தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஒட்டகத்தைக் குளிப்பாட்டவே மாட்டோம்!

ஒட்டகத்தைக் குளிப்பாட்டவே மாட்டோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒட்டகத்தைக் குளிப்பாட்டவே மாட்டோம்!

உலா விக்னேஸ்வரி சுரேஷ்

ராஜஸ்தான் என்றாலே விதவிதமான கோட்டைகள், அதற்குள் இருக்கும் அரண்மனைகள் என்றாலும், கோயில்களும் இல்லாமல் இல்லை. புத்த மற்றும் சமண மதங்கள் மிகப்பெரிய அளவில் வியாபித்திருந்ததால், அந்தச் சமயங்களின் வழிபாட்டு இடங்களே அதிகம் இருக்கின்றன. சாதாரணத் தெருவில் கூட தென்படும் `ஹவேலி' எனப்படும் கற்களைச் செதுக்கி செய்திருக்கும் அலங்கார பால்கனிகள் ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைக்கின்றன.

பெண்கள்... ஜோத்பூர், ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் நாகரிக உடைகளுக்கு மாறிவிட்டார்கள்.  இன்னமும் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் மட்டும் ராஜஸ்தானிய உடையான பாவாடை, சட்டை மற்றும் தாவணி அணிந்து, தலையில் தாவணியால் முக்காடு போட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் முக்காடு துணி கழுத்து வரை மூடியிருந்ததாம். இப்போது தலையை மறைப்பதாக மட்டும் பயன்படுகிறது. `சதி' எனப்படும் உடன்கட்டை வழக்கம், அக்காலத்தில் ராஜ்புத் பெண்களிடம் கட்டாயமாக்கப்பட்டிருந்திருக்கிறது. ஒவ்வொரு கோட்டை வாயிலிலும் `சதி'யினால் உயிர் விட்ட பெண்களின் கைத்தடங்களைப் பதிந்துவைத்திருக்கிறார்கள். அதை வழிபடவும் செய்வார்களாம். ஒவ்வொரு போரின் முடிவிலும், இறந்துபோன கணவரோடு பெண்ணும்  சிதையில் இறங்கிவிடுவதால், எதிரி நாட்டு ஆண்களிடமிருந்து தங்கள் கற்பைக் காப்பாற்றிக்கொண்டார்கள் என்கிறார்கள். எத்தனை காலங்கள் மாறினாலும், போரின் முடிவு எத்தகையதாக இருந்தாலும், அதில் பெருமளவு பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்ற உண்மையை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஒட்டகத்தைக் குளிப்பாட்டவே மாட்டோம்!

உணவு... சைவ உணவுக்காரர்களுக்குப் பிரச்னையே இல்லை. நாம் அரிசியை வைத்துக் கொண்டு பல உணவு வகைகள் செய்துவிடுவது போல, அவர்கள் கோதுமையைக் கையாள் கிறார்கள். பனீர் எனப்படும் பாலாடைக்கட்டி ஏதேனும் ஒரு வகையில் உணவுத்தட்டுக்கு வந்துவிடுகிறது.

உடை... தலைப்பாகை, பைஜாமா மற்றும்  பஞ்சகச்சம் போன்று வேட்டி கட்டிய ஆண்கள் ஜெய்ப்பூர் தாண்டியதும் காணக் கிடைப்பார்கள். அதீத வெயில் பிரதேசமான ராஜஸ்தானுக்கு ஏற்ற உடை அது. அந்தத் தலைப்பாகை கட்டும் முறையை வைத்தே எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று கண்டுகொள்வார்களாம். `ராஜ்புத்' இனத்து ஆண்கள் காதில் கடுக்கன் அணிகிறார்கள்.

ஒட்டகங்கள்... நாங்கள் சென்றது குளிர் காலமாதலால், விலங்குகளுக்குத் தங்கள் பழைய ஸ்வெட்டர் மற்றும் போர்வைகளை உடை போல அணிவித்திருந்தார்கள். இன்னமும் கிராமங்களில் ஒட்டகத்தை வண்டிக்காகவும், சவாரிக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.  `தண்ணீர் பிரச்சனை காரணமாக ஒட்டகத்தைக் குளிப்பாட்டவே மாட்டோம்' என்றும் சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள்.

ஒட்டகத்தைக் குளிப்பாட்டவே மாட்டோம்!

மொழி... ராஜஸ்தானிய மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. ஆகையால், இந்தியில்தான் எழுதுகிறார்கள்... பயிற்றுவிக்கிறார்கள். ஆனால், இலக்கியம் இல்லாத ஒரு மொழி வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இந்தி கொஞ்சம் கொஞ்சமாக ராஜஸ்தானியை விழுங்குவதைப் பார்க்க முடிந்தது. பேச்சுமொழியாக மட்டும் இருக்கும் ஒன்றை, இத்தனை நாள் காப்பாற்றி வைத்திருப்பதே பெரிய விஷயம்தான். வயதானவர்கள், சக ராஜஸ்தானியைப் பார்த்தால், மகிழ்ச்சியோடு தாய்மொழியில் பேசிக்கொள்கிறார்கள். இளைஞர்களும் அவ்வாறே இருப்பது அம்மொழியை வாழவைக்கும்.

விவசாயம்... நமக்கு ராஜஸ்தான் என்றாலே பாலைவனம்தான். ஆனால், தட்பவெப்ப நிலை மாற்றத்தால்தான் இவ்வாறு மாறிவிட்டதாம். முன்பு சரஸ்வதி நதி ஓடி, பசுமையாக இருந்தது என்கிறார்கள். நாங்கள் போனபோது எங்கெங்கு காணினும் கடுகுப் பயிரிட்டிருந்தார்கள். பச்சைச் செடிகளின் மேலே மஞ்சள் பூக்களை மொத்தமாகப் பார்ப்பது அவ்வளவு அழகாக இருந்தது. இந்தியாவில் அதிகம் எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தானாம். கடுகுக்கு அடுத்தபடியாக பருத்தி பயிரிட்டிருக்கிறார்கள். லாரிகளில் மிகப்பெரிய துணிப்பைகளில் பருத்தி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மிகப்பெரிய கூடாரம் சாலையில் நகர்வது போல போய்க்கொண்டிருக்கிறது. நம் மாநிலத்தைப் போலவே பல இடங்களில் சீமைக்கருவேலமரங்கள் வளர்ந்திருந்தன. எங்கள் வாகன ஓட்டி, மரத்துக்கு என்னவோ பெயர் சொல்லி, `எதற்குமே உதவாத மரம் என்று அர்த்தம்' என்றார். கருவேலமரம் ஒரு தேசியப்பிரச்னை என்று அவரிடம் சொன்னேன்.

ஒட்டகத்தைக் குளிப்பாட்டவே மாட்டோம்!

சினிமா... இதுவரை ராஜஸ்தானிய மொழியில் ஒரே ஒரு படம்தான் எடுக்கப் பட்டிருக்கிறதாம். ஹிந்திப் படங்கள் மட்டுமே பார்த்துவருகிறார்கள். பெரு நகரங்களைத் தாண்டினால் ஒரு பட விளம்பரம் கூட பார்க்க முடிவதில்லை. நகரங்களிலுமே, விளம்பரங்கள் மற்றும்  அரசியல் சார்ந்த ஒரு சில சுவரொட்டிகள், பதாகைகள் தவிர்த்து எதுவும் கண்ணில் படவில்லை. இங்கிருந்து வினைல் பேனர் ஆசாமி யாராவது ராஜஸ்தானில் கடை போட்டால், நன்கு கல்லா கட்டலாம்.

ஒட்டகத்தைக் குளிப்பாட்டவே மாட்டோம்!

ஷாப்பிங்... ராஜஸ்தானில் வாங்க வேண்டிய பொருள்கள் என்றால், பாந்தினி உடைகள், மொஜோரி எனப்படும் கலை நயத்தோடு செய்யப்படும் செருப்புகள், ஒட்டகத்தோலினால் ஆன கைப்பைகள், காலணிகள் மற்றும் ஜெம் ஸ்டோன்ஸ் எனப்படும் ராசிக்கற்கள். `பந்த்' என்றால் இணைப்பது. நம்ம ஊர் பாண்டிபஜார் போலத் தான். எதற்கும் விலைச்சீட்டு கிடையாது. ஆளைப்பார்த்து விலை சொல்கிறார்கள். பேரம் பேசி வாங்கினால் கொஞ்சமாக மட்டும் நஷ்டமடையலாம்!

ஒரே தேசம்... எத்தனை பண்பாடுகள்! எத்தனை எத்தனை மொழிகள்! `இந்தியர்' என்னும் ஒற்றை சொல்லில் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்கிற எண்ணமே பெருமிதத்தைத் தந்தது. இன்னும் சொல்லப்போனால், ஏழ்மையும், சுரண்டலும், ஊழல்வாதி அரசியலும், சாதியச் சிந்தனைகளும் பின்னோக்கி இழுக்கும் பலவற்றாலும்  ஒன்றாக இருக்கிறோம். திரும்பி வருகையில் நம்மூருக்கும் ராஜஸ்தானுக்குமான மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்று யோசித்துப் பார்த்தேன். தென்னிந்திய ராஜாக் கள் கோயில் கோயிலாகக் கட்டினார்கள். அங்கே... தங்களுக்கான மாடமாளிகைகளைக் கட்டியிருக்கிறார்கள்!