Published:Updated:

களத்தில் ஒரு காதல்!

களத்தில் ஒரு காதல்!
பிரீமியம் ஸ்டோரி
News
களத்தில் ஒரு காதல்!

யதார்த்தம் பொன்.விமலா - படங்கள் உதவி: வள்ளியூர் குணா

களத்தில் ஒரு காதல்!

‘`காலைக்கடனை தவறா மல் கழிப்பது அவசியம்னு சொல் றோம். நாம கழிக்குற கடனெல்லாம் எங்கே போகுது? அதையெல்லாம் யார் அள்ளுகிறார்கள்? இதை எல்லாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

மலம் அள்ளும் நேரத்தில் மூக்கைப் பொத்தாமல் முகத்தைச் சுளிக்காமல் இரண்டு நிமிடங்கள் வேடிக்கை பார்க்க முடிகிறதா? மனிதன் மலத்தை மனிதன் அள்ளும் நிலைதான் இங்கே தொடர்கிறது. இப்படி மலம் அள்ளும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்கள்  எத்தனை பேர்? அவர்களுக்கான நியாயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமான போராட்ட வடிவில்தான் தொடர்கிறதே தவிர, நியாயம் கிடைத்தபாடில்லை.

`ஒவ்வொரு பிரச்னைக்கும் வாய் நிறைய பேசுகிறோம். ஆனால், களத்தில் இறங்கி இம்மாதிரி யான தோழர்களுக்கு நாம் என்ன செய்தோம்?’ என்கிற சொரணை வந்த நேரத்தில்தான் அவர்களுக்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் உதித்தது...’’

- பெரும் வரவேற்பைப் பெற் றுள்ள ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் இயக்குநராகக் களத்தில் இறங்கிப் பேசுகிறார் திவ்யா. வழக்கறிஞர், சமூகச் செயல்பாட்டாளர் என பல முகங்கள் திவ்யாவுக்கு. போராட்டக் களங்களில் இறங்கி விட்டால் எதையும் ஒருகை பார்த்து விடுவோம் என்கிற திவ்யாவைப் போலவேதான், அவரின் காதல் இணையர் கோபாலகிருஷ்ணனும்!

காதல் திருமணம் செய்து கொண்ட இருவர் பொதுவாழ்வில் ஈடுபடுவதையும், பொதுவாழ்வில் ஈடுபட்ட இருவர் காதல் திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து களப்பணியில் ஈடுபடுவதையும் பார்த்திருப்போம். இந்த இரண்டுமே இருவேறு ரகம். ஒரே கருத்துடைய இருவர் வாழ்க்கைப் பயணத்தில் இணையும்போது அந்தப் பயணம் செல்லும் பாதை, எத்தனை துயர்வரினும் வழிநெடுகிலும் அன்பை மட்டுமே தன்வசம் வைத்திருக்கும். அந்த வகையில் திவ்யா - கோபாலகிருஷ்ணனின் காதல் முதல் கல்யாணம் வரையிலான பந்தம் அழகானது. இனி அவர்களே பேசக் கேட்போம்.

``அகில இந்திய மாணவர் கழகத்தின் மதுரை உறுப்பினராக நானும், காஞ்சிபுரம் உறுப்பினராகத் தோழர் கோபாலகிருஷ்ணனும் இருந்தோம். 2011-ல் சங்கத்துக்கான மாநிலக் கூட்டம் நடந்தப்பதான் நாங்க சந்திச்சோம். அவரைச் சந்திக்கும் முன்பு என் வாழ்க்கைப் பயணம் ஒரு சிறிய வட்டத்துக்குள் சுருங்கியிருந்ததா... இல்லை அந்தச் சந்திப்பு என் வட்டத்தை  பெரியதாக்கியாதான்னு சரியா சொல்ல முடியலை!

எனக்குச் சொந்த ஊர் அருப்புக்கோட்டை. எங்க அப்பா பஞ்சு மில் தொழிலாளி. பஞ்சு மில்லுக்குச் சொந்தமான பள்ளியில படிச்சேன். அந்த மில்லுக்குச் சொந்தமான குடியிருப்புப் பகுதியில்தான் எங்க வீடு இருந்தது. அது ரொம்ப சிறிய பகுதி. அங்க இருந்த சூழல் ஒரு கிராமத்தில் வளர்ந்த மாதிரியான அனுபவத்தைக்கூட எனக்குக் கொடுக்கலை. அதற்கும் கீழான வாழ்க்கைமுறை அது.

பள்ளிக் காலங்களில் வாசிப்பு மீதான ஆர்வம் காரணமாக அம்பேத்கர், பெரியார் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி பள்ளிக் காலத்திலேயே கம்யூனிச இயக்கத்தில் உறுப்பினராக இருந்தேன். அதைத் தொடர்ந்து உலக சினிமாக்கள், ஆவணப்படங்கள் பார்ப்பதன் மூலமா, என்னோட நட்பு வட்டமும் அதிகரிச்சது.

நான் அரசு வேலையில சேரணும்கிறது தான் அப்பாவோட கனவா இருந்துச்சு. அதுல எனக்கு உடன்பாடில்லாததால், விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சேன்.  அதையும் இரண்டு மாதங்கள்கூட தொடர முடியல. நான் படிச்ச மதுரை, இந்தோ-அமெரிக்கன் கல்லூரியில் அந்த நேரம், மாணவர் போராட்டம் நடந்தது.

களத்தில் ஒரு காதல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தப் படிப்பை பாதியில விட்டுட்டு சட்டக்கல்லூரியில சேர்ந்துப் படிக்க ஆரம்பிச்சேன். படிப்பு ஒருபக்கம், கிராமங்களுக்குச் சென்று களப்பணிகள் ஒருபக்கம்னு கல்லூரிக் காலங்களை எனக்கான நாள்களாக முழுமைப் படுத்திக்கிட்டேன். இந்த நேரத்தில்தான் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் தவறிட்டாங்க. ஈடுகட்ட முடியாத பேரிழப்பு’’ - சற்று குரல் தேயும் திவ்யாவை அன்பாக அரவணைத்துப் பேசுகிறார் கோபாலகிருஷ்ணன்.

‘`சமூகப்பணியின் மீது திவ்யா காட்டுகிற ஆர்வம் எனக்குப் பிடிச்சிருந்தது. காஞ்சிபுரத்துல `நோக்கியா' கம்பெனியில டெக்னீஷியனா வேலை பாத்துட்டு இருந்த நேரம். அறிமுகம் ஆனதில் இருந்தே என்னோடு நல்ல தோழமையோடு மனம்விட்டுப் பேசுவாங்க. திடீர்னு ஒருநாள் ’என்னைக் கல்யாணம் பண்ணிக்குறீங்களா’ன்னு கேட்டுட்டாங்க. ஆரம்பத்துல பயந்துட்டேன். `அவங்களுக்கு ஏன் என்னைப் பிடிக்குது'ன்னு யோசிச்சுப் பார்த்தா, அவங்களுக்குப் பிடிச்ச `வெண்ணிற இரவுகள்’ புத்தகத்தை நான் பரிசா கொடுத்திருக்கேன். ரெண்டு பேரோட வாசிப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்துச்சு. பேசிப் பேசி, கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து வீட்ல சொன்னப்ப ஒப்புக்கிட்டாங்க. ஆனா, ஒரு சின்ன கண்டிஷன் இருந்துச்சு!’’ - கோபால் விட்டதில் இருந்து தொடர்கிறார் திவ்யா...

‘`எனக்கு மேக்கப் போடுறது பிடிக்காது. கல்யாணத்துக்கு அலங்காரம் பண்ணிக்கணும்னு அவர் வீட்ல சொன்னப்ப என்னால ஏத்துக்க முடியலை. ஒருவழியா சம்மதிக்க வெச்சு, சின்ன அரங்கத்துல சீர்திருத்த முறைப்படி திருமணம் செஞ்சுக்கிட்டோம். முக்கியமான உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகிட்டாங்க. 2013-ல் கல்யாணம் நடந்தப்ப கல்லூரியில் படிச்சுட்டு இருந்தேன். அதுக்கப்புறம் கோபால் காஞ்சிபுரத்துல வேலையை விட்டுட்டு மதுரைக்கு வந்துட்டார். கல்யாணத்துக்குப் பிறகான பயணத்தையும் ஒரே வரியில் சொல்லிட முடியாது!’’

``அதை நான் சொல்கிறேன்'' என தொடர்ந்தார் கோபால்... ‘` மதுரைக்கு வந்ததும் மீன் கடை போட்டேன், அதுக்கப்புறம் எல்.ஐ.சி ஏஜென்ட், காளான் மார்க்கெட்டிங், சர்வீஸ் இன்ஜினீயர்னு ஒரு வேலையிலும் நிரந்தரமா இல்லாம இப்போ ஸ்டூடியோ வெச்சிருக்கிறேன். களப்பணியில் முழு நேரமா ஈடுபடணும்கிற எண்ணம் இருந்தாலும், கடனில்லாத குடும்ப நிர்வாகத்துக்கு ரெண்டு பேர்ல ஒருத்தர் வேலை செய்ய வேண்டியது அவசியமா இருக்கு.

இப்ப திவ்யா ஆவணப்படம் சார்ந்த பணிகள்ல ஈடுபட்டிருக்காங்க. நான் மதுரையில் இருக்கேன். மக்களுக்கான பிரச்னைகளை முன்னெடுத்துட்டுப் போகும்போது, குடும்பம் தான் முக்கியம்னு சொல்லி தடுக்காமல் ஆதரவு கொடுப்பதுதான் ஒரு நல்ல இணைக்கு அழகாக இருக்கும்னு நினைக்கிறேன்...’’ - கோபாலின் அன்பிலும் பேச்சிலும் `இணை’ என்பதன் அர்த்தம், ஈடு இணையில்லாமல் தெரிகிறது!

அன்போடு களப்பணியும் இணைந்தால் ஆனந்தமே!

களத்தில் ஒரு காதல்!

என்ன கொடுமை இது..!

திவ்யா இயக்கிய ‘கக்கூஸ்’ ஆவணப்படம் பிப்ரவரி 26 அன்று சென்னையில் திரையிடப்பட்டது. துப்புரவு பணியாளர்களின் அவலங்களையும் வலிகளையும் பதிவு செய்து, அத்தொழிலாளர்களுக்கு அரசும் சமூகமும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது இந்தப் படம்.

மலம் அள்ளும் தொழிலை இழிவாகப் பார்ப்ப தோடு, அவர்கள் செய்யும் வேலைக்கேற்ற ஊதியமும் கொடுப்பதில்லை. குத்தகைதாரர்களின் கையில் சிக்கி தினக்கூலிக்கு வேலைபார்க்கும் அநீதி நிகழ்ந்துகொண்டிருக்கும் அதே வேளையில், `இழிவான தொழில்' என்று சமூகம் புறக்கணிக்கும் துப்புரவுப் பணியிலும் ஆண்களுக்கு தரும் கூலியைவிட பெண்களுக்குக் குறைவான கூலியே வழங்குகிறார்கள். `மனிதன் மலத்தை மனிதன் அள்ளக்கூடாது' எனச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், அதிலும் பல ஓட்டைகள்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே காலம்காலமாக இந்தத் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அரசாங்கத்தையும் சமூகத்தையும் பொட்டில் அடித்து கேள்வி கேட்கிறது இந்தப் படம். துப்புரவுத் தொழிலாளர்கள் எந்தப் பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலம் அள்ளுவதையும், சுத்தம் செய்வதையும் பார்க்கும்போது எந்த ஒரு மனிதராக இருந்தாலும் கண்ணில் நீர்கோப்பதைத் தவிர்க்க முடியாது.