Published:Updated:

மனுஷி - 14 - கணக்கென்றால் பெண்களுக்குப் பிணக்கில்லை!

மனுஷி - 14 - கணக்கென்றால் பெண்களுக்குப் பிணக்கில்லை!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 14 - கணக்கென்றால் பெண்களுக்குப் பிணக்கில்லை!

சுபா கண்ணன், ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 14 - கணக்கென்றால் பெண்களுக்குப் பிணக்கில்லை!

சுபா கண்ணன், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - 14 - கணக்கென்றால் பெண்களுக்குப் பிணக்கில்லை!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 14 - கணக்கென்றால் பெண்களுக்குப் பிணக்கில்லை!

ன்பின் இயக்கமான பெண்ணின் பெருமையும் நலமும் ஈடு இணை இல்லாதவை. பெண்ணினை மதித்துப் போற்றிய சமுதாயங்கள் மிக உயர்ந்து நிற்கின்றன.

- திரு.வி.க.

அது ஓர் இன்டர்நேஷனல் பள்ளி. ஒரு ட்ரெயினிங் புராஜெக்ட்டுக்காக இரண்டு  மாதங்கள் அங்கே பணியில் இருந்தாள் அமுதினி. அங்கே நீச்சல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக இருந்தாள் நெதர்லாந்தைச் சேர்ந்த சஸ்க்யா. அவள் ஒருநாள் அமுதினியிடம், ‘`எங்கள் நாட்டில் பொறியியலோ, மருத்துவமோ படிக்க விரும்புபவர்கள்தான் கணிதம் படிப்பார்கள். மற்றபடி கலை, மொழி போன்றவற்றைக் கற்பதுடன், நீச்சலும் கற்றுக்கொள்வார்கள். உங்கள் நாட்டிலோ, தேவை இருக்கிறதோ, இல்லையோ, எல்லோருமே கணிதம் படிக்கிறார்களே...’’ என்றாள் வியப்புடன்.

மனுஷி - 14 - கணக்கென்றால் பெண்களுக்குப் பிணக்கில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும்கூட, சஸ்க்யா சொன்னது அமுதினியின் மனதை விட்டு நீங்கவே இல்லை. தேவையோ, விருப்பமோ இல்லாமல் கற்கவேண்டியதைத் திணிக்கும் நமது கல்விமுறையின்மேல் கோபமான கோபம் வந்தது. இத்தனைக்கும் அவளின் அம்மா சந்திரா, கணக்கு ஆசிரியை என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். அப்பா சுரேந்தர் கல்பாக்கத்தில் சயின்டிஸ்டாக இருக்கிறார்.

அமுதினி சொன்ன இந்த விஷயத்தைக் கேட்டு மெள்ளப் புன்னகைத்த சந்திரா, ‘`தேவையோ, விருப்பமோ இல்லாதவர்கள் என்கிற உன்னுடைய கோபத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், பெண்கள் கணக்கைக் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும்கூட, `ரீஸனிங் அண்ட் லாஜிக்'கில் கில்லி.  பெண்கள் மனதில் பால், பேப்பர், கேஸ், மளிகை என்று ஒரு கணக்கு எப்போதுமே ஓடிட்டே இருக்கும்.  பெண்களைவிட தாங்கள் கணக்கில் புலி என்பதுபோன்ற சிந்தனை பெரும்பாலான ஆண்கள் மனதில் எப்படியோ  வலுவாக பதிந்துவிட்டது. ’’ என்றாள்.

“ஆமாம்... கால்நடைகளை எண்ண கரியால் சுவரில் கோடு போட்டது உங்க இனமாகத்தான் இருக்கணும். இன்னும் அந்தப் பழக்கம் மாறாததாலதான், காலண்டரில் கலர் கலரா கோடு போட்டு வைக்கிறாள் உங்க அம்மா’’ என்று கிண்டல் செய்தபடியே வந்து அமர்ந்தார் சுரேந்தர்.

 “இருக்கலாம்... தாய்வழிச் சமூகமா இருந்தபோது இதுபோன்ற கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டது பெண்கள்தானே?”... என்றாள் சந்திரா.

 “பிறந்தநாள், திருமணநாள் மற்றும் செய்யவேண்டிய மொய், வரவேண்டிய மொய் என்று பெண்களோட கம்ப்யூட்டர் மூளை எப்பவும் ஆன்லயே இருக்கே’’ என்று கிண்டலாகக் கூறிய சுரேந்தர் தொடர்ந்து,
‘`வரலாற்றில், குறிப்பாக ஐரோப்பியர் தொடர்பான சரித்திரத்தில் ஆப்பிரிக்கா மற்றும் எகிப்தில் இருந்து வந்த கணிதம் மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால், பிற்காலத்தில் கண்டறியப்பட்ட வரலாற்று உண்மை வேறு மாதிரியாக இருக்கிறதே’’ என்றார்.

‘`அப்படி என்ன வரலாற்று உண்மை அது?’’ என்று கேட்டாள் அமுதினி.

‘`ஆப்பிரிக்காவின் மலைப்பகுதியில் உள்ள  உகாண்டா மற்றும் சைரே நாடுகளுக்கிடையில் உள்ளது எட்வர்ட் என்னும் ஏரி (Lake Edward). இதன் நீர்வள ஆதாரம் நைல் நதி.  25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு மீன் பிடித்து, விவசாயம் செய்த சமூகம் வாழ்ந்திருந்தது. பின்னர் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு அந்தப் பகுதியை அப்படியே கபளீகரம் செய்துவிட்டது. 1960-களில் பெல்ஜியத்திலிருந்து வந்த ஜீன் டி பிராகூர்ட் என்ற விஞ்ஞானியின் குழு,  அந்த இடத்திலிருந்து சில பொருள்களை எடுத்துள்ளது. அதில் கணிதத்தின் வரலாறு பேசும் மிக முக்கியான பொருள்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இஷாங்கோ எலும்பு (Ishango bone)  எனப்படும் ஒரு பபூன் குரங்கின் முன்னங்கால் எலும்பு’’ என்று சொல்லிக்கொண்டு வரும்போதே குறுக்கிட்ட சந்திரா, ‘`அந்த முன்னங்கால் எலும்பைக்கொண்டு எப்படி கணிதத்தின் வரலாற்றைக் கண்டுவிட்டார்கள்?’’ என்று கேட்டாள்.

‘`அந்த எலும்பை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்ததில், 6 மாதங்களுக்கான சந்திர காலண்டர் குறியீடு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அந்தக் குறியீடுகள்தான் உலகின் மிகப்பழைமையான எண்கள் (Prime Numbers) என்றுகூடச் சிலர் சொல்கின்றனர். அதுதான் உலகின் மிகப்பழைமையான இரண்டாவது கணிதப் பதிவு’’ என்றார்.

‘`அது எத்தனை வருஷம் பழைமையானது?’’ என்று சந்திரா கேட்டாள்.

‘`அந்த இஷாங்கோ எலும்பு பழைய கற்காலத்தின் முற்பகுதியைச் சேர்ந்தது. எலும்பு கரும்பழுப்பு நிறத்தில் உள்ளது. இதன் முனையில் ஒரு படிகக்கல் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம்தான் இந்த எலும்பின் மேல் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதுதான் உலகில் பதிவு செய்யப்பட்ட கோட்டுக்கணக்கு டாலி குச்சி (Tally stick) என்றும் சொல்லப்படுகிறது. இதில் மூன்று வரிசையில் கோடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடக்கக் காலத்தில் இதன் வயது கி.மு 9,500 - 6,500 என்று கணக்கிட்டனர். பிறகு பத்தாண்டுகளுக்கு முன் கார்பன் மூலம் ஆராய்ந்து இந்த எலும்பின் வயது சுமார் 20 ஆயிரம் ஆண்டுகள் என்று அறிவியல்பூர்வமாக அறியப்பட்டுள்ளது’’ என்றார் சுரேந்தர்.

‘`இரண்டாவது கணிதப் பதிவே 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றால், முதல் கணிதப்பதிவு எத்தனை ஆயிரம் வருடங்கள் பழைமையானது?’’ என்று கேட்டாள் அமுதினி.

‘`எட்வர்ட் ஏரிக்கு அருகில் உள்ள சுவாசிலாந்தில் கிடைத்த மற்றொரு எலும்பின் பெயர் லேம்போம்போ (Lembombo Bone in Swaziland). இது 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதுதான் உலகின் முதல் கணிதப்பதிவு. இதனை ஒரு பெண்தான், தான் கருவுற்ற காலத்தின் நாள்களை அறிய பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இஷங்கோ எலும்பினை ஆராய்ந்த கிளாடியோதான், இந்த லேம்போம்போ எலும்பையும் ஆராய்ச்சி செய்து, இதை  உருவாக்கியது  ஒரு பெண் என்றும், அவள் தன் மாதவிடாய் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்ய சந்திரனின் பிறைகளைப் பயன்படுத்தி இருக்கிறாள் என்றும் தெரிவித்தார். ஆனால், அந்தக்கால நேரப்பதிவு, சந்திரனின் பிறைநிலைகளைக்கொண்டு உருவாக்கப் படவில்லை. மேலும், உயிர்கள் உருவாகக் காரணமான, பெண்களின் புனிதமான மாதவிடாய் சக்கரத்துக்கும், சந்திரப்பிறை நிலைகளுக்கும்தான் தொடர்புபடுத்தினர். எனவே, பெண்கள்தான் கணிதவியலின் பிதாமகர்/தாய் என்று கருதப்படுகிறது. இதைப் பற்றி, வரலாற்று அறிஞர்கள் பிளினியும் மார்க்கோபோலோவும் கூட குறிப்பிடுகின்றனர். இப்போது இந்த இஷாங்கோ எலும்பு, பெல்ஜியத்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது!’’ என்று சுரேந்தர் விளக்க, சந்திரா தொடர்ந்தார்.

‘`நம் நாட்டிலும் பெண்கள் கணிதத்துறையில் சிறப்புற்று விளங்கியிருக்கிறார்கள். சிறுகாக்கைபாடினியார் எழுதிய  ‘யாப்பிலக்கண நூல்’ பாடல்களும், ‘கணக்கு நூல்’ பாடல்களில் சிலவும் கிடைத்திருக்கின்றன. அவை அன்றைய தமிழ்ப் பெண்கள், தமிழையும் ஆடலையும் பாடலையும் மட்டும் கற்கவில்லை...

கணிதத்தையும் நன்கு கற்று ,கணித நூல்களை எழுதும் ஆற்றல் உள்ளவராக விளங்கியதை எடுத்துக்காட்டுகிறது. மேலைநாடுகளில் பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே கணிதத் தரவுகளை காக்கைபாடினியார் எழுதினார் என்றால், பண்டைத் தமிழ் இனத்தின் பெண்கல்வி எத்தகைய உன்னத நிலையில் இருந்திருக்க வேண்டும். இது மட்டுமல்ல... கணக்கைப் பெண்களுக்கென்று பிரத்தியேகமாகக் கற்பித்ததை காரிநாயனார் எழுதிய ‘கணக்கதிகாரம்’ என்னும் நூல் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. ஆக, நம் நாட்டுப் பெண்களுக்கு கணக்கு என்றால் பிணக்கு இல்லை’’ என்றார். அவர் அப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போது தெருவில் யாரோ, ‘பலாப்பழம் பலாப்பழம்’ என்று கூவியபடி பலாப்பழம் விற்றுக்கொண்டு செல்வது கேட்டது.

அதைக் கேட்டதுமே சந்திராவுக்கு தன்னுடைய அம்மா பண்ருட்டியில் பலாப்பழம் வாங்கும் வித்தை நினைவுக்கு வந்துவிட்டது. அதைப் பற்றி அமுதினிக்கு விளக்கினார்... ‘`அந்த நாள்ல உன் பாட்டி பலாப்பழத்தை வாங்கும்போது, காம்புக்கு அருகில் உள்ள சிறு சிறு முள்களை எண்ணிப் பார்த்து வாங்குவார். அதன்மூலம் பழத்தில் எத்தனை சுளைகள் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாமாம். எப்படி என்று கேட்டதற்கு `கணக்கதிகாரம்' நூலில் 72-வதாக உள்ள ஒரு பாடலைப் பாடிக் காட்டினார்!’’

இதைக் கேட்டு ’’ஆஹா!'' என்று மகிழ்ந்த அமுதினியிடம், இப்போது சஸ்க்யாவுக்கு விளக்க கணக்கில்லா விஷயங்கள் கிடைத்துவிட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism