Published:Updated:

உன்னால் முடியும் பெண்ணே - வானம் காத்துக் கிடக்கிறது!

உன்னால் முடியும் பெண்ணே - வானம் காத்துக் கிடக்கிறது!
பிரீமியம் ஸ்டோரி
உன்னால் முடியும் பெண்ணே - வானம் காத்துக் கிடக்கிறது!

படம்: ரா.ராம்குமார்

உன்னால் முடியும் பெண்ணே - வானம் காத்துக் கிடக்கிறது!

படம்: ரா.ராம்குமார்

Published:Updated:
உன்னால் முடியும் பெண்ணே - வானம் காத்துக் கிடக்கிறது!
பிரீமியம் ஸ்டோரி
உன்னால் முடியும் பெண்ணே - வானம் காத்துக் கிடக்கிறது!

த.வி.வெங்கடேஸ்வரன் (மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞானி), எம்.ஆர்.ஷோபனா

உன்னால் முடியும் பெண்ணே - வானம் காத்துக் கிடக்கிறது!

ரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய இந்தியாவின் சாதனைக்குப் பின்னால் உழைத்த விஞ்ஞான மனிதி ஜெஸ்சி ஃப்ளோரா. நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் எட்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகிறார். இந்தத் துறையில் தனது 34 ஆண்டுகால அனுபவங்களை மிக உற்சாகமாகப் பகிர்ந்துகொள்கிறார் 

எந்தச் சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாது...

எந்த வாய்ப்பையும் இழந்துவிடக் கூடாது!


“என் அப்பா ஜான் அகல்ரட்டி, நாகர்கோவிலில் வட்ட வளர்ச்சித் துறை அதிகாரியாக இருந்தார். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதில் சிறப்பாகச் சிந்திக்கவும், வித்தியாசமான கோணத்தில் அணுகவும்  அவர்தான் கற்றுத்தந்தார். பள்ளியில் படிக்கும்போதே எனக்கு இயற்பியலின் மீது ஈர்ப்பு இருந்தது. ஹோலிகிராஸ் கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக் படித்தேன். கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் ‘இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்’ கம்பெனியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபரும், ஒரே பெண்ணும் நான்தான். முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை, தொலைதூரத்தில் உள்ள ஊருக்குத் தனியாக அனுப்புவது பற்றி கற்பனை செய்யமுடிகிறதா? என்னுடைய முதல் போஸ்ட்டிங் ஹைதராபாத். ‘அவ்வளவு தூரத்துக்கு அனுப்பாதீங்க’ என பதறிய உறவினர்களிடம் ‘அவ போகட்டும்’ என்று தைரியமாகச் சொன்னவர் என் அப்பா. இன்று இந்த உயரத்தை நான் அடைய காரணம் அவர்தான்’’ என்கிற ஃப்ளோராவின் வார்த்தைகளில் அப்பாவின் மீதான நன்றியும் குதூகலமும்.

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெடில் ஒரு வருடம், விமானங்களுக்காக செயல்படும் ‘விங்க்ஸ் கன்ட்ரோலர் சிஸ்டம்’ பிரிவில் பணி, 1983-ம் ஆண்டு இந்திய விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாகச் சேர்ந்தது என ராக்கெட்டாக பாய்ந்திருக்கிறார் ஃப்ளோரா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வாய்ப்புகள் வரும்போது அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் கொள்கை. நான் வந்த புதிதில் இங்கு மொத்தமே மூன்று பெண்கள்தான் வேலை பார்த்தார்கள். ஆனால், நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோவுக்குச் சொந்தமான மகேந்திரகிரி மையத்தில் 78 பெண்கள் பணிபுரிகிறார்கள். எங்கள் வேலைக்கு இதுதான் நேரம் என்பதெல்லாம் கிடையாது. இந்தச் செயல்திட்டத்தில், பி.எஸ்.எல்.வி 2-வது கட்டத்துக்கான மின்னணு தொடர்பான வேலைகளுக்காக, இரவு பகலாகப் பணியாற்றினோம். நான் வீட்டுக்குச் செல்வதற்கே இரவு மூன்று மணியாகிவிடும். நாங்கள் வேலை பார்க்கும் பகுதிகளில் காற்று பலமாக வீசும். இந்தப் பணிச்சூழலில் செயல்படுவது மிகவும் கடினம். அதையெல்லாம் மீறி ஜெயிக்கும்போது கிடைக்கிற சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

என் கணவர் தொழிலாளர் துறையில் துணை ஆணையராக இருந்து, ஓய்வு பெற்றவர். என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார். அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமில்லை!” என்று மகிழ்வுடன் பேசுகிறார் ஜெஸ்சி ஃப்ளோரா.

இப்போது, இவர் இன்டெலிஜென்ஸ் கன்ட்ரோலர் பாடப்பிரிவில் பிஹெச்.டி படித்துவருகிறார். ‘`எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. முதன்முறையாக நான் கல்லூரி சென்றபோது, ‘நீ ஒரு பெண் என்பதாலே  எந்தச் சலுகையும் எதிர்பார்க்கக் கூடாது; ஒரு பெண் என்பதால் எந்த வாய்ப்பையும் இழந்துவிடக் கூடாது’ என்று என் அப்பா சொன்னார். இந்த வார்த்தைகளே என்னை இன்றுவரை இயங்கவைத்துக்கொண்டிருக்கிறது” என்று புன்னகைத்தபடியே, தன் தளத்துக்குக் கம்பீரமாகக் கிளம்புகிறார் ஜெஸ்சி ஃப்ளோரா.

பெண்ணை நம்புங்கள்!

நள்ளிரவு தாண்டிய நேரம். இரவு வானின் கொள்ளை அழகைக் கண்டு ரசிக்க அந்த நபர் காவலூர் பகுதியில் இருக்கும் வைனு பப்பு தொலைநோக்கி கூடத்துக்கு வந்திருந்தார். அரசு அதிகாரி.

நன்கு இருட்டிய பிறகுதான் தொலை நோக்கியில் வானத்தின் அழகைக் காண முடியும். அதனால், ஓய்வறையில் ஓய்வெடுத்த அந்த அதிகாரி, இரவானதும் தொலைநோக்கி இருக்கும் கூடாரத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே சில ஊழியர்கள்  பூமியின் சுழலும் வேகத்துக்கு ஏற்ப தொலைநோக்கியைத் திருப்பும் மோட்டாரை இயக்கிக்கொண்டிருந்தனர். பூமியின் சுழல் வேகத்தில் தொலைநோக்கியை இயக்கினால்தான் இரவு வானில் இருக்கும் ஒரு வான்பொருளை எப்போதும் தொலைநோக்கி பார்த்தபடியே இருக்கும். நீண்ட காலம் புகைப்படக் கருவியின் துளையைத் திறந்துவைத்து அதிக ஒளியை உள்ளே வரவழைக்க முடியும். கண்களுக்குப் புலப்படாத மங்கலான வான் பொருள்களும் புகைப்படங்களில் பதிவாகும்.

தொலைநோக்கிக் கூடத்துக்கு வந்த அதிகாரி அங்கிருந்த ஊழியரை அழைத்தார். ஊழியரோ `உஸ் உஸ்' என்று அமைதி காக்கும்படி கூறி சன்னக் குரலில் கூறினார்... “கொஞ்சம் பொறுங்கள்...  எங்கள் வானியல் அறிஞர் தொலைநோக்கியில் பணி செய்துகொண்டிருக்கிறார். அவர் கீழே வந்ததும், உங்களை அனுமதிக்கிறேன்.”  அதிகாரியும் அமைதியடைந்து ஊழியர் தந்த டீயை குடித்து காத்திருந்தார்.

உன்னால் முடியும் பெண்ணே - வானம் காத்துக் கிடக்கிறது!

வெளிச்சமாக இருந்தால் மங்கலான பொருள்கள் கண்களுக்குப் புலப்படாது... அதனால், தொலைநோக்கி இருக்கும் அறையில் சிவப்பு நிற மங்கலான விளக்கு மட்டுமே இருக்கும். பெரிய தொலைநோக்கிகளில் கண்வைத்துப் பார்க்கும் இடம் நிலத்தை தொட்டபடி இருக்காது. அதற்காக ஏணி போன்ற ஓர் அமைப்பு இருக்கும். அதைக் கீழேயும் மேலேயும் உயர்த்த முடியும்.  அந்த ஏணியின் மேலே ஏறி அமர்ந்துகொண்டுதான் தொலைநோக்கியில் வானத்தைப் பார்க்க முடியும்.

சிறிது நேரம் கழித்து `தட் தட்' என ஏணியில் வானவியலாளர் கீழே இறங்கும் சத்தம் கேட்டது. ஊழியர்கள் மரியாதையுடன் எழுந்து நின்றனர். `வானவியலாளரைப் பார்க்கப் போகிறோம்... வானத்தைப் பார்க்க போகிறோம்' என்கிற பரபரப்பில் அந்த அதிகாரியும் மகிழ்ச்சியுடன், தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்.

ஏணியிலிருந்து கீழே இறங்கிய உருவத்தை அருகில் கண்டதும் அதிகாரியின் முகத்தில் ஈயாடவில்லை... பேச நா எழவில்லை.

“நீயா..?” என்று ஒருமையில் பேசிய அந்த அதிகாரி, “நீ ஒரு பெண்... இரவில் வெளி ஆண்கள் இருக்கும் இடத்தில் தன்னந்தனியாக இருக்கறே.... பயமே இல்லையா? வெட்கமே இல்லையா?” என்று கேட்டார் அந்த அதிகாரி.

ஏணியிலிருந்து கீழே இறங்கிய அந்தப் பெண், இன்று இந்திய வானியல் இயற்பியல் நிறுவனத்தின் ஆய்வு டீன் ஆக இருக்கும் ஜிசி அனுபமா.  சிரித்துக்கொண்டே இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர் தொடர்ந்தார்....

“1987-88-ம் வருஷம்... அப்போதுதான் நான் பிஹெச்.டி ஆய்வை முடித்து இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். இளம் வயது. அந்த நபர் அப்படி என்னிடம் கூறியபோது ஒருநிமிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை; ஒருகணத்தில் சுதாரித்துக்கொண்டேன்... ‘இவர்கள் எனது சக ஊழியர்கள், வெளியாட்கள் இல்லை. பெண் என்றால் வானவியல் ஆய்வு செய்யக்கூடாதா?’ என்று கோபமாகவே கூறினேன். ‘உங்க அப்பா, அம்மா எப்படி அனுமதித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. என் மகளாக இருந்திருந்தால் அனுமதித்திருக்க மாட்டேன்’ எனக் கூறினார் அதிகாரி. நான் ‘நல்லவேளை, நான் உங்கள் மகளாக பிறக்கவில்லை... பெற்ற மகள் மீது நம்பிக்கை வைக்கமுடியாத தந்தைக்குப் பிறந்ததற்காக உங்களுக்கு மகள் இருந்தால் அவருக்காகப் பரிதாபப்படுகிறேன்’ என்று கோபத்துடன் கூறினேன்!”

இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற பல நாடுகள் சேர்ந்து உருவாக்கும் 30 மீட்டர் தொலைநோக்கிக்குப் பிரதிபலிப்புக் கண்ணாடி தயாரிக்கும் தலைமைப் பொறுப்பில் இப்போது இருக்கிறார் அனுபமா. இந்தத் தொலைநோக்கிப் பணி முழுமையடைந்ததும் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக இது இருக்கும்.

வானியலில் இனி 50 - 50...

பத்து வயது சிறுமியாக குடும்பத்துடன் உறவினர் ஒருவர் திருமணத்துக்கு கொல்கத்தா சென்ற பிரியங்கா சதுர்வேதிக்கு பெரும் காதல் பிறந்தது வானவியல் மீது!

“என் தந்தை ரயில்வே தொழிலாளி. புனேவுக்கு அருகே உள்ளே டோன்ட் எனும் ரயில்வே ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். எங்கள் ஊரில் உயர்நிலைப் பள்ளி கூட கிடையாது. அதுதான் முதல் தடவை நான் பெரிய நகரத்துக்குச் சென்றது.  கொல்கத்தாவின் பெரிய பெரிய வீடுகள், பஸ், ட்ராம், மெட்ரோ ரயில் எல்லாமே வியப்பாக இருந்தன. வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் எனது உறவினர்கள் சிலர் என்னிடம் “வா... பிர்லா கோளரங்கம் செல்லலாம்” என்று அழைத்தார்கள். என்னவென்று தெரியாமல்தான் அந்த கோளரங்கத்துக்குச் சென்றேன். அங்கே  இரவு வான் காட்சியைக் கண்டபின் எனது மனதில் ஆவல் பிறந்தது. உறுதியும் ஏற்பட்டது... எப்படியும் நான் படித்து வானவியலில்தான் ஆய்வில் ஈடுபடுவேன் என்று!”

உன்னால் முடியும் பெண்ணே - வானம் காத்துக் கிடக்கிறது!

திரும்ப வந்த பிரியங்காவுக்குப் பெரும் சவால் காத்திருந்தது. அவரது ஊரில் ப்ளஸ் டூ படிப்பதற்கே பள்ளி எதுவும் இல்லை. மேலே படிக்க வேண்டும் என்றதும், அவரின் தந்தை `புனேவில் ஹாஸ்டலில் சேர்த்து படிக்கச் வைக்கிறேன். ஆனால், எல்லாம் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.  எங்களை விட்டுப் பிரிந்து இருக்கிறோம் என்று அழக்கூடாது'' என்று கண்டிஷன் போட்டார்.  

புனேயில் அவர் படித்த பள்ளியில்  ஒருமுறை, வானவியல் விஞ்ஞானிகள் உரையாற்றினர்.  அவரது ஆர்வம் அதிகரித்தது. புனே கல்லூரியில் இயற்பியல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் குஜராத்தில் உள்ள இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் பிஹெச்.டி வாய்ப்பு கிடைத்தது. `வானவியல் ஆசை உன்னை இன்னும் விடவில்லையா?' என்று செல்லமாகக் கடிந்த இவரின் அம்மா, `நீ ஒரு பெண்... இரவில் தன்னந்தனியாக வானத்தை ஆராய்ச்சி செய்வது சரிப்படுமா?' என்று சற்றே பயந்தார். இறுதியில், `உனது விருப்பம்தான் எங்களுக்கு முக்கியம்... உன்னால் முடியும் என்றால் போய் படி' என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் பெற்றோர்.

இன்று பிரியங்கா தனது பிஹெச்.டி பட்டப் படிப்பை முடித்து மும்பையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேரத் தேர்வு பெற்றுள்ளார்.

``பூமி, செவ்வாய், வியாழன் போல எட்டு கோள்களும், புளூட்டோ போன்ற பல சிறு கோள்களும் நமது சூரியனைச் சுற்றிவருகின்றன. அதுபோல ஏனைய விண்மீன்களை சுற்றியும் கோள்கள் இருக்கலாம். அவற்றை புறக்கோள்கள் என்பார்கள். அதுபோன்ற புறக்கோள்களை தேடும் ஆய்வில்தான் நான் ஈடுபட்டு வருகிறேன்” என்கிறார் பிரியங்கா, மகிழ்ச்சி பொங்க!  

இவரும் இவரின் பேராசிரியரும் இணைந்து ஒரு புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது வானவியலாளர் மத்தியில் உலாவும் ஒரு பரபரப்புச் செய்தி.  இது உண்மையெனில், இந்தியாவில் இந்திய ஆய்வுக்கூடத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட முதல் புறக்கோள் என்ற பெருமை இவருக்கு வந்துசேரும். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது புன்முறுவலுடன் சொல்கிறார்... “அறிவியல் ஆய்வுகளை ஆய்வு இதழ்களில் பரிசீலித்து பிரசுரிக்கும் வரை வெளியே கூறுவது ஒழுங்கு அல்ல... ஆய்வு முடிவு பிரசுரம் ஆகும்போது என்ன என்று பார்த்துக் கொள்ளுங்கள்.”

இப்போது இந்தியா முழுவதும் ஐந்நூறு வானவியலாளர்களே இருப்பார்கள். இதில் பெண்களின் பங்கு பத்து முதல் இருபது சதவிகிதம் வரைதான்.

“எதிர்காலத்தில் பத்து மீட்டர் தொலைநோக்கி, முப்பது மீட்டர் தொலைநோக்கி, சூரிய தொலைநோக்கி, ஆத்தியா விண்கலம் ரேடியோ தொலைநோக்கி, ஈர்ப்பு விசை தொலைநோக்கி என பல புதிய திட்டங்கள் வருகின்ற வேளையில் இவரின் தரவுகளை முழுமையாக பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ள இன்றுள்ளதைப் போல பத்துமடங்கு அதிக வானவியலாளர்கள் தேவை என்கிறார் பேராசிரியர் அனுபமா. அவ்வாறு புதிய புதிய இளம் வானவியலாளர்கள் வந்து சேரும்போது அதில் சரிபாதி பெண்களாக இருப்பார்கள் என்றும் புதிய நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆம்... இன்றைய மாணவிகள் வரவை நோக்கி வானம் காத்துக் கிடக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism