தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பைக் பற... பற... இது புதிய உலகம்!

பைக் பற... பற... இது புதிய உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பைக் பற... பற... இது புதிய உலகம்!

சாகசப் பயணம்ஆர்.வைதேகி

சத்தலான ஹெல்மெட், ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட், கிளவுஸ் எனப் பந்தயத்துக்குத் தேவையான கெட்டப்பில் மூன்று பெண்கள்.

பாண்டிச்சேரி முதல் கொல்கத்தா வரை 2 ஆயிரத்து 548 கிலோமீட்டர் தூரம் அவர்கள் செய்த பயணத்தின் நோக்கம், வெறும் த்ரில் மட்டுமல்ல... போகிற போக்கில் கலாசாரத்தையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்கிற தேடலும்கூட!

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வைஷாலி குல்கர்னி மோர், பூனாவைச் சேர்ந்த அனகா சந்த் மற்றும் சோனல் பட் மூவரும் இந்தப் பயணத்தில் அறிமுகமாகி நட்பில் இணைந்தவர்கள்.

பைக் பற... பற... இது புதிய உலகம்!

கல்வியாளர், `பிங்கத்தான்' அம்பாசடர், ட்ரக்கர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர் வைஷாலி.இவை எல்லாவற்றையும்விட, தனக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக வைஷாலி சொல்வதோ வேறு.யெஸ்... ஆந்திர மாநிலத்தின் முதல் சோலோ பெண் ரைடர் இவர்!

பாண்டிச்சேரி முதல் கொல்கத்தா வரை டூ வீலரில் பயணம் செய்தவர்களில் அதிக வயதுக்காரரும் இவரே என்கிறது நேஷனல் ரெக்கார்ட்.

‘`போன வருஷம் வைஸாக் டூ ஷீரடிக்கு 1,800 கிலோமீட்டர் தூரம் நான் மட்டும் தனியா ஒரு ரைடு போயிட்டு வந்தேன்.  ஷீரடியிலதான் அனகாவையும் சோனலையும் சந்திச்சேன். மூணு பேருக்கும் பெரிய வண்டிகள் ஓட்டறதுலயும், லாங் ரைடு போறதுலயும் உள்ள பொதுவான ஆர்வம் பிடிச்சிருந்தது. ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். இப்படியொரு மெகா ட்ரிப் போகறதுக்கான பொறிகூட அந்தக் கணத்துல முடிவானதுதான்...’’ என்கிறார் வைஷாலி.

‘`ஸ்கூல் படிக்கிறபோது என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்டபோது, நான் பெரிய பைக் ஓட்ட விரும்பினேன். அப்பாவோட பைக்கை எடுத்து ஓட்டறது, காலேஜ்ல பசங்ககிட்ட பைக் கடன் வாங்கி ஓட்டிப் பழகறதுனு அந்த ஆர்வம் தொடர்ந்தது. ராயல் என்ஃபீல்டு, யமஹா, சுஸூகினு நான் ஓட்டாத பைக்கே இல்லை. எனக்குனு சொந்தமா பைக் வாங்க வசதியில்லை. கிட்டத்தட்ட 28 வருஷங்களுக்குப் பிறகு, போன வருஷம்தான் எனக்கே எனக்குனு ஒரு அவென்ஜர் பைக்  வாங்கினேன்...’’ என்கிற வைஷாலிக்கு 49 வயது.

‘`எங்கம்மாவோ, அப்பாவோ என் பைக் ஆர்வத்தை ஏத்துக்கிட்டதே இல்லை. வண்டி ஓட்டக் கத்துக்கிட்டதுலேருந்து தனியா ரைடு போகப் பழகறது வரைக்கும் வீட்ல பொய் சொல்லிட்டுத்தான் போய் வந்திருக்கேன்.  ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு என் கணவர் என் ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டார். ஐம்பதை நெருங்கற வயசுல, நான் இப்படி சோலோ ரைடு போறதையும், பைக் ஆர்வமுள்ள பெண்களோடு பைக் ஓட்டறதையும், என் கணவரும் மகனும் நண்பர்களும் புரிஞ்சுக்கிட்டு என்கரேஜ் பண்றாங்க. ஆர்வத்துக்கும் விருப்பத்துக்கும் வயசு தடையில்லைங்கிறதுக்கு நானே உதாரணம்...’’ - வைஷாலியின் வார்த்தைகளில் இளமை துள்ளுகிறது.

பைக் பற... பற... இது புதிய உலகம்!

அனகா சந்துக்கும் படிக்கிற காலத்திலிருந்தே பைக் ஓட்டுவதில் காதல். வேலையில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற பிறகே பைக் பயண ஆர்வம் சூடுபிடித்ததாகச் சொல்கிறார் அவர்.

‘`எல்.ஐ.சி-யில 24 வருஷம் வேலை பார்த்துட்டு வி.ஆர்.எஸ் வாங்கிட்டேன். வேலைக்குப் போகும்போது தினமும் 30 கி.மீ. தூரம் பைக்லதான் போயிட்டு வந்துட்டிருந்தேன். காலேஜ் படிக்கிறபோதே பைக் ஓட்ட ஆரம்பிச்சிட்டேன். பஜாஜ் எம் 80, ஹோண்டா சிடி 100, ஹோண்டா ஸ்ட்ரீட் 125 சிசினு நிறைய வண்டிகள் ஓட்டிக்கிட்டிருந்தேன். ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு என் கனவு வாகனமான ராயல் என்ஃபீல்டு வாங்கினேன்.  தினம் 600 கி.மீ வரை ரைடு போயிட்டு வருவேன்.

என் பையனோட டியூக் கேடிஎம் 200-ல முதல்முதல்ல பூனா டு ரான் ஆஃப் கட்ச் வரை ரைடு போயிட்டு வந்தேன். என்கூட 12 பெண்கள் வந்தாங்க. அந்த ட்ரிப்புல என் வண்டி உள்பட, நாலு பேரோட வண்டிகள் ரிப்பேர் ஆகிடுச்சு. அப்போ அதிகாலை 6 மணி.

கடைகள் எதுவும் கிடையாது. நாங்களே எங்களுக்குத் தெரிஞ்சதை வெச்சு சமாளிச்சு அந்த ட்ரிப்பை முடிச்சோம். அதுக்கடுத்த பெரிய, முக்கியமான ட்ரிப்... வைஷாலி, சோனல் பட் கூட நான் போனது. மூணு பேரும்

வேற வேற வயசுக்காரங்க. ஆனாலும், பைக் ஓட்டறதுலயும், நீண்ட தூரம் பயணம் பண்றதுலயும் எங்களோட கெமிஸ்ட்ரி பயங் கரமா வொர்க் அவுட் ஆயிடுச்சு. `நானும் என் பைக்கும்’னு நினைக்கிற இந்த அனுபவமே அலாதியானது. எங்க நட்பும் நட்பால சாத்தியமான இந்த பைக் பயணமும் இனியும் தொடரும்...’’ - அழகாகச் சொல்கிறார் அனகா.

பைக் பற... பற... இது புதிய உலகம்!

மூவரில் இளையவர் சோனல் பட். பூனாவில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிபவர்.

‘`அப்பாவோட யமஹா க்ரெக்ஸ்-தான் என்னுடைய முதல் பைக். கியர் வெச்ச பைக் ஓட்ட, அப்பாதான் எனக்குக் கத்துக்கொடுத்தார். நான் தனியாகவும் பைக் ரைடு போறேன்.  தோழிகளோட சேர்ந்து போன ரைடு, பல நல்ல விஷயங்களை எனக்கு அறிமுகப்படுத்தினது. நிறைய நல்ல நண்பர்கள் அறிமுகமானாங்க. `வீட்டைத் தாண்டின உலகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாதது' என்ற கருத்து எவ்வளவு பொய்யானதுன்னு புரியவெச்சது. குழுவினரா சேர்ந்து டிராவல் பண்ணும்போது எங்களுக் குள்ள ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உணர்வு கூடுது. இன்னும் நிறைய பயணம்... நிறைய நட்புகள்... பைக் ஓட்டறதுல ஆர்வமுள்ள பெண்களைக் கண்டறிந்து இணைக்கிறது... இப்படி நிறைய கனவுகள் இருக்கு எங்களுக்கு...’’ - சூப்பராகச் சொல்கிறார் சோனல்.

பைக் ஓட்டுவதில் கிடைக்கிற சாகசம், பாலின பேதம் மறந்து சீறிப் பறக்கும் உற்சாகம்... இவற்றை எல்லாம் விட, எதிர்ப்படுகிற மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களைப் பற்றிய நெகிழ்வான கதைகளைக் கேட்டறிவதும் தங்களின்  பயணத்தை இனிமையாக்குவதாகச் சொல்கிறார்கள் தோழிகள்.

‘`ஒருமுறை என்னோட சோலோ பயணத்தின் போது, கிழக்கு கோதாவரிப் பகுதியில டீ வியாபாரி ஒருத்தரைச் சந்திச்சுப் பேசிக்கிட்டிருந்தேன். தன் கிராமத்து மக்களோட எதிர்ப்புகளை மீறி, தன் மகளுக்கும் மனைவிக்கும் கழிவறை கட்டிக் கொடுத்ததாகவும் மகளைப் படிக்க வைக்கிறதாகவும் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைச்சுப் போயிட்டேன்.

பாண்டிச்சேரி டு கொல்கத்தா பயணத்துல மல்லிகானு ஒரு பெண்ணைச் சந்திச்சோம். அவங்க புற்றுநோயால் பாதிக்கப் பட்டவங்க. அவங்களோட பாசிட்டிவ் எனர்ஜியையும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையையும் பார்த்து மூணு பேரும் மிரண்டுட்டோம். 12 நாள்கள் தொடர்ந்த எங்க பயணத்தின் இடையில பலவித சிரமங்களை எதிர்கொண்டபோதெல்லாம் மல்லிகாவைத் தான் நினைச்சுக்கிட்டோம். இப்படிப் பல மனிதர்கள்... பல பாடங்கள்...’’ - சுவாரஸ்யம் கூட்டுகிறார் வைஷாலி.
பெண்களுக்கான பைக்கர்ஸ் கிளப்பை தொடங்குவது, இந்தியா முழுவதிலும் பைக் பயணம் மேற்கொண்டு, அந்தரங்க உறுப்புச் சுகாதாரம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்தும் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவது... இப்படிப் பெரிய பெரிய லட்சியங்கள் இந்த பைக் காதலிகளுக்கு!