Published:Updated:

நரை எழுதும் சுயசரிதம்! - உள்ளதைச் சொல்கிறேன்

நரை எழுதும் சுயசரிதம்! - உள்ளதைச் சொல்கிறேன்
பிரீமியம் ஸ்டோரி
நரை எழுதும் சுயசரிதம்! - உள்ளதைச் சொல்கிறேன்

விக்னேஸ்வரி சுரேஷ் - ஓவியம்: கண்ணா

நரை எழுதும் சுயசரிதம்! - உள்ளதைச் சொல்கிறேன்

விக்னேஸ்வரி சுரேஷ் - ஓவியம்: கண்ணா

Published:Updated:
நரை எழுதும் சுயசரிதம்! - உள்ளதைச் சொல்கிறேன்
பிரீமியம் ஸ்டோரி
நரை எழுதும் சுயசரிதம்! - உள்ளதைச் சொல்கிறேன்

“உன்னோட அம்மாவா, இல்ல என்னோட அம்மாவா... யார் அழகுன்னு சொல்லு பார்ப்போம்?” என்று ஒருமுறை மகளைக் கேட்டார் என் கணவர். மொத்தக் குடும்பமும் அவள் சொல்லப்போகும் பதிலுக்காகக் காத்திருந்தது. `பாட்டி செல்லம்' என்பதால், அவரைத்தான் சொல்லப்போகிறாள் என்றே நினைத்தேன். “அம்மாக்களுக்குள்ள எங்கம்மா அழகு, பாட்டிகளுக்குள்ள உங்கம்மா அழகு” என்றாள். இதைச் சொல்லும்போது அவளுக்கு வயது ஆறோ, ஏழோதான். அவள் சொன்னதில் நல்ல விஷயம் ஒன்று இருக்கிறது.

நரை எழுதும் சுயசரிதம்! - உள்ளதைச் சொல்கிறேன்

இளமையாகத் தெரிய ஆசைப்படும் ஆண், பெண் விகிதம் இருபாலரிலும் சமமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். எனினும், நரையோடு இருக்கும் நடிகரைக் கல்லூரி மாணவராக  ஏற்றுக்கொள்ளும் உலகம், நடிகைக்கு அம்மாவாக புரமோஷன் கொடுத்துவிட்டுத்தான் ஓய்கிறது. பழைய புகைப்படங்கள் எப்போதும் அழகாகத் தெரிவதற்குக் காரணம்... அவை நாம் திரும்பிப்போகத் துடிக்கும் வயதைக் காட்டுவதே!

ஒரு முடி திருத்தமும், டி-ஷர்ட்டும் போதும்... ஆண்களை இளமையாக்கிக்காட்ட! பெண்களுக்குத்தான் அதிக மெனக்கிடல் தேவைப்படுகிறது. எந்த பிராண்ட் தலைச்சாயம் உபயோகிக்கலாம் என்பதற்கே முடியைப் பிய்த்துக்கொள்ளுமளவுக்கு  அறிவுரைகள் வந்துவிழுகின்றன. அதுவும் தவிர, அதை உபயோகித்தால் மீதி முடியும் தானாகவே போய்விடுகிறது.

இளமையாகக் காட்டிக்கொள்ள சமூக வலைதளங்கள்தாம் சரியான இடம். எப்படியும் நீங்களாக வெளியிடும் புகைப்படம்தான் நீங்கள். அதையும் தாண்டி, பிடித்த இசையமைப்பாளர் அனிருத், பிடித்த நடிகை எம்மா வாட்சன் மற்றும் ஆங்கில கெட்ட வார்த்தைகளோடு கூடிய பதிவுகளைப் பகிர்ந்தால், உங்களது வயது இருபது, இருபத்தைந்துக்குள் என்பது முடிவாகிவிடும். இப்படி இளமையாக இணையதளத்தில் எத்தனையோ பேர் வாழ்கிறார்கள் என்றால் நம்புவது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆயினும், அதுதான் உண்மை. இவர்களின் அதிகபட்ச ஆசை, பெண் அல்லது ஆண் ஐ.டி-களோடு `சாட்' செய்வதுதான். நேரில் போவதைத் தவிர்த்துவிடுவார்கள் எனினும், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வாழ்க்கையை மேற்கொள்வது என்பது பலரையும் மன அழுத்தத்தில் தள்ளுகிறது.

நம் வயதுக்குரிய அழகோடு இருப்பதே பெருமைதான்.  `நரை எழுதும் சுயசரிதம்... அதில் அன்பே ஆனந்தம்' என்கிற வைர வரிகள் எனக்குப் பிடித்தமானவை. அழகை ஆராதிப்போம்... அதே நேரம், ஒவ்வொரு வயதிலும் ஓர் அழகு மிளிர்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம். பாரத ரத்னா எம்.எஸ் அம்மாவின் எந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலும், அந்த வயதுக்கான அழகோடுதான் இருக்கிறார்.

போலியாக நம் வயதைக் குறைத்துக் காட்ட முற்படுவது, நம் மதிப்பை நாமே குறைப்பதாகும். விளம்பர யுகத்தில், சிறுகுழந்தை வேகமாக வளர வேண்டும் என்பார் கள்; சிறுமிகளைப் பையன்கள் திரும்பிப் பார்க் கும்படி இருக்க வேண்டும் என்பார்கள்; வெளிர் நிறமுடைய இளைஞிகளுக்குத்தான் வேலை கிடைக்கும் என்பார்கள். இவை முட்டாள்தனமான கட்டுக்கதைகள்! இதன் தொடர்ச்சியே, நரை இருந்தால் உங்கள் கணவர் திரும்பிப் பார்க்க மாட்டார் என்பதும்! உண்மையில் இதுபோன்ற விளம்பரங்கள் தாம்பத்யத்தைக் கொச்சைப்படுத்துகின்றன. நரை தோன்றும் வயதில் உள்ள தம்பதிகள் அந்நியோன்யமாக, ஒருவரை ஒருவர் முழுவதும் புரிந்துகொண்டவர்களாக வாழ்கிறார்கள்.

ஆங்கிலத்தில் ‘Aging gracefully’ என்பார்கள். மெள்ள வயதாவதைக் குறிக்கும் பாராட்டு வாக்கியம் அது.  எனவே,  வயதை வரவேற்போம்.

நல்ல எண்ணங்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சிறந்த உடை தேர்வு மற்றும் தன்னம்பிக்கையும், சிறு புன்னகையுமே போதும்... நம்மை இளமையாகக் காட்ட! நாம் வயதை மறைக்க எந்த அவசியமும் இல்லை. ஏனெனில், அது சொல்வது, பூமியில் இத்தனை நாள்கள் வாழ நாம் கொடுப்பினை பெற்றிருப்பதை! தலையைவிட மை அதிகம் தேவைப்படுவது வயதுக்குத்தான்... அது வாய்மை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism