Published:Updated:

ய்ய்யீஈஈஈ! - சிறுகதை

ய்ய்யீஈஈஈ! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ய்ய்யீஈஈஈ! - சிறுகதை

ரேவதி முகில் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ய்ய்யீஈஈஈ! - சிறுகதை

ரேவதி முகில் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ய்ய்யீஈஈஈ! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ய்ய்யீஈஈஈ! - சிறுகதை

சிரித்துக்கொண்டிருந்த பாண்டியின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்ட அம்மா, கையிலிருந்த கடிதத்தை மீண்டும் வாசித்தாள். வத்தலக்குண்டில் புதிதாகத் தொடங்கியிருந்த ஜவுளிக்கடையிலிருந்து வந்திருந்த கடிதம் அது. பாண்டிக்குப் பொங்கலுக்கு டவுசர் சட்டை வாங்கிய போது ஒரு பரிசு கூப்பன் கொடுத்தார் கள். குலுக்கலில் தங்களது கூப்பனுக்கு கலர் டி.வி பரிசு விழுந்திருப்பதாகவும், வருகிற சனிக்கிழமை மாலை வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறும் அதில் எழுதியிருந்தது. அதற்குள் தெருவில் சேதி பரவியிருந்ததால், வந்து விசாரித்துப் போனார்கள். பரிசு விழுந்த கதையை வாய் ஓயாமல் எல்லோருக்கும் சொல்லிக் கொண் டிருந்தாள் மயிலத்தை. பாண்டி பிறந்தபோதும் இப்படித்தான் சிரிப்பும் சந்தோஷமுமாக 
இருந்தோம்.

ய்ய்யீஈஈஈ! - சிறுகதை

தூரத்து தோட்டத்தில் அய்யாவுக்கு வேலை. “ய்யே… மயிலேய்!” - அய்யா வீட்டில் யாரை அழைக்க வேண்டுமென்றாலும் மயிலத்தையின் பெயரைச் சொல்லித்தான் அழைப்பார். எட்டாப்புக்கு மேல் படிப்பு வரவில்லை என்று குடும்ப ஒத்தாசைக்கு ராட்டைக்குப் போகிறவள் மீது அய்யாவுக்கு அம்புட்டுப் பாசம். அத்தையை அழைத்தாலும், நாங்கள்தான் ஓடிப்போய் சுமைகளை வாங்குவோம்.

அம்மா பெரியகுளம் டவுனில் வளர்ந்தவள். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு அய்யாவுக்கு வாக்கப்பட்டு, இப்படியாப்பட்ட பட்டிக்காட்டுக்கு வாழவந்துவிட்ட விசனத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள். `மொதலாளி மொதலாளி’ என்று தோட்டங்காடுகளிலும் முதலாளி வீட்டிலும் கிடையாகக் கிடக்கிற அய்யாவின் வேலை அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.  கல்யாணம் முடிந்த கையோடு ஆசீர்வாதம் வாங்க முதலாளி வீட்டுக்கு அய்யாவோடு போனதோடு சரி. அதற்குப் பிறகு அம்மா, முதலாளி வீட்டுப்பக்கம் போனதுமில்லை... அங்கிருந்து வரும் எந்தப் பொருளையும் தொட்டுப் பார்த்ததுமில்லை.

டவுசர் சட்டை வாங்கிவந்த அன்றே அம்மா வைத்திருந்த கூப்பனை வெடுக்கென்று பிடுங்கி வைத்துக்கொண்டாள் மயிலத்தை. அம்மாவின் முறைப்பைச் சட்டை செய்கிற ஆளில்லை அவள். அய்யாவின் உள்ளங்கை அளவிலிருந்த அந்தக் கூப்பனின் பின்புறம்  டம்ளர், குடம், அண்டா, வடைச்சட்டி, ரேடியோ, டி.வி, வாட்சுகளோடு இன்னதென்று அறிந்துகொள்ள இயலாத சில சாதனங்களின் படங்களும் நீல நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தன.

``இது பிரிஜ்ஜு! இது மிக்குஸி! இது கிரேண்டரு! இது வாசிங் மிசினு!” - எல்லாம் வாய்க்கு வராத பெயர்கள். மயிலத்தைக்கு அத்தனையும் தெரிந்திருந்தது.  முதலாளி வீட்டுக்குப் போகும்போதெல்லாம் ஜெயாக்காவுக்கு ஒத்தாசை செய்கிற சாக்கில் எல்லாச் சாதனங்களையும் இயக்குவதற்குக் கற்றுவைத்திருப்பதைப் ராட்டைக்கு வரும் பெண்களிடத்தில் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வாள். மயிலத்தைக்கு ஒரு கனவிருந்தது. ராட்டைக்கு மாதமொருமுறை வந்து போகும் மதுரைக்கார இன்ஜினீயரைப்போல பேன்ட் சட்டை போடுகிற, மோட்டார் வண்டியில் ஆபீஸ் வேலைக்குப் போகிற டவுன்கார மாப்பிள்ளை யைக் கட்டிக்கொண்ட ஜெயாக்காவைப்போல கலர் கலராக ஜார்ஜெட் சேலை உடுத்தி, கல் நகை போட்டு வசதியாக வாழ வேண்டுமென்கிற கனவு. அதை அப்பாயியிடம் அவ்வப்போது வெளிப்படுத்தியும் வந்தாள். இந்த கூப்பன், அந்தக் கனவுக்கு நீரூற்றியது.

அன்று முதலாளி வீட்டிலிருந்து வந்ததுமே ``கரண்டு இல்லாத வீட்டுக்கு டிவிப்பொட்டி என்னத்துக்கு?” என்று அய்யா கேட்ட முதல் கேள்வியிலேயே காச்சக்கஞ்சி குடித்தாற்போல சப்பென்றாகிப் போனது.  அம்மா முகம் சிறுத்துப் போனாள். அப்பாயிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மயிலத்தை, அய்யாவை முறைத்தாள். `கரன்ட் இருந்தால்தான் டிவி ஓடும்' என்பதை தலைகொள்ளாத சந்தோஷக் கிறுக்கில் எல்லோருமே மறந்துபோயிருந்தோம். கையிலிருந்த சீனிச்சேவை யாரோ வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டுபோனது போலாகிவிட்டது எனக்கு.

``இப்பதைக்கி வீட்டுக்குக் கரன்ட் இழுக்கவும் முடியாது. டி.வியை வீட்டுல சும்மா வெச்சிருக்கவும் முடியாது. அத வித்தமுன்னா கொறஞ்சது நாலாயிரம் வரைக்கும் கெடைக்குமாம். முதலாளி சொன்னாரு. பேசாம வித்துப்புட்டு மயிலுக்கு ஒரு அட்டியல் வாங்கிப்போட்றலாம்னு இருக்கேன்...”

அம்மாவைப் பார்த்தேன். காதுகளில் நெளிந்துகிடந்த ஈயத் தோடு மஞ்சள் மங்கிப் போயிருந்தது. தாலிச்சரடு இன்ன நிறமென்று தெரியாதபடி கறுத்திருந்தது. மூக்கில் மட்டும் எண்ணெய் இறங்கிய கல்மூக்குத்தி. மடியில் பாண்டியைக் கிடத்தி தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தாள். யாரும் பேசவில்லை. மயிலத்தை விசனமும் ஆவலாதியும் கூடிய நிலையில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அழத் தயாராகியிருந்தாள். எனக்கும் அழுகை அழுகையாக வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ய்ய்யீஈஈஈ! - சிறுகதை

``யண்ணே.. யண்ணேண்ணே… பேசாம இந்த டி.விய அப்புடியே எனக்குக் குடுத்துருண்ணே. நான் பத்திரமா வெச்சிருந்து சீருகொண்டு போயிக்கிறேன்” - மயிலத்தை மயங்கி மயங்கிப் பேச அய்யாவுக்குக் கோபத்தில் முகம் சுருங்கியது. “இருக்குற நெலம புரியாம ஒம்பாட்டுக்கு கோட்டித்தனமாப் பேசாத மயிலு. டி.வியெல்லாம் சீரு குடுக்குற நெலமையிலயா நான் கெடக்குறேன். ஒங்கல்யாணத்துக்குத் தக்கிமுக்கி மூணு பவென் சேத்துட்டேன். இன்னும் ஒரு ரெண்டு பவென் சேந்துருச்சுன்னா தெகிரியமா சம்பந்தம் பேசலாம். உள்ளூருக்குள்ளயே நல்ல சம்பந்தமாத் தெகஞ்சு வருது. நம்ம ஆட்டுக்கார பரமேன் மகனுக்குக் கேட்டுருக்காக. நல்ல எடம். வரும்போதே முடுச்சுறணும்...” - அத்தையின்  கனவை அறிந்திருந்தாலும்  அறியாதவர்போலவே  அய்யா பேசினார்.

மயிலத்தைக்கு இப்போது டி.வி விசனம் போயி உள்ளூர் மாப்பிள்ளை விசனம் தொற்றிக்கொண்டது. ஆட்டுக்கார பரமன் தாத்தாவின் மகன் நாகராசு மாமா உள்ளூர்க் காளவாசலில் கல்லறுப்பவர். மயிலத்தையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “நாகராசுக்கா…? யம்மா... அண்ணேண்ட்டச் சொல்லும்மா…” - கோணிக்கொண்ட உதடுகளுடன் கேவ ஆரம்பித்தாள் அவள். அப்பாயி அடுப்பில் கனன்றுகொண்டிருந்த கங்குகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவள், “கண்டதும் கடியதும் சீரா ஏத்திவுடுறதுக்கு இங்க என்ன காய்ச்சாத் தொங்குது? அவென் ஒத்தாளு. காட்டுமேட்டுல நாயா அலஞ்சு வெயில்ல சுக்காக் காஞ்சு பாடுபடுறியான். ஒளுங்கா உள்ளத வாங்கிக்கிட்டு உள்ளூர்லயே வாக்கப்பட்டுக்க. அப்பத்தேன் நல்லது பொல்லதுக்கு லவக்குண்டு வந்து பாத்துக்குற முடியும்.  அதவிட்டுப்புட்டு டவுனு மாப்புள்ள… வண்டி நிறையச் சீருன்னு இல்லாத ஆசயெல்லாம் வளத்துக்குறாத...”

அப்பாயி படபடவென்று பேசப்பேச அத்தை விசும்ப ஆரம்பித்தாள். அம்மா நிமிரவேயில்லை.

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் அய்யா ஒரு பழைய மஞ்சள் பையோடு வீட்டுக்கு வந்தார். உள்ளே முதலாளி மகள் உஷாவின் பழைய கவுன்கள் இருந்தன. டவுசர் பாக்கெட்டும் காலியாக இருந்தது. யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வழக்கம்போல அய்யா குளித்து முடித்ததும் எல்லோரும் வாசலில் அமர்ந்து சாப்பிட்டோம். சாப்பிட்டு முடித்து கூட்டிப் பெருக்கி பாயை உதறி விரித்து எல்லோரும் வாசலிலேயே படுத்துக்கொண்டோம். அருகில் சென்று படுத்தவுடன் தலையைத் தடவிக்கொடுக்க ஆரம்பிக்கும் அய்யா, அன்று ஏனோ மல்லாக்கப் படுத்து வலது கை முட்டியை மடக்கி கண்களை மூடிக்கொண்டு அசையாமல் கிடந்தார். செத்தவடஞ்செண்டு அப்பாயிதான் வாய் திறந்தாள்.

“நக என்ன வெலப்பா?”

“……”

“தூங்கிட்டியா சாமீ?

“ம்ம்?”

``நக என்ன வெல?”

“வாங்கலம்மா.”

“ஏஞ்சாமி?”

“தோட்டவீட்டுல டி.வி இல்லைண்டு மொதலாளி சொன்னாரு... ஜெயாக்காவும் ஆசையாக் கேட்டுச்சு!”

அப்பாயி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. அப்பாவும் பேசவில்லை. நான் அம்மாவைப் பார்த்தேன். எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு ஒருக்களித்திருந்தாள். தூங்கிவிட்டாளா என்று தெரியவில்லை. வீட்டுக்குள் மயிலத்தை என்ன செய்கிறாள் என்று தெரியவில்லை. கண்ணைமூடிக்கொண்டேன். தோட்டவீட்டில் முதலாளி மகள் உஷா டி.வி பெட்டியின் கதவைத் திறந்து மூடி விளையாடிக்கொண்டிருந்தாள்.

“ய்ய்யீஈஈஈஈ…” - திடீரென்று பாண்டி சிரித்தான்.

``போடா இளிச்சாப்பயலே!''

அப்பாயின் குரலில் கோபம். மூடியிருந்த கண்களை இன்னும் இறுக்கி மூடிக்கொண்டேன். பாண்டி மீண்டும் சிரித்தான்.