Published:Updated:

மனுஷி - 15 - எது காவல்... மதிலா? மனமா?

மனுஷி  - 15 - எது காவல்... மதிலா? மனமா?
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 15 - எது காவல்... மதிலா? மனமா?

சுபா கண்ணன், ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 15 - எது காவல்... மதிலா? மனமா?

சுபா கண்ணன், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி  - 15 - எது காவல்... மதிலா? மனமா?
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 15 - எது காவல்... மதிலா? மனமா?

பெண்களுக்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கு
பெண்களுக்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
கல்வியில்லா பெண்கள் களர்நிலம்
அங்கே புல் விளைந்திடலாம்
நல்ல புதல்வர்கள் விளைவதில்லை!


- பாரதிதாசன்

அன்று ரோஷ்ணிக்கு ஒரு மெயில் வந்திருந்தது. கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் அவளை செலக்ட் செய்திருந்த கம்பெனி, கொல்கத்தா கிளையில் ஜாயின் செய்யும்படிச் சொல்லி இருந்தார்கள். உறவினர் எவருக்குமே அதில் உடன்பாடு இல்லை. ‘அவ்வளவு தூரத்தில் போய் வேலை பார்க்க வேண்டுமா?’ என்று எல்லோரும் ஒன்றுபோல கேட்டார்கள்.

ஆனால், ரோஷ்ணியின் அம்மா கமலா, ‘‘ஒண்ணும் பயப்படாதே ரோஷ்ணி. நல்ல கம்பெனி, நல்ல வேலை, நல்ல சம்பளம். இந்தியாவிலேயே முதலிடத்துல இருக்கற கம்பெனி. நீ தைரியமா போய் சேர்ந்துடு. இவங்கள்லாம் கொஞ்சநாளைக்கு இப்படி ஏதாவது பேசிட்டிருப்பாங்க. அப்புறம் மறந்துடுவாங்க. வீணாக உன்னோட கரியரை கெடுத்துக்காதே’’ என்று தைரியம் சொன்னாள்.

அம்மா கொடுத்த தைரியத்தில், கம்பெனி ஏற்பாடு செய்திருந்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறாள் ரோஷ்ணி. தனக்குத் தைரியம் கொடுத்து உற்சாகப்படுத்திய அம்மாவை மனதுக்குள் வியந்துகொண்டவளின் மனத்தில், அம்மாவைப் பற்றிய நினைவுகள் கொசுவத்திச் சுருள்போல சுருளத் தொடங்கின.

மனுஷி  - 15 - எது காவல்... மதிலா? மனமா?

ரோஷ்ணி மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, ஒருநாள் மதியம் தாத்தா வந்து அழைத்துச் சென்றார். காலையில் அலுவலகம் சென்ற அப்பா, இயந்திரக் கோளாறால் ஏற்பட்ட விபத்தின் காரணமாகச் சடலமாக வீடு திரும்பியிருந்தார். அனைத்துச் சொந்தங்களும், ‘அழுதுடு கமலா, துக்கத்தை உள்ளுக்குள்ள வெச்சுக்காதே’ என்று கதறியபோதும், கமலா கண்ணீர் வடிக்கவே இல்லை.

எல்லாச் சடங்குகளையும் மௌனமாக ஏற்றுக் கொண்டவள், சிறிய செயின், ஸ்டிக்கர் பொட்டு என்று தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டாள். தன்னுடைய வீட்டுக்கு வந்துவிடும்படி தாத்தா எவ்வளவு வற்புறுத்தியும், அப்பாவுடன் வசித்த வீட்டிலேயே இருந்துவிட்டாள்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு அப்பாவின் நண்பர்கள் மூலம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, வேலைக்கு முயற்சி செய்தாள். ஒரு வருடத்துக்குள் வேலையும் கிடைத்துவிட்டது. மாமா, சித்தப்பாக்கள், அத்தை, மாமிமார்கள் எல்லோரும் வேண்டாம் என்று மறுத்தபோதும்கூட, இதில் பிடிவாதமாக இருந்துவிட்டாள்.

வளர்ந்த பிறகு ஒரு மழை நாளில் தன் அம்மாவிடம், ‘‘ஏம்மா, நீ வேற கல்யாணமே பண்ணிக்கலை? அப்பா மேல அவ்வளவு லவ்வாம்மா உனக்கு?'’ என்று கிண்டலாகக் கேட்டபோது...

‘`அப்பாவோட கொஞ்சநாள் வாழ்ந்தாலும், கம்ப்ளீட்டான வாழ்க்கை வாழ்ந்துட்டேன். அந்த வாழ்க்கையே எனக்கு நிறைவா இருந்ததால, வேற ஒண்ணுமே தோணலை. தவிரவும் அந்தப் பத்து வருஷத்துல, உன்னோட அப்பா என்னை எப்படி கொஞ்சம் கொஞ்சமா மாத்தினாரு தெரியுமா? அப்பா என்கிட்ட ஒரு கணவனா மட்டும் நடந்துக்கலை. ஒரு நல்ல நண்பனாவும் இருந்தார். தாத்தா வீட்டில இருக்கும்போது, தாத்தா வாங்கி வரும் காய்கறியைத்தான் சமைப்போம். அவர் வாங்கிக் கொடுக்கும் துணிகளைத்தான் உடுத்திக்கொள்வோம். அப்படி வளர்ந்த நான், இந்த அளவுக்கு தைரியமா மாறினதுக்கு அப்பாதான் காரணம். பேங்க்ல கணக்கு ஆரம்பிச்சு வரவு செலவு கணக்குகளை என்னையே பார்க்க வச்சதாகட்டும், ப்ளஸ் டூ வரை படிச்சிருந்த என்னை டிகிரி படிக்க வச்சதாகட்டும், டிகிரி முடிச்சதும் வேலைக்குப் போவதில் எனக்கு இருந்த ஆர்வத்தைப் புரிஞ்சிக்கிட்டவர், நீ வயித்துல தங்கியதும், நம் மேல உள்ள அக்கறையினால, ‘யோசிம்மா, இப்ப வேலை அவசியமான்னு?’ என்று கேட்டதும், மூன்றாம் வருட டிகிரி பரீட்சை எழுதின அடுத்த மாதமே நீ பிறந்துட்டே. அதுக்கப்புறம் நீயே எங்களோட உலகமாகிட்டே. என்னை வேலைக்கு அனுப்பலைன்னாலும்கூட, என்னை எல்லாத்துலயும் அப்டேட்டா வெச்சிருந்தார். இந்த நம்பிக்கை தாத்தா வீட்டில இருந்திருந்தா எனக்குக் கிடைச்சிருக்காது’' என்று அம்மா சொன்ன தெல்லாம் நினைவுச் சுருளில் சுருள விட்டபடி இருந்த ரோஷ்ணியின் நினைவலைகளில், ‘`எனி டிரிங்க் ப்ளீஸ்?’' என்ற ஏர் ஹோஸ்டஸின் குரல் சிறு சலனத்தை ஏற்படுத்தியது.

க்ரீன் டீயை எடுத்துக் கொண்ட ரோஷ்ணி, மீண்டும் அம்மாவைப் பற்றிய நினைவுச் சுருளைச் சுழலவிட்டாள்.

அப்பாவை அப்படியே உள்வாங்கிக் கொண்டாள் அம்மா. தான் ஆறாம் வகுப்பு படித்தபோது, தன்னையே பேங்க் செலானை நிரப்பச் சொன்னதையும், தாத்தா வீட்டுக்கோ, சித்தப்பா வீட்டுக்கோ செல்ல வேண்டியிருந்தால், ரிசர்வேஷன் ஃபார்மை தன்னையே நிரப்பச் சொன்னதையும் நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

போன விடுமுறையில்தான் ஒருநாள் அம்மாவிடம், ‘`அம்மா, நான் இப்படி கேக்கறனேன்னு கோவிச்சுக்காதே. உன்னோட மனசுல சின்ன சலனம்கூட இல்லையாம்மா உனக்கு? இப்பவே இவ்வளவு அழகா இருக்கே. அந்த வயசுல எவ்ளோ அழகா இருந்திருப்பே?’' என்று அம்மாவை வம்பிழுத்தபோது, அம்மா சொன்னது இப்போதும் அப்படியே பளிச்சென்று நினைவில் இருக்கிறது.

`‘ரோஷ்ணி, பாட்டி எப்பவுமே கேட்பாள், ‘மனம் காவலா? மதில் காவலா?’ என்று. என் தம்பி ராமு... அதான் உன் மாமா ஒருமுறை தாத்தா பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்துக்கிட்டு நண்பர்களுடன் சினிமாவுக்குப் போனான். ராமு தியேட்டர் வாசல்ல இருக்கறதை சின்ன தாத்தா பார்த்துட்டாரு. ராமுவுக்கு அன்னிக்கு சரியான மண்டகப்படிதான்னு நாங்கள்லாம் ரொம்ப பயந்துக்கிட்டி ருந்தோம். ஆனா, தாத்தா ஒண்ணுமே சொல்லலை. எல்லோரையும் தீர்க்கமா ஒரு பார்வை பார்த்துட்டு போயிட்டாரு. அப்போ பாட்டி சொன்னதுதான், `மனம் காவலா? மதில் காவலா?'ங்கறது. அடிக்கடி சொல்லிட்டே இருந்தாலும், அப்பா போனப்பறம்தான் அதனோட அர்த்தம் எனக்குப் புரிஞ்சுது.    

சிலர் சொல்றதால சரி தப்புன்னோ, யாரும் பார்க்காததால டெம்ட் ஆகுறதோ இல்லை. நாமே நமக்குன்னு சில எல்லைகளை வகுத்துக் கணும். எவ்வளவுதான் பெரிய மதிலை காவலா வச்சாலும், மனசு வெச்சா தாண்டிடலாம். ஆனா, மனசைக் காவலா வெச் சுட்டா, எந்த புறத் தூண்டுதலும் (External Force) நம்மை ஒண்ணும் பண்ணாது.’'

அம்மாவை மனதுக்குள் மிகுந்த வியப்புடன் நினைத்துப்பார்த்த ரோஷ்ணி, ‘என் மனமே எனக்குக் காவல். எந்த ஒரு டிஸ்ட்ராஷனும் எனக்கு இல்லை. அற்புதமான அம்மாவினால் வளர்க்கப்பட்டவள் நான்’ என்று தன் மனத்தையே காவலாக அவள் கொண்டதற்கும், கொல்கத்தாவில் விமானம் தரையிறங்குவதற்கும் சரியாக இருந்தது.

அம்மாவைப் பற்றிய மனம் கொள்ளா பூரிப்புடனும் பெருமிதத்துடனும் கொல்கத்தா மண்ணில் கால் பதித்தாள் ரோஷ்ணி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுயக் கட்டுப்பாடு என்பது கோடி பொன் பெறும் என்பது பற்றி ஔவையார் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார்
     தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.


`தன்னுடைய நல்ல பண்புகளை மதிக்காதவர் வீட்டுக்குச் செல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பதும், உபசரிக்காதவர்கள் வீட்டுக்குச் சென்று உண்ணாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் கோடி பொன்னுக்குச் சமம்' என்கிறார் ஔவையார். இந்தப் பாடலை எழுதியதால், சோழ மன்னரால் பெரிதும் போற்றப்பட்டார் ஔவையார். நம் கலாசாரத்தில் பெண்கள் என்றும் அடிமைகளாக இருந்ததில்லை என்பதற்கும், அவரவர் பெற்ற ஞானத்துக்கும் அறிவுக்கும் தகுந்த மரியாதை உறுதியாகக் கிடைக்கும் என்பதற்கு ஔவைப் பாட்டியே சாட்சி!