Published:Updated:

“மோனிஷாவும் நானும் ஒண்ணா படிக்கிறவங்க!”

“மோனிஷாவும் நானும் ஒண்ணா படிக்கிறவங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“மோனிஷாவும் நானும் ஒண்ணா படிக்கிறவங்க!”

விடாமுயற்சிஆர்.வைதேகி - படங்கள்: மீ.நிவேதன்

“மோனிஷாவும் நானும் ஒண்ணா படிக்கிறவங்க!”

விடாமுயற்சிஆர்.வைதேகி - படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
“மோனிஷாவும் நானும் ஒண்ணா படிக்கிறவங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“மோனிஷாவும் நானும் ஒண்ணா படிக்கிறவங்க!”

`மா செரே மோனி,

டு எஸ் சி ஸ்பெஷல் போர் மொய்...''

- இது அம்மா வசுந்தரா.

`ஜெ டேய்ம் மேரே''

- இது மகள் மோனிஷா.

“மோனிஷாவும் நானும் ஒண்ணா படிக்கிறவங்க!”

`என்னங்க நடக்குது இங்கே?' என்றால் அம்மாவும் மகளும் ஒரே டெசிபலில் சிரிக்கிறார்கள். `பியன்வென்யூ' என்கிறார்கள். பிரெஞ்சு மொழியில் வரவேற்கிறார்களாம்.

அம்மாவுக்கும் மகளுக்கும் தோற்றத்தில் ஒற்றுமை இருப்பதில் ஆச்சர்யமில்லை. எண்ணங்களில், சிந்தனைகளில், செயல்களில், விருப்பங்களில்... இப்படி எல்லாவற்றிலுமே இருவரும் ஒன்றுபோல் இருந்தால்? பிரபல அழகுக்கலை நிபுணர் வசுந்தராவும் அவரின் மகள் மோனிஷாவும் அப்படித்தான் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

அம்மாவும் மகளும் சேர்ந்து புதிய மொழி கற்கிறார்கள். மாற்று மருத்துவத்தில் பட்டம் வாங்குகிறார்கள். அரோமாதெரபியில் பிஹெச்.டி படிக்கிறார்கள். இருவரும் சேர்ந்து கல்லூரி மாணவிகளுக்கு அழகுக்கலை பாடம் எடுக்கிறார்கள். `பெஸ்ட் மாம் அண்ட் டாட்டர்' விருதே கொடுக்கலாம் இவர்களுக்கு... அத்தனை அந்நியோன்யம்!

``சின்ன வயசுல மோனியைப்  பாட்டு கிளாஸ்ல சேர்த்துவிட்டேன். அப்போ அவளோட பாட்டு டீச்சர், `நீங்களும் கிளாஸுக்கு வரலாமே... அப்போ அவளும் கிளாஸை மிஸ் பண்ணாம வருவாளே'ன்னு சொன்னாங்க. அப்பவே நானும் அவளும் சேர்ந்து பாட்டு கிளாஸ் போயிருக்கோம். ரெண்டு பேருக்குமே அது பிடிச்சிருந்தது. அப்போ ஆரம்பிச்ச எங்கக் கூட்டணி இன்னிக்கும் தொடருது.

நாங்க ரெண்டு பேருமே ஸ்டெல்லா மாரிஸ் காலேஜ்லதான் படிச்சோம். நான் எம்.ஏ லிட்ரச்சர் படிச்சேன். மோனிஷா எம்.ஏ இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் படிச்சா. பத்து வருஷங்களா அந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸுக்கு நான் காஸ்மெட்டாலஜி சொல்லித்தரேன். பாட்டனி டிபார்ட்மென்ட்கூட சேர்ந்து ஹெர்பல் பியூட்டி கேர்னு ஒரு கிளாஸ் எடுக்கறோம். மோனியும் அதே காலேஜுங்கிற தால அவ படிச்சு முடிச்சுட்டு வந்ததும் என் கூட சேர்ந்து அவளும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சா.

அவ வளர்ந்தது, விளையாடினதுன்னு எல்லாமே என்னோட பார்லர் சூழல்லதான். அதனால நான் சொல்லித்தராமலேயே அவளுக்கு அழகுக்கலை  அத்துப்படி.  ஒருநாள்  என்னால கிளாஸுக்குப் போக முடியலை. என்ன செய்யறதுன்னு யோசிச்சபோது, `அம்மா, நான் போய் கிளாஸ் எடுக்கட்டுமா'னு கேட்டா. 'உன்னால முடியுமா?'னு ஆச்சர்யமா கேட்டேன். அன்னிக்கு கிளாஸ்ல என்னவெல்லாம் சொல்லித் தரலாம்னு அவ என்கிட்ட டிஸ்கஸ் பண்ணினபோது மிரண்டுட்டேன்.  கிளாஸை ரொம்பப் பிரமாதமா எடுத்து முடிச்சுட்டு நிறைய பாராட்டுகளோட திரும்பி வந்தா...''  -  ஈன்றபொழுதின் பெரிதுவக்கிறார் அம்மா.

``எங்க ரெண்டு பேருக்குமே ஆங்கில இலக்கியம் ரொம்பப் பிடிக்கும். அது தொடர்பான புத்தகங்கள் படிக்கிறபோது பிரெஞ்சு கத்துக்கலாமேனு யோசிச்சோம். அந்த ஐடியாகூட ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துலதான் தோணினது. நுங்கம்பாக்கம் அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் போய் ரெண்டு பேரும் பிரெஞ்சு கிளாஸ்ல சேர்ந்தோம். `யாராவது கிளாஸுக்குப் போய் அம்மாகூட வருவாங்களா... நீ தனியா வந்திருக்க வேண்டியதுதானே'னு பசங்களும் பொண்ணுங்களும் என்னை பயங்கரமா கிண்டல் பண்ணினாங்க. ஆனா, எனக்கு அதெல்லாம் பெரிசா படலை. 'எங்கம்மா எனக்கு ஃப்ரெண்ட் மாதிரி. எனக்கொண்ணும் பிரச்னை இல்லை'னு சொல்லிட்டேன். கிளாஸ் முடியறபோது என்னைக் கிண்டலடிச்ச அத்தனை ஃப்ரெண்ட்ஸும் அம்மாவுக்கும் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. `நீ சொன்ன மாதிரியே உங்கம்மா ரொம்ப ஃப்ரெண்ட்லி'னு சந்தோஷப்பட்டாங்க...'' - அம்மாவைக் கட்டிக்கொள்கிறார் மோனிஷா.

``மோனிக்கு ஃபுல் டைம் காஸ்மெட்டா லஜிக்குள்ள வரும் ஐடியா இல்லை. அவளோட தேடல் எல்லாம் வேற லெவல்ல இருந்தது. ஜர்னலிசம் படிச்சா. அப்புறம் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ்னு வித்தியாசமான விஷயங்களைத் தேடித் தேடிப் படிச்சா. திடீர்னு ஒருநாள் என்கிட்ட வந்து `ஆல்ட்டர்நேட் மெடிசின் படிக்கலாமா?'னு கேட்டா. மோனி கேட்டதும் மாற்று மருத்துவமும் ஒருவகையில அழகுக் கலையோட தொடர்புடையதுதானேன்னு `ஓகே' சொல்லிட்டேன். ரெண்டு வருஷப் படிப்பை கரஸ்பாண்டன்ஸ்ல படிச்சு எக்ஸாம் எழுதி, ரெண்டு பேரும் ஒண்ணா கான்வகேஷனுக்குப் போய் டிகிரி வாங்கிட்டு வந்த அந்தத் தருணம் ரொம்ப ஸ்பெஷலானது!

“மோனிஷாவும் நானும் ஒண்ணா படிக்கிறவங்க!”

பொதுவா அம்மாக்கள்தான் பசங்களைப் `படி படி'னு விரட்டுவாங்க. என் விஷயத்துல அப்படியே உல்டா. மோனிதான் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணிப் படிக்க வைப்பா. காலையில சீக்கிரமே எழுப்பிவிட்டுப் படிக்க வைக்கிறது, சந்தேகங்களை டிஸ்கஸ் பண்றதுன்னு அம்மா ஸ்தானத்துல இருந்து அவதான் என்னை உற்சாகப்படுத்தினா! இந்த ரெண்டு கோர்ஸையும் முடிச்சதும் தொடர்ந்து ஏன் வேற ஏதாவது படிக்கக்கூடாதுனு தோணினது. ட்ரினிட்டி வேர்ல்ட் யுனிவர்சிட்டியில அரோமாதெரபியில இப்போ ரெண்டு பேரும் பி.ஹெச்டி பண்ணிட்டிருக்கோம்...''  -  வசுந்தராவின் வார்த்தைகளில் பெருமிதம்.

``மோனி பிறந்தபோதிலிருந்தே நான் பிஸியாதான் இருந்திருக்கேன். அவகூட நிறைய நேரம் செலவிட முடியாத ஏக்கம் எனக்கு இருந்தது. ரெண்டு பேரும் சேர்ந்து படிக்க ஆரம்பிச்ச கடந்த சில வருஷங்களில் ரெண்டு பேரும் ரொம்ப நேரம் ஒண்ணாவே இருக்கோம். அவ குழந்தையா இருந்தபோது நான் மிஸ் பண்ணின நேரத்தை எல்லாம் சேர்த்து இப்போ அனுபவிச்சுட்ட திருப்தியும் எனக்கிருக்கு. வேலைக்குப் போற பல அம்மாக்களுக்கும் குழந்தைங்ககூட போதுமான நேரம் செலவிட முடியாத குற்ற உணர்வு இருக்கும். குழந்தைங்க ஓரளவுக்கு வளர்ந்ததும் ரெண்டு பேருக்கும் பொதுவான ஆர்வம் இருக்கிற விஷயங்களில் நேரத்தைச் செலவிடறது மூலமா அந்தக் குற்ற உணர்விலிருந்து வெளியில வரலாம்னு நினைக்கிறேன்...'' - அம்மாக்களுக்கு அவசிய ஆலோசனை சொல்கிறார் வசுந்தரா.

மீண்டும் `ஜெ டேய்ம் மேரே' என்கிறார் மோனிஷா.

`ஐ லவ் யூ மா' என்று அர்த்தமாம்.

`மா செரே மோனி...

டு எஸ் சி ஸ்பெஷல் போர் மொய்...' என்கிறார் வசுந்தரா.

`நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்' என்பதாம் பொருள்.

``மெர்சி..... ஆ ரிவார்....'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.

அப்படின்னா என்னவாம்..? `நன்றி... குட்பை'.