Published:Updated:

அம்மா என்றால் அன்பு!

அம்மா என்றால் அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
அம்மா என்றால் அன்பு!

நெகிழ்ச்சிபொன்.விமலா - படங்கள் : ப.சரவணகுமார்

அம்மா என்றால் அன்பு!

நெகிழ்ச்சிபொன்.விமலா - படங்கள் : ப.சரவணகுமார்

Published:Updated:
அம்மா என்றால் அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
அம்மா என்றால் அன்பு!

ன் டி.வி-யில் ’அசத்தப் போவது யாரு?’ நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகி, இப்போது விஜய் டி.வி-யில் ’கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியில் நடுவராக கலக்கிக்கொண்டிருப்பவர் ஈரோடு மகேஷ். ஸ்டாண்ட் அப் காமெடியன், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடுவர், நடிகர் என எப்போதும் தன்னை பிஸியாக வைத்திருக்கிறார் மகேஷ்.

அம்மா என்றால் அன்பு!

‘`அட்றா... அட்றா...'' என `கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சியில் கவுன்ட்டர் கொடுத்து ஆடியன்ஸை சிரிக்கவைக்கும் மகேஷுக்கு அவர் குடும்பத்தில் பக்கபலமாக இருப்பது மூன்று பெண்கள்... அம்மா மீனாட்சி, மனைவி ஸ்ரீதேவி, மகள் அமிழ்தா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காதல் மனைவி ஸ்ரீதேவி முன்னாள் தொகுப்பாளினி. மகேஷின் ப்ளஸ் - மைனஸ்களைச் செல்லமாகத் தட்டிச் சொல்வதில் கில்லாடி. இரவோ, பகலோ... எந்த நேரமாக இருந்தாலும், சின்னச் சின்ன ஐடியாக்கள் கொடுத்து மகேஷை ஷூட்டிங்குக்கு தயார் செய்து அனுப்பும் எனர்ஜி பூஸ்டரும் இவரே.

அன்பு மகள் அமிழ்தா, பெயருக்குத் தகுந்த மாதிரியே க்யூட் செல்லம். அப்பாவும் அம்மாவும் 8 அடி பாய்ந்தால்,  இந்தக் குட்டிப் பெண் 16 அடி பாய்வதில்லை. அப்படியே 8 X 8 = 64 அடி. அவ்வளவு  சுட்டி. அப்பா பேசுவதைப் போலவே டப்ஸ்மாஷ் செய்து காட்டும் அமிழ்தா, இந்த வீட்டின் செல்ல இளவரசி.

மகேஷின் அம்மா மீனாட்சியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். மகேஷ் தொலைக்காட்சியிலோ, நேரடியாகவோ செய்யும் காமெடிகளைப் பார்ப்பவர்கள் புன்னகைக்கலாம்; சத்தமாகச் சிரிக்கலாம்; கைதட்டி ரசிக்கலாம். மகேஷின் அம்மாவோ, அவர் செய்யும் அந்த காமெடிக்கு மற்றவர்கள் எப்படிச் சிரிக்கிறார்கள் என்பதைப் பார்த்துதான், தானும் சிரித்துக்கொள்வார். காரணம், தன் மகனின் குரல் எப்படி இருக்கும் என்றே இவருக்குத் தெரியாது.


கருவுற்றிருந்தபோது, 28 வயதிலேயே, கேட்கும் திறனை இழந்தவர் மீனாட்சி. ஆனால்,  மனம் உடைந்து போய்விடவில்லை. தனக்கு ஏற்பட்ட குறையை ஒரு குறையாகவே கருதாமல், அடுத்தடுத்துப் பிறந்த இரண்டு மகன்களையும் அத்தனை அக்கறையோடு வளர்த்திருக்கிறார்.

நாம் என்ன பேசுகிறோம் என்பதை ஓரளவு புரிந்துகொண்டாலும், பெரும்பாலான கேள்விகளை எழுதிக்காட்டி, அவரிடம் உரையாடினோம்.

‘`ரெண்டு பிள்ளைங்களுமே எனக்கு உசுரு. 28 வயசு வரைக்கும் எல்லாரையும் போலவே நல்லாதான் காது கேட்டது. அதுக்கப்புறம்தான் பிள்ளை வயித்துல இருந்தப்ப கொஞ்சம் கொஞ்சமா காது கேட்க முடியாமப் போயிடுச்சு. கணவரோட அனுசரணை இல்லாட்டி நான் அவங்களைச் சரியா கவனிச்சிருக்க முடியுமானு தெரியலை. எனக்கு வாசிப்பு மேல ரொம்பப் பிரியம். விகடன் வாசகி நான். அதோடு, நிறைய புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்பேன். படிச்சதை கட் பண்ணி பத்திரமா வெச்சுக்குவேன். அதையெல்லாம் பசங்களுக்குக் காட்டி விளக்கிச் சொல்வேன். என் பிள்ளைங்களும் நான் என்ன சொல்ல வரேன்னு எப்பவும் காது கொடுத்துக் கேட்பாங்க.

காது வழியா எந்தச் சொல்லையும் கேட்க முடியாதே.... அதனால எனக்கு எழுத்துகள் மேல பிரியம் அதிகமாயிடுச்சு. படிக்கும் வார்த்தைகள்தாம் அதற்கான ஒலி வடிவத்தை எனக்குள்ள கொடுத்துச்சு. எழுத்து மட்டும் இல்லாம போயிருந்தா, இந்த வாழ்க்கையில நான் நிறைய விஷயங்களை ரசிக்காம போயிருப்பேன்’’ என்கிற மீனாட்சி அம்மா, தன் வாழ்வின் மகிழ்வான தருணங்களையும் பகிர்கிறார்.

‘`என் மகன்கள் ரெண்டு பேருமே படிப்புல சுட்டி. ரெண்டு மருமகள்களுமே எனக்கு மகள்கள் போலத்தான். அவ்ளோ அன்பாவும் அக்கறையாவும் இருக்காங்க. பேரக்குழந்தைகளோட விளையாடும்போது உலகமே மறந்து போகும்.

பேத்தி அமிழ்தாவோட சொப்பு விளையாட்டுக்கு நான்தான் துணை.  சாதம், குழம்பு, கூட்டு, பொரியல்னு செஞ்சு  ஊட்டி விடுவா. எனக்குக் காது கேட்காது என்பதாலே... நான் புரிஞ்சுக்குற மாதிரி என் கண்ணுக்கு நேரா வந்து வாயசைச்சுப் பொறுமையா சொல்வா. இந்த மாதிரி அன்பான குடும்பம் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும்...’’ -  பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே செல்லமாக ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொள்கிறாள் அமிழ்தா.

``இந்த உலகத்துல நம்முடைய அன்பை யார்கிட்ட வேணும்னாலும் காட்டிடலாம். ஆனா, எந்தத் தயக்கமும் இல்லாம நம்மோட கோபத்தைக் காட்ட ஓர் உறவு இருக்குன்னா, அது அம்மாதான். என்னோட அதிகபட்ச கோபங்களைத் தாங்கிய ஜீவன் என் அம்மாதான்'' என நெகிழ்ச்சியோடு பேசத் தொடங்குகிறார் மகேஷ்.

``எங்க அம்மா அவங்களோட தேவைகளைக் குறைச்சுக்கிட்டு, சிக்கனமா இருந்து எங்களைப் படிக்க வெச்சாங்க. ஓரளவுக்கு உதடு அசைவுகளை வெச்சு நாம என்ன பேசுறோம்னு புரிஞ்சுப்பாங்க. நான் குழந்தையா இருந்தப்ப, பசிக்குதுன்னு பல நாள்கள் அழுதிருக்கேன். அந்த நேரத்துல காது கேட்காட்டியும் நான் அழுவறதைப் புரிஞ்சுக் கிட்டு என் பசியைப்போக்கி யிருக்காங்க. `இதெல்லாம் எப்படி உங்களுக்கு  தெரிஞ் சது?’னு அம்மாகிட்ட கேட்டா,  `என் பிள்ளை எப்ப அழும்னு எனக்குத்
தெரியாதா'னு சொல் வாங்களாம். இதெல்லாம் அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

அம்மா என்றால் அன்பு!

அம்மாவுக்குக் குறை இருந்தாலும், எங்களை எந்தக் குறையும் இல்லாமதான் வளர்த்தாங்க. காலைல பள்ளிக்கு அனுப்புறதுல ஆரம்பிச்சு, வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்குறது வரை எல்லாமே  நேர்த்தியா பண்ணுவாங்க. கல்லூரியில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டினா, கூடவே வந்து எனக்கு நல்ல தோழியா இருப்பாங்க. அம்மாவோட பங்கு இல்லாட்டி 2001-ல் ஆனந்தவிகடன்ல மாணவப் பத்திரிகையாளர் முதல் இன்னிக்கு விஜய் டி.வி வரை  என்னை அடையாளப்படுத்தியே இருக்க முடியாது...’’ - கண்ணில் நீர் பெருகப் பேசும் மகேஷ், சில வேண்டுகோள்களையும் முன்வைத்தார்.

``பொம்மை வாங்கித்தரும் பெற்றோரைவிட பொம்மைகளாகவே மாறும் பெற்றோரைத்தான்  குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும். அதனால வாழ்க்கையில எத்தனை கஷ்டம் வந்தாலும் அதையெல்லாம் தூர வெச்சுட்டு குழந்தைகளை நேசிக்கணும். இது எங்க அம்மாகிட்ட நான் கத்துக்கிட்டது.

ஒருநாள், அம்மா ரோட்ல நடந்து போனப்ப பின்னாடி இருந்து ரொம்ப நேரமா ஹாரன் அடிச்சிருக்காங்க. அவங்களுக்குக் காது கேட்காததால, கவனிக்காமலே நடந்து போயிருக்காங்க. ஹாரன் அடிச்சவர் அம்மாவைத் திட்டி
இருக்கார். அதை நினைச்சு எங்கிட்ட வருத்தப்பட்டாங்க அம்மா. நமக்கு முன்னாடி யாராவது ஹாரன் அடிச்சும் நகராம போயிட்டே இருந்தாங்கன்னா, அவங்க திமிர் பிடிச்சவங்கன்னுதானே சொல்றோம். என் அம்மாவைப்போல அவங்க இருக்கவும் வாய்ப்பிருக்கு இல்ல? அதனால யாரையும் எதற்கும் திட்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சுப் பண்ணலாமே..! இது என்னோட தாழ்மையான வேண்டுகோள்...''  - மகேஷ் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஏதோ புரிந்தவராக அவர் கைகளை அழுந்தப் பிடிக்கிறார் மீனாட்சி அம்மா.

அறையில் இருந்த நிசப்தம் அந்த அழுத்தத்தில் பேசிக்கொண்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism