Published:Updated:

பாட்டுப் பாடும் ஆர்க்கிடெக்ட் இப்போ நடிக்கவும் ரெடி!

பாட்டுப் பாடும் ஆர்க்கிடெக்ட் இப்போ நடிக்கவும் ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
பாட்டுப் பாடும் ஆர்க்கிடெக்ட் இப்போ நடிக்கவும் ரெடி!

வாழ்க்கை வரமாகும்நா.சிபிச்சக்கரவர்த்தி

பாட்டுப் பாடும் ஆர்க்கிடெக்ட் இப்போ நடிக்கவும் ரெடி!

வாழ்க்கை வரமாகும்நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
பாட்டுப் பாடும் ஆர்க்கிடெக்ட் இப்போ நடிக்கவும் ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
பாட்டுப் பாடும் ஆர்க்கிடெக்ட் இப்போ நடிக்கவும் ரெடி!

‘மக்காயேலா’, ‘எலந்தப்பழம்’ போன்ற ஹிட் நம்பர்ஸ் மூலம் முணுமுணுக்க வைக்கிறார்; ‘நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்...’, ‘நான் நீ நாம் வாழவே...’ என மெலடிகள் மூலம் மெஸ்மரிசமும் செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிகல் ஸ்கூலுக்கு ஆர்க்கிடெக்ட் செய்தும் அசத்துகிறார். ‘`அடுத்து ஸ்கிரீன்லயும் வருவேன், ரெடியா இருங்க!” என்று செம ஜாலியாக மிரட்டவும் செய்கிறார் பாடகி சக்திஸ்ரீ கோபாலன்.

பாட்டுப் பாடும் ஆர்க்கிடெக்ட் இப்போ நடிக்கவும் ரெடி!

“எப்படிங்க?” என்று கேட்டால், தன் மெலடி பாடலைப் போலவே மெலிதாகப் புன்னகைக்கிறார்.

“நாம செய்யற வேலையை ரொம்ப ஜாலியா ரசிச்சு செஞ்சா எல்லாமே நல்லதா நடக்கும்னு சொல்லுவாங்க. அப்படி நான் என் வேலையை ரசிச்சு செஞ்சேன். நல்லதாகவே நடக்குது” என்கிறார், மீண்டும் ஒரு புன்னகைக் கீற்றுடன்.

சக்திஸ்ரீ தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்றாலும், பிறந்து வளர்ந்தது கேரளாவில். அங்கு 13 ஆண்டுகளாகக் கர்னாடக இசையைக் கற்றுக்கொண்டவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் படிப்பை எடுத்துப் படித்தார். படிக்கும்போதே கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வாங்கிக் குவித்தார். இவரை முதலில் கவனித்தது கன்னட சினிமா இசையமைப்பாளரான குருபிரசாத் சுப்பிரமணியம்தான். அவரது இசையில் பாடுவதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு சக்தியை அழைத்திருக்கிறார். பாடவிருக்கும் பாடலை சக்திஸ்ரீ ஹம்மிங் செய்துகொண்டிருக்க... அதை யதேச்சையாகக் கேட்டிருக்கிறார் ரஹ்மான். உடனே உதவியாளரை அனுப்பி சக்தியின் நம்பர் வாங்கச் சொல்லி இருக்கிறார். இப்படித்தான் ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பு சக்திஸ்ரீக்கு கிடைத்திருக்கிறது.

பாட்டுப் பாடும் ஆர்க்கிடெக்ட் இப்போ நடிக்கவும் ரெடி!

“நான் சின்ன வயசுல இருந்தே மியூசிக் கத்துக்கிட்டாலும், பாடகி ஆவேன்... அதுவும் ரஹ்மான் சார் இசையில பாடுவேன்னு நினைச்சுக்கூடப் பார்த்தது கிடையாது. வாய்ப்புன்னு சொன்னதுமே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். பதற்றத்தில் என் போன் நம்பரைத் தப்பாகச் சொல்லிட்டேன். ஒரு வாரம் கழிச்சு என்னைக் கூப்பிட்டு இருக்காங்க. ராங் நம்பர்... ராங் நம்பர்னே வந்திருக்கு. என்னைப் பாட வைச்ச குருபிரசாத்கிட்ட  திரும்பவும் நம்பர் வாங்கி என்னை ஸ்டூடியோ வரச் சொன்னாங்க. முதல்ல குரூப்ல பாட்டுப் பாட வாய்ப்புக் கொடுத்தாங்க.  அதுக்குப் பிறகு  கிடைச்சதுதான் ‘நெஞ்சுக்குள்ள...’ பாட்டு. என் வாழ்க்கையின் தங்கத் தருணம் அது!” - அந்தத் தருணத்தை அவர் ரசிப்பது முகத்திலேயே பிரகாசிக்கிறது.

“சரி, நீங்க ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் ஸ்கூலான ‘கே.எம் காலேஜ் ஆஃப் மியூசிக் அண்ட் டெக்னாலஜி'யை டிசைன் செய்த அனுபவங்களைச் சொல்லுங்களேன்...”


“அதுவும் ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான். அந்த ஸ்கூலோட டிசைன் மற்றும் இன்டீரியர் வொர்க் நான்தான் பண்ணினேன். ரஹ்மான் சார் இந்தியில் ‘கஜினி’, தமிழில் ‘எந்திரன்’ படங்களுக்கு மியூசிக் செய்த டைம்ல, நான் பேக்ரவுண்ட் ஸ்கோர் பாடிட்டு இருந்தேன். நான் குரூப்ல பாடியதால் சாருக்கு என்னைப் பெரிசா அடையாளம் தெரியாது. அப்போ நான் கலிஃபோர்னியாவில் இருக்கும் ஒரு மியூசிக் ஸ்கூலுக்குப் போய் பயிற்சி எடுத்துக்கலாம்னு அப்ளிகேஷன் போட்டு வெச்சிருந்தேன். ஆனா, சில சூழ்நிலைகளால் போக முடியலை. அங்க இருந்த எஃப். தாமஸ் என்பவருக்கு, நான் மியூசிக் படிக்க ஆர்வமா இருப்பதும், நான் ஆர்க்கிடெக்சர் படிச்சதும், ஃபைனல் இயர்ல இந்தியாவுல உள்ள மியூசிக் ஸ்கூல்ஸ் பத்தி ரிசர்ச் புராஜெக்ட் பண்ணினதும் தெரியும். அந்த நேரத்துலதான் ரஹ்மான் சார் தாமஸ்கிட்ட, ஸ்கூலுக்கு டிசைன் செய்ய ஒரு ஆர்க்கிடெக்ட்டை ரெஃபர் பண்ணச் சொல்லியிருக்கார். அவர், நான் செஞ்ச புராஜெக்ட் பத்தி ரஹ்மான் சார்கிட்ட சொல்லியிருக்கார். திரும்பவும் சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணினாங்க. இது எனக்கு சர்பரைஸ் ஷாக்தான். நான் செஞ்ச தீசிஸ் எடுத்துட்டு சாரைப் பார்க்கப் போனதும், `நீங்க ஏற்கெனவே எனக்குப் பாடி இருக்கீங்களா'னு கேட்டார். ‘ஆமாம் சார். நான் உங்க குரூப்ல பாடி இருக்கேன்’னு சொன்னேன். `தட்ஸ் குட்'னு சொல்லி, எப்படி ஸ்கூலை டிசைன் பண்ணணும்னு அவரோட ஐடியாவைச் சொன்னார். ஒரு சிங்கர் ப்ளஸ் இந்த வயசுப் பசங்க என்னென்ன எதிர்பார்ப்பாங்கன்னு  நான் சொன்னேன். இந்தியாவுல உள்ள மியூசிக் ஸ்கூல்ஸ் எப்படிக் கட்டி இருக்காங்கன்னும், அவற்றின் ப்ளஸ் அண்ட் மைனஸ் பற்றியும் சொன்னேன். ‘உங்களால் முடியுமா?’னு கேட்டார். ‘நான் காலேஜ் முடிஞ்சதும் பண்ணுற பெரிய புராஜெக்ட் இது. கண்டிப்பா நல்லா பண்ணுவேன்’னு சொன்னேன். ‘உங்க பெஸ்ட்டைக் கொடுங்க’ன்னு சொன்னார். ‘மியூசிக் கத்துக்க வரும் மாணவர்கள் பட்டர்ஃபிளை மாதிரி. அவங்க சுதந்திரமா இருந்தால்தான் நல்லா கத்துக்க முடியும். கலர்ஃபுல்லா டிசைன் பண்ணுங்க’னு என்கரேஜ் பண்ணினார். 30 ஆயிரம் சதுர அடி உள்ளேயும், 10 ஆயிரம் சதுர அடி வெளியேயும் டிசைன் பண்ணினேன்.  ஒவ்வொரு கிளாஸ் ரூமும் ஒவ்வொரு தீம், ரிசப்ஷன்ல மியூசிக் டிசைன் வொர்க்னு எல்லாமே பக்காவா செட் பண்ணினோம். சவுண்ட் ப்ரூஃப் பண்றதுதான் ரொம்பப் பெரிய சவால். அதுக்கு இந்தியாவுல 150 மியூசிக் ஸ்டூடியோஸ் உருவாக்கியிருக்கிற எமிபால் எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தார். எல்லோரும் சேர்ந்து ரெண்டு வருஷ கடின உழைப்பில் ஸ்டூடியோவைச் சிறப்பா உருவாக்கினோம். சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் ஸ்டைல்ல ஓரிரண்டு வார்த்தையில ‘நல்லா பண்ணி இருக்கீங்க’னு பாராட்டினார். அந்தத் தருணத்தை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. அதுதான் வாழ்க்கை வரமாகும் தருணமோ?

`ஆர்க்கிடெக்சர் படிச்சு முடிச்சதும் பாடப் போயிடுவீங்களா'னு சில பேர் கேட்பாங்க. `நான் பாடவும் செய்வேன். இசைப் பள்ளிகளை டிசைன் பண்ணுறதுக்காகத்தான் இந்த கோர்ஸ் படிக்கறேன்'னு சொல்வேன். அப்படி என் ரெண்டு கனவுகளுமே ஏ.ஆர்.ரஹ்மான் சார் மூலமா நிறைவேறி இருக்கு!''

“ஏ.ஆர்.ரஹ்மான் வொர்க்கிங் ஸ்டைல் எப்படி?”


“ரொம்ப அமைதியா இருப்பார். அவருக்கு நம்மகிட்ட இருந்து என்ன வேண்டும் என்பது தெளிவாத் தெரியும். நாம பயத்துல கொஞ்சம் மிஸ் பண்ணினாலும், அவர் அதை மிஸ் பண்ணாம வாங்கிடுவார். மிஸ்டர் கூல் அவர்!”

“தமிழ்ல பாடகிகள் நிறையப் பேர் இருக்காங்க. ஆனா, பெண் இசையமைப்பாளர் ரொம்பவே அரிது. இது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா?”

“ஆமா... இந்தியாவிலேயே யாரும் பாப்புலரா இல்லையே. ஏன் பெண்கள் இசையமைப் பாளரா பெரிய லெவலுக்கு வரலைன்னு எனக்கு உண்மையாவே தெரியலை. வருங் காலத்தில் இது மாறலாம். நானும் மியூசிக் கம்போஸ் பண்ணுவேன். ஆனா, சினிமாவுக்குப் பண்ணுவியான்னு கேட்டால், பதில் சொல்லத் தெரியலை...”

பாட்டுப் பாடும் ஆர்க்கிடெக்ட் இப்போ நடிக்கவும் ரெடி!

“நீங்க பாடல்கூட எழுதுவீங்களாமே?”

“ஆமாம் பாஸ்... ஏற்கெனவே ஆங்கிலத்துல ரெண்டு, மூணு பாடல்களை நானே எழுதிப் பாடினேன். இப்ப ஹிந்தியிலயும் தமிழ்லயும் எழுதிட்டு இருக்கேன்...”

“இன்னமும் எந்தெந்த இசையமைப்பாளர்கூட வொர்க் பண்ணணும்னு நினைக்கறீங்க?”

``ரஹ்மான் சார்கூட மீண்டும் வொர்க் பண்ணணும். பாலிவுட், மலை யாளம்னு பல மொழிகளிலும் பாடணும். இப்ப புதுசு புதுசா நிறைய திறமையான இசையமைப்பாளர்கள் வந்துட்டே இருக்காங்க. அவங்க இசையிலயும் பாடணும்!”

“இளம் இசையமைப்பாளரில் உங்களை இம்ப்ரஸ் செய்தது யார்?''


“பாடகர் பிரதீப் குமார் ஒரு படத்துக்கு கம்போஸ் பண்ணிட்டு இருக்கார். அவர் மியூசிக்ல ஒரு பாட்டு பாடி இருக்கேன். மெர்சல் சாங் அது. ஷான் ரோல்டன் மியூசிக்ல வேற லெவல்ல போய்ட்டு இருக்கார். லியோன் ஜேம்ஸும்
நானும் ஒரே பேண்டுல பாடிட்டு இருந்தோம். இப்ப  அவர் அடுத்த கட்டத்துக்கு வளர்ந்துட் டார். இன்னும் இவர்களைப் போல நிறையப் பேர் இருக்காங்க...”

“நீங்க பாட்டுப் பாடும்போதே இந்தப் பாட்டு ஹிட் ஆகும், இது ஆகாதுன்னு தோணுமா?”


“இல்லைங்க... நிச்சயமா தெரியாது. பாடி முடிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஒரு திருப்தி கிடைக்கும். ஹிட் ஆகுது, ஆகலை என்பதெல்லாம் அதுக்கப்புறம்தான்...”

“ ‘கடல்’ படத்தில் ‘நெஞ்சுக்குள்ள...’ பாடும்போது கூடவா, உங்களால் ஹிட் ஆகும்னு உணர முடியலை?”

“சத்தியமா இல்லைங்க. அந்த நேரத்துல ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்ல ஒரு பாட்டு பாடுறதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இந்தப் பாட்டு வெளியே வருமா... மக்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க... இப்படி எதுவுமே யோசிக்கலை. சந்தோஷ் நாராயணன் சார் மியூசிக்ல ‘நான் நீ நாம் வாழவே’னு பாட்டுப் பாடினேன். அந்தப் பாட்டு எனக்கு ரொம்ப நெருக்கமா ஃபீல் பண்ண முடிஞ்சது.”

“போன வருஷம் நீங்க நிறையப் பாடலையே?”


“ ‘24’ படத்துலயும், `மனிதன்’ படத்துலயும் ஒவ்வொரு பாட்டுப் பாடினேன். அவ்வளவு தான். சில நேரம் கிழிந்த ஜீன்ஸ் டிரெண்டிங் ஆகும். சில நேரம் கிழியாத ஜீன்ஸ் டிரெண்ட்ல இருக்கும். ஏன், கிழிந்த ஜீன்ஸ் டிரெண்டிங் ஆகுதுன்னு யோசிச்சா பதில் கண்டுபிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். அப்படித்தான் சில நேரங்களில் சில வாய்ஸ் டிரெண்ட் ஆகுது.”

“பாடகர்களுக்கு என்னென்ன சவால்கள் இருக்கு?”

“நாம பாடப் போறதுக்கு முன்னாடியே கதையில இந்த கேரக்டர் இப்படித்தான்னு, இயக்குநருக்கு ஓர் அபிப்பிராயம் இருக்கும். படத்தோட இசையமைப்பாளருக்கு வேற ஓர் அபிப்பிராயம் இருக்கும். இப்படி எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் பாடகியா நாம பூர்த்தி செய்யணும். அதே நேரத்தில் நமக்கான தனித்தன்மையையும் விட்டு விடக்கூடாது. இந்த பேலன்ஸ் கொண்டு வருவது சவாலானது. நடிகர்களுக்கு டயலாக் எப்படியோ... அப்படி எங்களுக்குப் பாடல் வரிகள். அவங்க ஸ்க்ரீன் முன்னாடி கண், புருவம், உடலை அசைச்சு நடிக்கிறாங்க. நாங்க குரலில் சோகம், அழுகை, சந்தோஷம்னு கொண்டு வரோம். அதனால், பாட்டுப் பாடுவதும் ஜஸ்ட் ஒரு ஆக்டிங்தான்...''

“இதுவரை யாரும் உங்களை நடிக்கக் கூப்பிடலையா?’’


“ஹா...ஹா... ஒரே ஒரு தடவை மலையாளத்தில் இருந்து ஒரு வாய்ப்பு வந்தது. அந்த நேரம் எனக்குச் சரியா செட் ஆகலை. ‘நோ’னு சொல்லிட்டேன். ஆனா, இப்ப நல்ல வாய்ப்பு வந்தால் கண்டிப்பா நடிச்சுடுவேன்!”