தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?

தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?

வரலாற்றுப் பயணம்நிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா

தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?

`காத்திருக்காதே!
வெளியேறு…
வாழ்வு உணர்…
கதிரவனைத் தொடு…
கடலில் மூழ்கு!'

            - ரூமி

பயணங்களில் ஓராயிரம் கேள்விகளுக்குப் பதில் காண முடியுமா என்று கேட்டால், `ஆமாம் ’ என்பேன். காரணம் மோகன் ஹரிஹரன். ஆரணி வரையிலான ஒருநாள் பயணத்தை ஏற்பாடு செய்திருந்த, சென்னையின் சிறந்தக் கட்டட வடிவமைப்பாளர்களில் ஒருவர். நண்பர்கள் 16 பேருடன் வண்டி சென்னையைத் தாண்டியதும், கையில் வந்தது விநாடி வினாத்தாள் ஒன்று. முதல் கேள்வியே, ‘தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?’ யோசித்து யோசித்து, பதில் தெரியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டாயிற்று. சென்னையின் வரலாறும், வழியில் தாமல், காவேரிப்பாக்கம், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு என எல்லா ஊர்களின் வரலாறும் சிற்றுண்டியோடு சேர்த்து அலசியாயிற்று.

தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?

முதலில் நாங்கள் பார்த்த இடம், ஆரணிக் கோட்டையில் உள்ள கைலாசநாதர் கோயில். கும்பாபிஷேகத்துக்குத் தயாராகிக் கொண்டு இருந்ததால், மூலவர் வெளிப்பிராகாரத்தில் காட்சி தந்தார். சிறப்புப் பூஜை முடிந்து கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். 13-ம் நூற்றாண்டு சோழர் காலத் தில் கட்டப்பட்டு, பின்னர் சம்புவ ராயர், விஜயநகர மன்னர்களால் எழிலூட்டப்பட்டிருக்கிறது இந்தக் கோயில். சோழர் கால பிள்ளையார் சிலை பேரழகுடன் மிளிர்கிறது. கோபுரக் கலசங்களைப் பிரித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதனுள் இருந்த வரகு தானி யத்தை ஆராய்கிறது குழு. பேரிடர் வேளையில், உயரமான கலசங் களில் சேமிக்கப்படும் இந்தத் தானியம், ஊருக்கே உணவளிக்கக் கூடியது. இன்னமும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவது குறித்த ஆச்சர்யத்துடன் கோயிலுக்குள் இருந்த உற்சவர் சிலைகளைப் பார்த்து ரசிக்கிறோம். கூந்தல் காற்றில் பறக்க பிரமாண்ட தாண்டவத்தில் நடராஜர், சோமாஸ்கந்தர் என நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகள். வெளிப்பிராகாரத்தில் 1008 லிங்கங்கள், அறுபத்துமூவர் என வரிசையாக  உளிகள் செதுக்கிய கலை அற்புதங்கள் அழகு!

தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?

கோட்டையினுள் கோரி மைதானத்தில் சுமார் நாற்பது அடி உயரத்தில் நிற்கிறது, ராபர்ட் கெல்லி என்ற சீஃப் கமாண்டரின் நினைவுத் தூபி. 1790-ல் இதைக் கட்டியது, அவரை போட்டியில் கொன்று வீழ்த்திய, கர்னல் விகொர்ஸின் மகன் என்பது கூடுதல் ஆச்சர்யம்!

தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?

அடுத்துச் சென்றது, ஆரணியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சத்தியவிஜயநகரம் அரண்மனை. வீர சிவாஜியின் தந்தையான ஷாஜி 1640-ம் ஆண்டு கர்நாடகப் போரின்போது தனக்கு விசுவாசமாகப் பணிபுரிந்த வேதாஜி பாஸ்கர பந்த்துக்கு 192 கிராமங்கள் உள்ளடக்கிய ஆரணி ஜாகிரைப் பரிசளித்தார். கமண்டலநாக நதிக்கரையில் உத்தராதி மடத்தைச் சார்ந்த மாதவகுல சத்திய விஜய சுவாமியின் மூல பிருந்தாவனத்தை ஒட்டி பாஸ்கர பந்த்தின் வழித்தோன்றல்கள் ஆரணி ஜாகிரின் தலைமை இடமாக உருவாக்கிய அழகிய நகரம்தான் சத்திய விஜயநகரம். ராஜபாட்டையும், குதிரை லாயங்களும், `ஸ்டூவர்ட்' என்ற கட்டட முறைப்படி, 1825-ல் கட்டப்பட்டு, 1876-ல் விரிவாக்கப் பட்டிருக்கும் திவான் கானா அரண் மனையும் என ஓர் அதியற்புதமான கடந்த காலத்தை நினைவூட்டுகிறது இந்நகரம். வெறிச்சோடியிருக்கும் ஜன்னலோ, கதவுகளோ அற்ற அரண்மனை, கொரிந்திய வடிவமைப்பிலான தூண்கள், வட்ட வடிவ செங்கல், எதிராளிகளை ஏமாற்றுவதற்காக கதவு போல வடிவமைக்கப்பட்ட சுவர், பிரமாண்டமான தாழ்வாரங்கள், சுண்ணாம்புக் காரையும் முட்டையும் கடுக்காயும் கொண்டு இழைத்துச் செய்யப்பட்ட வழவழப்பான சுவருடன், ஆங்காங்கே வளர்ந்து தாங்கிப் பிடித்திருக்கும் மரங்களின் துணையுடன் நின்று கொண்டிருக்கிறது. ராணியின் அரண்மனையும் தர்பார் மண்டபமும் அரசால் புனரமைக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றன. சர் சி.வி.ராமன், சந்திரசேகர் போன்ற விஞ்ஞானிகளுக்கு ஆரணி பதக்கம் ஒன்றையும் நிறுவி, பரிசு தந்து இருக்கிறார்கள் ஜாகிர்கள். ஒரு காலத்தில் 182 கார்களுடன் சர்வ வல்லமையுடன் வலம் வந்த ஜாகிர்கள், 1948-ல் ஜமீன்தாரி சட்டம் இயற்றப்பட்ட பின் குடியிருந்த அரண்மனையை இழந்தார்கள். இன்னும் சில ஆண்டுகள் கழித்து மண்ணோடு இந்த அற்புத அரண்மனையும் மக்கிப்போகும் சாத்தியக் கூறு மிக அதிகம்.

தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?

அடுத்துச் சென்றது, ஆரணியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள பூண்டிப் பொன்னெழில்நாதர் சமண ஆலயம். கல் வெட்டுகளின்படி 1305-ல் வீரசம்புவன் என்ற சம்புவராய மன்னனால் கட்டப்பட்டு, வீர வீர ஜீனாலயம் என அழைக்கப்பட்ட இந்த ஆலயம் சோழர் காலக் கட்டட வடிவமைப்புடன் மிளிர்கிறது. இப்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில், மூலவரான பரசுவநாதர் ஐந்து அடி உயரத்தில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார். அவரது தலைக்குக் குடையாக ஐந்து தலை நாகம் ஒன்று, அவர் பாதம் வரை வாலுடன் காட்சியளிக்கிறது. ஆதிநாதர் என்ற பொன்னெழில்நாதரின் சிலையும் கோயிலுக்கு அழகு சேர்க்கிறது. இவை தவிர 24 தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வடிக்கப்பட்ட ஒற்றைக்கல் முகப்புகள் இரண்டு உள்ளன. வெளிப்பிராகாரத்தில் லக்ஷ்மி தேவி, சரஸ்வதி தேவி, சந்திரப்ரபநாதர், ஜ்வலமாலினி தேவி, பிரம்ம தேவர், தர்ம தேவி, சக்ரேஸ்வரி, பத்மாவதி தேவி என வரிசையாக அணிவகுக்கின்றன சமணக் கடவுளர்களின் சிலைகள். சுற்று வட்டாரத்தில் சுமார் ஆயிரம் சமணர்கள் இருப்பதாகவும், ஒவ்வோர் ஆண்டும் தை மாதம் ,ஐந்தாம் தேதி ஆராதனை விழா மிக சிறப்பாக நடைபெற்றுவருவதாகவும் கோயில் நிர்வாகி தெரிவித்தார். இது தவிர மகாவீர் ஜெயந்தி, ஆவணி அவிட்டம் என அத்தனை சமண விழாக்களையும் கொண்டாடுகிறார்கள் தமிழ் சமணர்கள்.

தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?

மதிய உணவுக்குப் பின்  கண்ணாடி மாளிகை என அழைக்கப்படும் பூசிமலைக்குப்பம் அரண்மனைக்குச் சென்றோம். ஜாகிர்களின் வேட்டையிடமான `ஷூட்டிங் பாக்ஸ்' என அழைக்கப்பட்ட இந்தப் பிரமாண்ட அரண்மனையைச் சுற்றி ஆயிரக்கணக்கில் மரங்கள் நட்டிருக்கிறார்கள் ஜாகிர்கள். பச்சை வயல் வெளிகளுக்கு ஊடாக வளைந்து நெளிந்து சென்ற பாதையின் முடிவில், அடர்சிவப்பு நிறத்தில், ஐரோப்பிய வடிவமைப்புடன் அசரடிக்கிறது இந்த அழகிய மாளிகை.

தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?

டபுள் யூ.என். பாக்ஸன் என்ற வடிவமைப் பாளரால் 1850-ல் வடிவமைக்கப்பட்டு, 1860-ல் எட்டாவது ஜாகிரான ஸ்ரீனிவாச ராவ் சாஹிப்பால் கட்டப்பட்ட இந்த மூன்று தள மாளிகை, அழகிய நுண்ணிய வேலைப் பாடுகள் நிறைந்தது. மாளிகைக்கு வெளியே தனிச் சமையலறைகள், உணவருந்தும் கூடம், புறாக்கூண்டு, ஒவ்வோர் அறையிலும் ஐரோப்பிய முறையிலான கணப்பு அடுப்பு, கூரையில் ஒப்பனைத்தாள், பளிங்குத் தரை என உள்ளம் கவர்கிறது. ஒரு காலத்தில் விருந்தும் கேளிக்கையும் கோலோச்சிய மாளிகையின் வாசல் முதல் சுவர் வரை வரிசையாக பேய்ப்படங்களின் பெயர்களை எழுதி வைத்து எரிச்சலூட்டி இருந்தனர் சிலர். வெப்பப் பிரதேசத்தில், காட்டின் நடுவே, அந்த மாளிகையில் தனிமையில் ராணியாக வலம் வந்த ஆங்கிலேயப் பெண் என பரவலாகச் சொல்லப்படும் பெண்ணின் எண்ண ஓட்டம் என்னவாக இருந்திருக்கும் என யோசிக்க முயல்கிறேன். 1860-ல் இங்கிலாந்து கிளாஸ்கோ நகரில் செய்யப்பட்ட வார்ப்பு இரும்பினாலான குழாய்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட தூண்கள், ஒருபுறம் கட்டடத்தைத் தாங்கியும், இன்னொருபுறம் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாகவும் இரட்டைப் பணிகளை அழகாகச் செய்கின்றன. அனைவரும் ஓடிச் சென்று மாளிகையின் முன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எங்களுக்கு அன்று முழுதும் துணை வந்து வழிகாட்டிய ‘ஆரணி டைம்ஸ்’ ஆசிரியரான சுதாகரைப் பாராட்டினார் மோகன். வரும் வழியில் ஆற்காடு ஸ்பெஷலான மக்கன் பேடாவை வாங்கி, பத்திரப்படுத்தி ஆயிற்று.

தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன?

ஒரு திருப்தியான பயணம் சென்ற களைப்பில் உடல் இருந்தாலும், மனம் என்னவோ அரண்மனைகளையே சுற்றி வந்து கொண்டிருந்தது. எப்பேர்ப்பட்ட மன்னர் மன்னரும், அவர் கட்டி ஆண்ட கோட்டையும், இறுதியில் மண்ணோடு மண்ணாகித்தான் விடும் என்ற நிதர்சனம் புரியத் தொடங்க, தூக்கம் கண்களை அழுத்தியது. ஆங்… சொல்ல மறந்துவிட்டேனே…தேசிங்கு ராஜனின் குதிரைக்கு மூன்று பெயர்கள் - நீலவேணி, பாரா ஹஜாரி, பஞ்சகல்யாணி!