தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மூன்று தலைமுறைகள் விரும்பும் முத்தான டீச்சர்!

மூன்று தலைமுறைகள் விரும்பும் முத்தான டீச்சர்!
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்று தலைமுறைகள் விரும்பும் முத்தான டீச்சர்!

குரு வணக்கம்பா.ஜெயவேல் - படம்: தே.அசோக்குமார்

க்ளாரா டீச்சர்... காஞ்சிபுரச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என சகல இடங்களிலும் அவரிடம் படித்த மாணவர்கள் நீக்கமற நிறைந்திருப்பார்கள். அந்தளவுக்கு மூன்று தலைமுறைகளாக, 55 வருடங்களாக... ஆசிரியர், தலைமை ஆசிரியர், இணை தாளாளர் எனக் கல்வித்துறை அனுபவங்கள் கொண்டவர். இன்று அவருக்கு வயது 78. இந்த வயதிலும் ஓய்வை விரும்பாமல் மாணவர்களை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறார் இந்த அன்பு ஆசிரியர். பணியாற்றி ஓய்வுபெற்ற காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி பள்ளிக்கு அவர் வந்திருந்தபோது சந்தித்தோம்.

“தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் சாயல் கிராமம்தான் எனக்குச் சொந்த ஊர். நெசவுத்தொழில் குடும்பம். அப்போ எங்க ஊர்ல படிச்சவங்களே கிடையாது. ஆனா... ஆண், பெண் வித்தியாசமில்லாம எங்க வீட்டுல அண்ணன், அக்கானு எல்லாரையும் எங்கப்பா படிக்க வெச்சார். குறிப்பா, மகள்களை மேல்படிப்புக்காக வெளியூர் அனுப்பினார்.

மூன்று தலைமுறைகள் விரும்பும் முத்தான டீச்சர்!

நான்  மதுரை, லேடி டோக் கல்லூரியில் விலங்கியல் பட்டமும், சென்னையில் ஆசிரியர் பயிற்சியும் முடிச்சேன். ரெண்டு வருஷங்கள் சென்னையிலேயே வேலை. பிறகு காஞ்சிபுரத்துக்கு வந்துட்டேன். 1962-ல் எஸ்.எஸ்.கே.வி பள்ளியில் ஆசிரியரா பணியைத் தொடங்கி, இங்கேயே தலைமை ஆசிரியரா பணி ஓய்வு பெற்றேன். ஓய்வுக்குப் பிறகும் இந்தப் பள்ளியில் இணை தாளாளரா ரெண்டு வருடங்கள் பணி, பிறகு பல்லவன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்து வருடங்கள் முதல்வர் பணி, இப்போ சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றில் ஆசிரியர்... இப்படி கற்பித்தல் பணியில் இருந்து நான் விலகியிருந்ததே இல்லை. தலைமை ஆசிரியர், தாளாளர் போன்ற நிர்வாகப் பொறுப்புகளைவிட, சாக்பீஸ் பிசுபிசுக்கிற கையோட வகுப்பறையில நிக்கிறதுதான் என் மனசுக்கு நெருக்கமா இருக்கும்’’ என்று சொல்லும் க்ளாராவின் குரலில் குருவின் கனிவு.

‘`விடுப்பு எடுக்கவே மாட்டேன். என் பேறுகாலத்தப்போகூட,  பிரசவம் முடிஞ்சு ரெண்டாவது நாள் ஸ்கூலுக்கு வந்துட்டேன். பள்ளிக்குச் சிறப்பான ஆசிரியரா செயல்பட்டதோட, மாணவர்களுக்குப் பிடிச்ச ஆசிரியராவும் இருந்ததை மகிழ்வா உணர்றேன். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளியில் தொடங்கி, என் மாணவர்கள் பலர் இன்னிக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள்னு பெரிய பெரிய பதவிகள்ல இருக்காங்க.

சில தினங்களுக்கு முன் திடீர்னு நாலஞ்சு பேர் வந்து, ‘டீச்சர், எங்களைத் தெரியலையா? நாங்க உங்ககிட்டதான் படிச்சோம்’னு சொல்லி, என்னை நலம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்படி என்னை எங்கு சந்தித்தாலும், ‘டீச்சர்... ‘நல்லா இருக்கீங் களா டீச்சர்? ரொம்ப இளைச் சுட்டீங்களே’னு வாஞ்சையா நலம் விசாரிப்பாங்க. 30, 40 வருஷங்களா... ரெட்டை ஜடை, சட்டை, ட்ரவுசர்னு பார்த்த மாணவர்களை இப்போ உயர் அதிகாரிகளா, அம்மாவா, தாத்தாவா எல்லாம் பார்க்கிறப்போ எனக்கு அவங்களைவிட சிலிர்ப்பா இருக்கும். அதேபோ,ல நான் பாடம் எடுக்கும் பள்ளிகளில், ‘எங்க அம்மாவுக்கும் நீங்கதான் டீச்சராம்’, ‘எங்க பாட்டிக்கும் நீங்கதான் டீச்சராம்’னு என்னைப் பெரிய அதிசயம் போல பார்த்துப் பேசுற பசங்களின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சுவேன்’’ என்கிறவர், படிப்போடு மாணவர்களின் சொந்த வாழ்க்கையிலும் கவனம் செலுத்தியது கூடுதல் சிறப்பு.

``ஏதோ ஒரு சூழலில் பள்ளியை விட்டு மாணவிகள் நின்றுவிட்டால், வீட்டுக்கே சென்றுஅவங்க பெற்றோர் கிட்ட பேசி மறுபடியும் பள்ளிக்கு அழைச்சுட்டு வரு வேன். அவங்க எல்லாம் இப்போ என்னைச் சந்திக்கும் போது மனசு உருகிப் பேசுவாங்க. இதைவிட ஓர் ஆசிரியருக்கு என்ன வேணும்? ஓர் ஆசிரியரா தலைமுறைகளுக்குத் தகுந்தபடி என்னைத் தகவமைச்சுட்டே வந்திருப்பதுதான், என் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்கி யிருக்கு” என்கிறார் க்ளாரா, குளிர்ந்த வார்த்தைகளில்!