யூட்டர் துறையில் எம்.எஸ் (ஆராய்ச்சிப் பட்டம்) முடித்தேன்.

 ஆண் பெண் உறவை நட்பாகப் பார்க்கிற மனோபாவம் இன்னும் முழுமையாக வரவில்லை. ஆண்களால் மனைவியின் தோழியுடன் நன்றாகப் பேச முடிகிறது, தோழனின் மனைவியுடன் நன்றாகப் பேச முடிகிறது. அதுவே நேரடியாக ஒரு பெண்ணுடன் ஓர் ஆணால் அப்படிப் பேசிப் பழக முடிவதில்லை. அதிலும் விவாகரத்தானவள் என்றால் அது கூடுதல் சிக்கல்!

பெண் வேலைக்கு வருகிறாள் என்றால் பொழுதுபோக்கவோ, பாக்கெட் மணிக்காகவோ என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அவளது சம்பாத்தியத் திலும் குடும்பம் நடக்கும் என்பதை ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

என் பெண் குழந்தைக்கு அப்பா பக்கத்தில் இருந்திருந் தால் சமுதாயத்தில் கிடைத் திருக்கக்கூடிய மதிப்பையும் சேர்த்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு.  கடினமாக உழைத்தேன். ஒருநாள் என்னுடைய திறமையைப் பார்த்து வியந்த சக பெண் ஊழியரும் என் தோழியுமான ஹேமா, `நீ அதிபுத்திசாலி...' எனப் பாராட்டும்வரைகூட `நான் மக்கு' என்றே நம்பிக்கொண்டிருந்தேன். பாராட்டிய தோடு நிறுத்திக்கொள்ளாமல், அதை எனக்கு அவர் புரியவும் வைத்தார். அன்றிலிருந்து எதையுமே ஒருமுறை படித்தாலே எனக்குப் புரியத் தொடங்கியது!

என் வாழ்க்கையின் அடுத்த திருப்புமுனை மற்றொரு தோழியான வ.கீதாவின் மூலம் நிகழ்ந்தது. மார்க்சியச் சிந்தனையாளரான அவர், பெரியாரைப் பற்றியும் எழுதியிருக் கிறார். பெண்ணியம் பற்றிய தெளிவான புரிதல் கொண்டவர். 1990-ல் கோழிக்கோட்டில் நடந்த அனைத்திந்திய பெண்கள் மாநாட்டில் நானும் ஹேமாவும் கீதாவின் உந்துதலால் பங்கேற்றோம். ஆயிரக்கணக்கான பெண்களைச் சந்தித்தேன். அத்தனை பேருக்கும் பிரச்னைகள். காரணம் ஒன்றே ஒன்றுதான் - அவர்கள் பெண்கள்!

கீதாவின் ஊக்கத்தின்பேரில் எழுதத் தொடங்கினேன். `வட்டத்துள்' என்கிற என் முதல் நாவல், என் அம்மா காலத்து மேல்தட்டுப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றியது. ஆணாதிக்க உலகில் அவர்கள் சந்தித்த பிரச்னைகளைப் பற்றிய நாவல் அது. தொடர்ந்து நிறைய கவிதைகள், சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன்.

கணையாழியில் வெளிவந்த என்னுடைய ‘என்று’ கவிதையைப் படித்துவிட்டுப் பாராட்டிய எழுத்தாளர் சுஜாதா, அப்பத்திரி கையின் `கடைசிப் பக்க’த்திலும் தன் `சிறந்த கவிதைகள்’ ஆல்பத்தில் இடம் பிடித்த கவிதை எனக் குறிப்பிட்டிருந்தார். என்னுடைய கவிதைத் தொகுதி ‘சுயம்’ 2000-ம் ஆண்டில் வெளியானது. முதல் நாவல் ’வட்டத்துள்’ 2006-ல் வெளியாகி திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது `கண்ணுக்குள் சற்று பயணித்து' நாவல் வெளிவந்திருக்கிறது. இது என் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. ஆனால், சுயசரிதை அல்ல. அடுத்து சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன்....'' என்கிற வருக்கு எழுத்தாளர் சூடாமணியின் சந்திப்பு காலத்துக்கும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய அனுபவமாக நிறைந்திருக் கிறது. பிரபா ஸ்ரீதேவனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகவிருக்கும் சூடாமணியின் கதைகளின் இரண்டாவது தொகுதியின் தயாரிப்பில் இவரது பங்கும் உள்ளது.

வத்ஸலாவின் பார்வையில் எது பெண்ணியம்?

``காலங்காலமாக செய்யப்பட்ட மூளைச் சலவையின் விளைவாக  ஆண், பெண் இருவர் மனதிலும் ஆணாதிக்கச் சிந்தனை உள்ளது. அதன் காரணமாக  பொதுவாக பெண்ணின் மேல் அதிகாரம் செலுத்த தனக்கு உரிமை இருக்கிறதென்று ஆண் நம்புகிறான். அதே காரணத்தால் பெண் தன் சுயமதிப்பை இழந்து ஆணின் ஒப்புதலுக்காக ஏங்குகிறாள். இதைப் புரிந்துகொள்வதும் மாற்ற முயல்வதும்தான் என் பார்வையில் பெண்ணியம்'' என்கிறவர், திருமண உறவிலிருந்து வெளியே வருகிற பெண்களுக்கு அழுத்தமான செய்தி ஒன்றும் சொல்கிறார். 

``சகித்துக்கொள்ள முடியாத நிலையில்தான் பெண்கள் திருமண பந்தத்தில் இருந்து வெளியே வருகிறார்கள். ஆனால், அந்த உறவு தோற்றுப் போனதாக அவர்கள் யாரும் நினைப்பதில்லை. மாறாக, தாமே தோற்றுவிட்டதாகக் குற்ற உணர்வுகொள்கிறார்கள். நானும்கூட அப்படித்தான் என்னைத் தோற்றவளாக நினைத்துக்கொண்டிருந்தேன். வாழ்க்கையில் ஜெயித்த பிறகுதான் நான் தோற்றுவிட்டதாக நம்பவைக்கப்பட்டதை உணர்ந்தேன்!''