Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்?

அவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்?
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்?

அவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்?

அவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்?

அவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்?

Published:Updated:
அவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்?
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்?

`பெண்ணே... நாக்குக்கு ருசியாகச் சமைத்துப் போடு... அதன் வழியாக உன் கணவனின் இதயத்தையே நீ தொட முடியும்' என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.சமையல் கலையை நன்கு தெரிந்துகொண்டால் ஒரு பெண் சுலபமாக கணவன் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பதற்காகச் சொல்லப்படும் விஷயம் இது.

கலைகள் என்பதே ஆண், பெண் இருவருக்கும் பொது வானதுதானே? அதனால் சமைப்பது ஆணா, பெண்ணா என்ற விஷயத்தை விட்டு விடுவோம். சமையல் கலையில் கைதேர்ந்தவர்களாக விளங்கும்போது தனக்குப் பிரியமான வர்களை மிகச் சுலபமாக ஈர்க்க முடியும் என்பதே இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் விஷயம்.

அவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்?

சமையல் கலை மட்டுமல்ல... பாட்டு, நடனம், ஓவியம், அலங்காரம் என்று கணவன்-மனைவி இருவரும் கலைகளை அதிகமாக அறிந்திருக்கும்போது தம்பதிக்குள் நெருக்கமும் அதிகம் ஏற்படும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

இழைய இழைய மனதை உருக்கும்படி கணவன் பாடினால் மனைவி மெழுகாக உருகி, அவனோடு ஒட்டிக்கொண்டுவிட மாட்டாளா, என்ன? மனைவியின் வீணை வாசிப்பில் மயங்கி உள்ளம் கொள்ளை போகாத கணவன் உண்டா, என்ன?

நுட்பமான கலைகள் மொத்தம் அறுபத்து நான்கு என்கிறார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு கலையுமே ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கணவன் - மனைவியின் நெருக்கத்துக்குக் காரணமாக அமைகிறது. அதனாலேயே தாம்பத்யத்தை ஒரு பாடமாக எழுதிய வாத்ஸ்யாயனர் தனது ‘காமசூத்ரா’ நூலில் இந்த அறுபத்து நான்கு கலைகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லி, ‘கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் சந்தோஷமாக வைத்துக்கொள்ள இந்தக் கலைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்று சிபாரிசும் செய்கிறார்.

கலைஞர்கள் மென்மையானவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்று சொல்வார்கள். காரணம், கலைஞர்கள் ரசனைமிக்கவர்கள். பாடலோ, சமையலோ, கவிதையோ... தாங்கள் கையாளும் கலையை முதலில் தாங்களே ரசித்து, அனுபவித்து திருப்தியுடன் செய்வார்கள். பிறகு, அதை பிறர் ரசிக்க வழங்குவார்கள். ரசித்து ரசித்து ஒரு காரியத்தைச் செய்யும் மனசு, நுட்பமாகத்தானே இருக்கும்?

கணவனும் மனைவியும் ஒருவர் கை யாளும் கலையை இன்னொருவர் ரசித்து மகிழும்போது, அது இருவருக்குமே இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பரவச நிலையையும் தருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்?

அதுசரி... அதென்ன அறுபத்துநான்கு கலைகள்?

1. ஆடல்: நடனமாடுவது... பரத நாட்டியம், குச்சுப்பிடியிலிருந்து கிராமிய, வெஸ்டர்ன் நடனங்கள் வரை எல்லாமே இந்தக் கலையுடன் பொருந்தும். முகத்தில் உணர்ச்சிகளையும் உடலில் நளினத்தையும் கம்பீரத்தையும் கொண்டுவரும்போது பிரியமானவர்களின் மனம் மயங்கும்.

2. பாடல்: வாயால் பாடக்கூடிய அனைத்து வகையான இசையும் இந்தக் கலையில் அடக்கம். அதிகம் பழகாதவர்களைக்கூட நெருங்கிய காதலர்களாக ஆக்குகிற திறன் ‘பாடல்’ கலைக்கு உண்டு. அப்படியெனில், தாம்பத்யத்தில் அது இன்னும் எவ்வளவு தூரம் நெருக்கத்தை அதிகப்படுத்தும் என்று எண்ணிப் பாருங்கள்!

3. இசை: வீணை, வயலின், கிடார் போன்ற வாத்தியங்களை இசைப்பது... பொதுவாகவே, மேடையில் அரங்கேறும் ஆடல், பாடல், இசை, நடிப்பு போன்ற கலைகள், கண்ணுக்கு மறைவாகச் செய்யப்படும் மற்ற கலைகளைவிட விரைவாகவே மற்றவர்களைக் கவர்ந்துவிடும்.

4. ஓவியம்: கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் ஊடலின்போது, வார்த்தை களின்றிப் பேசிக்கொள்வதற்கு பலருக்கு ஓவியம்தான் மொழியாகிறது!

5. கவிதை:
கவிஞர்களை உருவாக்குவதே காதல்தானே? காதலில் ஈடுபட்ட மனம், தனக்கு உகந்தவரைப் பற்றி நினைக்கும்போதே, அந்த எண்ணங்கள் கவிதை வரிகளாக உருப் பெற்று வரும். கவிதை என்பது எழுதியவரின் மனசு அல்லவா? அதனால், ஒருவர் எழுதும் கவிதையை இன்னொருவர் படிப்பதும் சுகானுபவமே!

6. கோலம்:
கண்முன் மாயாஜாலம் போல உருவாகும் கோலங்கள், போடுபவர்மீது மற்றவருக்கு ஒருவித ஈடுபாட்டை ஏற்படுத்தி விடுகின்றன. தவிர, குனிந்து நிமிர்ந்து போடு வதால், ரசிக்கத் தோன்றும் சிக்கென்ற அளவான உடலமைப்பு கிடைக்கிறது.

7. வீட்டு அலங்காரம்:
இன்டீரியர் டெக ரேஷன் என்று சமீப காலங்களில் கொண்டாடப் படும் கலைதான் இது. ரசனைக்குரிய வீடு மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாயிற்றே!

8. உடையலங்காரம்: அக்கா வீட்டுக் கல்யாணத்துக்குப் பெரிய பார்டர் ஜரிகை வைத்த பட்டுப் புடவை, பக்கத்து வீட்டுப் பெண் சீமந்தத்துக்கு சிம்பிளான பிரின்டட் சில்க், ஆபீஸ் கான்ஃபரன்ஸுக்கு கம்பீரமான காட்டன் புடவை, அலுவலகத்துக்கு சுடிதார் என்பனபோன்ற உடைகள், அவற்றின் நிறங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதில் ஆரம்பித்து, ‘குண்டா இருக்கிறவங்களை கறுப்பு கலர் ஒல்லியா காட்டுமாம்’ என்று கணவனுக்குப் பரிந்துரை செய்வது வரை  சகலமும் இந்தக் கலையில் அடங்கும்.

9. ஒப்பனை: வட்ட முகத்துக்கு எந்தவிதமாக மேக்கப் போட்டால் பொருந்தும்... என்ன கலர் லிப்ஸ்டிக் போடலாம்... இந்தச் சேலைக்கு என்ன கலர் நெயில் பாலிஷ் போடலாம்... என்ன விதமாக தலைப் பின்னல் போடலாம்... இப்படி அழகு உணர்ச்சியோடு ரசித்துச் செய்வது, தனக்கு மட்டுமல்ல... மற்றவர்களுக்கு அழகுபடுத்திப் பார்ப்பதும் இதில் அடங்கும். கணவனோ, மனைவியோ ஒருவர் மற்றவருக்கு ஒப்பனை செய்துவிடும்போது, அது அவர்களால் அதிகம் ரசிக்கத்தக்கது ஆகிறது.

10. ஆபரண அலங்காரம்: எதற்கு எது பொருத்தம் என்று மிக நுட்பமாகப் பார்த்துப் பார்த்து செலக்ட் செய்து வாங்குவதில் இருந்து ரசனைக்குரிய வகையில் அணிவது வரை இந்தக் கலைதான். அலங்காரமே மனசை பரவசப்படுத்தத்தானே..?

11. மலர் தொடுத்தல்: பெண்களுக்கு மிக இயல்பாகவே கை வரும் கலை இது. கணவனின் மனதையும் மயக்கும்.

12. மலர் அலங்காரம்:
மலர்களை அவற்றின் நிறங்களுக்கேற்ப அடுக்கி, பூங்கொத்துகள் (பொக்கே), மலர்க்கிரீடங்கள், மலர் அலங்காரங்கள் செய்வது.

13. வாசனை திரவியம்: வாசனையைப் பிரித்தறிவது, வாசனை திரவங்கள் தயாரிப்பது, எந்தச் சூழ்நிலைக்கு அல்லது யாருக்கு எந்த விதமான வாசனைப் பொருள் பொருந்தும் என்று தெரிந்துவைத்திருப்பது.

14. தையல்: கர்ச்சீஃப் முதல் கவுன் வரை, ஜாக்கெட் முதல் சட்டை வரை தைக்கவும் வெட்டவும் கற்றிருத்தல்.

15. பூத்தையல்: கலர் கலரான நூல் கொண்டு விதவிதமான எம்ப்ராய்டரி, ஸ்வெட்டர், பூக்கள் பின்னுதல் போன்றவை.

16. புதிர்: விடுகதைகள், வேடிக்கைக் கணக்குகள், புதிர் ஜோக்குகள் கைவசம் வைத்திருப்பது.

17. மூங்கில் வேலை: மூங்கில், பனையோலை, சணல், கயிறு போன்ற பொருட்களால் கண்ணைக் கவரும் பொருட்கள் செய்தல்.

18. தச்சு: மரப் பொம்மைகள், மர வேலைப்பாடுகள் பற்றிய நுணுக்கத்தைத் தெரிந்து வைத்திருப்பது.

19. பாத்திர அலங்காரம்:
பானைகளிலும், வெள்ளி, பித்தளைப் பாத்திரங்களிலும் ஓவியங்கள் வரைதல்.

20. வீடு கட்டுதல்: வீட்டின் எந்த அறை எப்படி இருக்க வேண்டும், வெளிச்சம் எங்கிருந்து வந்தால் போதுமானதாக இருக்கும், வாசல் எப்படி இருக்க வேண்டும் என்பன போன்ற இன்ஜினீயரிங் திறமையும், வாஸ்து சாஸ்திர நிபுணத்துவமும் பெற்றிருப்பது.

21. தோட்டம்: செடி கொடி, மரங்களுக்கு எப்போது உரமிட வேண்டும், எப்படிப் பராமரிக்க வேண்டும், எப்போது விளைச்சல் தரும் போன்ற விஷயங்கள் தெரிந்திருப்பது.

22. களிமண்: மண்ணையோ, பஞ்சையோ வைத்து பொம்மைகளையும், கலைப் பொருட்களையும் உருவாக்குவது.

23.பளிங்கு: கல்லில் செதுக்கிச் சிற்பம் வடிப்பது, நுணுக்கமாகப் பளிங்குக் கல்லில் கலைப் பொருட்கள் செய்வது போன்றவை.

24. சமையல்: அறுசுவை உணவுகளைப் பதமாக, ருசியாகச் செய்யத் தெரிந்து வைத்திருத்தல்.

25. பானம் தயாரிப்பு: ஜூஸ், சர்பத் வகைகள் தயாரிப்பது.

26. அகராதி: கஷ்டமான வார்த்தை களுக்கான அர்த்தம் தெரிந்து வைத்திருப்பது, பல்வேறு அகராதிகளைப் பற்றிய அறிவு.

27. வாசிப்பு: இதிகாசத்தில் ஆரம்பித்து நவீன இலக்கியம் வரை திருத்தமாக, அழகாக வாசித்தல்.

28. வரலாறு: வரலாற்று நிகழ்ச்சிகளையும் புராண நிகழ்ச்சிகளையும் தெரிந்து வைத்திருத்தல்.

29. போர்: போருக்கான ஆயுதப் பயிற்சி யையும் சட்டதிட்டங்களையும் தெரிந்து வைத்திருத்தல். போர் என்பது நாடுகளுக்கு இடையே மட்டும்தானா? மனிதர்களுக்கு இடையே ஏற்படும் யுத்தங்களையும் புத்திசாலித்தனமாகக் கையாளுதல்.

30. பிராணி சண்டை:
கோழி, ஆடு, மாடு போன்ற பிராணிகளை வளர்த்து, சண்டையிட்டு ஜெயிக்கக் கற்றுத்தருதல்.

31. பறவைப் பயிற்சி: புறாக்களைத் தூது செல்லப் பழக்குவது, பந்தயங்களுக்குத் தயார் செய்வது, கிளிகளுக்குப் பேசச் சொல்லித் தருவது போன்றவை.

32. ஆபரண மதிப்பு: தங்கம், வெள்ளி நகைகள் எப்படிப்பட்ட தரம் வாய்ந்தவை, என்ன மதிப்புக்கு விலைபோகும் போன்ற விஷயங்களை அறிந்திருத்தல்.

33. ரசாயனம்: ரசாயனப் பொருட்கள், உலோகங்கள் போன்றவற்றோடு என்ன சேர்த்தால் எது கிடைக்கும் என்கிற அறிவு.

34. திலகம்: விதவிதமான நெற்றித் திலகங்கள், கண் மைகள் உருவாக்குவது, அவற்றை அழகுற டிசைன் டிசைனாக வைத்துக்கொள்வது.

35. தரையலங்காரம்: தரை விரிப்புகளை எந்த இடத்தில், என்ன கலரில், எப்படிப் போடுவது என்று தெரிந்து வைத்திருத்தல்; தேவைக்கேற்ப, சீஸனுக்கேற்ப விதவிதமான மொசைக், டைல்ஸ், கிரானைட் பதித்து தரையலங்காரம் செய்வது.

36. மிமிக்ரி: பிரபலங்கள் போலவே பேசுவது, குயில், ரயில் போல சத்தம் செய்வது.

37. நீச்சல்: விதவிதமான நீச்சல் முறைகள், தண்ணீரிலேயே விளையாடும் முறைகள் போன்றவை.

38. ஜலதரங்கம்: சிறு கிண்ணங்களில் நீர் நிரப்பி, குச்சிகளால் தட்டி எழுப்பப்படும் இனிய இசையறிதல்.

39. புகழ்தல்: புகழ்ச்சி என்று தெரியாதபடி புகழ்ந்து மற்றவர்களை உருகவைத்தல்.

40. உடற்பயிற்சி: யோகா, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்து, உடலைச் சிக்கென்று வில்லாக வளையும்படி வைத்திருத்தல்.

41. சூதாட்டம்:
எந்தவிதமான சூதாட்டத்திலும் சாமர்த்தியமாகப் பங்கேற்கத் தெரிந்து வைத்திருப்பது.

42. உள் விளையாட்டுகள்: தாயக்கட்டம், பல்லாங்குழி, செஸ், கேரம், டேபிள் டென்னிஸ் போன்று வீட்டுக்குள்ளே விளையாடும் விளையாட்டுகளைத் தெரிந்துவைத்திருப்பது.

43. மாறுவேடம்: ‘யார் இவர்?’ என்று புதிர் போட்டி வைக்கும் அளவுக்கு ஒருவர் தன் உருவத்தை வேறு ஒருவர் போல மாற்றிக் கொள்ளுதல்.

44. மொழிபெயர்ப்பு: வேற்றுமொழிப் புத்தகங்கள், பாடல்களை அர்த்தமும் உணர்வும் மாறாமல் மொழிபெயர்த்துச் சொல்லத் தெரிந்திருத்தல்.

45. பதில் சொல்லும் திறன்: எடக்கு மடக்காகவோ, அறிவுபூர்வமாகவோ யார் எந்தக் கேள்வி கேட்டாலும் சரியான பதிலடி கொடுப்பது.

46. வார்த்தைகள்: ஒரே வார்த்தைக்கான பல மாற்றுச்சொற்களையும் தெரிந்துவைத்திருப்பது.

47. குணாதிசயம் அறிதல்:
ஒருவரது கண்களையும் உடல் அசைவுகளையும் வைத்தே அவர் நல்லவரா, ஏமாற்றுப் பேர்வழியா என்று தெரிந்துகொள்வது.

48. மாயாஜாலம்: கர்ச்சீஃபில் இருந்து பூங்கொத்து வரவழைப்பது, ஒரு பொருளை மறையச் செய்வது போன்ற வேடிக்கையான வித்தைகள் தெரிந்திருத்தல்.

49. சகுனம்: மனிதர்களையும் சூழலையும் சைக்கலாஜிக்கலாக அலசி ஆராய்வதன் மூலம், இன்ன செயல் நடந்தால், தொடர்ந்து இன்னின்னது நடக்கும் என்று சொல்லுதல்.

50. எந்திரங்கள்: வேலைகளைச் சுலபமாகச் செய்யக்கூடிய புதுப்புது எந்திரங்களைத் தயாரிக்கவும் இயக்கவும் கற்றிருத்தல்.

51. குழந்தைகள் விளையாட்டு: பொம்மைகளைக் கொண்டு குழந்தைகளுக்கான விளையாட்டுகளை  நிகழ்த்துவது.

52. நினைவாற்றல்: எளிதாகவே ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருப்பது.

53. வேற்றுமொழி: பல்வேறு நாடுகளின் மொழிகளை அவர்களின் கலாசாரத்தோடு அறிந்துவைத்திருத்தல்.

54. மலர் அலங்கார வண்டிகள்: ரதங்கள், தேர்கள், கண்காட்சி வண்டிகள் போன்றவற்றை மலர்களைக்கொண்டு அலங்கரித்தல்.

55. செய்யுள்: செய்யுள் மற்றும் பாடலை ஒரு வரி சொன்னவுடனே முழுதையும் ஒப்பிக்கும் திறன் பெற்றிருத்தல்.

56. மறைபொருள் செய்யுள்: செய்யுள், கவிதையை வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு அர்த்தம் வரும்படியும், அதை வேறு வகையில் சேர்த்தோ, பிரித்தோ பார்த்தால் வேறொரு அர்த்தம் வரும்படியும் எழுதுவது.

57. அலங்கார சாமர்த்தியம்: விலை குறைந்த பொருட்களைக்கொண்டே அலங்கரித்து, மதிப்புமிக்கது போல மற்றவர்களை வியக்கவைப்பது.

58. குறியீட்டு மொழி: சங்கேத  வார்த்தைகள், குறியீடுகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தல்.

59. மந்திர தந்திரங்கள்: கெட்டவர் களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவோ, பிறர் மத்தியில் தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ளவோ சின்னச்சின்ன மந்திர தந்திரங்களைக் கற்றிருத்தல்.

60. செவியலங்காரம்: காதுகளை அலங்கரிக்கும் விதவிதமான அணி கலன்களைச் சரியாகப் பயன்படுத்துதல்.

61. படுக்கை அலங்காரம்: மூட், தேவை, சீதோஷ்ணத்துக்கு ஏற்ப படுக்கையை அலங்கரிக்கும் திறன்.

62. உணர்ச்சியைத் தூண்டுதல்: பார்வையாலும் உடையாலும் நடையாலும் வார்த்தைகளாலும் தம்பதியரில் ஒருவரின் உணர்வுகளை மற்றவர் கிளர்ந்தெழச் செய்வது.

63. விரல் விளையாட்டு: ஒருவர் உடலில் மற்றவர் விரல்கள் மூலம் விளையாடி உணர்ச்சிகளைத் தூண்டுதல்.

64. மசாஜ்: உடல் புத்துணர்ச்சி பெறும் வகையில் மசாஜ் செய்துவிடுவது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism