தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மஞ்சள் குருவி! - சிறுகதை

மஞ்சள் குருவி! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
மஞ்சள் குருவி! - சிறுகதை

சிறுகதை - அனுராதா ஆனந்த் - ஓவியம்: ராஜேந்திரன்

ந்தக் குறுகிய தார் சாலையில் நடக்கும்போது ஒரு விடுபடலை உணர முடிந்தது அவளால். ஒவ்வோர் அடியிலும் மேலே அப்பியிருந்த ஏதோ ஒன்று நெகிழ்ந்து விழுவது போல லேசாக உணர்ந்தாள். இரு பக்கமும் ஆசீர்வாதமாக ஆரஞ்சு வண்ண இலைகளைச் சொரிந்த மரங்கள், மாலை என்றாலும் கோடையின் உக்கிரத்துடன் அடிக்கும் வெயில்,  பாட்டொன்றை மெல்லியதான தன் அடிக்குரலில் பாடிக்கொண்டும், இடையிடையே நிறுத்தி பறவைகளின் கூப்பிடு ஓசையை அவளுக்கே உரிய பிரத்யேக நெற்றிச்சுருக்கலுடன் கேட்டுக்கொண்டும் உடன் நடந்து வரும் நிவேதா... இவையெல்லாம் சேர்ந்து அந்தப் பள்ளியின் உள் உள்ள இச்சாலைக்கு ஒரு சிறப்புத் தொனியை ஏற்றின.

மஞ்சள் குருவி! - சிறுகதை

எப்படியாவது நிவேதாவுக்கு இந்தப் பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும் என்கிற தவிப்பும் கவலையும் அவளுக்கு இருக்கத்தான் செய்தது. கூடவே பயமும். நிவேதாவைப்போல தன்னால் இயல்பாக இத்தருணத்தை ரசிக்க முடியவில்லையே என்று ஏங்கினாள். ரசிக்கத்தக்க தருணங்கள் வெகு அரிதாகவும் பெரும் இடைவெளிகளுடனும் வரும்போது, கிட்டியவற்றைப் பெரிதென்றோ, சிறிதென்றோ பாகுபாடற்றுப் பேராசையுடன் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்ள நினைப்பது இயல்புதானே?

எதையும் முழுதாகச் செய்யவிடாத இந்தப் பயம், அது எப்போதும் அவள் கூடவே ஒரு விசுவாசமிக்க காதலனைப்போல பயணிக்கிறது, மூச்சு முட்ட அவளை ஆலிங்கனித்தபடி.

கணவன் இறந்தபோதும் பயம்தான் முதலில் தோன்றியது. பின்னரே அழுகை வந்தது. அதுவும் கழிவிரக்கத்தினால்தான் என்பதை அவள் அறியாமலில்லை. `நிவேதாவுக்கு அப்பா இல்லாமல் போனதே’ என்பதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

இருபது வருட மணவாழ்க்கை முடிந்து கசப்பே எஞ்சியிருந்தது.  தனிமையும்,  எதிலும்  ஒட்டாத்தன்மையும் வாழ்வின் போக்காகவே பழகிவிட்டிருந்தது. எந்தவித பகிர்தலோ, புரிதலோ, ஒட்டுதலோ இல்லாத உறவை என்ன பெயர் சொல்லி அழைப்பது? அப்பா என்கிற நினைப்பே இல்லாமல், அதற்குரிய கடமைகள் எதிலும் பங்கேற்காமல் விட்டேத்தியாக இருந்தவனிடம் முதலில் பேசி, பின் விவாதித்து, கடைசியில் சண்டையும் இட்டு தோற்றுப்போயிருந்தாள்.

பேச்சே அற்ற நிலை பழகி வெகு காலமாகியிருந்தது.அவனில்லாத வெறுமையைக்கூட பழக்கப்பட்ட ஒன்றாகவே உணர்ந்தாள். மாரடைப்பால்  மரணித்த இளம் கணவனை நினைத்து கண்ணீர் சிந்தக்கூடத் தோன்றவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அவ்வப்போது தலைக்காட்டும்.

அதன்பின் ஒரு மாதத்துக்குக் குறையாமல் துக்கம் விசாரிக்க வந்த மனிதர்களை கண்டு  வியப்பாகத்தான் இருந்தது. துஷ்டி கேட்பதை ஒரு கலையாகவே பயின்றிருக்கிறார்கள். இருப்பதிலேயே பழையதொரு வண்ணமில்லா உடை உடுக்க வேண்டும் என்பது முதல் விதி. பளிச்சென்ற முகத்துடன் யாராவது துஷ்டி கேட்பார்களா என்ன? எண்ணெய் வடியும் முகம்தான் சாலச்சிறந்தது. சற்றும் பழக்கமே இல்லாவிடினும் அவள் கைகளைப் பற்றிக்கொள்வார்கள் பெண்கள். வராத அழுகையை வரவழைத்துக்கொண்டு, ‘போற வயசா இது’ என்றுதான் பேச்சைத் தொடங்க வேண்டும். எல்லா விவரங்களும் மிகத்தெளிவாக தெரிந்தும் ‘என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தார்’ என உச்சுக்கொட்ட வேண்டும். 
  
நல்லாயிருக்கிற மூக்கை உறிஞ்சி, வடியாத கண்ணீரைத் துடைத்து, காப்பியோ வேறேதுவோ நேரத்துக்்குத்தக்க கொடுக்கப்பட்டவற்றை, முதலில் சம்பிரதாயமாக மறுத்து, பிறகு பருகி, ‘பிள்ளைக்காகவாவது நீ(ங்கள்) தைரியமாக இருக்க வேண்டும்’ என்று முடித்துக் கிளம்ப வேண்டும். நிறைய வினாக்கள் எழும் அவளுக்குள்... இந்தத் தைரியம் எத்தகையது, அது எங்கு கிடைக்கும், அது ஏன் பிள்ளைக்கு மட்டும் தேவை, தனக்குத் தேவையில்லையா? இப்படியெல்லாம். ஒரு டார்க் காமெடி போல நகரும் இந்நாடகத்தை அதன்போக்கில் போகவிட்டு, இறுக்கமான முகமூடி அணிந்து சரியான இடத்தில் மிகச்சரியான வசனம் பேசி கடக்கப் பழகிவிட்டிருந்தாள்.

இந்தக் கூத்துகள் எல்லாம் முடிந்து ஒரு நன்னாளில் அவள் பிறந்து, வளர்ந்து, படித்து நண்பர்களுடன் சுற்றித்திரிந்த இப்பெருநகருக்கு குடிபெயர்ந்தாள். மாநகரும் அவளை இருகரம் கொண்டு அணைத்து மடியில் தஞ்சமளித்துக்கொண்டது. வாடகைக்கு வீடெடுத்து, கேஸ் கனெக்‌ஷன் மாற்றி, ரேஷன் கார்டு மாற்றி, வங்கிக்கணக்கு தொடங்கி, பள்ளிக்கூடம் தேர்ந்தெடுத்து, அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுத்து, இதோ இப்போது நேர்காணலுக்கு வந்தது வரை எல்லாமுமே ஒரு துரித கதியில் நடந்துள்ளன. திரைப்படங்களில் பிறந்த குழந்தையாக உள்ள ஹீரோ ஒரே பாட்டில் மனம் கவர் ரவுடியாக வளர்ந்து நிற்பாரே அது போல.

நிவேதா பதினைந்து வயதுக்கே உரிய துணிச்சலுடனும் சுறுசுறுப்புடன் கவலையற்றுக் காணப்பட்டாள். பள்ளிக்கூடங்களை `பார்ட் டைம் சிறைச்சாலைகள்' என்று விளையாட்டாகச் சொல்வாள்.  அதனால்தானோ என்னவோ, சீருடைகளற்ற இப்பள்ளியில் சேர ஆர்வமாக இருந்தாள். தப்புகள் செய்து, அதைத் தானே உணர்ந்து திருத்திக்கொள்ள அனுமதியும், போதுமான நேரமும் இங்கு கிடைக்குமென்று நம்பினாள். இது இல்லையேல், தான் ஸ்கூலுக்கே போவதாக இல்லை என்று தீர்மானமாகச்் சொன்னாள்.

‘இத்தன கண்டிஷன்ஸ் போட்டா ஒருவேலைக்கும் ஆகாது’ - அம்மாவான அவளது குரல் ஓங்கி ஒலிக்கும்போதெல்லாம், ‘அம்மா இதே சண்டைய எத்தன தடவ போடுவது, வேற ஏதாவது புதுசா சண்டை போடலாம்’ என்று பேச்சை முடித்து விடுவாள் நிவேதா.

மரத்தில் ஒரு மஞ்சள் குருவி தரும் குரலுக்கு எதிர்க்குரல் கொடுக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தவளிடம் ‘இன்டர்வியூவிலாவது சீரியஸா பேசுவியா?’ என்றதற்கு `கண்டிப்பாக’ என்று அந்தக் குருவியின் குரலிலேயே சொல்லிச் சிரித்தாள்
விழுதுகள் தொங்கும் ஆலமரத்தின் அருகில் உள்ள சிறுகுளத்தில் கைகளை நனைத்துக் குதூகலிக்கும் அவளிடம் எப்படிக் கடிந்துகொள்வது? பதினொன்றாம் வகுப்புக்்கான நேர்காணல் நடக்கும் இடத்தை அடைந்தார்கள். சிறு காத்திருப்புக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.

சம்பிரதாயமான சில கேள்விகளுக்குப்பின் இவள் பயத்துடன் எதிர்பார்த்திருந்த அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. கடந்த பள்ளியாண்டின் பாதியிலிருந்து ஏன் பள்ளி செல்லவில்லை? ஏன் டிஸ்கன்டினியூ செய்தாள்?

பல முறை நிவேதாவிடம் படித்து படித்துச் சொல்லியிருந்தாள்... `அப்பா இறந்ததால் பள்ளி செல்லும் மனநிலையில் இல்லை’ என்று சொல்லச்சொல்லி. நிவேதாவோ, `ஸ்கூல் என்பது தனக்கு ஒரு பார்ட் டைம் சிறை...’ என்று விளக்கத் தொடங்கினாள். கோபமும் சலிப்பும் அவளது மனதுள் தலைதூக்கியது. கூடவே, `என்றைக்கு இவள் என் பேச்சைக் கேட்டிருக்கிறாள்’ என்கிற எரிச்சலும்.

ஆசிரியர் நால்வரும் வெகு கவனமாக நிவேதா சொல்வதைக்கேட்டுக் கொண்டிருந்தனர். முந்தைய பள்ளியையோ, ஆசிரியர்களையோ குறை கூறாமல், `சிஸ்டம்’ என்று அதன் தலையில் பழியைப்போடாமல், தான் ஒரு மிஸ்ஃபிட் என மேதாவி போல பேசாமல், தன் மனநிலைக்கு இயைந்து வரவில்லை என்பதை மட்டும் மிக நிதானமாக, தெளிவாக, ஒரு சிறு சுய நையாண்டியும் சேர்த்து மிக உண்மையாக விளக்கிக்கொண்டிருந்தாள் நிவேதா.

பட்டென்று மனதில் ஏதோ விடுபட்டது போல இருந்தது அவளுக்கு. உண்மைதான் எவ்வளவு அழகானது. பல கட்டுகளிலிருந்து நம்மை விடுவிக்கும் திறம் படைத்தது. இயல்பானது. சட்டென்று அடியாழத்தை எட்டக் கூடியது.

மஞ்சள் குருவி! - சிறுகதை

‘அம்மாவோட ஃபிரண்டுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் அந்த கரஸ்பாண்டென்ட் என்னை வெளிய அனுப்பல’ என்று தனக்கே உரிய நையாண்டியுடன் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தாள் நிவேதா.

இவள் கண்களில் நீர் தளும்புகிறது. கோபம் நீங்கிப் பெருமிதம் நிறைகிறது. இப்பள்ளியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஒன்றும் குடிமூழ்கிவிடப் போவதில்லை என்கிற உண்மை புலப்படுகிறது. பிறகு நடந்த உரையாடல்கள் எதுவும் இவளுக்கு கேட்கவேயில்லை. கடைசியாக ஓர் ஆசிரியை இவள் கைகளைப்பற்றி, ‘மகளை அழகாக வளர்த்திருக்கிறீர்கள். ரிசல்ட் ஒரு வாரத்தில் தெரியும்’ என்று விடை கொடுத்தார்.

மனதில் பலப்பல எண்ணங்கள் ஒரே நேரத்தில் முட்டி மோதி மேலுக்கு வர எத்தனித்தன. கடந்த பதினைந்து வருடங்களாக விருப்பப்பட்டு, எந்தவித அங்கீகாரமும் எதிர்பாராமல், ஓய்வின்றி, பிறர் பங்களிப்பின்றி, தான் பார்த்த இந்த வேலைக்குத் தகுந்த சன்மானமும், உன்னதமான பாராட்டும் கிட்டியதாக உணர்ந்தாள். மீதமுள்ள வாழ்க்கையை எதிர்கொள்ள, அசிங்கங்களைப் பொறுத்துக்கொள்ள, வாழ்க்கையின் துன்பங்களுக்கு எதிராகச் சண்டையிட, வாழ்க்கையை வெற்றிகொள்ள போதுமான தைரியத்தை அந்த ஒரு வரி அவளுக்கு அளித்தது.

வீடு திரும்பும்போது மரங்கள் அதே ஆரஞ்சு இலைகளால் இவர்களை ஆசீர்வதித்தன. அதே மஞ்சள் குருவி மீண்டும் கூவிக்கொண்டிருந்தது. நிவேதாவும் சற்றும் சளைக்காமல் அதற்குப் பதிலளித்துக் கொண்டிருந்தாள். வெயிலின் உக்கிரம் மட்டும் வெகுவாகக் குறைந்திருந்தது.