Published:Updated:

சேலையில் சிலம்பம்!

சேலையில் சிலம்பம்!
பிரீமியம் ஸ்டோரி
சேலையில் சிலம்பம்!

பழைமையில் புதுமைஆர்.வைதேகி

சேலையில் சிலம்பம்!

பழைமையில் புதுமைஆர்.வைதேகி

Published:Updated:
சேலையில் சிலம்பம்!
பிரீமியம் ஸ்டோரி
சேலையில் சிலம்பம்!

மைதியான தோற்றம்... நளினமான பேச்சு... பழகுவதற்கு மென்மையானவராக இருக்கிறார் ஐஷ்வர்யா மணிவண்ணன். கையில் சிலம்பத்தை எடுத்துவிட்டாலோ கம்பீர அவதாரம் கொள்கிறார். தோற்றத்தில் மட்டுமின்றி, அது அவரது சிலம்பக் கலையிலும் பிரதிபலிக்கிறது.

சேலையில் சிலம்பம்!

ஆண்களின் கலையாக மட்டுமே அறியப்பட்டு வந்த சிலம்பாட்டத்தை முழுநேரக் கலையாக மாற்றிக்கொண்ட மாடர்ன் மனுஷி. உலக அளவில் நடந்த சிலம்பப் போட்டிகளில் தவறாமல் தங்கம் முதல் வெண்கலம் வரை பதக்கங்களை அள்ளிக்கொண்டு வருபவர்!

‘`மெட்ராஸ் யுனிவர்சிட்டியில பி.எஸ்ஸி இன்டீரியர் டிசைனிங்கும்  சிங்கப்பூர்ல எம்.ஏ டிசைனிங்கும் முடிச்சேன். அடிப்படையில நான் பரதநாட்டியக் கலைஞர். தற்காப்புக் கலைகள் கத்துக்கிறது நடனத்துக்கும் உதவியா இருக்கும்னு என் நடன குரு என்னிடம் சொல்லவும், அதன்பிறகு சென்னையில பாரம்பர்ய தற்காப்புக் கலைகள் என்னவெல்லாம் இருக்குனு தேட ஆரம்பிச்சேன். அப்படித்தான் பவர் பாண்டியன் ஆசானோட சிலம்பப் பயிற்சி பத்தியும் தெரியவந்தது. பவர் பாண்டியன் ஆசான், 30 வருஷங்களுக்கும் மேலாக சிலம்பப் பயிற்சி வகுப்புகள் எடுத்துக்கிட்டிருக்கார். வேர்ல்ட் சிலம்பம் ஃபெடரேஷனோட சீனியர் வைஸ் பிரெசிடென்ட். ‘கபாலி’ படத்துல நடிச்ச தன்ஷிகா, சமுத்திரக்கனி, சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்பட பலருக்கும் சிலம்பம் கத்துக்கொடுத்தவர். அவர்கிட்ட சிலம்பம் கத்துக்கிட்டதை என் வாழ்க்கையின் மிகப் பெரிய வாய்ப்பா நினைக்கிறேன்...’’ என்கிற ஐஷ்வர்யா, சிலம்பத்துக்காகப் பரதத்தைத் தள்ளி வைத்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேலையில் சிலம்பம்!

‘`சிலம்பமும் சரி, பரதமும் சரி... ரெண்டும் ரெண்டு கடல் மாதிரி. கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய! ரெண்டையும் ஒரே நேரத்துல செய்யறது சாத்தியமில்லைனு தெரிஞ்சது. ஏதாவது ஒரு விஷயத்துல முழுக் கவனத்தையும் செலுத்தலாம்னு முடிவு பண்ணி, சிலம்பத்தைத் தேர்ந்தெடுத்தேன். சிலம்பம் கத்துக்க ஆரம்பிச்ச பிறகு, சிலம்பத்துக்கும் பரதநாட்டியத்துக்கும் நிறைய ஒற்றுமைகளும், தொடர்பும் இருக்கிறது தெரிஞ்சது. பரதநாட்டியத்துல உள்ள அசைவுகள், பாடி லேங்வேஜ், எக்ஸ்பிரஷன், ரிதம்... இதெல்லாம் சிலம்பக் கலையிலயும் இருக்கு. அதனாலயே சிலம்பத்தின் மேல எனக்கு சீக்கிரமே ஈர்ப்பு வந்திருச்சு...’’ என்கிறவர், சிலம்பப் பயிற்சி செய்கிறபோது உணர்கிற எனர்ஜி லெவல் வித்தியாசமான அனுபவம் என்றும் சிலிர்க்கிறார்.

‘`வேலுநாச்சியார் காலத்துலேருந்தே பெண்கள் சிலம்பம் கத்துக்கிட்டிருக்காங்க. ஆணோ, பெண்ணோ... எல்லாருக்கும் சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் அவசியம். சிலம்பம் கத்துக்கிறது மூலமா சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்குது. பெண்கள் சிலம்பம் கத்துக்கிறதுல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு.  மத்த ஸ்போர்ட்ஸ் அல்லது உடற்பயிற்சிகளோடு ஒப்பிடும்போது, சிலம்பம் என்பது ஒட்டுமொத்த உடலுக்கும் வேலை கொடுக்கிற ஒரு பயிற்சி. அது மட்டுமில்லை... சிலம்பம் பண்றவங்களுக்கு அசாத்தியமான கவனத்திறன் அவசியம்.  மனசை ஒருமுகப்படுத்தி, அமைதியாக்குகிற வேலையையும் சிலம்பம் செய்யுது. சிலம்பம் கத்துக்க வயது வரம்பு கிடையாது. ஐந்து வயசுக் குழந்தைகூட கத்துக்கலாம். சிலம்பம் கத்துக்கிறதால குழந்தைங்களோட நினைவாற்றல் மேம்படும். உடலளவுலயும் மனசளவுலயும் பலசாலிகளாகிறாங்க. தன்னம்பிக்கையும் அதிகரிக்குது.

சிலம்பம்னாலே கம்பு சுத்தறதுதான்னு நினைச்சிட்டிருக்காங்க. கம்பு தவிர, அதுல மான்கொம்பு, சுருள்வாள், வாள்வீச்சு, வேல்கம்பு, செடிக்குச்சி  மாதிரி நிறைய கருவிகள் இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் தனித்தனி டெக்னிக்கும், உபயோகிக்கிற முறைகளும் இருக்கு. கம்பு வச்சு சுத்தும்போது, கைகளில் உள்ள அழுத்தப்புள்ளிகள் தூண்டப்படும்...’’ - சிலம்பத்தின் சிறப்புகளை அடுக்குகிற ஐஷ்வர்யா, அதைக் கற்கும் ஆர்வத்தையும் கிளப்புகிறார்.

சேலையில் சிலம்பம்!

``சிலம்பம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி தென்னிந்தியாவுலதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கு. அகத்திய முனிவர், ஓலைச்சுவடிகளில் கம்பு சூத்திரம் பற்றி எழுதின குறிப்புகள் இருக்கு. சேர, சோழ, பாண்டியர் காலத்துலயும் சிலம்பம் இருந்திருக்கு. பிரிட்டிஷ் காலத்துல சிலம்பத்துக்குத் தடை விதிக்கப்பட்டதா வரலாறு சொல்லுது. அதனால இடையில சில காலத்துக்கு அந்தக் கலை காணாம  போயிடுச்சு. அதுக்கப்புறம் கோயில் திருவிழாக்கள்ல ஆடப்படற கலையா  இருந்தது. ஆனா, இந்தத் தலைமுறையில நிறைய பேருக்கு சிலம்பக் கலை பத்தின விழிப்பு உணர்வு இல்லை.

இப்போதைக்குத் தமிழ்நாட்டுல பள்ளிக் கூட விளையாட்டுகள்ல சிலம்பமும் சேர்க்கப் பட்டிருக்கு. அது மட்டுமே போதாது. இதை ஒரு விளையாட்டாகவும், கலையாகவும் உலகளவுல பிரபலப்படுத்தணும். சிலம்பத்தை மூன்று வகைகளில் கத்துக்கலாம். முதலாவதாக தற்காப்புக் கலையாகவும், இரண்டாவதாக விளையாட்டாகவும் கத்துக்கலாம். அதாவது பள்ளிகளில் இது விளையாட்டாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதால மாவட்ட, மாநில அளவுகள்ல டோர்னமென்ட் நடத்தப்படுது. அந்த வகையில் ஒரு விளையாட்டாவும் இதைக் கத்துக்கலாம். மூணாவதா, இதை ஒரு கல்ச்சுரல் பெர்ஃபார்மென்ஸாகவும் கத்துக்கலாம். பார்க்கறதுக்கு டான்ஸ் மாதிரி இருக்கும்...’’ - தெளிவாகப் பேசுகிற ஐஷ்வர்யா, சேலை உடுத்தி சிலம்ப நிகழ்ச்சி தந்து பரபரப்பைக் கிளப்பியவர்!

‘`சாதாரணமா சிலம்பம் பிராக்டீஸ் பண்ணும் போது சேலை கட்டிக்கிறதில்லை. ஆனா, எந்த வேலையையும் சேலை கட்டிக்கிட்டுச் செய்ய முடியும்னு நிரூபிக்க நினைச்சேன். அதனால, கைத்தறிச் சேலை கட்டிக்கிட்டுப்  பண்ணினேன். ஒரு சேலையை நெய்யறதுல நெசவாளரோட உழைப்பு எவ்வளவு முக்கியம்னு உணர்த்தவும்தான் சேலையில சிலம்ப நிகழ்ச்சி பண்ணினேன். சேலையில சிலம்பம் ஏன்னு கேட்கறவங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்ச சின்ன அளவிலான விழிப்பு உணர்வு...’’ - அக்கறையாகச் சொல்கிறார் இந்தச் சிலம்புச் செல்வி!