ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை வாய்த்தவர் வாணிப்பிரியா. திருமணத்துக்கு முன்பே அழகுக்கலைக்கான பயிற்சிகளை முடித்தவர். திருமணத்துக்குப் பிறகு வீட்டிலேயே சிறிய அளவில் பார்லர் ஆரம்பித்தார். இன்று நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் பரபரப்பாக இயங்கி வருகிறார். சேலத்தில் இவர் நடத்திவரும் ‘சலூன் மந்த்ரா’வில் இப்போது பத்துப் பேர் வேலை செய்கிறார்கள். திருமண சீஸன்களில் விடிய விடிய வேலை, அதோடு வீட்டு நிர்வாகம் எனச் சுழலும் இவரது பேலன்ஸிங் டெக்னிக் என்ன?

• வீட்டில் இருந்தாலும் சும்மா இருப்பது எப்போதுமே பிடிக்காது. படிக்கும் காலத்திலேயே ஓய்வு நேரத்தில் அழகுக்கலையைக் கற்றுக்கொண்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• பெரிய இலக்குகள் எதையும் மனதில் விதைப்பதில்லை. சின்னச் சின்ன விஷயங்களை ரசித்துச் செய்வேன். பார்லர் பரபரப்புக்கு இடையில் உடற்பயிற்சி, டான்ஸ், யோகா என ஏதாவது ஒரு பயிற்சியில் எங்கேஜ்டாக இருப்பேன்.
• குழந்தை பிறந்த பிறகு வீட்டு வேலைகளைப் பணியாளும், குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை மாமியாரும் ஏற்றுக்கொண்டனர். காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பார்லரில் இருப்பேன்.

• குழந்தை வளர வளர, அவனுக்கான குவாலிட்டி டைம் ஒதுக்கினேன். பள்ளிக்குச் செல்லத் தொடங்கியவன், மீதி நேரங்களில் என்னோடு பார்லரில் இருப்பான். என் வேலையைப் பற்றி என் குழந்தையும் புரிந்து கொள்ளும்படி அவனை கவனித்துக் கொண்டேன்.
• `கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பது பிரச்னைகளைத் தரும்; இருவருக்குமான சுதந்திரம் பறிபோய்விடும்’ என்று பொதுவான கருத்து உண்டு. ஆனால், சிக்கலான நேரங்களில் சரியான ஆலோசனை சொல்லி உதவும் நம்பிக்கையான நண்பனாக கணவரை உணர்கிறேன். பிசினஸில் வரும் நெருக்கடிகளை நம்பிக்கையோடு கடக்க அவரது கரமும் உதவியாக உள்ளது.
• ஓடிக்கொண்டே இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். கஸ்டமர் திருப்தியுடன் செல்ல வேண்டும். அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளே எனக்கான புரமோஷன். பயண நேரத்தை தூக்கத்துக்குப் பயன்படுத்திக்கொள்வேன்.
• `எனக்கு எல்லாம் தெரியும்’ என்று நினைப்பதில்லை. அழகுக்கலையில் எந்த அட்வான்ஸ் டெக்னிக் வந்தாலும் அதை உடனே கற்றுக்கொள்கிறேன். அதேபோல, பியூட்டி புராடக்ட்டுகள் குறித்தும் ஆன்லைனில் அலசி தெரிந்துகொள்வேன். வாடிக்கையாளர்களுக்கு முன்பே ஒரு விஷயத்தைத் தெரிந்துவைத்திருப்பதே எனக்கான பலம்.