தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: ஆகாயத்தில் ஆபத்து - `பய'ண அனுபவம்!

அவள் கிளாஸிக்ஸ்: ஆகாயத்தில் ஆபத்து - `பய'ண அனுபவம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் கிளாஸிக்ஸ்: ஆகாயத்தில் ஆபத்து - `பய'ண அனுபவம்!

அவள் கிளாஸிக்ஸ்: ஆகாயத்தில் ஆபத்து - `பய'ண அனுபவம்!

நூற்றுக்குத் தொண்ணூறு இளம்பெண்களின் கனவு `ஏர் ஹோஸ்டஸ்' ஆக வேண்டுமென்பது..! கை நிறையச் சம்பளம், விமானத்திலேயே பறந்து பல ஊர்களைச் சுற்றிப் பார்க்கலாம். அங்கெல்லாம் நட்சத்திர ஓட்டலில் தங்கும் அந்தஸ்து என்று இந்த வேலைக்கான மேலோட்டமான கவர்ச்சிகள் பல.

ஆனால், அபாயம் நிறைந்த சவாலான தொழில் இது. உயிருக்கே ஆபத்து நேரக்கூடிய சந்தர்ப்பங்களும் அமைவதுண்டு. அந்நேரங்களில் சமயோசிதமாகவும் துரிதமாகவும் செயல்பட வேண்டியவர்கள் இந்த விமான பணிப்பெண்கள்.

 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஹை-ஜாக் ஆனபோது, மனத்துணிச்சலுடன் செயல்பட்டு, மீண்டும் அதே விமானத்தில், அதே ரூட்டில் வேலைக்கும் திரும்பிவிட்டனர் ஹை-ஜாக் விமானத்தில் மாட்டிக்கொண்ட ஐந்து பணிப்பெண்களும். ஹைதராபாத்தில் பணியிலிருக்கும் அந்த ஐவரில் ஒருவர் கோபிதா முகர்ஜி. செகந்திராபாத் சீக் கன்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும் கோபிதாவைச் சந்தித்தோம். 1999 டிசம்பர் 24 முதல் 31 வரையிலான நிகழ்ச்சிகளை உணர்ச்சிகரமாக விவரிக்கத் தொடங்கினார் கோபிதா.

அவள் கிளாஸிக்ஸ்: ஆகாயத்தில் ஆபத்து - `பய'ண அனுபவம்!

‘‘ஏர் ஹோஸ்டஸ் பணியில் சேரும் முன்பு மும்பையில் இரண்டு மாதங்கள் எங்களுக்குக் கடுமையான பயிற்சிகள். விமானம் ‘ஹை-ஜாக்’ செய்யப்பட்டால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பிரத்யேக வகுப்பும் அதில் உண்டு. ஆனால், பணியில் சேர்ந்த இந்த ஆறரை வருடங்களில் முதன்முறையாக (கடைசியாகவும் இருக்கட்டும்!) அந்தப் பயிற்சிகளை நிஜமாகவே செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இப்போதுதான். எங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டியூட்டி ஷெட்யூல் மாற்றப்படும். கடந்த நவம்பரிலிருந்து எனக்கு ஹைதராபாத் - காட்மண்டு ரூட்டில் வேலை. விடியற்காலை விமானத்தில் ஹைதராபாத்திலிருந்து டெல்லி, காட்மண்டு சென்று, திரும்பவும் டெல்லி வந்து அன்றிரவு அங்கேயே தங்கி, மறுநாள் காலை முதல் விமானத்தில் ஹைதராபாத் வருவோம். விமானம் எந்த ஊரிலிருந்து கிளம்புகிறதோ, அந்த ஊர் ஏர்-ஹோஸ்டஸ்கள்தான் விமானம் திரும்பி வரும்வரை பணியில் இருப்பார்கள். அதன்படி டிசம்பர் 24  அன்று ஹைதராபாத்திலிருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்ட விமானத்தில் நான், சபீதா, தாபா தேப்னாத், கல்பனா, சப்னா மேனன், சதீஷ் ஆகியோர் பணியிலிருந்தோம். உண்மையில் அன்றைய தினம் எனக்கு டியூட்டி இல்லை. என் நெருங்கிய தோழி சபீதாவுக்குப் பணி இருந்ததால்,  நானும் அதே விமானத்தில் வேலை நேரம் கேட்டு வாங்கிக் கொண்டேன். டிசம்பர் 24 இரவு டெல்லியில் எங்களுக்காக ஏற்பாடாகி இருந்த கோலாகலமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சபீதாவும் நானும் கலந்துகொள்ளத் திட்டம் போட்டிருந்தோம்.

அன்றைய தினம் பயணிகள் பரபரவென்று விமானத்தில் ஏறி அமர, காட்மண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எங்கள் விமானம் கிளம்பும்போது மணி மாலை 4:30. விமானத்தில், பணிப்பெண்களின் இருப்பிடத்தை ‘கேல்லி' (Galley) என்போம். மொத்தம் மூன்று கேல்லிகள்... ஃபார்வர்டு கேல்லி, மிட் கேல்லி, ஆப்ட் கேல்லி என்று. பயணிகளுக்கு சர்வ் செய்யத் தேவையான உணவு, பானங்கள், அடுப்பு, டிராலி என்று மொத்த சமாசாரமும் இங்கு இருக்கும். இந்த இடத்தில் விமானத்தின் அமைப்பைக் கொஞ்சம் சொல்கிறேன். முதலில் காக்பிட். இதுதான் பைலட், கோ-பைலட் ஆகியோரின் இருப்பிடம். அதற்கடுத்ததாக டாய்லெட் பிறகு ஏர்ஹோஸ்டஸ்களின் ‘ஃபார்வர்டு கேல்லி' இருக்கும். இதற்கு அடுத்த பகுதியில் முதல் வகுப்பான ‘பிசினஸ் கிளாஸ்’ பயணிகளுக்கான இடம்.

அவள் கிளாஸிக்ஸ்: ஆகாயத்தில் ஆபத்து - `பய'ண அனுபவம்!

வெளியே இமாலயப் பனிமலையின் அற்புதத் தோற்றத்தைக் கண்டுகளித்தபடியே  பயணிகள் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, ‘மிட் கேல்லி’யில் இருந்த நான், பயணிகளுக்கு ஒரு ரவுண்டு பானங்கள் பரிமாறிவிட்டு, அடுத்த ரவுண்டு பரிமாறுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தேன். அந்நேரம் ‘ஃபார்வர்டு கேல்லி’யிலிருந்து கல்பனா தடதடவென்று ஓடிவந்தாள். ‘நாம ‘ஹை-ஜாக் ஆயிட்டோம்னு நினைக்கிறேன்' என்றாள் படபடப்பாக. எனக்குச் சிரிப்பு வந்தது. `ஜோக் அடிக்கிற நேரமா இது?’ என்று கேட்டு நான் சிரித்து முடிப்பதற்குள், பின்னந்தலையில் குறுகுறுப்பு. சட்டென்று திரும்பிப் பார்த்தால். வாட்டசாட்டமான ஓர் இளைஞன் கையில் ரிவால்வர் பிடித்தபடி என முறைத்தப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்களை மட்டும் விட்டுவிட்டு முகம் முழுதும் மறையும்படி ‘மங்கி கேப்' போட்டிருந்தான்.

திடீரென்று துப்பாக்கியை நீட்டியபடி, முகமூடி மனிதன் ஒருவன் எங்கள் முன் தோன்றவும், திடுக்கிட்டுப் போனோம்.

‘உங்களுக்குப் பாதுகாப்பு அதிகாரி யாராவது உண்டா?’ எனக் கேள்வி எழுப்பினான் அந்த ஆசாமி. `நடுங்கியபடியே இல்லை' என்றதும் துப்பாக்கிமுனையிலேயே எங்களைத் தள்ளிக்கொண்டு நடக்கத் தொடங்கினான். ‘நாங்கள் சொல்றபடி கேட்டு நடந்தால், உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டோம். இல்லையென்றால், கொல்லவும் தயங்கமாட்டோம்’ என்று கொடூரக் குரலில் சொன்னான். விமானத்தின் ஜன்னல் கதவுகளை மூடி, விளக்கு வெளிச்சத்தைக் குறைக்கச் சொன்னான்.

ஏர் ஹோஸ்டஸ் பயிற்சிக் காலத்தில், ஹைஜாக் சம்பந்தமாக எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயம் இரண்டே இரண்டுதான். ஒன்று, கேப்டன் சொல்வதற்கு அடிமாறாமல் கேட்டு நடப்பது; இரண்டாவது தீவிரவாதிகளின் உத்தரவுகளுக்கு முற்றிலுமாக அடிபணிவது. இந்த இரண்டு கட்டளைகளைத்தான் விமானப் பணிப்பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும். மற்றபடி, தீவிரவாதிகளைப் பிடிப்பது என்பது அரசு சம்பந்தப்பட்ட விஷயம். எங்கள் உயிரைக் கொடுத்தாவது, பயணிகளின் உயிரைக் காப்பாற்றவேண்டிய கடமை மட்டுமே எங்களுக்கு. ஆகவே, தீவிரவாதிகள் சொன்ன பேச்சுக்குத் தலையாட்டத் தொடங்கினோம்.

பயணிகள் மத்தியில் திடீரென்று இடப்புறமிருந்தும் வலப்புறமிருந்தும் மேலும் இரு தீவிரவாதிகள் தோன்றினர். இருவர் கையிலும் கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கி. `பிளேனை ஹை-ஜாக் செய்துவிட்டோம்’ என்று ஒருவன் கூச்சல் போட, இந்தத் திடீர் நாடகத்தைப் பயணிகள் முதலில் நம்பவில்லை. கெச்சலான இரு இளைஞர்கள், பொம்மை மாதிரியிருந்த துப்பாக்கியை நீட்டியபடி இப்படிச் சொன்னதும் ‘ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார்கள்’ என்றே முக்கால்வாசிப் பேர் நினைத்தனர். இதனால் ஆக்ரோஷமாகினர் தீவிரவாதிகள். லேசாகச் சிரித்த ஒரு பயணியின் தலையில் நச்சென்று துப்பாக்கிக் கட்டையால் ஒரு தீவிரவாதி தாக்க, பயணியின் மண்டை உடைந்து குபுக்கென்று ரத்தம் பொங்கியது. நிலைமை அப்போதுதான் தீவிரமாகத் தொடங்கியது.

சாப்பாட்டுத் தட்டு பாதியில் நழுவ, பலர் குரலெடுத்து அழத் தொடங்கினர். ‘காக்பிட்’டுக்குள் போவதும் வருவதுமாக இருந்த தீவிரவாதிகளிடமிருந்து சரமாரியாகக் கட்டளைகள் வந்தன. ‘எல்லோரும் ஸீட் கவரை எடுத்துக் கண்ணை இறுகக் கட்டிக் கொள்ளுங்கள்... தலைகுனிந்து உட்காருங்கள்' என்று உத்தரவிட்டனர். பெண்களைத் துப்பட்டா அல்லது சேலைத் தலைப்பால் கண்களைக் கட்டிக்கொள்ளச் செய்தனர்.

அவள் கிளாஸிக்ஸ்: ஆகாயத்தில் ஆபத்து - `பய'ண அனுபவம்!

திடீரென்று பயணிகளில் ஆறு ஆண்களை அதிரடியாக எழுப்பி, முதல் வகுப்புக்குக் கூட்டிப்போனான் தீவிரவாதி ஒருவன். அவர்களில் ஒருவர்தான் ரூபின் (படுகொலை செய்யப்பட்டவர்).

இன்னொருவர் சத்னாம்சிங் (துபாயில் படுகாயத்துடன் விடுவிக்கப்பட்டவர்). வெளிநாட்டுப் பயணி ஒருவரும்கூட இதில் மாட்டிக்கொண்டார்.

இந்த நேரத்தில் விமானத்தின் எரிபொருள் தீர்ந்துவிட்டதால், மீண்டும் நிரப்புவதற்காக விமானத்தை அமிர்தசரஸில் தரையிறக்க அனுமதி கேட்டார் பைலட் சரண். அரைமனதோடு ஒப்புக்கொண்ட தீவிரவாதிகள், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தங்கள் விமானத்தைத் தடுப்பது மாதிரி ஆயில் வண்டிகள் விமானத்தின் ஓடுபாதையை நோக்கி வருவதைக் கண்டு பதற்றமடைந்தனர். உடனடியாக விமானத்தை அங்கிருந்து கிளப்பும்படி கொடூரமான முறையில் நெருக்கடி கொடுத்தனர்.

‘காக்பிட்டுக்குப் பின்னே, முதல் வகுப்பில் இருந்த ரூபின் கட்யாலின் கழுத்தைக் கத்தியால் அறுத்துவிட்டு, நேரே பைலட்டிடம் சென்று, `நான்கு பேரைக் கொன்றுவிட்டோம்' என்று சொல்ல, பதறிப்போன பைலட், தீவிரவாதிகளின் கட்டளைப்படி விமானத்தைத் துபாயை நோக்கிக் கிளப்பியிருக்கிறார்.

பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் பிரித்து, முதல் வகுப்புக்குக் கூட்டிப்போனான்  தீவிரவாதி ஒருவன். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட விஷயம் பிறகே தெரியவந்தது. நேரம், காலம் தெரியாமல், எந்த ஊர் என்பதும் புரியாமல் கண்களைக் கட்டியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்த எங்களுக்குச் சற்று ரிலாக்ஸ் கிடைத்தது 25-ம் தேதி காலையில்தான். துபாயிலிருந்து கிளம்பிய விமானம் 25-ம் தேதி காலை 11 மணியளவில் ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இங்கு வந்த பிறகுதான் ஏர் ஹோஸ்டஸ்களான எங்களுக்கும் பரபரபான வேலைகள் ஆரம்பித்தன.

கேப்டன், கோ-பைலட், ஃப்ளைட் இன்ஜினீயர் ஜக்கியா ஆகியோரை ‘காக்-பிட்’டை விட்டு வெளியேற்றி பயணிகளுடன் அமரவைத்தனர். சாப்பாட்டைப் பொறுத்த வரை பிரச்னையில்லை. விமானத்தில் இருந்த மீதி உணவுகளை வைத்துச் சமாளித்து விட்டோம்.

27-ம் தேதி நிலைமை படுமோசமானது. காந்தஹார் பாலைவனப் பகுதியாதலால் பகல் முழுவதும் அனல்காற்று வீசும். இரவானாலோ உயிரை வாட்டும் கொடுமையான குளிர். நாட்கணக்கில் உட்கார்ந்தே இருந்ததால், எல்லோருக்கும் கால்கள் மரத்துப்போய் வீங்க ஆரம்பித்தன. ஒரு சிறுவனுக்கு சிறுநீரகக் கோளாறு. கேன்சர் நோயாளிகள் இருவரின் நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்தது. ஒருவழியாக, பாதிக்கப்பட்டோருக்கு முதலுதவி அளிக்க எங்களை அனுமதித்தனர். பயணிகளில் அனிதா ஜோஷி, வர்மா ஆகியோர் டாக்டர்கள். அவர்கள் விமானத்தி லிருந்த முதலுதவிப் பெட்டி, சொந்த மருந்துகள் ஆகியவற்றைக்கொண்டு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். வெளிநாட்டுப் பயணி ஒருவருக்கு அமிர்தாஞ்சன் பூசி மசாஜ் செய்தோம். அல்சர் நோயாளி ஒருவர் வயிற்றுவலியால் துடிதுடித்தார். எங்களில் ஒருவர் அவர் வயிற்றை அழுத்தி மசாஜ் செய்ய, இன்னொருவர் அவர் கால்களைப் பிடித்துவிட்டார். நான் அவருக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தினேன். தீவிரவாதிகளிடம் சப்னாவும் சபீதாவும் கெஞ்சிக் கூத்தாடி பால் கொண்டுவரச் செய்தனர். அதைக் குடித்ததும் அந்த நோயாளிக்குச் சற்று தெம்பு வந்தது.

ஒரு பயணிக்கு வலிப்பு வந்துவிட்டது. மருந்து இருந்தும், டாக்டர் வர்மாவிடம் சிரிஞ்ச் இல்லாததால் சிகிச்சையளிக்க முடியவில்லை.

குடிநீர் இருப்பு குறைந்துகொண்டே வர, இருந்த இரண்டு, மூன்று வாட்டர் கேன்களையும் குழந்தைகளுக்காக ஒதுக்கி வைத்தோம். மீதிப்பேருக்கு பியர் பானம் கொடுத்துச் சமாளித்தோம். தீவிரவாதிகள் மூடு எந்தச் சமயம் எப்படியிருக்கும் என்றே தீர்மானிக்க முடியாமலிருந்தது.

`ரோட்டுல ஆடு, மாடு அடிபட்டுக் கிடந்தால்கூட எஸ்.பி.சி.ஏ. மாதிரி அமைப்புகள் விசாரிக்க வருது. ஆனால், நீங்கள்லாம் அதைவிட கேவலமாப் போயிட்டீங்களே. உங்களைப் பற்றி உங்க அரசாங்கம் கவலையே படாதா?’ என்று கத்தினர்.

அவள் கிளாஸிக்ஸ்: ஆகாயத்தில் ஆபத்து - `பய'ண அனுபவம்!

திடீரென்று, ‘உங்களையெல்லாம் சுட்டுத் தள்ளப் போறோம்’ என்று துப்பாக்கி நீட்டி பயமுறுத்தினர். இவர்களை இயக்கிவைத்தவன் கடைசிவரை ‘காக்-பிட்'டை விட்டு வெளியில் வரவில்லை.

27-ம் தேதி இரவிலிருந்து ஆப்கானிய சாப்பாடு வந்தது. துபாயில் சில பயணிகளை ரிலீஸ் செய்த பின், விமானத்திலிருந்த மொத்த பயணிகள் 130 பேர். அதில் பத்தே பேர்தான் நான்-வெஜ் சாப்பிடுவார்கள். அதனால் மீதியிருப்பவர்களுக்கு பாதிப் பாதி ஆரஞ்சுப் பழங்களையும் ஒரு மிடறு பெப்சியும் கொடுத்தோம்.

டிசம்பர் 30-ம் தேதி காலை எட்டரை முதல் மதியம் ஒரு மணிவரை நாங்கள் நரகவேதனைப்பட்டோம். தீவிரவாதிகளின் கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவிசாய்க்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரப்போவதில்லை என்று அறிந்து கொதித்துப் போய்விட்டனர் தீவிரவாதிகள்.

‘இன்னிக்கு மாலைக்குள் எங்களை உங்க அரசு கவனிக்காவிட்டால், கூண்டோடு நீங்கள் அத்தனைபேரும் பரலோகம்தான்’ என்று தீவிரவாதி ஒருவன் கத்த, அதுவரை துணிச்ச லாக இருந்த நான், அப்போதுதான் பயந்துபோய் அழ ஆரம்பித்தேன். `அம்மா, அப்பா, கணவரையெல்லாம் இனி பார்க்கவே முடியாதோ' என்றெண்ணி தேம்ப ஆரம்பித்தேன். அவரவர் இஷ்ட தெய்வத்தை மனதில் கும்பிட்டபடி, கல்லாக இறுகி அமர்ந்திருந்தோம். ஒருவழியாக மாலை ஏழு மணிக்கு நல்ல செய்தி வந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் தலைமையில் ஒரு டீம் பேச்சுவார்த்தைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியானது. குதூகல மூடுக்கு மாறினர் தீவிரவாதிகள்.

அன்றிரவு ஐ.நா. உணவு பாக்கெட் வந்தது. அசுரப்பசியுடன் சாப்பிட்டோம். நிச்சயம் விடு தலையாகிவிடுவோம் என்ற நம்பிக்கை பிறந்த பிறகுதான் இப்படிப்பட்ட பசியை உணர்ந்தோம்.

ஒருவழியாக அத்தனை சம்பிரதாயங்களும் முடிந்து, 31-ம் தேதி மாலை நாங்கள் நிஜமாகவே விடுதலையாகும் தருணம் வந்தது. மறுபடி எல்லாரையும் எழுப்பி வேறு வரிசைப்படி அமரவைத்தனர் தீவிரவாதிகள். ‘ஆர்டர் ஆஃப் ரிலீஸாம்’. முதலில் குழந்தைகள், அப்புறம் வயதானவர்கள், தம்பதிகள், ஆண்கள், கடைசியாக விமானப் பணியாளர்கள் என்று அமரவைத்தனர். ‘நீங்கள்லாம் விடுதலையாகியாச்சு. போகலாம்’ என்று சொன்னபோதுகூட யாரும் நம்பவில்லை.

வெளியில் ஏதோ வேன் வந்து நிற்க, தீவிரவாதிகள் அதில் ஏறி மறைந்ததைப் பார்த்தேன். விமானத்தை விட்டு வெளியில் வந்து, சுத்தமான காற்றைச் சுவாசித்ததும் ஓர் அழுகை வெடித்து வந்தது பாருங்கள்... அப்பப்பா. இந்த ஜென்மத்துக்கு மறக்க முடியாது.

அப்புறம் 31-ம் தேதி இரவு டெல்லி வந்து சேர்ந்ததும். புத்தாண்டு பிறக்க, சில மணி நேரத்தில் அவரவர் வீடுகளுக்கு நாங்களே பரிசாகப் போய்ச் சேர்ந்ததும் தனிக்கதை!

அதன்பிறகு ரூபின் கட்யால் கொல்லப்பட்ட விவரமே டெல்லி வந்துதான் எங்களுக்குத் தெரியும். செகந்திராபாத்திலுள்ள என் வீட்டுக்கு போன் பண்ணியபோது அப்பாதான் எடுத்தார். என் குரலைக் கேட்டதும், தழுதழுத்த குரலில், ‘இரு இரு... அம்மாவிடம் பேசு. உன் குரலைக் கேட்பதுதான் அவளுக்கு மிகச் சிறந்த பரிசு’ என்றார். அன்றைய தினம் என் அம்மாவின் பிறந்தநாள்!’’

சந்திப்பு: எஸ். கல்பனா

படங்கள்: பொன்.காசிராஜன்

(அவள் விகடன் 2000 பிப்ரவரி மற்றும் மார்ச்  இதழ்களில் இருந்து...)