Published:Updated:

வாழ்வை மாற்றிய புத்தகம் - பாரதியை நினைத்தால் போதும்!

வாழ்வை மாற்றிய புத்தகம் - பாரதியை நினைத்தால் போதும்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்வை மாற்றிய புத்தகம் - பாரதியை நினைத்தால் போதும்!

வழக்குரைஞர் பட்டிமன்றப் பேச்சாளர் சுமதிஆர்.வைதேகி - படங்கள்: ஜெரோம்

வாழ்வை மாற்றிய புத்தகம் - பாரதியை நினைத்தால் போதும்!

வழக்குரைஞர் பட்டிமன்றப் பேச்சாளர் சுமதிஆர்.வைதேகி - படங்கள்: ஜெரோம்

Published:Updated:
வாழ்வை மாற்றிய புத்தகம் - பாரதியை நினைத்தால் போதும்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்வை மாற்றிய புத்தகம் - பாரதியை நினைத்தால் போதும்!

``இலக்கியம், தமிழ் போன்றவற்றுடன் எனக்குப் பெரிய பரிச்சயம் இருந்ததில்லை. ரயில்வேயில் வேலை செய்கிறவர்களின் பிள்ளைகளுக்கான ரயில்வே பள்ளியில் படித்தேன். என் தமிழாசிரியர் சீதாராம ஐயர், தமிழ் கற்றுக்கொடுக்கும் முறையே வித்தியாசமாக இருக்கும். கவிதைகளைக் கூட நடித்துக்காட்டி அவர் சொல்லித் தருவதைப் பார்த்துதான் தமிழ் மீது எனக்கு ஆர்வம் வந்தது. அறிமுகமான ஒரே வருடத்தில் அவர் ஓய்வுபெற்றது தாங்க முடியாத இழப்பாக இருந்தது. ஆனாலும், அவர் விதைத்த தமிழ் ஆர்வம் எனக்குள் வீறுகொண்டு வளர்ந்தது.

வாழ்வை மாற்றிய புத்தகம் - பாரதியை நினைத்தால் போதும்!

ரயில்வே பள்ளிகளுக்கு இடையில் ஒரு பேச்சுப் போட்டி வைத்தார்கள். அதில், முதன்முறையாக பாரதியாரைப் பற்றிப் பேசினேன். அப்போதுதான் பாரதியாரின் கவிதைகளும் அறிமுகமாகின. என் பதின்பருவத்தில் பாரதியே என்னை வழிநடத்த ஆரம்பித்தான். அன்று முதல் இன்று வரை வாழ்க்கையில் என்ன சோதனை வந்தாலும், பிரச்னை ஏற்பட்டாலும் பாரதியாரை ஒரு நிமிடம் நினைத்துக்கொண்டால் போதும்...அத்தனையும் மறைந்துபோகும். கதவுகளை மூடிக்கொண்டு யாருக்கும் கேட்காம  ஹோ'வென அழுகிற பிரச்னையாக இருந் தாலும், மனதுக்குள் குமுறும் விஷயமாகக்கூட இருந்தாலும்கூட, ஒற்றை அழுகைக்குப் பிறகு மலை மாதிரி எழுந்து நின்றிருக்கிறேன் என்றால், `பாரதியார் கவிதைகள்' என் பக்கத்துணை இருப்பதுதான் காரணம். என்னை ரொம்பவும் பாதித்த பாரதி கவிதை இதுதான்...

`துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே...
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை வெற்றி பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே...'


இரண்டு விஷயங்களுக்குத்தான் நாம் பெரிதும் அஞ்சுவோம். `யாரும் நம்மை அவமானமாகப் பேசிவிடக் கூடாது... சோற்றுக்காக  யாரிடமும் நின்றுவிடக் கூடாது...' என்று நினைப்போம். ‘இந்த இரண்டுக்கு நான் பயப்பட மாட்டேன்’ என்கிறான் பாரதி. அந்த இரண்டையும் அவன் எதிர்கொண்டும் இருக்கிறான். `அவனுக்கு வந்த துன்பத்தைவிடவா நமக்கு வந்துவிடப் போகிறது' என நினைத்துக்கொண்டால், `எதையும் எதிர்கொண்டு நிற்கலாம்' என்கிற தைரியம் வந்துவிடும்.

பாரதியார் பக்கத்திலேயே இருப்பதால் நிறைய லாபங்கள் இருப்பதைப் போலவே நிறைய நஷ்டங்களும் இருக்கின்றன. `நேர்படப் பேசு' என்கிறான் பாரதி. ஆனால், நேர்படப் பேசுவதால் வாழ்க்கையில் நான் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். இருந்தாலும், இடுக்கில் புகுந்து, தடுக்கில் பாய்ந்து, குறுக்கில் குதித்து, வெடுக்கில் தாவும் உலகத்தில் நேர்படப் பேசச் சொன்ன பாரதியின் போதனைதான் எனக்குப் பெரிதாகப்படுகிறது. நேர்படப் பேசுவதற்கு என்ன கிடைக்கிறதோ, அதுோதும் எனக்கு.

வெளிநாடுகளுக்குப் போக நிறைய வாய்ப்புகள் வந்தும், பாரதியின் மூலம் எனக்குள் வந்த தேசபக்தியின் காரணமாக நான், என் தாய்நாட்டை விட்டுப் போக நினைத்ததில்லை. குப்பை நிறைந்த தெருக்கள், சாக்கடை நிறைந்த சந்துகள் என எப்படி வேண்டுமானாலும் என் நாடு இருக்கட்டும்... அவற்றைச் சரி செய்ய நினைப்பேனே தவிர, அதிலிருந்து தப்பித்து வேறு எங்காவது ஓடிப் போக நினைக்க மாட்டேன். பாரதி அகல்விளக்காக ஏற்றிவைத்த தேசப்பற்றுதான் இன்று கொழுந்துவிட்டு என் மனதில் எரிகிறது. பாரதி எழுதிய ‘மாஜினியின் சபதம்', இன்றைய தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்கு ஒவ்வொரு இளைஞனும் செய்ய வேண்டிய சபதம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்வை மாற்றிய புத்தகம் - பாரதியை நினைத்தால் போதும்!

மாஜினியின் சபதம், பாஞ்சாலி சபதம் என மேன்மையான சபதங்களை எல்லாம் வாழ்க்கையில் பார்த்துவிட்டேன். அற்பமான சபதங்களையும் வாழ்க்கையில் இன்று பார்க்கிறோம். சபதம் என்றால் அவை மேன்மையானவையாக இருக்க வேண்டும், சுயநலமற்றவையாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புஉணர்வை பாரதியின் கவிதைகள் எனக்குள் ஏற்படுத்தி இருக்கின்றன.

அதே போல, நம்பிக்கை செத்துப்போன பல தருணங்களில் பாரதிதான் எனக்கு விஸ்வ ரூபமாக நின்று நம்பிக்கையைத் தந்தான்.

குழந்தை வளர்ப்பைப் பற்றிய பாரதியின் கவிதைகளும் எனக்கு நெருக்கமானவை.


கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந் தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி
உன் கண்ணில் நீர்வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ'


நம் குழந்தையின் கண்கள் வழிதான் உலகத்தைப் பார்க்க வேண்டும் என்கிறான். குழந்தைக் காக வாழ முடியாதபோது செத்துவிடலாம் என நினைத்திருக்கிறேன். என் மகளுக்குப் பயன்படாமல் போகும்போது ஒரு நிமிடம்கூட வாழக் கூடாது என நினைப்பேன். அந்த மனஉறுதியை ஏற்படுத்தியது பாரதியார் கவிதைகள்தான்.

 என் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் பாரதி ஒரு வழி காட்டியாக இருக்கிறான். பக்கத்தில் உட்கார்ந்து பேசக்கூடிய அப்பாவாக, சாப்பிடும்போது, சாதம் சூடாக இருந்தால் விசிறி விடுகிற அப்பாவாக, அழும் போது கண் துடைத்துவிடுகிற அப்பாவாக, சோர்ந்து போகிற போது கைப் பிடித்து அழைத்துப் போய் நல்ல விஷயங்களைக் காட்டுகிற அப்பாவாக... இப்படி எல்லாத் தருணங்களிலும் இருந்திருக்கிறான் பாரதி.

யதார்த்தமான வாழ்க்கையில் சுயநலமிக்க மனிதர்களைத்தான் அதிகம் சந்திக்கிறோம். அப்படியில்லாமல் வாழ்ந்த ஒரு மனிதன் பாரதி. அவனது கவிதைகளைத் தாண்டி, அந்த மனிதனின் வாழ்க்கை, அதில் இருந்த சத்தியம், அர்த்தநாரீஸ்வராக வாழ்ந்த முறை, குயில், காகம் என எல்லா உயிர்களிடத்தும் பாசமாக இருந்த அன்பு... இப்படி எல்லாமே என்னை நெகிழ வைக்கும். மொத்தத்தில் பாரதி என் வாழ்க்கையின் வழிகாட்டி.’’