Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

அசத்தலான சம்பளத்தில் ராணுவ அதிகாரி வேலை !

கொஸ்டீன் ஹவர்

அசத்தலான சம்பளத்தில் ராணுவ அதிகாரி வேலை !

Published:Updated:
##~##

''சிறு வயதிலிருந்தே என் மகள், மகன் இருவருமே ராணுவத்தில் அதிகாரிகளாக சேர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வத்துடன் வளர்ந்தவர்கள். தற்போது, மகள் கல்லூரி மேற்படிப்பில் இருக்கிறாள். மகன் பள்ளிப் படிப்பை முடிக்க இருக்கிறான். மகாராஷ்டிர மாநிலம், புனே அருகே இருக்கும் 'தேசிய பாதுகாப்புக் கல்வி நிறுவனம்' பற்றி சொன்னதிலிருந்து... மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறான் மகன். அந்நிறுவனம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய ஆர்வமாக இருக்கிறோம்'' என்று கேட்டிருக்கிறார் கோயம்புத்தூர், ராமநாயகி செல்வம். அவருக்காக விளக்கம் தருகிறார், இத்தகைய நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகளை வழங்கும் சென்னையைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் எஸ்.பாஸ்கர்.

''நீங்கள் குறிப்பிடும் 'நேஷனல் டிஃபன்ஸ் அகாடெமி' (National Defence Academy),, புனே அருகில் கடக்வாசலா என்ற இடத்தில் செயல்படுகிறது. முப்படை ராணுவத்துக்கும் அதிகாரிகளை உருவாக்கும் பொருட்டு ஆயத்தக் கல்வியைத் தருவது இந்நிறுவனத்தின் நோக்கம். ப்ளஸ் டூ முடித்த மாணவர்கள் இதில் சேர்ந்து தங்களுக்கான கல்லூரிப் படிப்புடன்... ராணுவப் பயிற்சியையும் மேற்கொள்வார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஸ்டீன் ஹவர்

ராணுவ அதிகாரி என்பது மிகவும் பெருமைக்கும் திருப்திக்கும் உரிய ஒரு பதவி. தைரியம், வீரம், கட்டுப்பாடு என சிறப்பான வாழ்நாள் அனுபவத்தை தரக்கூடிய பதவி. அதிலும், பள்ளிப் படிப்புக்குப் பின்னர் நேரடியாக ராணுவமே அளிக்கும் கல்லூரிப் படிப்பையும் ராணுவப் பயிற்சி யையும் ஒருசேரப் பெற்று ராணுவ அதிகாரியாவது, இந்தக் கல்வி நிறுவனத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகிறது.

விரும்பிய கல்லூரிப் படிப்பு, ராணுவப் பயிற்சி, கல்விக் கட்டணம், தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அந்த நிறுவனமே பார்த்துக் கொள்கிறது.

இந்நிறுவனத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையமான 'யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' நடத்துகிறது. காலை மற்றும் மாலை என ஒரே நாளில் இரு வேளைகளில், தலா இரண்டரை மணி நேரம் நடைபெறும். காலையில் நடக்கும் முதல் தாள் முழுக்கவும் கணிதப் பாடத்தைச் சார்ந்தது. 300 மதிப்பெண்களுக்கான அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளை இது கொண்டிருக்கும். மாலையில் நடக்கும் இரண்டாவது தாள்... 'ஜெனரல் எபிலிட்டி' சார்ந்தது. இதற்கான மொத்த மதிப்பெண்கள் 600. இதில், 200 மதிப்பெண்கள் ஆங்கில பாடம் சார்ந்தும், மீதமுள்ள 400 மதிப்பெண்கள் கரன்ட் அஃபயர்ஸ், ஜெனரல் சயின்ஸ், ஹிஸ்டரி, ஜியோகிரபி பாடங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது.

தேர்வு மொழி ஆங்கிலம் மட்டுமே. கல்வித்தகுதி, மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ப்ளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வியை முடித்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பத்தொன்பது வயதுக்குள் இருக்க வேண்டும். இடையில் எந்த வகுப்பிலும் ஃபெயில் ஆகியிருக்கக் கூடாது. இந்தியக் குடிமகனாக இருப்பது அவசியம். உடல் நலத்தேர்வும் உண்டு.

சுமார் 300 மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யப்படுகிறார்கள். விரும்பும் கல்லூரிப் பாடங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். பாடங்களிலும் பெரிதாக வித்தியாசங்கள் இருக்காது.

கொஸ்டீன் ஹவர்

மூன்று வருடப் படிப்பு முடிந்ததும் முப்படைகளுக்குமான தனித்தனிப் பயிற்சி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பப்படுவார்கள். டேராடூனில் இயங்கும் ராணுவத்துக்கான இந்தியன் மிலிட்டரி அகாடெமி (IMA),, ஹைதராபாத்தில் இயங்கும் விமானப்படைக்கான ஏர் ஃபோர்ஸ் அகாடெமி (AFA) மற்றும் கேரள மாநிலம், எலிமலா என்ற இடத்தில் இயங்கும் நேவல் அகாடெமி (Naval Academy) போன்றவற்றுக்கு அனுப்பப்படுவார்கள்.

ஒன்றரை ஆண்டு பயிற்சி காலத்தில் இங்குதான் அவர்கள் முழுமையான ராணுவ அதிகாரிகளாக பட்டை தீட்டப்படுவார்கள். இப்பயிற்சி முடித்தவர்களுக்கு 'லெஃப்டினென்ட்' என்கிற நிலையில் அதிகாரியாக நேரடி பதவி கிடைக்கும். வருமான ரீதியாக பல்வேறு சலுகைகள், உதவிகள் உள்ளடக்கிய இந்த பணிக்குத் துவக்க சம்பளமே 40 ஆயிரம் என்பதால், போட்டி அதிகம்.

எல்லோருக்குமே 'நேஷனல் டிஃபன்ஸ் அகாடெமி' யில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்துவிடாது என்பதால், கல்லூரிப் படிப்பை முடித்து, மேற்படி முப்படை பயிற்சி நிறுவனங்களான இந்தியன் மிலிட்டரி அகாடெமி, ஏர்ஃபோர்ஸ் அகாடெமி மற்றும் நேவல் அகாடெமி ஆகியவற்றில் சேர, 'பாதுகாப்பு பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு'  (CDS- Combined Defence Service Examination)எனும் தனி நுழைவுத்தேர்வும் மத்திய தேர்வாணையம் மூலமே நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்தத் தேர்வை கடப்பவர்களுக்கு, தொடர்ந்து 5 தினங்கள் நடைபெறும் பர்சனாலிட்டி டெஸ்ட் உண்டு. உடல் மற்றும் உளநலம், குழுமனப்பான்மை, தலைமைப் பண்பு போன்றவை பரிசோதிக்கப்படும். என்.சி.சி. பயிற்சி பெற்றிருந்தால், இந்தத் தேர்வுகளில் முன்னுரிமை மதிப்பெண்களுக்கு வாய்ப்புண்டு.

இதுவரை நாம் பார்த்த ராணுவ அதிகாரிகளுக்கான தேர்வு வாய்ப்புகள் அனைத்துமே முழுக்க ஆண்களுக் கானவை. குவாலியர் மற்றும் சென்னை கிண்டியில் செயல்படும் ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாடெமியில், பெண் அதிகாரிகளுக்கும் பயிற்சி உண்டு.

கூடுதல் விவரங்களுக்கு, மத்திய தேர்வாணையத்தின் இணைய தளம் (www.upsc.gov.in/) உங்களுக்கு உதவும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism