தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!

அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!
பிரீமியம் ஸ்டோரி
News
அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!

ஆச்சர்யப் பயணம்ஆர்.வைதேகி - படங்கள்: தே.அசோக்குமார்

ன்னியாகுமரி டு ரான் ஆஃப் கட்ச் நோக்கி, சூரிய உதயத்தில் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை வாழ்வின் தருணத்தை அணு அணுவாக ரசித்த பயணம்... 

அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!

அன்றன்று பயணம் முடிகிற இடத்தைப் பொறுத்து, அறிமுகமில்லாத யார் யார் வீடுகளிலோ அன்பான, அக்கறையான உபசரிப்புடன் கழிந்த ராப்பொழுதுகள்...

`அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை நினைவுபடுத்துகிற காட்சிகள்...

- சென்னையைச் சேர்ந்த `பிஹேவியரல் சாஃப்ட் ஸ்கில்' பயிற்சியாளர் கோமதிஷங்கரும், அவரின் சயின்ட்டிஸ்ட் மனைவி லோகவ்யா குருப் மீனாட்சியும் தங்களது தேனிலவை இப்படித்தான் கொண்டாடியிருக்கிறார்கள்!
தேனிலவு த்ரில் குறையாத புதுமணப் பெண் லோகவ்யாவிடம் பேசினோம்.

இருவரும் கௌவுதம் மேனன் ரசிகர்களோ..?

``சத்தியமா அந்தப் படத்தைப் பார்த்துட்டு நடந்த விஷயமில்லீங்க இது. எங்க கல்யாண வேலைகள் நடந்திட்டிருந்தபோதுதான் அந்தப் படம் ரிலீஸாச்சு. நாங்க ஹனிமூன் ட்ரிப்புக்குக் கிளம்பினபோது நிறையப் பேர் அந்தப் படத்தைப் பத்திச் சொன்னாங்க. நாங்க இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவே இல்லை.

எனக்குச் சின்ன வயசுலேருந்தே அரபிக்கடல் மேல அப்படியொரு காதல். என்னோட பல வருஷக் கனவு இது. வெறும் கனவுலயும் கற்பனையிலயும் மட்டுமே வளர்ந்்திட்டிருந்த விஷயம், நிஜமாகும்னு நான் நினைக்கலை... ஆனா, அது நடந்திருக்கு. இது எங்க ரெண்டு பேருக்குமே வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அனுபவம்...'' - சொல்லும்போதே சிலிர்க்கிறது லோகவ்யாவுக்கு. அவரது காதல் கதையும், கல்யாண வைபோகமும் தேனிலவுத் தித்திப்பும் மணிரத்னம், கௌதம் மேனன் படங்களின் ரொமான்ஸ் காட்சிகளை மிஞ்சுகின்றன.

அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!

``நானும் ஷங்கரும் சைல்ட்ஹுட் ஸ்வீட் ஹார்ட்ஸ். 14 வருஷ லவ். இந்த வருஷம் பிப்ரவரி 6-ம் தேதி கல்யாணம் முடிஞ்சது. ஷங்கர் தமிழர். நான் மலையாளி. எங்க கல்யாணத்துல வழக்கமான எந்த ஆடம்பரமும் இருக்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ரெண்டு பேருக் குமே இயற்கை ரொம்பப் பிடிக்கும். ரீசைக்கிள்டு பேப்பரையும் சணலை யும் வெச்சு இன்விடேஷன்களை நாங்களே எங்க கையால ரெடி பண்ணினோம். எங்க நண்பர் நடத்தற ஆர்கானிக் ஃபார்ம்லேருந்து கொஞ்சம் விதைகள் வாங்கினோம். ஒவ்வொரு இன்விடேஷனுக்குள்ளேயும் ஒரு காய்கறிச் செடியோட விதைகள் வெச்சுக் கொடுத்தோம். `தங்க நகைகள் போட்டுக்க மாட்டேன்'என்கிற கண்டிஷனோட கல்யாணத்துக்குத் தயாரானேன்.

அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!

கடல்களைப் போலவே எனக்கு பழங் காலத்துக் கட்டடக் கலைகளும் பிடிக்கும். அதனால பாலக்காட்டுல ஒரு பழைய கோயில்ல எளிமையா கல்யாணம் முடிஞ்சது. என் கல்யாணத்துல கடல் சாட்சியா ஒரு சின்ன சடங்கு நடக்கணும்னு ரொம்ப வருஷம் முன்னாடி நினைச்சிருந்தேன். கேரளாவுல கண்ணூர்னு கடல்பகுதி ஒண்ணு இருக்கு. அங்கே நடுக்கடல்ல தென்னங்கீற்றுகள் வேயப்பட்ட இயற்கையான அலங்காரங்களுக்கு மத்தியில அப்படியொரு சடங்குக்கு ஏற்பாடு செய்தோம்.

கல்யாணத்துக்குச் சில மாசங்கள் முன்னாடி, ஷங்கர் கிட்ட `எனக்கு அரபிக் கடல் முழுக்கப் பார்க்கணும்டா'னு சொல்லியிருந்தேன். அவனும் `ஓகே' சொல்லியிருந்தான். ஆசையைச் சொன்ன தோட சரி... அப்புறம் அதைப் பத்தி யோசிக் கலை. ஆனா, அதை நனவாக்கி எனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தான் ஷங்கர். ஹைய்யோ... அந்தத் தருணத்தை இப்ப நினைச் சாலும் புல்லரிக் குது!’’என்ற லோகவ்யா தொடர்ந்தார்... 

அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!

``எனக்குச் சின்ன வயசு லேருந்தே பைக் ஓட்டறதுல விருப்பம் உண்டு. நானும் ஷங்கரும் புல்லட்லதான் ரைடு போவோம். மத்தபடி பெங்களூருல என் ஆபீஸுக்கு ஷங்கர் எனக்குக் கொடுத்த பழைய பைக்லதான் போயிட்டிருந்தேன். அதுக்கு அழகா பெயின்ட் அடிச்சு, `ஆட்டம்'னு பேரெல்லாம் வெச்சிருந்தேன். பைக்கும் பிடிக்கும், கடலும் பிடிக்கும்கிறதால ரெண்டையும் இணைக்கிற மாதிரி ஒரு ட்ரிப் போகலாமானு யோசிச்சிருந்தோம்.

அரபிக்கடலை முழுசா பார்க்கணும்னா கன்னியாகுமரியிலேருந்து, ரான் ஆஃப் கட்ச் வரை போயாகணும். ஏன்னா, ரான் ஆஃப் கட்ச், ஒரு காலத்துல அரபிக்கடலோட ஒரு பகுதியா இருந்திருக்கு. ரெண்டு பேரும் ரெண்டு பைக்ல போகிறதா பிளான். கோயம்புத்தூர்ல என் ஃப்ரெண்ட் தன்னோட பைக்கைக் கொடுக்கிறதா சொல்லியிருந்தான். அடிக்கடி எனக்கு போன் பண்ணி, `வண்டியை சர்வீஸ் எல்லாம் பண்ணி ரெடியா வெச்சிருக்கேன். நல்ல கண்டிஷன்ல இருக்கு. நீ எடுத்துட்டுப் போகலாம்'னு சொல்லிட்டே இருந்தான். கண்ணூர்ல நடந்த விசேஷத்துல ஷங்கர் எனக்கொரு மோதிரம் கிஃப்ட் பண்ணினான். கொஞ்ச நேரத்துல இன்னொரு பெட்டியைக் கொடுத்தான். அதுக்குள்ள புது புல்லட்டுக்கான சாவி. `மோதிரமா, பைக்கானு நீயே முடிவு பண்ணிக்கோ'னு சர்ப்ரைஸ் கொடுத்தான். அடுத்து அங்கே நடந்த விஷயங்கள் எல்லாம் பயங்கர சினிமாத்தனமா இருந்தது. ஷங்கர் என் கையில சாவியைக் கொடுத்த அதே டைம், என் தம்பி புல்லட்டை நிறுத்தி வெச்சுக்கிட்டுத் தயாரா இருந்தான். புது புல்லட்டைப் பார்த்ததும் சந்தோஷத்துல தலைகால் புரியலை. அதை வாங்கிக் கொடுத்தவனுக்கு ஒரு முத்தமோ, ஹக்கோ இல்லை... துள்ளிக் குதிச்சு ஓடிப் போய் அந்த புல்லட்டுக்கு முத்தம் கொடுத்தேன்...'' - லோகவ்யாவின் விவரிப்பு நமக்குக் காட்சியாக விரிகிறது.``நாங்க ரெண்டு பேரும் அடுத்த அஞ்சு நாள் அங்கேயே தங்கியிருந்தோம். ரெண்டு பேரோட பைக்கையும் பார்சல் பண்ணி திருவனந்தபுரத்துக்கு அனுப்பினோம். நாங்க பஸ்ல திருவனந்தபுரம் போய், பைக்கை கலெக்ட் பண்ணிட்டு கன்னியாகுமாரிக்கு ஓட்டிக்கிட்டுப் போனோம். அன்னிக்கு வேலன்டைன்ஸ் டே! எங்களுக்கு அதுல எல்லாம் பெரிய நம்பிக்கை இல்லைன்னாலும், யதேச்சையா அப்படி அமைஞ்சது.

அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!

அடுத்த நாள் கன்னியாகுமரியிலேருந்து எங்க ஹனிமூன் ட்ரிப்பை ஆரம்பிச்சோம். ஹைவேஸை எல்லாம் தவிர்த்துட்டு, கடற்கரைச் சாலை வழியாகவே போக முயற்சி பண்ணினோம். அங்க உள்ள கிராமங்களுக்குள்ள புகுந்து வழி கேட்டுக்கிட்டே போனோம். அங்கிருந்து கேரளா வந்தோம்.

காலையில கிளம்பி சூரியன் மறைகிற வரைக்கும் பைக் ஓட்டறதுனு முடிவு பண்ணினோம். சாயந்திரம் ஆயிட்டா, அங்கேயே யார் வீட்லயாவது அனுமதி கேட்டுக்கிட்டுத் தங்கிடுவோம். இல்லைனா, ஹோட்டல்ல தங்கிடுவோம். எதுக்கும் இருக்கட்டும்னு டென்ட் எடுத்துட்டுப் போயிருந்தோம். ஆனா, அதுக்குத் தேவையே ஏற்படலை. மகாராஷ்டிராவைத் தாண்டற வரைக்கும் கடல் அழகை ரசிச்சபடியே ட்ராவல் பண்ணினோம். சில இடங்கள்ல சாலைகளே இருக்காது. வேற சில இடங்களில் சாலைகள் ரொம்ப மோசமா இருக்கும். வானிலை மாறிக்கிட்டே இருக்கும். ஆனாலும், எதுவுமே எங்களுக்கு இடைஞ்சலா தெரியலை.

அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!

குஜராத்ல கல்ஃப் ஆஃப் கம்பட் அண்ட் கல்ஃப் ஆஃப் கட்ச் வழியா நாங்க போய் சேர்ந்த இடம் லக்பத். அது இந்தியா - பாகிஸ்தான் பார்டர். அதுக்கும் மேல அரபிக்கடலைப் பார்க்கணும்னா, பாகிஸ்தானுக்குத்தான் போகணும். அங்கே நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாடி கட்டப்பட்ட அழகான கோட்டை இருக்கு. அங்கே இருக்கிற கிராமங்களில், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்காங்க. அது பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸோட கட்டுப்பாட்டுல உள்ள கிராமம். சாயந்திரத்துக்கு மேல ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி இருக்கும். ஹோட்டல்ஸ் கிடையாது. அங்கே உள்ள குருத்வாராவுல தங்கினோம். அங்கேயே எங்களுக்குத் தங்கறதுக்கு இடமும் சாப்பாடும் இலவசமா கொடுத்தாங்க.

அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!

குஜராத்ல `டோலாவிரா’னு ஒரு தீவு இருக்கு. சிந்து சமவெளி நாகரிக அழிவுக்குப் பிறகு அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்ட பெரிய கிணறு இங்கேதான் இருக்கிறதா சொன்னாங்க. டூரிஸ்ட் சீஸன் இல்லைங்கிறதால அங்கே கெஸ்ட் ஹவுஸ் எதுவும் கிடைக்கலை. அங்கே உள்ள கிராமத்துல குடியிருந்தவங்க வீட்டுல எங்களைத் தங்க அனுமதிச்சாங்க. நாங்க யாரு, எங்கே இருந்து வந்திருக்கோம்னு எதையும் விசாரிக்காம, அத்தனை சின்ன வீட்டுக்குள்ள எங்களுக்கும் இடம் கொடுத்தாங்க. அவங்ககிட்ட அவ்வளவு அன்பு...'' - நெகிழ்கிறவர், 20 நாள்களில் திட்டமிட்ட தேனிலவுப் பயணத்தை 32 நாள்களில் முடித்ததாகச் சொல்கிறார்.

``எங்களோட ஹனிமூன் ட்ரிப்புக்காக எந்தவித முன்னேற்பாடுகளும் இருக்கக் கூடாது, போகப் போற இடத்தைப் பத்தி முன்கூட்டியே தெரிஞ்சுக்கக்கூடாதுங்கிற தீர்மானத்தோடதான் கிளம்பினோம். நாங்க பார்க்கிற விஷயங்களும், சந்திக்கிற அனுபவங்களும் எங்களுக்குப் புதுசா இருக்கணும்னு நினைச்சோம். இனிமையான சுவாரஸ்யங்களோடும், எதிர்பார்க்காத திருப்பங்களோடும் அமைஞ்சது பயணம்...''

அரபிக் கடலோரம் ஓர் அழகைக் கண்டெடுத்த ஆனந்தம் லோகவ்யாவிடம்!