தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வலிகள் + அவமானங்கள் = வைராக்கியம்! - விராலி மோடி சொல்லும் வாழ்க்கை ஃபார்முலா

வலிகள் + அவமானங்கள் = வைராக்கியம்! - விராலி மோடி சொல்லும் வாழ்க்கை ஃபார்முலா
பிரீமியம் ஸ்டோரி
News
வலிகள் + அவமானங்கள் = வைராக்கியம்! - விராலி மோடி சொல்லும் வாழ்க்கை ஃபார்முலா

தன்னம்பிக்கைப் பயணம்சாஹா

மாற்றுத்திறனாளிகள் பயணம் செய் வதற்கு ஏதுவாக மடக்கும் சக்கர நாற்காலிகள் இந்தியாவிலேயே முதன்முறையாக  சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புச் சேவைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களுமே மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு ஏதுவாக மாற்றப்படும் என உத்தரவாதம் அளித்திருக்கிறார் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. மாற்றுத்திறனாளிகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் இருப்பது விராலி மோடி என்கிற தனிமனுஷியின் விடாமுயற்சி!

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளுக் காகக் குரல் கொடுப்பவர், ஊக்கப்பேச்சாளர், 2014-ம் ஆண்டின் `மிஸ் வீல்சேர்' அழகி எனப் பன்முகங்கள் கொண்டவர் விராலி. அவரும் ஒரு மாற்றுத்திறனாளி என்பதைத் தாண்டி, இடைவிடாத முயற்சிகளின் பின்னணியில் இருக்கிறது வலிகள் சுமந்த விராலியின் பயணம்.

``மும்பையில பிறந்தேன். ரெண்டு மாதக் குழந்தையா இருந்தபோதே அமெரிக்காவுல குடியேறிட்டோம். இதயநோய் மருத்துவ ராகணும்னு சின்ன வயசுலேயே ஆசைப் பட்டேன். எப்பப் பார்த்தாலும் மருத்துவம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளைப் படிக்கிறது, மருத்துவத் தகவல்களைத் தேடறதுனு தீவிரமா இருந்தேன். செத்துப் பிழைச்ச அனுபவத்துக்குள்ள போகிற வரைக்கும் என் ஆர்வம் அதுவாகத்தான் இருந்தது...'' என நிறுத்துபவர், நம்மையும் அந்த அனுபவத்துக்குள் அழைத்துச் செல்கிறார்...

வலிகள் + அவமானங்கள் = வைராக்கியம்! - விராலி மோடி சொல்லும் வாழ்க்கை ஃபார்முலா

``எனக்கு அப்போ 14 வயசு. அமெரிக்காவுல இருந்த காலம். ஒருநாள் எனக்குக் கடுமையான தலைவலி. ஸ்கூல் நர்ஸ் மாத்திரை கொடுத்து, சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி வெச்சாங்க. மூணு மணி நேரம் கழிச்சு எழுந்தபோது எனக்கு 102 டிகிரி காய்ச்சல். தட்பவெப்பநிலை மாற்றத்தால அப்படி இருக்கலாம்னு சொல்லி மாத்திரைகள் கொடுத்தாங்க டாக்டர்ஸ். வீட்டுக்கு வந்ததும் என் உடம்பு திடீர்னு சில்லிட்டுப் போறதும், திடீர்னு நெருப்பா கொதிக்கிறதுமா மாறி மாறி ஏதோ வித்தியாசத்தைக் காட்டியது. என்னை ஐ.சி.யூ-வில் அட்மிட் பண்ணினாங்க. எல்லா டெஸ்ட்டுகளையும் செய்தாங்க. என்ன பிரச்னைனு கண்டுபிடிக்க முடியலை. கடைசியா ஒரு டாக்டர், என் முதுகெலும்புக்குள்ள ஊசியைக் குத்தி (லம்பார் பங்ச்சர்), மூளை முதுகுத்தண்டு திரவத்தை எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பினார். அதுவும் நெகட்டிவ்னு வந்தது. வீட்டுக்கு வந்தேன். பல மணி நேரம் தூங்கி எழுந்தேன். மறுபடியும் கடுமையான காய்ச்சல். மறுபடியும் தூங்கி எழுந்திருக்கும்போது என் நடையில தள்ளாட்டம் தெரிஞ்சது. என்னால சிறுநீர் கழிக்க முடியலை. திரும்பவும் ஆஸ்பத்திரி... முதுகெலும்புல ஊசினு அதே சிகிச்சை... அந்த முறை எனக்கு நினைவு தப்பி, கார்டியாக் அரெஸ்ட் வந்திருச்சு.

`உங்க மகளைக் கடைசியா ஒருமுறை பார்த்துக்கோங்க'னு கையை விரிச்சிட்டாங்க டாக்டர்ஸ். எங்கம்மா, அப்பா, சொந்தக்காரங்க எல்லாரும் கத்திக் கதறினதுல எனக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டது. ஒரு வழியா என் இதயம் செயல்பட ஆரம்பிச்சிருச்சு. ஆனா, சுவாசம் தடைப்பட்டுடுச்சு. செயற்கை சுவாசம் பொருத்தினாங்க. அடுத்த நாள் மறுபடி இன்னொரு லம்பார் பங்ச்சர் செய்ததுல நான் கோமாவுக்குப் போயிட்டேன். மூணாவது நாள் என் உடல் வெப்பநிலை 90 டிகிரியைவிடக் குறைஞ்சுது. அது அதிகரிக்கலைன்னா என்னைக் காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க. சில மணி நேரத்துல என் உடல் வெப்பநிலை அதிகரிச்சது. ஆனா, ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவு ஐந்தைவிடவும் குறைஞ்சுது. ரத்தம் ஏத்தி அதையும் சரி செய்தாங்க.

எனக்குச் சிகிச்சைகள் கொடுத்திட்டிருந்த டாக்டர்ஸ்கிட்ட, எங்க குடும்ப நண்பரும் தொற்றுநோய்ச் சிறப்பு மருத்துவருமான ஒருத்தர் பேசினார். எனக்கு வந்திருக்கிறது இன்ஃபெக்‌ஷனா இருக்கலாம்னு யூகிச்சு, அதுக்கு மருந்துகள் கொடுக்கச் சொன்னார். ஆனா, அதை மத்த டாக்டர்ஸ் கேட்கத் தயாரா இல்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட எந்தச் சிகிச்சையுமே எனக்குத் தேவையானது அல்ல. காரணம், எனக்கு இருந்தது மலேரியா. அதுக்கான சிகிச்சைகள் எனக்குக் கொடுக்கப்படலை. டாக்டர்ஸ் கால்களைப் பிடிச்சுக்கிட்டு எங்கம்மா கதறியிருக்காங்க. அடுத்த சில மணி நேரத்துல என் உடல்நிலையில எந்த முன்னேற்றமும் இல்லாததால எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த உயிர்காக்கும் இணைப்புகளைத் துண்டிக்கப் போறதாகவும் டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. அன்னிக்கு செப்டம்பர் 21.

செப்டம்பர் 29 என் பிறந்தநாள். அந்த நாள் வரைக்கும் அந்த இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம்னு அம்மா அழுததை அடுத்து, அதுக்குச் சம்மதிச்சாங்க. ஆனா, 29-ம் தேதிக்கு மேல எந்த முன்னேற்றமும் இல்லைன்னா அதைத் தொடர மாட்டோம்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க...''

வலிகள் + அவமானங்கள் = வைராக்கியம்! - விராலி மோடி சொல்லும் வாழ்க்கை ஃபார்முலா

விராலியின் விவரிப்பு, அப்போலோவில் ஜெயலலிதாவின் கடைசி நாள்களின் பரபரப்பை மிஞ்சுகிறது.

``செப்டம்பர் 29... என்னை அட்மிட் பண்ணியிருந்த ஐ.சி.யூ ரூமுக்குள்ளேயே பர்த்டே பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க அம்மா. நான் பிறந்த அதே 3 மணி 5 நிமிடம்... எல்லாரும் `ஹேப்பி பர்த்டே' பாட, என் கையைப் பிடிச்சு அப்பா கேக் வெட்ட வெச்சார். திடீர்னு என் கண்கள் திறந்தன. அந்த சந்தோஷத்துல அத்தனை பேரும் அலறினதையும் கேட்டேன். ஆனா, அஞ்சே நிமிஷத்துல மறுபடி கோமாவுக்குப் போயிட்டேன். அக்டோபர் 5-ம் தேதி மறுபடி எனக்கொரு ஆபரேஷன். அதுக்குப் பிறகு என் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. கோமாவுலேருந்து வெளியில வந்தேன். நான் பிழைச்சுட்டேன். என்னைப் பிழைக்க வெச்சது என் அம்மாவோட நம்பிக்கை மட்டுமே...'' - விராலியின் வார்த்தைகள் தழுதழுக்கின்றன. உயிர் பிழைத்த விராலிக்கு கழுத்துக்குக் கீழே உடல் செயலிழந்து போனது. உடலியக்கத்தைவிடவும், உடன் இருந்த நட்புகள் பறிபோனதில்தான் விராலிக்கு பெரும் வருத்தம்.

``நான் அவங்களுக்கு பாரமாயிடு வேனோங்கிற பயத்துல எல்லாரும் என்னை விட்டு விலகிட்டாங்க. மன அழுத்தம் அதிகமாகி, தற்கொலை வரைக்கும் போனேன். அதுலேருந்து என்னைக் காப்பாற்றி, வாழ்க்கையின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தி, என் பக்கத்துலயே இருந்து பார்த்துக்கிட்டவங்க அம்மாவும் அப்பாவும்தான். ஸ்டெம்செல் சிகிச்சை எடுத்துக்கிட்டேன். கழுத்துலேருந்து இடுப்பு வரைக்குமான பகுதி சரியானது. இப்போ இடுப்புக்குக் கீழே உள்ள பகுதி மட்டும் எனக்கு இயங்காது. வீல் சேர்ல வாழப் பழகிட்டேன். இழந்த நம்பிக்கை திரும்ப வந்தது. மறுபடி ஒரு மனுஷியா மாறினேன்...'' - மலர்ந்து சொல்கிற விராலியின் கதையில், இந்த இடத்தில் `சுபம்' போட்டிருக்க வேண்டும். ஆனால், அங்குதான் ஆரம்பித்திருக்கிறது அடுத்த ட்விஸ்ட்.

``2008-ம் வருஷம் நானும் அம்மாவும் மும்பையிலேருந்து டெல்லிக்கு என்னோட சிகிச்சைக்காகக் கிளம்பினோம். ரயில்வே ஸ்டேஷன் உள்ளே என் வீல்சேரை தள்ளிக் கிட்டுப் போக முடியாத அளவுக்கு எச்சில் கறை, சிறுநீர் நாற்றம் ஒரு பக்கம்... பயணிகளும் போர்ட்டர்களும் இன்னொரு பக்கம். பெரிய சிரமத்துக்குப் பிறகு அம்மா என் வீல் சேரைத் தள்ளிக்கிட்டுப் போனாங்க.  அடுத்து நான் எப்படி ட்ரெயினுக்குள்ள ஏறப் போறேங்கிற பயம் எனக்கு வந்தது. அங்கே சரிவு மேடையோ, லிஃப்ட்டோ இல்லை. வீல் சேரும் உள்ளே நுழைய முடியாது. என்னை யாராவது உள்ளே தூக்கிட்டுப் போய் உட்கார வைக்கிறதைத் தவிர வேற வழியில்லைங்கிற நிலைமை. அம்மா அங்கேயிருந்த ரெண்டு போர்ட்டர்கள்கிட்ட உதவி கேட்டாங்க. அந்த உதவிக்குப் பணம் கொடுக்கறதா சொன்ன பிறகும், அந்த போர்ட்டர்கள் என்னை ஏதோ ஒரு மாமிசத் துண்டு மாதிரி பார்த்தாங்க. ஒருத்தன் என் முழங்கால் பகுதியைப் பிடிச்சுக்கிட்டான். இன்னொருத்தன் என் கைகளுக்கு அடியில பிடிச்சுத் தூக்கினான். அவனோட கைகள் என் மார்பகங்களை உரசிக்கிட்டே இருந்தது. கம்பார்ட்மென்ட்டுக்குள்ள தூக்கிட்டுப் போகிற அந்தச் சில நிமிடங்களில், அவன் பலமுறை என் மார்பகங்களைத் தடவினான். முதல்ல அது யதேச்சையா நடந்ததா நினைச்சேன். ஆனா, அவன் வேணும்னே செய்தான்னு தெரிஞ்சபோது தாங்கிக்க முடியலை. என் அப்பா வயதுள்ள ஒருத்தனால எப்படி அவ்வளவு கேவலமா நடந்துக்க முடியும்? அந்த இடத்துல ஒரு சரிவு மேடையோ, லிஃப்ட்டோ இருந்திருந்தா நான் இப்படியொரு அசிங்கத்தை அனுபவிக்க வேண்டியிருந்திருக்காது. இந்த அவமானத்தையும் அசிங்கத்தையும் அடுத்தடுத்து நான் ட்ரெயின்ல ட்ராவல் பண்ணின ஒவ்வொரு முறையுமே சந்திச்சேன்.

வலிகள் + அவமானங்கள் = வைராக்கியம்! - விராலி மோடி சொல்லும் வாழ்க்கை ஃபார்முலா

`ஆண்களுக்கு இரக்கமே இல்லையா? மாற்றுத்திறனாளிப் பெண்கள்கிட்ட எப்படி அத்துமீறி நடந்துக்கத் தோணுது'னு பல நாள்கள் மனசுக்குள்ள புழுங்கியிருக்கேன். பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசாங்கம், அந்தப் பட்டியல்ல மாற்றுத் திறனாளிப் பெண்களைச் சேர்க்கலையா?

இந்தக் கோபம்தான் இதுக்காக ஏதாவது செய்யணும்கிற வெறியை எனக்குள்ள ஏற்படுத்தினது. இந்தியன் ரயில்வேஸுக்கு பெட்டிஷன் போட்டேன். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றிப் பயணம் செய்கிற வகையில ரயில்களும் நடைபாதைகளும் அமைக்கப் படணும்; அவங்களுக்குச் சிறப்பு இருக்கை வசதிகள் செய்துகொடுக்கப்படணும்னு நிறைய தேவைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

முக்கியமா கழிவறை வசதிகள். ட்ரெயின்ல உள்ள கழிவறைகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடியவையா இல்லை. அதனாலயே நான் டயப்பர் உபயோகிப்பேன். ராத்திரி வரைக்கும் அதைச் சுமக்கணும். ட்ரெயின் விளக்குகள் எல்லாம் அணைக் கப்பட்டு இருட்டான பிறகுதான் எங்கம்மா என் டயப்பரை மாத்தி விடுவாங்க. அப்போதும் பிரைவசி இருக்காது. எங்களுக்கு த் தர்மசங்கடத்தை ஏற்படுத்தற இதுபோன்ற விஷயங்களைக் குறிப்பிட்டு, இதைக் கையெழுத்து இயக்கமா நடத்தினேன். இதுவரைக்கும் ஒரு லட்சத்துக்கும் மேலானவங்க (https://goo.gl/zgS8Ki) ஆதரவு தெரிவிச்சிருக்காங்க.

பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும் ஏகப்பட்ட ட்வீட்டுகளையும் இ-மெயில்களையும் கடிதங் களையும் அனுப்பினேன். அத்தனைக்கும் ஆட்டோமேட்டட் ரிப்ளை தவிர, உருப்படி யான பதில் எதுவும் வரலை.

ஆனாலும், நான் ஓயலை. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி பார்வைக்கும் இதைக்கொண்டு போனேன். இத்தனை கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல வீல் சேர் கொண்டு வந்திருக்காங்க. இந்தியாவில் உள்ள எல்லா ரயில்வே ஸ்டேஷன்களும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில மாற்றப்படாதவரை, இதை என் போராட்டத்துக்குக் கிடைச்ச வெற்றியா கொண்டாட முடியாது. இருக்கிற எல்லா ட்ரெயின்களிலும் உடனடியா சீரமைப்புப் பணிகள் நடத்தப்படணும். வீல் சேர் நுழையற அளவுக்கு ட்ரெயின்ல உள்ள கழிவறைகள் அகலமாக்கப்படணும்...'' - வைராக்கியம் வெளிப்படுகிறது விராலியின் வார்த்தைகளில்!