Published:Updated:

முப்பாட்டன் மொழி அழகு!

முப்பாட்டன் மொழி அழகு!
பிரீமியம் ஸ்டோரி
முப்பாட்டன் மொழி அழகு!

கவிதைதொகுப்பு: ஜெ.எம்.ஜனனி, ஓவியங்கள்: ரமணன் படம்: பா.காளிமுத்து

முப்பாட்டன் மொழி அழகு!

கவிதைதொகுப்பு: ஜெ.எம்.ஜனனி, ஓவியங்கள்: ரமணன் படம்: பா.காளிமுத்து

Published:Updated:
முப்பாட்டன் மொழி அழகு!
பிரீமியம் ஸ்டோரி
முப்பாட்டன் மொழி அழகு!
முப்பாட்டன் மொழி அழகு!

மிழ், தேன் கடல். அந்தக் கடலின் சில துளிகளை நாம் பருக, சங்க இலக்கியப் பாடல்களும் அதற்கான பொருளும் தருகிறார் மதுரை, டோக் பெருமாட்டி கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியை முனைவர் அ.கவிதாராணி. களவு, கற்பு, அறம், அரசு, மக்கள் என்று எல்லாம் பேசும் இந்தப் பாடல்கள், நம் முப்பாட்டன் மொழி அழகின், சிந்தனை நேர்த்தியின் சிதறல்கள்!

பிரிவைத் தர மாட்டார்!
‘‘நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே’’

- நற்றிணை(கபிலர்)

தோழியிடம் சொல்கிறாள் தலைவி...

‘‘என் காதலர் வாய்மையுடைய வர். நினைக்க நினைக்க இனியவர். எப்போதும் என் தோள் பிரியாதவர். தாமரையின் சாறும் சந்தனத்தின் சாறும் சேர்ந்த தேன் போன்றது அவர் அன்பு. நீரின்றி உலகில்லை... அவரின்றி நான் இல்லை என்பதை அறிந்தவர். எனவே, என் உடல் மெலியக் காரணமாகும் பிரிவை அவர் எனக்குத் தர மாட்டார்!’’

முப்பாட்டன் மொழி அழகு!

அரசின் வரியும் யானை புகுந்த நிலமும்!
காய்நெல் லறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவனாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப வெடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

- புறநானூறு

(பாண்டியன் அறிவுடை நம்பி)

காய்ந்த நெல்லை அறுத்து, சிறுசிறு கவளமாக உண்டால், அது பல நாள்களுக்கு உணவாகும். மிகப்பெரிய வயலாக இருந்தாலும், யானை தனியே புகுந்து உண்டால், அதன் வாய்க்குள் செல்வதைவிட காலால் அழிவதே அதிகம். அதேபோல, அறிவுடைய அரசன் மக்களின் நிலை அறிந்து வரியைப் பெற்றால் அவன் நாடு செழிக்கும். மாறாக, மக்களின் பொருளை முறையற்று அடைய விரும்பினால், யானை புகுந்த நிலம் போல, தனக்கும் கிடைக்காது, நாடும் அழியும்.

முப்பாட்டன் மொழி அழகு!

நிலத்தின் சிறப்பு - வாழும் மக்கள்!
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலவே

- புறநானூறு(ஔவையார்)

நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், மேடாக இருந்தாலும், பள்ளமாக இருந்தாலும் ஒரு நிலத்தின் சிறப்பு என்பது நிலப்பரப்பு அல்ல. அந்நிலத்தின் வாழும் மக்களே அதன் சிறப்பை எழுதுவார்கள்!

நின்றான்... அமர்ந்தான்... விழுந்தான்!
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்

- நாலடியார்

புல் நுனியின் மேல் இருக்கும் நீரைப் போன்றது, நிலையற்ற இந்த உடம்பு. எனவே, இப்போதே அறம் எனும் நற்செயலை தொடங்குங்கள். இப்போதுதான் நின்றான்; அமர்ந்தான்; கீழே விழுந்தான்; சுற்றம் அலற இறந்தான் எனும் நிலை, எப்போதும் வரலாம்.

கூந்தல் நரையுடன்
முடிக்கப் பெற்றாலும்!

‘‘அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக்கே ழூர’’

- நற்றிணை

தலைவி, தலைவனுடன் உடன்போக்குச் செல்லும்போது தோழி தலைவனிடம் வேண்டுகிறாள்...
‘‘அண்ணாந்து உயர்ந்த அழகிய மார்புகள் தளர்ந்தாலும், பொன் போன்ற மேனியில் கருமணி போல தாழ்ந்த நீளக் கூந்தல் நரையுடன் முடிக்கப் பெறும் காலம் வந்தாலும், இவளை கைவிடாமல் காப்பாயாக!’’

முப்பாட்டன் மொழி அழகு!

கண்ணாடி உருவம் போல கை கால் தூக்கும் தலைவன்!
‘‘கழனி மாத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன்புதல்வன் தாய்க்கே’’

- குறுந்தொகை (ஆலங்குடிவங்கனார்)

காதல் பரத்தை (தலைவனின் ரகசியக் காதலி) சொல்கிறாள்...

‘‘வயல் வரப்பில் உள்ள மாமரத்தின் கனி கீழே விழ, அதை வாளை மீன் கவ்வும் ஊரைச் சேர்ந்த தலைவன், என் வீட்டில் என்னைப் பாராட்டினான். ஆனால் அவன் வீட்டில், கையும் காலும் நாம் தூக்கத் தூக்கும் கண்ணாடி உருவம் போல, தன் மனைவி கூறுவதற்கு எல்லாம் தானும் தலையாட்டுகிறான்!’’

முப்பாட்டன் மொழி அழகு!

காய்ந்த பாறையில் வைத்த வெண்ணெய்!

‘‘இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற் கரிதே

- குறுந்தொகை (வெள்ளி வீதியார்)

தலைவி சொல்கிறாள்...

‘‘காதல் வேண்டாம் என்று அனைவரும் எனக்கு அறிவுரை கூறுகிறீர்கள். சூரியனின் கதிர்கள் பட்டு காய்ந்த பாறையின் மீது வைக்கப்படுகிறது ஒரு வெண்ணெய் உருண்டை. கையில்லாத ஊமை அதை காக்க முடியாத தவிப்பில் கண்களால் மட்டுமே காப்பது போல, என்னைப் பிடித்த இந்தக் காதல் நோயில் இருந்து தற்காக்க நானும் முயற்சி செய்கிறேன்!’’

முப்பாட்டன் மொழி அழகு!

அணிலாடும் முன்றில்!

‘‘காதலர் உழையராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்னிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே’’

- குறுந்தொகை (அணிலாடு முன்றிலார்)

‘‘தலைவன் அருகில் இருந்தால், திருவிழாக் காணும் ஊர்போல மகிழ்கிறது என் மனம். அவன் என்னை நீங்கினால், அணில் மட்டுமே விளையாடும் ஆள் அரவமற்ற முற்றம்போல, தனிமைத் துயரில் தவிக்கிறது என் மனம்!’’